அதைப் பற்றி அடுத்தநாள் என் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ‘என்ன நீங்க அந்த யானைகளுக்கு மேல் போட்டுகிட்டு எழுதியிருப்பீங்க. அத்தனை பேரும் பாராட்டியிருப்பாங்க. வேறென்ன செஞ்சிருப்பீங்க?’என்றாள்.
‘வேறென்ன செய்ய முடியும்?’என்றேன் நான்.
‘நானும் பையனும் எந்த அளவு ராத்திரி அந்த யானைகளைப் பார்த்து தவிச்சுட்டிருந்தோம். அது எங்கே காம்பவுண்ட் சுவத்தை முட்டி உடைச்சுட்டு வந்துடுமோ. கதவையும் தள்ளி உள்ளே வருமோ. நம்ம எந்தப் பக்கம் ஓடறது?ன்னு என்ன பாடுபட்டோம். வருஷம் பூரா வளர்த்த மூணு வாழையை பழுக்கற சமயத்துல வந்து அத்தனையும் சாப்பிட்டுட்டு போயிடுச்சேன்னு நான் இப்ப எவ்வளவு கவலைப்படறேன். அதைப் பத்தி உங்களுக்கு கொஞ்சமாவது அக்கறையிருக்கா? எப்பப் பாரு யானைக்கு வக்காலத்து வாங்கிட்டு!’
‘ரெண்டு வாழைய நீ பெரிசா பேசறே. அந்த கண்கொள்ளாக்காட்சிய மணிக்கணக்குல பார்க்கறதுக்கு எவ்வளவு கொடுத்து வச்சிருக்கணும் தெரியுமா? எத்தனை செலவு செஞ்சுட்டு முதுமலை, டாப் ஸ்லிப்னு அலையறாங்க தெரியுமா?’என்று பதிலுக்கு சொல்லி புரியவைக்க முயற்சித்தேன். அதில் எனக்கு தோல்விதான். அதற்குப் பிறகு அவள் எங்கள் வீட்டில் வாழையே வைக்கவில்லை என்பதுதான் அதன் உச்சம்.
இதோ அன்றைக்கு நாங்கள் அனுபவித்ததை அப்படியே பதிவிட்டு இந்த தொடரை நிறைவு செய்கிறேன்.
நள்ளிரவு தூக்கம் கலைய வைத்தது வீட்டிற்கு பின்புறம் நீளும் நாய்களின் குரைப்பொலி. சாதாரணமாக நாய்கள் எழுப்பும் சத்தமாக அது இல்லை. நரி ஊளையிடுவது, நாய்கள் அழுவது போலவும் அல்லாமல் ஒரு மாதிரி குனைப்புடனான சத்தம் அது என்பதால் எனக்கு சந்தேகம் வந்தது.
நிச்சயம் காட்டுயானைகள்தான் வந்திருக்கும் என்பது என் யூகம். பின் அறை கழிப்பறையில் எட்டும் தூரத்தில் இருந்த சின்ன சாளரம் வழியே எட்டிப் பார்த்தேன். புதிதாக சைட் போடப்பட்ட லே அவுட். காம்பவுண்ட் சுவர். இருட்டு வெளியில் பழுப்பும், வெளுப்புமாய் சுவர்கள். கழிப்பறையை விட்டு வெளியே வந்து வீட்டின் பின்பக்க சுவிட்ச்சைப் போட்டேன்.
மகனின் பெட்ரூம் தவிர்த்து, முன்பக்க ஹாலுக்கு வந்து மணி பார்த்தேன். 2.10 காட்டியது. யானை வந்திருந்தால் சபாபதி (நாங்கள் வளர்க்கும் நாட்டு நாயின் பெயர்) வீட்டு மாடியிலிருந்து சிட் அவுட்டிற்கு வந்து கத்தும்; அல்லது வீட்டின் தென்புறம் உள்ள சுற்றுச்சுவர் இடைவெளியில் சத்தமில்லாமல் குழியைப் பறித்து பம்மியிருக்கும் என்ற எண்ணம்.
எனவே மூக்குக்கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு வீட்டு பிரதான வாயிலின் இடதுபுறம் உள்ள கண்ணாடி வழியே பார்த்தேன். அவ்வளவுதான் உடலில் உள்ள நாடி நரம்பு முழுக்க ‘ஜிவ்’ வென்று ரத்தம் பரவுவதை சீக்கிரமே உணர முடிந்தது. நான் கண்ணாடி கதவு வழியே பார்த்த இடத்திற்கும் சுற்றுச்சுவருக்கும் வெறும் 5 அடி தூரம்தான். இடையே சிட் அவுட். சுற்றுச்சுவரை ஒட்டியபடி ‘போர்டிகோ’வையே தொடும் சைஸில் பிரம்மாண்டமான காட்டு யானை. எங்கள் வீட்டு முன்புறம் உள்ள தெருவிளக்கு ஒளியில் அந்த யானை எங்கள் வீட்டுச் சுற்றுச்சுவரை ஒட்டி உள்ளே வைக்கப்பட்டிருந்த வாழை மரத்தை உடைத்து சாப்பிட்டபடி இருந்தது. அதன் கூடவே அதை விட சின்ன சைஸில் 2 யானைகள் மற்றும் 2 குட்டி யானைகள்.
ஒரு குட்டி பெரிய யானையின் காலுக்கடியில் நின்றது. அதை விட பெரியது இன்னொரு குட்டி யானை. எல்லாமே வாழையை அசைபோட்டபடி. இதுவெல்லாம் எண்ணி சில நொடிகளில் கண்களில் பதிவாகி மூளையில் சிவப்பு விளக்கை எரிய விட மேல் மற்றும் நடு தாழ்ப்பாளை நீக்கி, கதவைத் திறந்து விட்டேன். ‘சபாபதி சிட் அவுட்டில் இல்லை!’ என்று தெரிந்த வேகத்தில் மெதுவாக சப்திக்காது திரும்ப திறந்த வேகத்தில் கதவைத் தாழிட்டேன்.
மனைவியை சன்னமான குரலில் அழைத்தேன். மகனையும் அழைத்தேன். இருவருமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். முதலில் மனைவியைத் தட்டி எழுப்பி,‘சாவித்திரி யானை வந்திருக்கு. நம் சிட் அவுட்கிட்டவே நிற்குது. ஒண்ணில்ல; அஞ்சு யானைக!’ என்றதும் அதிர்ந்து போய்விட்டாள். கண்ணில் சட்டென்று எழுந்த பீதியை வார்த்தைகளால் அளவிட முடியாது.
இதே முறையில் அடுத்த அறையில் இருந்த மகனையும் அழைக்க சட்டென்று எழுந்து கொண்டான். பதட்டம். சுதாரிப்பு. நான் கதவருகே போகும்போது எச்சரிக்கை குரல்கள். ‘அப்பா போகாதீங்க. வந்துடும். கதவை திறந்துடாதீங்க!’ இருவருமே பதறுகிறார்கள். அந்த நேரத்தில் கண்ணாடி வழியே பார்த்தால் ‘சபாபதி’ சிட் அவுட்டில். வீட்டின் பின்பக்கம் பதுங்கியிருந்தவன் நான் கதவு திறக்கிற சத்தம் கேட்டு ஓடி வந்திருக்கிறான். கனைக்கிறான். பயத்தால் நடுங்குகிறான். அதை அப்படியே விட்டால் தும்பிக்கையை காம்பவுண்டுக்குள் நீட்டி தூக்கி வீசி விடும் யானை. அந்த அளவு கிட்டத்திலேயே நின்றது பெரிய யானை.
அம்மா சைஸூக்கு ‘சபாபதியாவது; உமாபதியாவது?’ சட்டென்று தாழ்ப்பாளை நீக்கி கதவைத் திறந்து விட்டேன். ‘என்ன செய்யறீங்க?’அலறி விட்டார்கள் மகனும், மனைவியும். ‘டேய் சபா.. உள்ளே வாடா!’ சபாவுக்கு திடீரென்று எங்களைப் பார்த்தவுடன் அசட்டு தைரியம் வந்துவிட்டது. உடனே அந்த பெரிய உருவங்களை பார்த்து குரைக்கிறான்; அந்த குரைத்தல் என்பது அரைக்குரைப்பு என்றுதான் சொல்லவேண்டும்.
‘டேய்.. வந்துடுடா. சத்தம்போடாதே!’ என்று அவனை தாஜா பண்ணி, பிஸ்கட் டப்பாவை காட்டி சிட் அவுட்டிலிருந்து எங்கள் ஹாலுக்குள் இழுத்துப்போட்டு திரும்பவும் தாழிடுவதற்குள் எனக்கு பிரக்ஞை கண்டுவிட்டது. உள்ளே வந்தபின்பும் சபாபதி சும்மாயிருக்கவில்லை. கண்ணாடிக் கதவு வழியே பார்க்கிறான். குரைக்கிறான். அவன் முன்னால் பிஸ்கட்டைப் போட்டு, ‘சும்மாயிருடா!’என்று அதட்டுகிறாள் மனைவி. மகனும் கூட சேர்கிறான்.
அது குரைப்பொலி கேட்டு சுற்றுச்சுவர் பக்கம் நிற்கும் யானைகள் எட்டிக் கதவை உடைக்க எத்தனை நேரம் ஆகி விடும். ஆளாளுக்கு பதட்டம். ஒரு வழியாக சபாபதியை சமாளித்து மூலையில் தள்ளி விட்டுப்பார்த்தால், அப்பவும் அந்த காட்டு யானைகள் கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறது. செல்போனை எடுத்து புகைப்படம் எடுத்தால் வெறும் இருட்டாகவே தெரிகிறது. ஃபிளாஷ் இல்லாத நைட் மோடு போலாம் என்றால் பதட்டத்தில் அதுவும் சரியாக தெரியமாட்டேன் என்கிறது. மகன் தன் செல்போனில் படம் எடுத்து விட்டான்.
நான் ‘சிட் அவுட்’டுக்கு நேர் எதிரே இருக்கும் இன்னொரு அறைக்கதவை திறக்கிறேன். ஐந்து யானைகள் அப்பட்டமாக தெரிகிறது. அப்போதும் ஒரு யானை கொஞ்ச தூரம் நின்று எதையோ மிதிக்கிறது. அதை உற்றுப் பார்த்தால் உருவி எடுத்த வாழை மரத்தின் துண்டுதான். முன்னங்காலில் அழுத்தி அழுத்தி மிதித்து கிழங்கை வெளியே தள்ளி தானும் உண்கிறது.
அதில் ஒரு பகுதியை குட்டிக்கும் ஊட்டுகிறது. வீட்டை, ஒட்டி நிற்கும் யானை மூத்திரம் பெய்யும் சத்தமும், அதன் வாசமும் நாசியைத் துளைக்கிறது. சாணக்கழிவு அடுத்தது. இப்படியாக அங்கே நின்ற யானை காம்பவுண்டுக்குள் துதிக்கையை விட்டு வாழையை உருவுவதும் அதை சாப்பிடுவதும், நாங்கள் அதைப் பார்த்துப் பதறுவதுமாக இருந்தோம்.
என் மனைவி, ‘இதுக்குத்தான் வாழை வைக்கல; வைக்கலன்னா கேட்கிறீங்களா?’என்னைக் கேட்பதும், வாழை போனா பரவாயில்லை. அதுக்காக வெளியே போயிடாதீங்க. அப்பா அது கிட்ட வருதுப்பா!’ என்று பல்வேறு வார்த்தைகளால் என் மகன் எச்சரிப்பதும் தொடர்கிறது. ரெண்டு மூணு ஃபிளாஸ் லைட் என் செல்போனிலிருந்தும், மகனின் செல்போனிலிருந்தும் புறப்பட்டதை உணர்ந்தோ என்னவோ பெரிய யானை கொஞ்சம் திரும்பி நின்றது. பின்பக்கத்தை காட்டியபடியே சில நிமிட நேரம் தன் காலடியில் போட்ட வாழைத்தண்டை நசுக்கி, நசுக்கி வாயில் போட்டது. அப்படியே அங்கிருந்து நகர ஆரம்பித்தது.
அதைப் பார்த்து அடுத்ததாக அதற்கு முன்னால் இருந்த யானை வடக்கு நோக்கி நகர்ந்தது. அதே சமயம் ஒரு யானை வாழையின் கடைசி வேர் பகுதியை கிழங்குடன் தும்பிக்கையில் உருட்டி எடுத்துக் கொண்டு சிறிது தூரம் கொண்டு போய் வழியில் போட்டு விட்டது.
அதைத் தாண்டி சென்ற பெரிய யானை குட்டியுடன் சேர்ந்து எங்கள் வீட்டிலிருந்து 50 மீட்டர் தொலைவில் இருந்த டீச்சர் வீட்டு கொய்யா மரத்தை பதம் பார்த்தது. அங்கே ஒரு பத்து நிமிடம். அதன் பின்னால் சென்ற இன்னொரு யானை டீச்சர் வீட்டிலிருந்து 50 அடி தொலைவில் இருந்த அடுத்த வீட்டில் இருந்த வாழைகள் இரண்டை துவம்சம் செய்கிறது. அங்கே சுவர் இடிபடும் ஓசை கேட்கிறது.
அதே நேரத்தில் காலனியில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் எங்களுக்கு போன் அழைப்புகள். ‘ஜாக்கிரதை!’ என்ற எச்சரிப்புகள். செல்போனில் எடுத்த படத்தை வாட்ஸ் அப்பில் மகன் பரவ விட்டது. அதைப்பார்த்தால் ‘PRESS ENCLAVE GUYS’ என்ற எங்கள் காலனி வாட்ஸ் அப் குரூப்பில் ‘Elephent inside enclave in front of velayutham house’ என்றெல்லாம் செய்திகள் பரவிக்கிடந்தன.
பிறகு அடுத்தது, அடுத்தது என்று வாட்ஸ் அப் தகவல்கள் பரவ ஆரம்பித்தன. Elephents near Murugan anna home back side என்றும் 4 Or 5 elephents என்றும் inside in press enclave என்றெல்லாம் பல்வேறு தகவல்கள் படங்களுடன் வெளியாகத் தொடங்கியது. குட்டியுடன் பெரிய யானை ஒரு பக்கம் ஒரு வீட்டு வேலியில் மரங்களைப் பதம் பார்க்க, பெரிய குட்டியோ திரும்ப எங்கள் வீட்டை நோக்கி வர ஆரம்பித்தது.
அது வருவதற்குள் நாங்கள் மொட்டை மாடியேறி விட்டோம். அங்கிருந்து பார்த்தபோது திரும்பி வந்த பெரிய குட்டி யானை (6 வயதிருக்கும்) தும்பிக்கையை தூக்கியபடி ஆட்டியது. வெவ்வேறு திசையை நோக்கி அப்படி அது மோப்பம் பிடித்ததோ, நன்றி தெரிவித்ததோ, எங்களுக்கு டாட்டா காட்டியதோ தெரியவில்லை. நாங்கள் செல்போனில் படம் பிடித்து ‘ஃபிளாஷ்’ அடிப்பதை கவனித்தோ என்னவோ அந்த பெரிய குட்டி திரும்ப கூட்டத்தோடு கிழக்கு நோக்கி செல்ல ஆரம்பித்தது.
அங்கே பச்சாபள்ளி குடியிருப்பு வாசிகள் ஏற்கெனவே விழித்திருந்தார்கள். அவர்கள் அங்கேயே நின்று ‘ஆய்.. ஊய்...’ என்று சத்தமிட்டு கோஷங்கள் போட, கூடவே வீட்டுக்கு வீடு பட்டாசுகள் கொளுத்தி வெடிக்க, அவை திசை திரும்பி எங்கள் வீட்டிற்கு அடுத்துள்ள ஏஎன்ஐ செய்தியாளர் வீட்டை தாண்டி இருட்டுக்குள் சென்று மறைந்தது.
‘இங்கே மட்டும் 2 வாழைகளைச் சாப்பிட 1 மணிநேரத்திற்கு மேல் நின்றிருக்கிறது. ஆச்சர்யம்தான்!’என்றனர் சிலர். ‘இனிமேல் வாழை வைக்காதீங்க. வச்சா, யானை வந்துடும்!’ என்று எச்சரித்தார்கள் சிலர். ‘நல்லவேளை வாழையோட போச்சே. காம்பவுண்ட் சுவரை இடிக்காமப் போச்சே. இல்லைன்னா அது ஒரு செலவாகியிருக்கும்!’என்றனர் சிலர்.
காம்பவுண்டுக்குள் உள்ளே தள்ளி இருக்கும் தென்னை மரத்தைப் பார்த்து, ‘தேங்காய்க காய்ச்சிருக்கு. அதை தின்னுடுமோன்னு, முட்டி சாய்ச்சிடுமோ, வீட்டை இடிச்சிருச்சோன்னு நினைச்சேன். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கலை!’என்றனர் சிலர்.
எனக்கோ ஒரு வாழை மரத்தை வேரோடு உருட்டிப் பிடுங்கி, அதில் இருந்த மண்ணெல்லாம் தட்டி கிழங்கை எடுத்து தானும் சாப்பிட்டு, குட்டிகளைச் சாப்பிட வைத்த அந்த யானை இன்னொரு வாழையில் கடைசிக் கணுவை மட்டும் விட்டுவிட்டு போய்விட்டதே என்ற ஏக்கம்தான் நிரம்பி நின்றது.
ஒரு வேளை நாம் அதை எட்டிப்பார்க்காமல், செல்போன் ஃபிளாஷ் செய்யாமல், ஆளாளுக்குப் பேசி தொந்தரவு செய்யாமல் இருந்திருந்தால் இன்னும் சில நிமிடங்கள் நின்று நிதானித்து அந்தக் கடைசி வாழை மரத்தின் கடைசிக் கணுவையும், அதில் உள்ள கிழங்கையும் சாப்பிட்டு விட்டு போயிருக்குமோ. நாம்தான் அதைத் தொந்தரவு செய்து விட்டோமோ? என்ற ஏக்கமே மிஞ்சி நின்றது. அந்த எண்ணமே மனதை தொந்தரவு செய்கிறது.
யானை ஒரு அற்புதம். அதிலும் அம்மாம் பெரிய காட்டு யானை அதி அற்புதத்திலும் அதி அற்புதம் அல்லவா? அதைத் தேடி அலைந்தவர்களுக்குத்தானே அதன் அருமை தெரியும்!
- நிறைவு பெற்றது.
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago