நீட் துயரம்: அனிதா தேசத்துக் குமுறல்கள்

By நந்தினி வெள்ளைச்சாமி

”எனக்கு எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்பது கனவு. நீட் தேர்வு வந்ததால் என்னால் படிக்க முடியவில்லை. எனக்காக இல்லையென்றாலும், என்னை மாதிரி குடும்பங்களில் கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்காகவாவது இனிமேல் நீட் தேர்வை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தான் தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, ஊடகங்களிடம் பேசிய அனிதாவின் வேதனைமிகு வரிகள் தாம் இவை.

நீட் தேர்வால் எம்பிபிஎஸ் கனவு தகர்ந்து போனதால் அனிதா தற்கொலை செய்துகொண்டார். அனிதாவுக்கு நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழக்கூடாது என்று தமிழகம் கொதிநிலை அடைந்தது. இந்த சூழலிலும் நீட் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததன் விளைவு தான், அதன் மற்றுமொரு அநீதியை தமிழக மாணவர்கள் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்தாண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள சுமார் 1,5,000 மாணவர்களில் கிட்டத்தட்ட 5,000 மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக, சென்னையில் உள்ள சிபிஎஸ்இ பிராந்திய அலுவலகம் தகவல் தெரிவிக்கின்றது. எனினும், மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதில் இன்னும் சந்தேகம் நிலவுகிறது. கடந்த இரண்டு நாட்களாகத் தான் சமூக வலைதளங்களில் இதனைப் பற்றிய செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு பல்வேறு மூலைகளில் இருந்தும் ஆதரவுக்கரமும் நீட்டப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழக மாணவர்களுக்கு இத்தகைய நிலைமை ஏற்பட்டதற்கு சிபிஎஸ்இ-ன் அலட்சியம் தான் காரணம் என்றும், தமிழக அரசும் இத்தகைய நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.

நீட் தேர்வு குறித்து சிபிஎஸ்இ-ன் அறிவிக்கையிலேயே பிரிவு 4 (சி)-ல், விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயோ, அருகாமை நகரங்களிலேயோ மட்டும் தான் தேர்வு மையங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளது. அதாவது, வேறு மாநிலங்களில் தேர்வு மையங்களை மாணவர்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது. அதனை மாணவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். ஆனால், தன்னுடைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதையே மீறியுள்ளது சிபிஎஸ்இ. அதுவும் தமிழகத்தில் மட்டும் தான் இப்படி நடந்துள்ளது.

சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் மட்டும் தான் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிலும், எதன் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை தேர்வு மையங்கள் உள்ளன, அவற்றில் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர், வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு எந்த விதியின் அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற பல்வேறு கேள்விகளுக்கு சிபிஎஸ்இ-யிடம் இருந்து இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.

மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த மார்ச் 27-ம் தேதி மாணவர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அப்போது இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என கூறாமல், 2-3 நாட்கள் கழித்து தான் சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் மாணவர்களுக்கு ஒரு சிறு நம்பிக்கை கிடைத்திருக்கும். ஆனால், அதன் பிறகு தான் சிபிஎஸ்இ இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அந்த வழக்கில், “மற்ற மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு அந்தந்த மாநிலங்களுக்குள்ளேயே தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளோம். தமிழ்நாட்டில் மட்டும் தான் அப்படிச் செய்யவில்லை. தமிழ்நாட்டில் அதிகமான தேர்வு மையங்களை ஒதுக்க நேரமில்லை. அதனால் தான் வெளி மாநிலங்களில் ஒதுக்கினோம்” என பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது சிபிஎஸ்இ.

இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு இவ்வளவு அலட்சியமாக நடந்துகொண்டிருக்க, தமிழக அரசின் நடவடிக்கை இன்னும் மோசம் எனவும், தன் மாநில உரிமைகள் பறிபோகிறதே என்ற எண்ணம் துளிகூட தமிழக அரசுக்கு இல்லை எனவும்,இதுகுறித்த பொது நல வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞர் காளிமுத்து மயிலவன் குற்றம்சாட்டுகிறார்.

இதுகுறித்து வழக்கறிஞர் காளிமுத்து மயிலவன் பேசுகையில், ''இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது தமிழக அரசை ஒரு தரப்பாக இணைத்திருந்தோம். அப்போது, விசாரணையில் தமிழக அரசின் வழக்கறிஞர் எந்தவொரு வாதத்தையோ, மத்திய அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கைக்கு எதிர்ப்பையோ தெரிவிக்கவில்லை. தமிழக அரசு தரப்பு ஒன்றுமே நீதிமன்றத்தில் பேசவில்லை.

அதேமாதிரி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசை சிபிஎஸ்இ எதிர் மனுதாரராக இணைத்தது. அந்த வழக்கு விசாரணையின் போதும் தமிழக அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்திற்கு வரவே இல்லை. தமிழக அரசு “எங்கள் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள், மையங்களை நாங்கள் ஒதுக்குகிறோம்” என கூறியிருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது.

வெளிமாநிலங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் மாணவர்களில் பலர் கூலி வேலை செய்பவர்களின் பிள்ளைகள் தான்.

எங்களிடம் இதுகுறித்து புகார் தெரிவித்த மாணவர்கள் பலர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள். அவர்களின் பெற்றோர்கள் தினக்கூலிகள். ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் தான் தேர்வெழுத வேண்டும் என உத்தரவிடுகிறது உச்ச நீதிமன்றம். எப்போது? தேர்வுக்கு மூன்று நாட்கள் முன்பு தான். போக்குவரத்து செலவு, தங்கும் வசதி இவற்றையெல்லாம் எப்படி அவசரகதியில் ஒரு மாணவனால் செய்ய முடியும்? கேரளாவில் பல பகுதிகள் சுற்றுலா தலங்கள். அங்கு தங்கும் விடுதிகள் ஏற்கெனவே நிரப்பப்பட்டிருக்கும். 4000-5000 ரூபாய் தங்கும் அறைக்கு மட்டுமே செலவாகும்.

கேரளாவில் எர்ணாகுளம், கொச்சின், ஆலப்புழா,திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய இடங்களிலும், ராஜஸ்தானில் ஜெய்பூர், ஜோத்பூர், உதய்பூர், கோட்டா, அஜ்மீர், பிகானர் ஆகிய இடங்களும் தேர்வு மையங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானுக்கு ரயிலில் செல்ல 2 நாட்களாகும். அங்கு சென்றாலும், தேர்வு மையம் அமைந்திருக்கும் இடங்களுக்கு போக்குவரத்து வசதி எப்படி இருக்கும்? “எப்படியும் எல்லாவற்றிற்கும் சேர்த்து 10,000 வரை செலவாகும். இதனாலேயே பல மாணவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்தே பின்வாங்கியிருப்பார்கள்” எனக் கூறுகிறார் வழக்கறிஞர் காளிமுத்து.

தமிழக மாணவர்களுக்கு ராஜஸ்தானில் தேர்வு மையங்களே ஒதுக்கப்படவில்லை என செய்திகள் பரவினாலும், அதனை சிபிஎஸ்இ அமைப்போ, தமிழக அரசோ அதிகாரபூர்வமாக மறுக்கவில்லை. தமிழக பாஜகவும் அதனை அதிகாரபூர்வமாக மறுக்கவில்லை. அதனால், இந்தச் செய்திகள் உண்மை என அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

கடந்தாண்டை போலவே கடைசி நிமிடங்களில் தமிழக மாணவர்கள் தத்தளிக்கும் நிலைமை இந்தாண்டும் தொடர்கிறது. “தமிழக அரசு அவசரச் சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசை அணுகினால், நீட் தேர்வில் தமிழகத்திற்கு இந்தாண்டு மட்டும் விலக்களிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும்” என, 2017-ம் ஆண்டு நீட் தேர்வின்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்ததை இந்த இடத்தில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், நடந்தது என்ன? இப்போதும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உடனடியாக ரியாக்ட் செய்யாத சிபிஎஸ்இ, 2-3 நாட்கள் கழித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆக, தமிழக மாணவர்களுக்கு ஒருவித நம்பிக்கை ஊட்டப்பட்டு பின்னர் அது கலைக்கப்படுகிறது.

தெரியாத மொழி, பயண நேரம், பயணச் செலவு, மன உளைச்சல், உடல் களைப்பு, அந்நியமான இடம் இவற்றையெல்லாம் தாண்டி, நீட் தேர்வெழுதி மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுகளில் உள்ள மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களின் வலி இந்த அரசாங்கங்களுக்கு புரியுமா? திறமையும், அறிவும், தகுதியும் இருந்தும் ஆளும் அரசுகளின் சூழ்ச்சியால் தங்கள் கனவுகளை இழக்கும் மாணவர்களின் வேதனை மிகப்பெரிது. தேர்வுக்குத் தயார் செய்வதா? அல்லது பயணத்திற்கு தயாராவதா என்று குழம்பிப் போயிருக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலரிடம் பேசினோம்.

“என் மகளுக்கு எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. நான் ஏற்கெனவே நடுக்குவாதம் (பார்கின்சன்) நோயால் பாதிக்கப்பட்டவன். எப்படி என் மகளை அவ்வளவு தூரம் கூட்டிக்கொண்டு போய் தேர்வு எழுத வைக்கப் போகிறேன் என நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. நெல்லை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று தேர்வு மையங்களைத் தான் தேர்ந்தெடுத்திருந்தோம். ஆனால், எப்படி எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கினார்கள்? ரயிலில் படுக்கையுடன் கூடிய இருக்கை கிடைக்கவில்லை.போக்குவரத்து, தங்கும் அறை, எல்லாவற்றையும் சேர்த்து 10,000 ரூபாய்க்கு மேல் செலவாகும். எனக்கு உடம்பு சரியில்லாததால் மனைவியையும் அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும்” என கூறுகிறார் நெல்லை ஆய்குடியைச் சேர்ந்த மாணவி பாரதியின் தந்தை.

மாணவர்கள் தேர்ந்தெடுத்த மூன்று தேர்வு மையங்களில் இருந்துதான் அவர்களுக்கு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்திருக்கும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, பாரதி எர்ணாகுளத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது தெரியுமா?

பாரதி படித்த அரசுப் பள்ளியில் கடந்த ஒரு மாத காலமாகத்தான் நீட் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. “அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதுமட்டுமின்றி, நேர விரயம் வேறு. காலையில் 7.30 மணிக்கெல்லாம் தேர்வு மையத்திற்கு வந்துவிட வேண்டும் என்று சொல்லியிருக்காங்க. அதுக்கு இன்னைக்கு (சனிக்கிழமை) காலையில் கிளம்ப வேண்டும். தங்குறதுக்கு லாட்ஜ் கிடைக்கவில்லையென்றால் இன்னும் பிரச்சினை" என்று கூறும் பாரதி, இந்தக் கடினங்களையெல்லாம் தாண்டி மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார்.

நெல்லை செங்கோட்டையைச் சேர்ந்த மற்றொரு அரசுப் பள்ளி மாணவி சக்திஸ்ரீயின் தந்தை மற்றும் மற்றொரு மாணவியின் தந்தையும் சேர்ந்து கடைசி நேரத்தில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர் எர்ணாகுளத்திற்கு செல்வதற்காக. தேர்வு மையம் எர்ணாகுளம் என்று தெரியவந்த பிறகு மிகவும் சங்கடப்பட்டுக் கிடந்த மகள் சக்திஸ்ரீயை “நாங்கள் இருக்கிறோம்” எனக்கூறி தேற்றியிருக்கிறார் அவரது தந்தை தங்கவேலு.

“மத்திய அரசு தான் தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது. ஆனால் அது தெரிந்திருந்தும் தமிழக அரசு கண்டுக்கவே இல்லையே. எந்தவொரு உதவியும் செய்யவில்லை. தமிழக மாணவர்களை இப்படி புறக்கணிப்பதற்கு காரணம் என்ன? எதுவுமே நமக்கு சாதகமாக நடப்பதில்லையே? உச்ச நீதிமன்றமும் கைவிட்டு விட்டது” என சோர்வாகப் பேசும் தங்கவேலுக்கு, வேறு மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கிய காரணத்தால் மகள் தேர்வெழுதுவதற்கு தடையானால், அவள் வருங்காலத்தில் அதை எண்ணி மனவேதனை அடையக் கூடாது என்பது தான் தற்போதைய வருத்தமாக உள்ளது.

அதேபோல் நெல்லையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி அறிவித்த அன்றே விண்ணப்பித்துள்ளார். ஆனால், நெல்லை, மதுரை, திருச்சி ஆகிய 3 இடங்களைத் தவிர்த்துவிட்டு எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவரது உறவினர் ஒருவரிடம் பேசுகையில், “அவனுக்கு அப்பா கிடையாது. நான் தான் உடன் செல்ல வேண்டும். தேதி அறிவித்த அன்றே விண்ணப்பித்தும் எதன் அடிப்படையில் தேர்வு மையத்தை சிபிஎஸ்இ ஒதுக்குகிறது? மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளான். தேர்வு மையத்தை தெரிந்துகொண்ட பிறகு சரியாக படிக்கக் கூட இல்லை" என்கிறார்.

15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதும் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகள் தமிழ்நாட்டில் எந்தவித இடையூறும் இல்லாமல் நடைபெறுகிறது. அப்படியிருக்கும்போது வெறும் 1.5 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்க நேரம் இல்லை, போதிய இடம் இல்லை என்பது சிபிஎஸ்இ-ன் அலட்சியத்தைக் காட்டுகிறது.

மத்திய அரசு நீட் தேர்வின் மூலம் எப்படிப்பட்ட இடையூறுகளை விளைவித்தாலும், தமிழக மாணவர்களின், மக்களின் இறுதி இலக்கு, முக்கிய இலக்கானது நீட் தேர்விலிருந்து விலக்கு கோருவது தான். தேர்வு மைய விவகாரத்தால் பிரச்சினையை மீண்டும் பேசுகிறோமே தவிர, முக்கிய இலக்கிலிருந்து மாணவர்கள் தடம் மாறவில்லை என்கிறார், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளரும், கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு.

”கடந்தாண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி போராடினோம். இந்தாண்டும் அதே கோரிக்கை தான். ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தங்களுக்குள்ளாகவே தனியே நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்கிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் பிரிவு 10 டி-ன் படி, கொண்டு வரப்பட்டது தான் நீட் தேர்வு. அதில், ஜிப்மர், எய்ம்ஸ் நிறுவனங்களுக்கு பொது நுழைவுத் தேர்விலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லையே. எல்லா மருத்துவக் கல்வி நிறுவனங்கள் என்று சொன்னால், இவையும் தானே அடங்கும். அப்போது அந்த கல்வி நிறுவனங்களில் நடக்கும் மாணவர் சேர்க்கை சட்ட விரோதம் தானே" என்கிறார் பிரின்ஸ்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் இரண்டு சட்ட மசோதாக்களின் நிலை என்ன ஆனது. அவற்றை மத்திய அரசு பொருட்படுத்தாமல் இருப்பது, தமிழக சட்டப்பேரவையை அவமதிக்கும் செயல் இல்லையா? என பிரின்ஸ் கேள்வி எழுப்புகிறார். “தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதாக்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு நீட் விலக்கு அளிக்கப்படுகிறதென்றால், அந்த நிறுவனங்கள் ஒரு மாநில அரசை விட வலிமையானதா? ஆக, இது மாநில உரிமைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரான செயல்”, என்கிறார் பிரின்ஸ்.

”போக்குவரத்துச் செலவுக்கு பணம், தங்கும் அறைக்கு பணம், உடன் செல்லும் பெற்றோர் இல்லாத மாணவன் என்ன செய்வான்? நம் தலையெழுத்து அவ்வளவு தான் என்று கனவையே தொலைத்து விடுவான். ஒரு மாநிலத்தில் எத்தனை விண்ணப்பங்கள் வந்துள்ளதோ அதை அறிந்துகொண்ட பிறகு தானே, தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்க வேண்டும். அதற்கு முன்பே 10 மாவட்டங்களில் மட்டும் தேர்வு மையங்களை ஒதுக்கியது ஏன்? தமிழக அரசு பல தேர்வுகளை சிறிய பிரச்சினைகள் கூட இல்லாமல் நடத்தியிருக்கிறது. ஏன் மாநில அரசின் ஆலோசனையை சிபிஎஸ்இ நாடவில்லை? மாணவர்களின் உணர்வுகளை சிபிஎஸ்இ ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவே இல்லை" என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

நீதிமன்றத்திலும் மாணவர்களுக்காக வாதாடாத தமிழக அரசு, செய்தித்தாள்களில் பார்த்து தான் இந்தப் பிரச்சினையை தெரிந்துகொண்டதாக கூறி 1000 ரூபாய் ‘நிதியுதவி’ செய்யப் போகிறதாம். நீட் என்பதே அநியாயம் தான். அந்த அநியாயத்தில் இதுவும் ஒரு அநியாயம். நீட் தேர்வு நடைபெறும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே தமிழக அரசு இதைப் பற்றி பேசுகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களின் நிலைமை என்னவென்பதை அறிந்து நீட் விலக்கு பெற இனிமேலாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வியை பொதுப் பட்டியலில் வைத்துக்கொண்டு மத்திய அரசு தன்னுடைய அதிகாரத்தை அனைத்து இடங்களிலும் நீட்டிக்கொண்டே போகிறது என்பதற்கு நீட் ஒரு சாட்சி. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றி, மாநில உரிமைகளை மீட்டெடுப்பது மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதே கல்வியாளர்களின் கருத்து.  

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்