யானைகளின் வருகை 160: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு

By கா.சு.வேலாயுதன்

ஆனால் அதற்கு எதிராக பெரும்பான்மை சூழலியாளர்கள், கால்நடை மருத்துவர்கள் பொங்கினர். ‘உண்மையில் பிடிபட்ட யானை அதிகமாக மயக்க ஊசி மருந்து செலுத்தியதால்தான் இறந்துள்ளது. அது ஒரு வழிகாட்டி யானை. அது இல்லாததால்தான் அதன் கூட்டத்து பெண் யானை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு தன் கூட்டத்தை வழிநடத்த முடியாமல் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளது!’ என்பதை அவர்கள் தெளிவுபடவே மீடியாவுக்கு எடுத்துரைத்தனர்.

இதுபற்றி முதுமலையில் பல்வேறு யானைகளுக்கு வைத்தியம் பார்த்து அனுபவம் பெற்ற ஒரு கால்நடை மருத்துவரிடம் நானே பேசினேன். அப்போது அவர் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் எல்லாம் ஆச்சர்யம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் தரக்கூடியவை.

அவர் கூறியது இதுதான்:

'ஒரு யானையை பிடிப்பதற்கான பல திட்டங்கள் மிஷன் மகராஜ் விவகாரத்தில் பின்பற்றப்படவில்லை. முதுமலையில் 16 ஆண்டுகளுக்கு முன்பு மக்னா யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தபோது அதை 4 மணி நேரம் அங்கேயே கட்டி வைத்து பிறகு நடத்திச் சென்றே கராலில் அடைத்தனர். பொதுவாகவே யானைகளுக்கு ஆக்சிஜன் குறைபாடு இருக்கும். மயக்க ஊசி போடப்பட்டவுடன் அவை மயக்க நிலையில் சுவாசிப்பதை மறந்துவிடும். குறிப்பாக அவை காது மடல்களை ஆட்டிக் கொண்டே இருப்பது, தன் உடல் சூட்டை தணிப்பதற்காகத்தான். மயக்க ஊசி செலுத்தியவுடன் அது காது மடல்களை ஆட்டுவதை நிறுத்தி விடுவதால் உடனே அதன் உடல் சூடு அடைய ஆரம்பித்து விடும். எனவே அவற்றின் உடலின் மீது தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதுதான் நடைமுறை. அதை மகராஜ் விஷயத்தில் மருத்துவர்கள் குழு செய்யத்தவறி விட்டது.

மகராஜ் யானைக்கு மயக்க ஊசி செலுத்தியவுடன் லாரியில் ஏற்றிச் சென்றுள்ளனர். அது கூடாது. அதை கொஞ்சதூரமாவது நடத்திச் சென்று, இயல்பு நிலைக்கு கொண்டு வந்து லாரியில் ஏற்றி செல்வதுதான் பாதுகாப்பு. தவிர யானைகள் மயக்கமடைய பயன்படுத்தும் சைலசைன் (ZYLAZINE) மருந்து கொஞ்சம் கூடுதலானால் உயிருக்கே கேடு விளைவித்துவிடும். இந்த மருந்தை 25 கிலோ கொண்ட நாய்க்கு 1 முதல் 1.5 எம்.எல் போட்டால் மயங்கும். 300 கிலோ எடையுள்ள ஒரு மாட்டுக்கு இதே அளவு செலுத்தினால் அது படுத்துவிடும். யானைக்கு ஒரு டன் எடை இருந்தால் அதிகபட்சம் 100 மிலி கிராம் முதல் 200 மிலி கிராம் வரை அளிக்கலாம். இதை ஒரே ஒரு முறைதான் செலுத்தலாம்.

ஆனால் இங்கே 200 மிலி கிராம் கொண்ட புட்டிகள் அடுத்தடுத்து போடப் பட்டிருக்கின்றன. யானை கொஞ்சம் மயக்கம் தெளிகிற மாதிரி தெரிந்தால் போதும். உடனே துப்பாக்கி மூலம் மிக நெருக்கத்தில் இந்த யானைக்கு ஊசி மருந்து தொடர்ந்து செலுத்தப்பட்டிருக்கிறது. அந்த எல்லை வரைமுறை இன்றி இதில் மீறப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் சொல்லாமல் கராலில் முட்டி, மண்டையோடு உடைந்து விட்டது என்று இவர்கள் சொல்வதுதான் வேடிக்கை. அப்படியானால் யானையின் நெற்றியில் வீக்கம் இருந்திருக்க வேண்டும்.? அடுத்தநாள் மாலைதான் யானைக்கு பிரேதப் பரிசோதனை நடந்தது. முந்தின நாள் இரவு 7 மணிக்கே இந்த காரணத்தால் தான் யானை இறந்தது என்ற தகவலை என்ஜிஓக்கள் சிலருக்கு 'வாட்ஸ் அப்' தகவலாக அனுப்பியுள்ளார் ஒரு வனத்துறை அதிகாரி.

யானையை பிரேதப் பரிசோதனை செய்ய திருக்குமரன், கோவிந்தராஜ், சித்திக், சரவணகுமார் ஆகிய 4 கால்நடை மருத்துவர்களை வனத்துறை தேர்வு செய்தது. இதில் ஒருவர் மட்டுமே யானைகள் சிலவற்றுக்கு வைத்தியம் பார்த்துள்ளவர். ஆனால் நீண்டகாலமாக யானைகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றியிருக்கும் மருத்துவர்கள் சண்முக சுந்தரம் (ஓய்வு), கலைவாணன் (ஒட்டப்பிடாரம்), அசோகன் (கோவை), டாக்டர் ராஜேந்திரன் போன்ற பலர் உள்ளனர். அவர்களிடம் ஏன் வனத்துறையினர் கேட்கவில்லை? சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கும், வனத்துறைக்கும் சில சச்சரவுகள் உள்ளன. யானையின் உடல்கூறுகளை அங்கேதான் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதுவெல்லாம் தங்களுக்கு சாதகமாக, தங்களை காப்பாற்றிக் கொள்ள ஏற்படுத்தப்பட்டிருக்கும் வழிமுறைகளே. பாதகமாக ரிப்போர்ட் வந்து விட்டால் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் கூட வனவிலங்குகள் நல அமைப்பினருக்கு பதில் சொல்ல வேண்டி வரும்? எனவேதான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள்!’

இதைப் பற்றியெல்லாம் அப்போதே கோவை வனத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, 'கராலில் அடைத்த யானை ஒற்றை யானையேதான். அதைத்தான் வனத்துறை குழு பிடித்தது. அது கராலை முட்டி, முட்டி மண்டை பிளந்தே உயிரிழந்துள்ளது. இப்போது மதுக்கரையில் தென்பட்டது கூட்டத்து யானை. அது தனி யானையே அல்ல. அதேபோல், மயக்க மருந்தை அதிகமாகப் போட்டு ஒரு யானையைக் கொல்லும் செயலில் மருத்துவர்களே ஈடுபடுவார்களா?' என்றே பதில் சொன்னார். அதைத் தாண்டி ஒரு வார்த்தை மூச்சு விடவில்லை.

ஆனால் அவர் கூற்று எந்த அளவுக்கு போலியானது என்பதை நிரூபிக்கலாயின அடுத்தடுத்து வந்த சம்பவங்கள். அதாவது எந்த மகராஜ் யானையைப் பிடித்தோம் என்று வனத்துறையினர் சொன்னார்களோ, அந்த யானை, கபாலி ஸ்டைலில் ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!’ என சொல்லாத குறையாக பழையபடி எட்டிமடை, மதுக்கரை, குனியமுத்தூர், கோவைபுதூர், சுண்டக்காமுத்தூர், தீத்திபாளையம், கோவைபுதூர், க.க.சாவடி, திருமலையாம்பாளையம் பகுதிகளில் புகுந்து விளையாட ஆரம்பித்தது.

அதைப் பட்டாசு வெடித்து விரட்டுவதை தொடர்கதையாக கொண்டனர் விவசாயிகளும், பொதுமக்களும். இதன் உச்சமாக மேற்சொன்ன மகராஜ் சம்பவங்கள் நடந்து ஆறு மாதங்கள் கழித்து கட்டையன் என்ற ஒற்றை யானையின் செயல் கோவைபுதூர் பகுதியில் தொடர்கதையாகியது. தொடர்ந்து எங்கள் குடியிருப்பின் பிரஸ் என்கிளேவ் பகுதியிலும் தன் முகம் காட்ட ஆரம்பித்தது.

அப்படி ஒருநாள் இரவு 9 மணிக்கு இப்பகுதிக்கு வந்த ஒற்றை ஆண் யானை இங்குள்ள குடியிருப்புக்குள் புகுந்தது. அதைக்கவனித்து ஆண், பெண் குழந்தைகள் எல்லாம் அபயக்குரல் எழுப்பி வீடுகளுக்குள் புகுந்தனர். சிலர் பட்டாசுகள் வெடித்து விரட்ட, அங்கிருந்த கம்பிவேலி போடப்பட்ட கற்களை உடைத்து தள்ளிவிட்டுச் சென்றது. அங்கிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள வாழைத்தோப்பு சோலார் மின்வேலியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த யானை இரவு முழுக்க அங்கிருந்து வாழைகளை சேதப்படுத்தியது. பிறகு அடுத்தநாள் அதிகாலையே காட்டிற்குள் புறப்பட்டு சென்றது.

பிறகென்ன? தொடர்ந்து அடுத்தடுத்தநாள் விசிட்தான். பச்சாபள்ளிக்கு அப்பால் உள்ள ஒரு வாழைத்தோப்பில் இருந்த 4 ஆயிரம் வாழைகளுக்கு மேல் இது சேதப்படுத்தி விட்டது. அதே பணியைத் தொடர்ந்து சுண்டக்காமுத்தூர், தீத்திபாளையம், எட்டிமடை, குரும்பபாளையம் பகுதிகளிலும் செய்ய அப்பகுதி மக்கள் மறுபடி அலற ஆரம்பித்தனர். அப்போது ரஜினியின் கபாலி படம் ரிலீஸாகி பாப்புலராகியிருந்தது. அதையொட்டி, ‘இந்தக் கட்டையன் கபாலிக்கெல்லாம் அண்ணன். திரும்ப வந்துட்டேன்னு சொல்லுன்னு சொல்லாம சொல்லி பயமுறுத்திட்டுப் போகுது!’ என்றே வேடிக்கையாகப் பேச ஆரம்பித்தனர்.

‘அது மதுக்கரை மகராஜ் யானையேதான். அதே கட்டையான உருவம். அத்தனை பேரும் நாங்கள் இங்கே அடிக்கடி பார்க்கிறோம். இந்த யானை போன வாரம் வந்தபோது வனத்துறையினர் வந்தனர். பட்டாசு வெடித்தும் விரட்டினர். ஆனால் அது அவர்களையே துரத்த ஆரம்பித்தது. அதில் அவர்கள் ஓடி வீட்டு மாடிகள் மேல் ஏறி உயிர் தப்பித்தனர். அப்போது சென்றவர்கள் அவர்கள் யாரும் வரவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பும் இந்த யானை வந்தது. இரவு முழுக்க வாழைத் தோப்புக்குள்ளேயே நின்றது. பட்டாசுகள் வெடித்து விரட்டியும் நகரவில்லை. இப்போதுதான் குடியிருப்புகளை நோக்கி வந்திருக்கிறது. இனி என்னென்ன செய்யுமோ?’ என்பதே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பேச்சாகி இருந்தது.

இருந்தாலும் வனத்துறையினர் மிகவும் அமைதி காத்தனர். அப்படியே எத்தனை நாள் இருந்து விடமுடியும். இலைகள் சும்மாயிருந்தாலும், காற்றுதான் விடுவதில்லை என்கிற மாதிரி இந்த ஒற்றை யானை ஒரே நாளில் 4 பேரைக் கொன்றதில் மறுபடியும் கோவை நகரம் விழித்துக் கொண்டது.

அது 2017 ஜூன் மாதம், 1-ம் தேதி இரவு. கோவைபுதூர், மைல்கல், மதுக்கரை, குரும்பபாளையம், என சுற்றித்திரிந்த இந்த ஒற்றை யானை மாநகர ஒதுக்குப்புற பகுதிகளில் ஒன்றான போத்தனூர், கணேசபுரம் பகுதிக்குள்ளும் புகுந்தது. இங்கு மூராண்டம்மன் கோயில் வீதியில் குடியிருக்கும் தங்கமணி - விஜயகுமார் தம்பதிகளை தாக்கிவிட்டு, அங்கே தூங்கிக் கொண்டிருந்த இவர்களது மகள் 12 வயது சிறுமி காயத்ரியை தூக்கியெறிந்து கொன்றது.

தொடர்ந்து இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் சென்று வெள்ளலூர் பகுதியில் காலைக்கடன் கழிக்க சென்ற பழனிச்சாமி என்பவரையும், ரைஸ்மில் பகுதியில் கழிவறைக்கு சென்று கொண்டிருந்த ஜோதிமணி, நாகரத்தினம் என்பவர்களையும் தாக்கி விட்டு சென்றது. இவர்கள் இருவரும் மூவரும் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலும், சிகிச்சைக்கு சென்ற பின்னரும் அடுத்தடுத்து இறந்தனர். இவர்கள் தவிர 2 பெண்கள் உள்பட 6 பேர் யானை தாக்கியதில் காயமடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தொடர்ந்து இந்த யானையை விரட்ட வனத்துறையினர், போலீஸார் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டனர். கும்கியானையும் வரவழைக்கப்பட்டது. விடியற்காலை வெள்ளலூர் அருகில் உள்ள சுற்றுப்பகுதி கிராம மக்களும் ஆயிரக்கணக்கில் இங்கே நிறைய, போலீஸ், வனத்துறை, தீயணைப்பு வாகனங்கள் எல்லாம் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. 4 பேரை கொன்ற மூர்க்கம் மிகுந்த யானை ஊருக்கு நடுவே உள்ள ஒரு தோட்டத்தை ஒட்டியுள்ள பள்ளத்தில் புதர் மறைவில் நின்று கொண்டது.

- மீண்டும் பேசலாம்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்