ஆண்களுக்காக: 2- உங்களுக்கும் தார்மீகப் பொறுப்பு இருக்கிறது ஆர்யா

By பாரதி ஆனந்த்

தமிழ்த் திரையுலகம் ஸ்டிரைக்கில் இருந்த காரணமோ என்னவோ தெரியவில்லை கடந்த மாதம் முழுவதும் ஆர்யாவின் அந்த ரியாலிட்டி ஷோ பொழுதுபோக்கு வெற்றிடத்தை வீடுதோறும் நிரப்பிக்கொண்டிருந்தது.

ஒருநிமிடம்.. இது ஆர்யாவுக்கான பாராட்டு அல்ல. ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் அவர் இளைய சமூகத்தின் மனங்களில் எதை நிரப்பிக்கொண்டிருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கான வசைமொழியின் 'ஒன்லைன்'.

வக்கிரமயமாகும் மனித மனங்கள்..

எத்தகைய ஆபாசமானாலும் இணையவழியில் ஒரு சொடுக்கில் கிடைக்கும் இந்த காலகட்டத்தில் மனித மனங்களில் வக்கிரம் நிரம்பிவழிந்து கொண்டிருக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை அண்டைவீட்டு இளைஞரே ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து அந்த வீடியோவை சிறுமியின் குடும்பத்துக்கே அனுப்புகிறார். இது, மனித மனத்தின் வக்கிரத்துக்கு கட்டியம் கூறும் கொடூரங்களுக்கான சாட்சிகளில் ஒன்று.

கத்துவா சிறுமியின் பலாத்காரம் தொடங்கி வரதட்சணைக்காக திருமணமான மூன்று நாட்களிலேயே மனைவியை கணவனும் அவனது நண்பர்களும் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் வரை இன்னும் நிறைய வக்கிரங்கள் இருக்கின்றன. இவற்றை பாலியல் தீவிரவாதம் என்றுதான் குறிப்பிட வேண்டும்.

குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் குறித்த செய்திகள் இல்லாதே நாளே இல்லை எனுமளவுக்கு குற்றங்கள் மலிந்து கிடக்கின்றன. இதுவே தொடருமானால் ஒருநாள் பெரும்பான்மையான மனித சமூகம் குற்றவாளிகளாக நிற்கும் சூழல் உருவாகிவிடும்.

இப்படியான தருணத்தில்தான் ஒவ்வொரு தனி மனிதனும் சற்று கூடுதலாகவே சமூக அக்கறையைக் காட்ட வேண்டும். தனி மனித ஒழுக்கம் சமூக ஒழுக்கத்துக்கு வித்திடும் என்பதால் கூடுதல் அக்கறை தேவையாகிறது.

இங்கே பேம்பர்ஸ் அணிந்த பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை. குட்டைப் பாவாடை அணிந்த யுவதிக்கும் பாதுகாப்பில்லை. முழுமையான உடையாக சுடிதார் அணிந்த பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை.

ஒவ்வொரு தனிமனிதரும் ஒழுக்க சீலராக இருப்பது அடிப்படை பண்பு என்பதை உணரும் தருணத்தில் இந்த சமூகம் இருக்கிறது. அப்படியான காலகட்டத்தில் காட்சி ஊடகத்தின் வழியாக கடத்தப்படும் கருத்துகள் எத்தகைய மெனக்கிடலுடன் கையாளப்பட்டிருக்க வேண்டும்? ஆனால், உண்மையில் அந்த ரியாலிட்டி ஷோ என்ன செய்திருக்கிறது தெரியுமா?

13 பெண்களும் ஆர்யாவும்..

மகளிர் மட்டும் படத்தில், நடிகர் நாசர் பணியிடத்தில் பெண்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் பாலியல் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பார். அவரை ஸ்டாக்கருக்கு (Stalker) துல்லிய உதாரணம் என்று சொல்லலாம். "காளை மாடு ஒண்ணு கறவைமாடு மூணு.. அடிச்சான் லக்கி ப்ரைசு அதிர்ஷ்டக்காரன் ஆளு" என்று அந்தப்படத்தில் ஒரு பாடல் உண்டு. விரசமான பாடல்தான்.. ஆனால் ஒரு ஸ்டாக்கரின் மனோபாவத்தை பிரதிபலிக்கும் வரிகள் அவை.

 

 

ஆர்யா.. நீங்களும் ஒரு ஸ்டாக்கர்தான். 13 பெண்களைப் பார்க்கும்போதே உங்கள் கண்களில் ஆசை வழிந்தோடியது. அத்தனை வாஞ்சையுடன் ஒவ்வொருவரையும் பார்த்தீர்கள். எல்லோரிடமும், "ஐ லைக் யூ" என்று சொன்னீர்கள். எல்லோருமே அழகாக இருப்பதாக வர்ணித்தீர்கள். உங்களை தழுவிக்கொள்ள ஆசைப்பட்டதால் தாராளமாக உங்கள் மார்பில் இடம் கொடுத்தீர்கள். எல்லோரையும் சமையல் செய்யச் சொல்லி புசித்தீர்கள். லவ் டோக்கன் கொடுத்தீர்கள். சர்ப்ரைஸ் கிஃப்ட் என வாரி வழங்கினீர்கள். அவர்கள் அளித்த பரிசுகளையும் இன்முகத்தோடு பெற்றுக் கொண்டீர்கள். சிலரை பைக்கில் அழைத்துச் சென்றீர்கள். தாஜ்மஹாலுக்குக் கூட கூட்டிச் சென்றீர்கள். எல்லோரது வீட்டுக்கும் சென்றீர்கள். நிஜமான மாப்பிள்ளை போலவே அத்தனை பவ்யமாக வீட்டுப் பெரியோரிடம் பேசினீர்கள். சாக்லேட் கொடுத்தீர்கள். பூங்கொத்து கொடுத்தீர்கள். ஆடிப் பாடினீர்கள். உங்கள் வீட்டுக்கு கூட்டிச் சென்றீர்கள்.

இவற்றையெல்லாம் ஒரே ஒரு பெண்ணிடம் செய்தாலே ஸ்டாக்கர் என்று உங்களை அழைப்பதற்கான அத்தனை நியாயமும் இருக்கிறது. ஆனால், நீங்கள் 13 பெண்களிடமும் இதைத்தான் செய்திருக்கிறீர்கள். அப்படி என்றால் உங்களை ஸ்டாக்கர்களின் தலைவர் என்றுதான் அழைக்க வேண்டும்.

ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக இதையெல்லாம் செய்தால்தான் ஸ்டாக்கர் என்பது அர்த்தமல்ல. இங்கே 13 பெண்களின் விருப்பத்தோடே நீங்கள் பழகியிருந்தாலும் நீங்கள் ஸ்டாக்கர்தான்.

ஏனென்றால், ஆர்யாவும் - அகாதாவும் நல்ல ஜோடி, ஆர்யாவும் - சீதாலக்‌ஷ்மியும்தான் சிறந்த ஜோடி, இல்லை இல்லை ஆர்யாவும் சூசானாவும் தான் ஆகச் சிறந்த ஜோடி என்றெல்லாம் கல்லூரி மாணவ மாணவிகள் தங்களுக்குள் விவாதம் நடத்திக் கொள்ளும் அளவுக்கு கெமிஸ்ட்ரியை கச்சிதமாக ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தீர்கள்.

ஆனால், கடைசியில் மூன்று பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் மற்ற இரண்டு பெண்களும் அவர்களது குடும்பத்தாரும் வருத்தப்படுவார்கள் என்று நழுவிக்கொண்டீர்கள்.

இந்த மூன்று பெண்களை விடுங்கள், கோலம் போடு, பாட்டு பாடு, நடனம் ஆடு என்று நீங்கள் டாஸ்க் கொடுத்து கொடுத்து எலிமினேட் செய்தீர்களே அந்த 10 பெண்கள் பற்றி உங்களுக்கு எந்தக் கவலையுமே இல்லையா ஆர்யா? உங்களை ஸ்டாக்கர் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?

சமூகத்தினால் நன்கு அறியப்பட்ட நீங்கள்; இளைஞர்கள் பலரின் விருப்ப ஹீரோவாக இருக்கும் நீங்கள் சமூக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டாமா? சாமான்யர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஒரு தார்மீக பொறுப்பு இருக்கிறது ஆர்யா. அதை உணர்ந்து செயல்படுங்கள்.

ராஜா காலத்தில் சுயம்வரம் பெரும் வரமாக இருந்திருக்கலாம். ஆனால், இது பெண்கள் சாதிக்கும் காலம். இத்தகைய பெண்கள் போராடி முன்னே வந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் இருந்து கொண்டு ஒருபொழுது போக்கு நிகழ்ச்சிக்காக எனினும் இப்படியொரு நிகழ்ச்சிக்கான கருத்து வடிவம் ஏற்றுக்கொள்ளமுடியாதது. ஆர்யா மட்டுமல்ல இதில் பங்கேற்க வைக்கப்பட்டுள்ள பெண்களும் சில கருவிகள்தான்.

ரியாலிட்டி ஷோ தகிடு தத்தங்கள்..

இந்த நிகழ்ச்சியைப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு எல்லாம் சில அறிவுஜீவிகள், "இது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. அதை வெறும் நிகழ்ச்சியாகப் பாருங்கள். அதில் வருவதெல்லாம் உண்மையல்ல. அங்கு சிந்தப்படும் கண்ணீர் ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்ட காட்சி. அங்கே நடத்தப்படும் ரொமான்ஸ் ஸ்க்ரிப்டின் அடிப்படையிலானது. அதனால் வெறும் பொழுதுபோக்காக பார்த்துவிட்டு கடந்து சொல்லுங்கள்" என்று வக்காளத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கனவான்களே.. உங்களுக்கெல்லாம் ஒரு கேள்வி. உங்கள் வாதத்தின்படியே இந்த விஷயத்தை அணுகுவோம். சினிமாவில் காட்டக்கூடிய பலாத்காரங்கள் நிஜ பலாத்காரம் அல்ல, கொலைகளும் உண்மைக் கொலை அல்ல, கொள்ளையும் அப்படியே. ஆனால், ஒத்த சம்பவங்கள் சமூகத்தில் நிகழும் போது சினிமா பாணியில் கொள்ளை, அலைபாயுதே பாணியில் காதல் ஜோடி திருமணம், சிவப்பு ரோஜா பாணியில் கொலை என்று ஏன் செய்திகள் எழுதப்படுகின்றன தெரியுமா? சினிமா சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதாலேயே.

 

 

தூங்காதே தம்பி தூங்காதே என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் ஒரு தம்பிக்கு உத்வேகத்தை அளிக்குமானால் கட்டிப்பிடி கட்டிப்பிடிடா என்ற காம இச்சை முனகல்கள் நிரம்பிய பாடல் இளைஞர்களுக்குள் நிச்சயம் ஒரு கிளுகிளுப்பை கடத்தத்தான் செய்யும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இது உங்களுக்கும்தான் ஆர்யா. உங்களைப் போல் நாளை ஒரு கல்லூரி மாணவன் தன் கல்லூரியில் படிக்கும் சக மாணவிகள் பலரிடமும் ஜொள்ளராக இருந்துவிட்டு கடைசியில் சூஸ் தி பெஸ்ட் ஆப்ஷனுக்குப் போகும் அபாயம் இருக்கிறது. உங்களுக்கும் ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது ஆர்யா. அதை உணர்ந்து செயல்படுங்கள்.

இந்த யோசனையே முதல் தவறு....

ராஜா காலத்தில் சுயம்வரம் பெரும் வரமாக இருந்திருக்கலாம். ஆனால், இது பெண்கள் சாதிக்கும் காலம். பெண்கள் போராடி முன்னே வந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் இருந்து கொண்டு ஒருபொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக எனினும் இப்படியொரு நிகழ்ச்சிக்கான கருத்து வடிவம் ஏற்றுக்கொள்ளமுடியாதது. ஆர்யா மட்டுமல்ல இதில் பங்கேற்க வைக்கப்பட்டுள்ள பெண்களும் சில கருவிகள்தான். ஆனால் இந்த கருத்து வடிவத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சியாக உருவாக்கி வெற்றிபெற முடியும் என்ற சிந்தனையே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பழைய ஆண்வழி நிலப்பிரபுத்துவ கனவு உலகத்திலேயே மிதக்கும் மோசமான மன உலகத்தைக் காட்டுகிறது.

சற்று தரையில் இறங்கி வாருங்கள்...

சமூகத்தில் தங்களுக்கு என்று ஒரு இடத்தை அடையப் போராடும் பெண்களின் நூறு விதமான கருத்து வடிவங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

முதல் தலைமுறை பட்டதாரியான பெண்கள் பல உயரிய சாதனைகளைச் செய்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் எல்லாம் அடையாளம் இல்லாமல் இருக்கின்றனர்.

அப்படிப்பட்டவர்களை அடையாளம் காட்ட முற்படுங்கள். பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் வழங்க உதவுவதோடு புதிய பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும்.

அதைவிடுத்து டிஆர்பிக்காக செலிபிரிட்டியை வைத்து இப்படி ஒரு நிகழ்ச்சியைச் செய்வது என்பதும் அதற்கு சில பெண்களைக் கருவிகளாக பயன்படுத்திக் கொள்வதும் நியாயமானதல்ல.

இந்த சமுதாயத்தில் காதல் இயற்கையானது, காமம் இயற்கையானது. ஆனால் ஒரு பெண்ணைப் பின்தொடர்தலும் அதன் நீட்சியாக அவளை காதலுக்கு கட்டாயப்படுத்துதலும் மறுத்தால் பலாத்காரம் செய்வதும் ஆசிட் வீசுவதும் வக்கிரம். அந்த வக்கிரத்தை யார் செய்தாலும் தவறு. அதை ஆதரிக்கும் படைப்பு எதுவாக இருந்தாலும் விமர்சனத்துக்குரியது. அந்தவகையில்தான் ஆர்யா நீங்கள் விமர்சனப் பொருளாகியிருக்கிறீர்கள். மீண்டும் வலியுறுத்துகிறேன்.. உங்களுக்கும் ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது ஆர்யா. அதை உணர்ந்து செயல்படுங்கள்.

காதலை உரக்கச் சொல்லுங்கள்.. கடைச் சரக்காகாதீர்கள்

பெண்கள் காதலை உடைத்துச் சொல்வதே தவறு என நினைக்கும் பிற்போக்குத்தனமான சமுதாயத்தில் ஆர்யாவிடம் 13 பெண்களும் தங்கள் ரொமான்ஸை வெளிப்படையாக சொன்னது துணிச்சலானது வரவேற்கத்தக்கது என்கின்றனர் சிலர்.

பெண்களே காதல் பழகுங்கள்.. தவறல்ல. சாதிகளற்ற சமுதாயம் உருவாகும். காதலனுடன் கைகோத்து நடந்து செல்லுங்கள்.. குற்றமல்ல. காதலரை உங்கள் அப்பா அம்மாவுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்.. கண்ணியமானது அது.

பெண்களே உங்களை யாராவது அழகாக இருக்கிறீர்கள் என்று புகழ்ந்தால் அதை பெருமித அடையாளமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இத்தகைய வார்த்தைகளுக்கு மயங்கிவிடாதீர்கள். நீங்கள் சாதிக்க வேண்டியவை ஏராளம். பெண் என்பவளை அழகியலோடு தொடர்புபடுத்தி அடிமைப்படுத்தும் தூண்டிலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கூட்டுப்புழுவாய் இருந்ததுபோதும், நீங்கள் சாதித்தால் வண்ணத்துப்பூச்சி என்ற அழகு சார் அடைமொழியுடன் உங்களை இணைத்துப் பேசினால் அதில் திருப்தி அடைந்துவிடாதீர்கள். இன்னும் இன்னும் உயரே செல்லுங்கள். பருந்தைப் போல சிறகை விரித்து உயரப் பறக்கப் பிறந்தவர்கள் நீங்கள்.

அதைவிடுத்து, உங்கள் துணிச்சலை எல்லாம் இப்படி கடை விரிக்காதீர்கள். நீங்கள் உங்களையே ஒரு போகப் பொருளாக ஆக்கிக் கொண்டு கடைச்சரக்கு ஆகாதீர்கள். உங்களைப் பார்த்து சில விவரமறியா யுவதிகள் இம்ப்ரெஸ் செய்கிறேன் என்ற பெயரில் சுயமரியாதையை இழக்கக்கூடும். நீங்கள் வெறுமனே நடித்துவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால், அது சிலரின் மனதில் பதியமாகியிருக்கும்.

ஆர்யாவுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் இந்த சமுதாய ஒழுக்கத்தைப் பேணுவதில் தார்மீகப் பொறுப்பிருக்கிறது பெண்களே.

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்