“எங்க குழந்தைகளுக்கு காலையில் எழுந்ததும் தாய்ப்பாலுக்கு பதில் மாத்திரையைத் தான் முதலில் தருகிறோம்” ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக் களத்தில் குழந்தையுடன் கலந்துகொண்ட ஒரு பெண் கூறிய வார்த்தைகள் இவை.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட வரலாறு இரண்டு தசாப்தங்களைத் தாண்டியது. ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புற்றுநோய், நுரையீரல் கோளாறுகள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்பது பிரதான குற்றச்சாட்டு. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் ஆர்செனிக் உள்ளிட்ட வேதிக் கழிவுகளால் நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்து விட்டது என்பதும் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில் தான், வேதாந்தா நிறுவனம் சிப்காட்டைப் பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டி தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தினர்.
கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆரம்பித்த போராட்டம் மே 22-ம் தேதி நூறாவது நாளை எட்டியது. 100-வது நாள் போராட்டத்தை முன்னிட்டு மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர். ஆனால், போராட்டத்திற்கு ஒருநாள் முன்னதாக மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது. அறிவிக்கப்பட்டபடியே, 22-ம் தேதி கிட்டத்தட்ட 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்றனர்.
அந்தப் பேரணியை விவிடி சிக்னல் அருகே போலீஸ் தடுத்து நிறுத்தியது. அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு தமிழக வரலாற்றில் இதுவரை காணாத சம்பவமாக மாறியது. துப்பாக்கிச் சூட்டில் 17 வயது மாணவி உட்பட 13 பேர் பலியாகினர். போராட்டம் வன்முறையாக மாறியதால் தான் துப்பாக்கிச் சூடு தவிர்க்க இயலாததாகி விட்டது என தமிழக அரசு திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது.
தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகளை தமிழக அரசு இந்த 100 நாட்களில் எப்படிப் பார்த்தது? தவிர்க்க முடியாததா இந்த துப்பாக்கிச் சூடு? போன்ற கேள்விகளை ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருபவரும், மனித உரிமை ஆர்வலருமான 'எவிடென்ஸ்' கதிரிடம் எழுப்பினோம்.
144 தடை உத்தரவையும் மீறி தூத்துக்குடியில் பேரணி நடத்தப்பட்டு இருப்பதாக அரசு சொல்கிறதே?
144 தடை உத்தரவு இருந்தாலும் மக்கள் போராடலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை வழங்கியுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19-ன் படி, ஆயுதங்கள் இன்றி தங்கள் கோரிக்கைகளுக்காக மக்கள் கூடலாம் என்ற உரிமை உள்ளது. 144 தடை உத்தரவை மீறிப் போராடுவது சட்டம்-ஒழுங்கு மீறல் அல்ல. ஆனால், அப்படிக் கூடுபவர்கள் சட்டம்-ஒழுங்கை மீறுபவர்களாக இருக்கிறார்களா என்பதைத் தான் காவல் துறை பார்க்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக, கிராம மக்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அறிவித்திருக்கின்றனர். ஆனால், 144 தடை உத்தரவை அரசு எப்போது அறிவித்தது? நடுராத்திரியில் அறிவித்துவிட்டு மக்கள் சட்டத்தை மீறுகிறார்கள் எனச் சொல்வது எப்படி நியாயமாகும்?
பொதுமக்கள் காவல்துறை வாகனங்களை கொளுத்தியதாகவும், போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மக்கள் காவல்துறை வாகனங்களைக் கொளுத்துவது போன்று ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை. பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதாக எந்தவொரு வலுவான புகைப்பட, வீடியோ ஆதாரங்களும் இல்லை.
காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விதிமுறை மீறல்கள் நடைபெற்றுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மாதிரியான பெரும் போராட்டங்களில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு என்னென்ன மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்?
1964-ம் ஆண்டில் மும்பையில் ஐஜிக்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் இம்மாதிரியான போராட்டங்களில் காவல்துறை எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து பல விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது, போராட்டங்கள் கலவரமாக மாறுகின்ற பட்சத்தில் போராட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்துவது தான் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களைக் காயப்படுத்துவதோ, சுட்டுக் கொல்வதோ நோக்கமாக இருக்கக் கூடாது என்பது தான். அதன்பிறகு போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதன்பிறகு தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசுதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். லத்தி சார்ஜ் கூட மிக லேசானதாக இருக்க வேண்டும். ஆனால், தூத்துக்குடியில் போலீஸ் குறிபார்த்துச் சுடுகின்றனர். காவல்துறை சீருடையிலும் அவர்கள் இல்லை. சுட்டவர்கள் போலீஸ்தானா?
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தமிழக அரசு தொடர்ந்து சொல்லி வருகிறதே...
தவிர்க்க முடியாத சூழல் என்றால், துப்பாக்கிச் சூட்டில் நியாயம் இருக்கிறதென்றால் ஏன் அவசர, அவசரமாக மாவட்ட ஆட்சியரையும், எஸ்பியையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்? மாணவி ஒருவர் உள்ளிட்ட 13 பேர் பலியான நிலையில் தவிர்க்க முடியாத சூழ்நிலை என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்?
போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாக ஜல்லிக்கட்டு வன்முறையில் சொன்னதையே இதிலும் தமிழக அரசு சொல்லியிருக்கிறது. இந்த மாதிரியான வாதம் எதற்காக முன்வைக்கப்படுவதாக நினைக்கிறீர்கள்?
இந்தப் போராட்டத்தை நடத்தியது பொதுமக்கள். அமைப்பு, இயக்கங்களைத் தாண்டி தங்கள் எதிர்கால சந்ததியின் நலனுக்காக மக்கள் போராடுகின்றனர். கலவரத்தை நடத்தியது மக்கள் அல்ல.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
இந்த விசாரணை கமிஷன் எல்லாமே வெறும் கண் துடைப்பு மட்டுமே. இதற்கு முன்பு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டம் உட்பட பல சம்பவங்களில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்கள் என்னவாகின? அரசுக்கும் காவல்துறைக்கும் சாதகமாகத் தான் இந்த விசாரணை ஆணையம் அறிக்கை அளிக்கும். ரூ.10 லட்சம் நிவாரணம், அரசு வேலை என எந்த நிவாரணம் அளித்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை.
தூத்துக்குடிக்கு முதல்வர் செல்லவில்லையே?
இன்னும் அரசு சார்பில் யாரும் சென்று தூத்துக்குடி மக்களை சந்திக்கவில்லை. 144 தடை உத்தரவு இருப்பதால் சந்திக்கவில்லை என முதல்வர் சொல்கிறார். தான் செல்லவில்லை என்பதற்காக இத்தகைய காரணங்களை முதல்வர் கூறுகிறார்.
துப்பாக்கிச் சூடு மாதிரியான சம்பவங்களால் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை ஒடுக்கி விட முடியுமா?
நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் வெடிக்கும். நீட், காவிரி என எல்லா போராட்டங்களையும் அரசு அலட்சியம் செய்கிறது. ஜனநாயக ரீதியாக அதன் பலனை அவர்கள் அடைவார்கள். இந்தியாவின் அனைத்துக் கட்சிகளும் இதனை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக எதனை முன்வைக்கிறீர்கள்?
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது போதாது. அதனை நிரந்தரமாக மூட வேண்டும். துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும். உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும்.
இத்தகையை பிரச்சினைகளுக்காக தமிழக மக்கள் முழுவதும் கிளர்ந்தெழுந்து போராடும் மனநிலை தமிழகத்தில் இருப்பதாக நினைக்கிறீர்களா?
எல்லாப் பிரச்சினைகளுக்கும் அதனால் பாதிக்கப்படுபவர்கள் மட்டுமே போராட வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். ஜல்லிக்கட்டுக்காக மக்கள் ஒன்றிணைந்து போராடினர். ஆனால், காவிரி, விவசாயப் பிரச்சினைகள், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களுக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். அதற்கான மனநிலை பாதி மக்கள் மனதில் உதித்துவிட்டது. இன்னும் சில காலங்களில் மக்கள் போராட்டங்களை பெரும் ஆயுதமாக முன்னெடுப்பார்கள் என நம்பலாம்.
தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago