யானைகளின் வருகை 163: ஆழ் உணர்வுகளின் சங்கமம்

By கா.சு.வேலாயுதன்

சமீபத்தில் ஒரு வேட்டைத் தடுப்புக் காவலரை சந்தித்தேன். அவர்தான் என்னை சிறுவாணிக் காடுகள், நொய்யல் உருவாகும் இடங்கள், வைதேகி காடுகள் எல்லாம் அழைத்துச் சென்றிருந்தார். யானைகள் எங்கெங்கு தங்கும். எப்படியெல்லாம் தூங்கும். எப்படியெல்லாம் அட்டாக் பண்ணும். அதற்கான சூழல் எப்படி? என்றெல்லாம் விவரித்தும் வந்தார். அப்படியே அவர் வீட்டிற்கும் சென்றிருந்தேன்.

வெற்று ஓலைக்குடிசைதான் வீடு. அவர் முதுவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இரண்டு குழந்தைகள். இவரைப் போலவே பத்துக்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பங்கள் அங்கே வசித்தன. அதில் இவர் மட்டுமே அரசு வேலையில் உள்ளார். அதுவும் மாதம் 6 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம். அந்த சம்பளமும் மூன்று மாதங்களாக வனத்துறையில் போடவில்லை என்றார். அவர் மனைவி பக்கத்து தோட்டத்தில் தைலப்புல் வேக வைக்கச் செல்வதாகச் சொன்னார்.

அவருடன் ஒரு நாய் இருந்தது. அதனுடன் நான் விளையாடிக் கொண்டிருந்தபோது, ‘இந்த நாய் மட்டும்தான் நரிகிட்டயிருந்து தப்பிச்சது!’என்று பக்கத்தில் இருந்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ‘என்ன நாய் நரிகிட்ட தப்பிப்பதாவது?’ என்ற போது, ‘ஆமாம் சார். இங்கே நரிகள் அதிகம். ஒரு நாயை விடாது. வந்து பிடிச்சுட்டுப் போயிடும். அதிலும் நாய் குட்டி போடறதை வாசத்துலயே தெரிஞ்சுடும் நரி. அதனால எந்த வீட்டிலயும் நாய்கள் தங்கறதில்லை!’ என்றெல்லாம் அவர் விவரிக்க, பிறகுதான் தெரிந்தது, அவர் நரி என்று சொன்னது சிறுத்தையை என்று.

இவர் வசிக்கும் பகுதிகளில் சிறுத்தைப்புலிகள் ஏராளம். அவை நாய்களை தூக்கிச் சென்றுவிடுமாம். இவர் வீட்டில் மொத்தம் 5 நாய்கள் வைத்திருந்தாராம். தினசரி இரவு சிறுத்தை வருவதும், நாயை கவ்விக்கொண்டு செல்வதும் நடந்து வந்ததாம். கடைசியாக இந்த நாயை மட்டுமாவது காப்பாற்ற தன் வீட்டிற்குள் மரக்கட்டிலிலேயே படுக்க வைத்துக் கொண்டாராம்.

‘அப்போதும் அந்த நரி விடவில்லை. ஒரு நாள் இரவு வீட்டிற்குள்ளும் வந்துவிட்டது. உருவத்துல ரொம்பப் பெரிசு. கர்புர்ன்னு கட்டில் ஏறி நாயையும் புடிச்சுடுச்சு. நான் தலைமாட்டுலதான் வெட்டரிவாள் வச்சிருந்தேன். எடுத்து ஒரே வீசு. நரி மூஞ்சியில சப்புனு விழுந்தது. நாயை விட்டுட்டு ஓட்டம் புடிச்சுது. அப்புறம் பாருங்க அந்த நரி இந்த பக்கம் தலைவச்சே படுக்கலை. நரியைப் பொறுத்தவரை ஒரு தடவை இப்படி சூடு(அடி) போட்டுட்டோம்ன்னா இந்த திக்குலயே வராது!’ என்று ரொம்ப கேஷூவலாக வேடிக்கையாகவும் சொன்னார் அந்த வேட்டைத் தடுப்புக் காவலர்.

‘சிறுத்தை மட்டும்தான் வருமா? புலி வராதா?’ என்று கேட்டேன். ‘அதுவும் வரும். அது அடர்ந்த சோலைக்குள்ளேதான் இருக்கும். நான் பல தடவை பார்த்திருக்கேன். அதுக ஆளைப்பார்த்ததும் ஓட்டமா ஓடிடும்!’ என்றும் குறிப்பிட்டார். நரி, சிறுத்தை, புலி எல்லாம் நாட்டில் வாழும் நமக்குத்தான் பயங்கரம். இந்த காட்டில் வாழும் பழங்குடிகளுக்கு அன்றாடம் பார்க்கும் சகஜமான பிராணி. அதை எப்படி எதிர்கொள்வது. அதைக் கொல்லாமல் எப்படி விரட்டுவது என்பதையெல்லாம் பிறவியிலேயே உணர்ந்து வைத்துள்ளார்கள்.

அது அவர்களின் நாடி, நரம்பு, புத்தி, ரத்தத்தில் மட்டுமல்ல. மரபணுக்களாகிய ஜீன்களிலும் கலந்திருக்கிறது. அதை நாம் பயன்படுத்துவது, அதன் மூலம் காடுகளைக் காப்பாற்றுவது அறிவுடமையா? அதை அகற்றி, அவர்களை நாட்டில் கொண்டு வைத்து செங்கல் சூளைக்கூலிகளாக மாற்றுவதுதான் நாகரிகமா?’ என்றுதான் நம் அதிகாரி மையங்களை பார்த்து கேட்க வேண்டியுள்ளது.

இவ்வளவை விவரிக்கும் நான் காடுகளை உணர்ந்தேனா? கானுயிர்களை அறிந்தேனா? என்றால் யோசிக்கவே வேண்டியிருக்கிறது. அதற்கு எனக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் யானைகளைப் பற்றி அறிந்துகொள்ள புரிந்துகொள்ள, அதையும் தாண்டி உணர்ந்துகொள்ள பெருவாய்ப்புகளும் சூழல்களும் ஏற்பட்டுள்ளன. அதற்கு நான் இந்த சமூகத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்த விஷயத்தில் நான் மற்றவர்களை தாண்டி உணர்ந்து கொண்டதை இப்போதும் என் வீட்டைச் சுற்றி நடந்த சில சம்பவங்களைச் சொல்லி இந்த நீண்ட நெடிய தொடரின் பயணத்திலிருந்து விடைபெற்றுக் கொள்ள இருக்கிறேன்.

இதோ! சில மாதங்களுக்கு முன் ஒரு நாள். காலை 8.45 மணி. என் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து என் மனைவி கத்துகிறாள்: ‘ஏங்க யானை ஓடி வாங்க!’ அவள் குரலில் பெரும் பயம் பதற்றம். ஏறுவெயில் நேரத்தில் யானைகளாவது. வாசலுக்கு வந்து மாடிப்படிகளில் ஏறுகிறேன். தூரத்தில் பார்த்தால் அங்கே உருவாகிக் கொண்டிருக்கும் புதிய காலனிக்கு போடப்பட்டிருந்து சுற்றுச்சுவரை இடிபட்டு ஒரே புழுதி மயம். உற்றுப் பார்த்ததில் புழுதிக்குள் தெரிந்தது ஒரு யானையின் பின்புறம். வாலைச்சுழற்றிக் கொண்டு தறிகெட்டு அதற்கு முன்னே ஓடுகிறது ஐந்தாறு யானைகள். அவை அங்குள்ள சுற்றுச்சுவரை முட்டியதா, மூச்சு விட்டே தட்டியதா தெரியவில்லை. சுவர்கள் மூலைக்கு மூலை இடிந்து கிடந்தது. அரக்கப்பறக்க அந்தப் பகுதிக்கு ஓடுகிறோம்.

அந்த சுற்றுச்சுவரை தாண்டி ஒரு தோட்டம். விளைந்த காய்கறி செடிகளுக்குள் களையெடுத்துக் கொண்டிருந்த விவசாயக்கூலிகள் கண்களில் கடும் பீதி. ‘நாங்க எதிர்பார்க்கலீங்க. அந்தப் பக்கம் இருக்கிற தென்னந்தோப்புல ராத்திரி வந்த எட்டு யானைக நல்லா சாப்பிட்டிருக்கு. வெளிச்சம் வந்த பின்னாடிதான் அதுகளுக்கு வெடிஞ்சிருச்சுன்னு தெரிஞ்சுது போல. ஜனங்க நடமாட்டத்தைப் பார்த்ததும் அங்கேயே பதுங்கிருக்கு. திடீர்னு என்ன தோணுச்சோ. ஓட்டம் பிடிச்சு வந்துருக்கு. பின்னாடியிருந்து யாரோ கத்தினதுல திரும்பிப் பார்த்தா வரிசையா புயல் வேகத்துல யானைக ஓடியாறுது. கையும் ஓடலை. காலும் ஓடலை. காலையில எட்டரை மணிக்கு இதுக இப்படி ஓடி வரும்னு கனவா கண்டோம். நல்ல வேளை எங்களை ஒண்ணும் செய்யாமப் போச்சே. அந்த கடவுளுக்குத்தான் நன்றி சொல்லோணும்!’ என அந்த யானைகள் ஓடிய திசையை பார்த்துக் கும்பிட்டனர்.

இன்னொரு நாள். என் வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தள்ளி உள்ள மதுக்கரை மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஐந்தாறு யானைகள் காலை 6.45க்கு புகுந்து விட்டதாக தகவல். பள்ளி மைதானத்தில் நடைபயணம் மேற்கொண்ட, கூடைப்பந்து விளையாடி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தவர்கள் ஓட்டம் பிடித்ததாகவும் சொன்னார்கள். சக பத்திரிகை நிருபரை கூட்டிக் கொண்டு வானகத்தில் பறந்தேன்.

அங்கே மூலைக்கு மூலை சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு யானைகள் அடுத்திருந்த மலைக் காட்டிற்குள் சென்றிருந்த அடையாளங்களை காண முடிந்தது. அந்த பள்ளி ஆசிரியர்கள் கடும் பீதியுடன் இருந்தார்கள். பள்ளி மாணவர்களுக்கு அரை நேரம் விடுமுறை. பள்ளி முகப்பில் இரண்டு சிசிடிவி கேமராக்கள். அதை இயக்கிப் பார்க்கிறோம்.

சாலையைக் கடக்கும் அடுத்தடுத்த யானைகளைப் பார்க்கிறார் பள்ளி காவலர் ஒருவர். யானையைப் பார்த்ததும் விழுந்தடித்துக் கொண்டு ஒருவர் அருகில் உள்ள கூண்டுக்குள் புகுகிறார். அடுத்தவரோ, வாசலின் பெரிய இரும்புக்கதவை சாத்தி தாழிட்டு விட்டே அந்த கூண்டறைக்குள் ஓடி ஒளிகிறார். அவர் ஓட, ஓட மூடப்பட்ட பிரம்மாண்ட கதவு தெறித்து விழுகிறது. பெரிய யானை கொம்புடன் உள்ளே நுழைகிறது. அதை அடியொற்றி நான்கு யானைகள். அதில் ஒரு குட்டியானை. வீறு நடைபோட்டு உள்ளே வருகிறது. பக்க வாட்டு சுவர் ஒன்றை பெரிய யானை தட்டுகிறது. அதுவும் மற்றவையும் அதன் வழியே வெளியேறுகிறது.

இரவு மதுக்கரை காடுகளில் வெளியேறிய யானை கொச்சின் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து (இந்த சாலை ஒரு காலத்தில் யானைப் பாதை என்றே பெயர் பெற்றிருந்தது) குரும்பபாளையம் என்ற கிராமத்திற்குள் சென்றுள்ளது. அங்குள்ள பயிர் பச்சைகளை சாப்பிட்டு விட்டு திரும்ப காடுகளுக்கு திரும்பியிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையை எட்டும்போது விடிந்துவிட்டது. சாலையில் சர்புர்ரென்று பறக்கும் வாகனங்களை பார்த்து அங்கேயே பதுங்கியிருக்கிறது. திடீரென்று சாலையில் வாகனச் சத்தம் இல்லையென்றதும் பாய்ந்து சாலையைக் கடந்திருக்கிறது. அங்கங்கே மக்கள் கூச்சல் போட, விரட்ட வழிதெரியாது பள்ளிக்காம்பவுண்ட் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறது. பக்கவாட்டு சுவற்றை உடைத்துக் கொண்டு வெளியேறியிருக்கிறது.

இது நடந்து சில நாட்களில் வேறொரு சம்பவம். எங்கள் வீட்டிலிருந்து 100 மீட்டர் கிழபுறம் கோவை கார்டன் என்றொரு குடியிருப்பு. இரவில் வந்த ஒற்றை யானையும், அதை அடியொற்றி வந்த மூன்று யானைகளும் இங்குள்ள வீதிகளில் சுற்றி அலைந்திருக்கிறது. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த வாழைகளைச் சாப்பிட்டிருக்கிறது. சிலரது காம்பவுண்ட் கேட்டையும் உடைத்துச் சென்றுள்ளது. அதில் ஒரு பெரிய பங்களாவில் சிசிடிவி கேமரா மூலைக்கு மூலை உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருந்தார்கள்.

அடுத்தநாள் வந்தவர்கள் வீட்டின் மூலைக்கு மூலை சுற்றுச்சுவர் உடைந்து கிடப்பதில் அதிர்ச்சியடைந்தனர். அது மட்டுமல்ல, அங்கிருந்த ஒரு வெள்ளை நிற காரை ஒரு முட்டு முட்டி வீட்டுத்தோட்டத்தில் தள்ளியிருக்கிறது யானை. அது இங்கிருந்த சிசிடிவி கேமராவில் படுதுல்லியமாக பதிவாகியிருந்ததை அதிர்ச்சி மாறாமல் பார்த்தோம்.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அது இவர்கள் வீட்டில் நின்று மாமரம், கொய்யாமரம் உள்ளிட்டவைகளை கபளீகரம் செய்துள்ளது; வீட்டிலிருந்த நாய் ஓட்டம் பிடித்துள்ளது. எல்லாமே அதில் பதிவுகளாக இருந்தன. வீட்டின் திரும்பின பக்கமெல்லாம் யானை போட்ட சாணி மயம். எத்தனை நாளைக்குத்தான் மற்றவர்கள் வீட்டில் யானைகள் வந்த படலத்தையே சொல்லிக் கொண்டிருக்க முடியும்? என் வீட்டிற்கு வந்த அனுபவத்தை, அதற்கான தரிசனத்தை அடைய வேண்டாமா?

ஒரு நாள் நள்ளிரவு. அதுவும் நடந்தது. ஒன்றல்ல 5 காட்டு யானைகள். குட்டி ஒன்றுடன் எங்கள் வீட்டு முற்றத்தில் குழுமி நிற்கின்றன. பேரமைதியாய் எங்கள் வீட்டு வாழைகள் இரண்டை மெதுவாக உடைத்து எடுத்து குட்டிக்கும் கொடுத்து தானும் உண்கின்றன. ஒன்றரை மணிநேரம் நடந்த இந்த கண்கொள்ளாக்காட்சியை பதிவு செய்து எனது முகநூலில், ‘ஓர் அற்புத தரிசனம்!’ என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தேன். அதற்கு வரவேற்பு; லைக்ஸ் என்றால் அப்படியொரு ‘வரவேற்பும். லைக்ஸூம்’ நான் இதுவரை கண்டதில்லை.

- மீண்டும் பேசலாம்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்