2017-ம் ஆண்டுக்கான சர்வதேச பாலின இடைவெளி அறிக்கையை சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு (World Economic Forum) வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 108-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனா, வங்கதேசத்தை விட இந்த குறியீட்டில் இந்தியா பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் பின்னடைவுக்கு பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதும் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைவாக இருப்பதுமே முக்கிய காரணமாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சமுதாயத்தில் பலதுறைகளில் தடம் பதித்துள்ள பெண்களிடம் தி இந்து தமிழ் இணையதளம் சார்பில் பேசினோம். அவர்கள் கூறியதாவது:
அரசியலிலும் ஆணாதிக்கம் இருக்கிறது: கனிமொழி ( திமுக எம்.பி.)
''இந்த புள்ளிவிவரமானது நாம் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயமாக இல்லை. பெண்களின் நிலை எப்படியிருக்கிறது என்பதை இந்த புள்ளிவிவரம் வெளிக்கொண்டு வந்துள்ளது.
பலவருடங்களாக பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வேண்டும் என்பதை திமுக வலியுறுத்தி வருகிறது. ஒவ்வொருமுறையும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது நான் 33% இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறேன். மாநிலங்களவையில் இச்சட்டம் நிறைவேறியபோதும் மக்களவையில் அது இன்னும் நிறைவேறவில்லை. மத்திய பாஜக அரசு நினைத்தால் இதை நிச்சயம் நிறைவேற்ற முடியும். இதற்காக டெல்லியில் நான் பலமுறை போராட்டங்கள் நடத்தியிருக்கிறேன். இனியும் தொடர்ந்து வலியுறுத்துவேன்.
பணியிடங்களில் பாலின பேதமும் பாலியல் சீண்டலும் இன்னமும் தொடர்வது வேதனைக்குரியது. இதற்கு வலுவான சட்டங்கள் வேண்டும். பெண்களுக்கான வலுவான சட்டங்கள் வேண்டும் என்றால் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும். பெண்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் உருவாக்கப்படும் சட்டம் பெண்களுக்கான சட்டமாக இருக்க முடியாது.
எல்லா இடங்களிலுமே ஆண்களுக்கான வாய்ப்பு, பெண்களை ஒப்பிடும்போது சற்று அதிகமாகவே இருக்கிறது. அரசியலிலும் ஆணாதிக்கம் இருக்கிறது. எந்த ஒரு கட்சியும் தானாக முன்வந்து 33% இடஒதுக்கீட்டை அளிக்காது. அதற்கு சட்டம் நிறைவேற்றப்பட்டால் தானாகவே அது நிகழும்.
பாலின சமத்துவத்தை சமுதாயத்தில் விதைக்க அடிப்படையில் இருந்து மாற்றத்தை விதைக்க வேண்டும். அதற்குப் பாலின சமத்துவத்தை பள்ளியில் இருந்தே போதிக்கும் அளவுக்கு கல்வித் திட்டத்தில் மாற்றம் வேண்டும்" என்று கனிமொழி கூறினார்.
சமூகப் பார்வையில் மாற்றம் தேவை: கவிதா முரளிதரன் (பத்திரிகையாளர்)
''இந்த அறிக்கை கவலை அளிப்பதாக இருக்கிறது. பாலின சமத்துவம் ஏற்பட இன்னும் 100 ஆண்டுகள் ஆகும் என்ற தகவல் வருந்தத்தக்கது. பெண்கள் மீதான சமுதாயப் பார்வையில் துளியும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.
சேலம் அருகே இன்னமும்கூட பாலின பரிசோதனைக்குப் பின்னரான கருக்கலைப்புகள் அதிகளவில் இருக்கிறது. உயர் தொழில்நுட்பம்கூட பெண்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது.
பள்ளி, கல்லூரி, பணியிடம், அரசியல் என பல்வேறு படிநிலைகளிலும் தலைமைப் பொறுப்பில் ஆணாதிக்கமே இருக்கிறது. இத்தனை அடக்குமுறைகளையும் மீறி ஒரு பெண் தனது கருத்துகளை வெளிப்படுத்தினால் பொதுவெளியில் அவள் மீது வைக்கப்படும் தனிநபர் விமர்சனங்கள் அவளை அழுத்துகிறது. இப்படி கருத்துகளுக்கே தனிநபர் தாக்குதல் நடத்தப்படும் என்றால் அவளால் எப்படி அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு பங்களிக்க முடியும்.
பணியிடங்களில் பாலின பேதம் அதிகம் இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் உயர் பதவிக்கு வரவேண்டும் என்றால் அவள் இரண்டு மூன்று மடங்கு அதிகமாக பணியாற்ற வேண்டிய சூழலே இருக்கிறது. சாதாரண கூலி வேலையில் இருந்து பெரும் பதவி வரையிலும் இன்னமும் சம வேலைக்கு சம ஊதியத்தில் பேதம் நிலவுகிறது. இந்தநிலை மாறினால்தானே பணியிட சமத்துவம் உருவாகும்?
இந்தியப் பொருளாதாரத்துக்கு பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவாக இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்களில் பெரும்பாலானோருக்கு தங்கள் பணத்தின் மீது முழுமையான உரிமை இல்லை என்பதே வேதனையான உண்மை. ஒரு ஆணின் சம்பாத்தியம் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதில்லை ஆனால் ஒரு பெண்ணின் சம்பாத்தியத்துக்கு கணக்கு கேட்கப்படுகிறது. தனது சுய சம்பாத்தியத்தின் மீது உரிமை இல்லாத பெண்ணால் எப்படி இந்தியப் பொருளாதாரத்துக்கு பங்களிக்க முடியும். இதில் ஒரு சில பெண்கள் மட்டுமே தெளிவு பெற்றிருக்கின்றனர்.
வீட்டில் இருந்துதான் பாலின சமத்துவம் வளர வேண்டும். ஒரு சிறுமி பாதுகாப்பாக வெளியே சென்றுவர தற்காப்புக் கலைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லித்தரும் சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம். சமூகப் பார்வையில் மாற்றம் வராத வரையில் இந்த புள்ளிவிவரங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது'' என்று கவிதா முரளிதரன் கூறினார்.
எழுச்சி சாத்தியமே: ஓவியா (சமூக செயற்பாட்டாளர்)
''பாலின இடைவெளி எப்படி இருக்கிறது என 144 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 108-வது இடத்தில் இருக்கிறது என்பது இந்திய அரசின் பித்தலாட்டங்களைத் தோலுரிக்கும் புள்ளிவிவரம். தன்னுடைய சரிபாதியை அடிமைகளாக வைத்திருக்கும் ஒரு நாடு உலக அரங்கில் மிகப் பெரிய ஜனநாயகம் என பெருமை பேசிக்கொண்டு குறைகளை மறைத்துக் கொள்கிறது. முதலில் நமது ஆட்சியாளர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால், இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்த்து பெண்கள் இனி எழவே முடியாதோ என்ற எண்ணத்துக்கு சென்றுவிடக் கூடாது. ஏனெனில் இதைவிட மோசமான சமுதாய கட்டமைப்பில் இருந்துதான் நாம் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். எனவே, எழுச்சி சாத்தியமே. பெண் விடுதலை சமுதாயம் அமைய வேண்டுமானால் தன்னலமற்ற பெண்கள் உருவாக வேண்டும். சமுதாய சிந்தனையுடன் பெண்கள் வளரும்போதுதான் பெண்ணுரிமை சமுதாயம் சாத்தியமாகும்.
இந்தியாவின் இந்தப் பின்னடைவுக்கு சில காரணிகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்திய சமூகம் சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூகம். சாதிய அடிப்படை சமூகத்தில் பெண் உரிமை துளியும் இருக்காது. தான் சார்ந்த சாதிய அமைப்பில்கூட தனக்கென தனி இடமும் இல்லாத நிலையில்தான் பெண் இருக்கிறாள்.
இன்று பெண் கல்வி ஒரளவு சாத்தியமாகியிருக்கிறது. பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். ஆனால், ஒரு பெண்ணை சினிமாவிலோ அல்லது சின்னத்திரையிலோ உயரதிகாரியாக ஆதிக்கம் செலுத்துபவளாக காட்சிப்படுத்தும் போக்கு அண்மையில்தான் உருவாகியுள்ளது. இந்த ஒரு மாற்றத்துக்குகூட இத்தனை காலம் ஆகியிருக்கிறது.
அரசியல் பிரதிநிதித்துவம் பற்றி அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குடும்ப பின்புலம் இல்லாமல் இந்தியாவில் எத்தனை பெண்கள் அரசியலில் உயர் பொறுப்புகளுக்கு வரமுடிகிறது. இந்த சமூகம் ஊழல் மலிந்ததாக வன்முறை மிகுந்ததாக இருக்கிறது. முன்னேற நினைக்கும் பெண்களுக்கு இது உனக்கான களம் அல்ல என அச்சுறுத்துவது போலவே இச்சமூகம் இருக்கிறது. அரசியலில் ஒரு பெண் ஈடுபட வேண்டுமானால் வன்முறைகளை எதிர்கொள்ள வேண்டும் என சமூகம் சொல்கிறது. நிர்வாகத்தில் உயர் பதவிக்குவர வேண்டுமானால் ஊழல் லஞ்சம் போன்றவற்றை கடந்துவர வேண்டும் என சமூகம் அச்சுறுத்துகிறது. நேர்மையான, சாதியற்ற, வன்முறையற்ற சமுதாயம் அமைந்தாலே பாலின இடைவெளி குறையும்.
பெண் இன்னமும் ஒரு பண்டமாகத்தான் பார்க்கப்படுகிறாள். நாங்கள் பெண்களை தெய்வங்களாக வணங்குகிறோம். இந்த தேசத்தையே பாரத அன்னை என்றுதான் அழைக்கிறோம் என்றெல்லாம் பெண்களை இப்படியெல்லாம் உருவகப்படுத்தாதீர்கள். எங்களுக்குத் தேவை சமத்துவம். புனிதத்துவம் அல்ல'' என்று ஓவியா கூறினார்.
இப்படியாக தத்தம் துறைகளில் தடம்பதித்த பெண் பிரமுகர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். தங்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதில் பெண்கள் எப்போதும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என்பதே இவர்களின் கருத்துகளை இணைக்கும் ஒற்றைப் புள்ளியாக இருக்கிறது.
இல்லற வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்காகவே இரும்பு மனுஷி இரோம் ஷர்மிளாவை தேர்தலில் படுதோல்வி அடையச் செய்த சமூகம் இது. பெண் இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படித்தான் இயங்க வேண்டும். ஒரு பெண் அரசியல் தலைவராக வேண்டுமானால் முற்றும் துறந்தவராக இருக்க வேண்டும். அரசியலுக்கு வந்தால் வன்முறைகளை எதிர்கொள்ள வேண்டும். கலைத்துறை என்றால் அதில் சில இன்னல்களை சகித்துக் கொள்ள வேண்டும். தலைமைப் பொறுப்பு அவ்வளவு எளிதல்ல.. இப்படியெல்லாம் குறுகிய கட்டமைப்புக்குள் சிக்கிக் கொண்டுள்ள பெரும்பான்மை சமூகத்தை பெண்களே மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது.
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago