யானைகளின் வருகை 125: இயல்பு நிலையே அழகு

நீலகிரி காடுகளைப் பொருத்தவரை அவை காடுகளாக இல்லாதிருப்பதற்கும், கானுயிர்கள் மாளா துன்பம் அடைந்து ஊருக்குள் வருவதற்கும் ஏராளமான காரணங்களை அடுக்கியிருந்தோம். முக்கியமாக உலகிலேயே குறிப்பிடத்தக்க முக்கிய சுற்றுலாத் தலமாக ஆகியிருப்பது, அதை முன்னிட்டு உள்ளூரில் மட்டுமல்லாது, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி நகரமயமாதல், நிறைந்திருக்கும் கான்கிரீட் கட்டிடங்கள், வலசைகள் அகற்றம், நீர்நிலைகள் சேதம், செக்சன்-17 விவகாரம், நீக்கமற நிறைந்திருக்கும் தேயிலை எஸ்டேட்டுகள், அவற்றின் அத்துமீறல்கள் என்றெல்லாம் நிறைய விஷயங்களை அதில் கண்டோம்.

அதுபோல வால்பாறையில் மிகப்பெரிய பூதாகர பிரச்சினைகள் ஏதும் இல்லை. நீலகிரி காடுகளை போல் அல்லாமல் டாப் ஸ்லிப் தொடங்கி வால்பாறை, திருமூர்த்தி, அமராவதி, சின்னாறு காடுகளை அடக்கியது இந்திராகாந்தி வன உயிரின சரணாலயம். இந்த சரணாலயமே பின்னர் ஆனைமலை புலிகள் காப்பகம் என பெயர் பெற்றது. இது இன்னமும் ஓரளவுக்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும், வனவிலங்குகள் அங்குள்ளதை விட நிம்மதி பெருமூச்சு விடும் இடமாகவும் இருக்கிறது என்றால் அது கட்டமைக்கப் பட்டிருக்கிற விதமே காரணமாகும்.

சுருங்கச் சொன்னால் பெரிய, பெரிய கம்பெனிகளுக்கு அரசால் 100 வருஷ குத்தகைக்கு விடப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான எஸ்டேட்டுகளை மட்டும் திரும்பவும் அரசாங்கம் எடுத்து வனப்பகுதிகளாக அறிவித்துவிட்டால் 90 சதவீதம் வால்பாறை மலைகள் அசல்காடுகளாகவே மாறிவிடும் என்றே சொல்லலாம்.

என்றாலும், கடந்த 15, 20 ஆண்டுகளாக காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் குடியிருப்புகளுக்குள் வருவதும், மனித-மிருக மோதல் அதிகரிப்பதுமான நிகழ்வு நடந்து கொண்டேதான் இருக்கிறது.

வேடிக்கை என்னவென்றால் 'ரெட் டீ' நாவல் எழுதப்பட்ட 1940களின் காலகட்டத்தில் வால்பாறை எஸ்டேட்டு பகுதிகளிலேயே கால் வைக்காத யானைகள், வால்பாறை மலைகளையெல்லாம் கடந்து, கீழே உள்ள ஆழியாறு அணையையும் தாண்டி பொள்ளாச்சி சேத்துமடை கிராமத்திற்கே வந்துவிட்டதைக் கூட முந்தைய அத்தியாயங்களில் கண்டோம்.

முன்னர் கூறியது போல் தேயிலை, காபி எஸ்டேட்டுகள் உருவாக்குவதற்கான காடழிப்புப் பணிகள் 18 -19 ஆம் நூற்றாண்டுகளிலேயே தொடங்கிவிட்டாலும், அப்போதெல்லாம் இல்லாத தொந்தரவு ஏன் இப்போது வருகிறது? இந்த கேள்விக்கு இதுவரை இல்லாத அளவு சமீபகாலமாக இங்கு நடந்து வரும் முரண்பாடான மக்கள் வாழ்நிலை, குறிப்பாக பழங்குடியினர் அதற்கு தொந்தரவுகள் தரும் வனத்துறையின் செயல்பாடுகளை சொல்லித்தான் ஆக வேண்டும்.

வால்பாறையில் 56 தேயிலை மற்றும் காபி எஸ்டேட்டுகள் உள்ளன. இதில் 2006 ஆம் ஆண்டுக்கு முன்பு 50 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் எல்லோருமே முன்னரே சொன்ன மாதிரி, தென்மாவட்டத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். அந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 2006-2011 வாக்கில் படிப்படியாக குறைந்து 2014-ல் 18 ஆயிரமாக குறைந்தது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு சமதளப் பகுதியில் உள்ளதுபோல கணிசமான கூலி இல்லை. சமதளப் பகுதிகளில் தோட்ட வேலை, கட்டிட வேலை உள்ளிட்ட பணி செய்வோருக்கு ரூ.350 முதல் ரூ.500 வரை கூலி கிடைக்கும் நிலையில், தேயிலை தோட்டத் தொழிலாளியின் தினக் கூலி ரூ.240 மட்டுமே.

கேரளாவில் தோட்டத் தொழிலாளிக்கு ரூ.310 கூலி வழங்கப்படுகிறது. அதையாவது இங்கு அமல்படுத்தக் கோரி தொடர்ந்து போராடினாலும், எஸ்டேட் நிர்வாகங்கள் செவி சாய்ப்பதாக இல்லை. அதனால் எஸ்டேட் தொழிலாளர்கள் தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், திருப்பூர், பல்லடம், பொள்ளாச்சி, கோவை என்று கூடுதல் கூலி கிடைக்கும் இடங்களுக்கு சென்றதோடு, சொந்த ஊருக்கும் திரும்பிவிட்டனர்.

இதனால் எஸ்டேட் தொழிலாளர்களின் காலனிகளில் 15 வீடுகள் இருந்தால் அவற்றில் 8 முதல் 10 வீடுகள் பூட்டிய நிலையிலேயே காணப்பட்டது. எனவே பிஹார், ஒடிசா போன்ற வடமாநிலங்களிலிருந்து கூலிகளை கொண்டு வந்து நிறைத்துள்ளது எஸ்டேட் நிர்வாகங்கள்.

அப்படி கடந்த மூன்றாண்டுகளில் வந்த வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை மட்டும் சுமார் 10 ஆயிரம். இப்படி கணக்கிட்டு பார்த்தாலும் பழைய வால்பாறையின் மக்கள் தொகையை திரும்பக் கொண்டுவருவது கஷ்டம் என்பதே இங்குள்ள பொதுநோக்கர்களின் கருத்தாக உள்ளது.

அதற்கு முக்கிய காரணம் எஸ்டேட்டில் கொடுக்கப்படும் கூலி மட்டுமல்ல. இங்கு மாறி, மாறி பொழியும் பனி, மழை உள்ளிட்ட தட்பவெப்ப நிலையும், தொடர்ந்து சவாலாக இருந்து வரும் வனவிலங்குகளின் தாக்குதலும், நீலகிரி மலையில் 2 ஏக்கர் 3 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் தேயிலை சிறுவிவசாயிகள் போல் யாருமில்லாததும், கூலிகளுக்கு குடியிருக்க சொந்தமாக ஒரு வீடு கூட இல்லாதிருப்பதும் கூட என்றெல்லாம் நிறைய காரணங்களை அடுக்கலாம்.

இந்தத் தொழிலாளர்களை மையப்படுத்தியே வால்பாறை நகரமும், அதன் வணிகமும், கடைகளும், பள்ளி, கல்லூரிகளும் ஏன் நகர சபையே கூட நடக்கிறது. இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் வால்பாறையைச் சுற்றியுள்ள சோலைக்காடுகளின் ஊடாக வசிக்கும் பழங்குடிகள். இந்தப் பழங்குடிகள் தமிழகத்தின் மற்ற மலைக்காடுகளில் உள்ளது போல் நகரமய நாகரிகத்தின் தாக்கம் அவ்வளவாக பெறாது உள்ளார்கள் என்பது இன்னொரு அதிசயம்.

உதாரணத்திற்கு இங்கே காடாம்பாறை, கருமுட்டி, கோழிகமுத்தி, மாவடப்பு, மூங்கில்பள்ளம், மஞ்சம்பட்டி, தளிஞ்சி உள்ளிட்ட பல்வேறு செட்டில்மென்ட் மலைகிராமங்களில் வசித்து வரும் முடுவர், மலசர், புலையர் சமூகத்தினரிடம் இன்னமும் பழமையான பழக்க வழக்கங்கள் 90 சதவீதம் இருக்கின்றன.

குறிப்பாக இவர்கள் குடும்பத்தில் முறைப்பையனையே திருமணம் செய்ய வேண்டும். ஒரு பெண், அந்நிய ஆண் மகனைப் பார்த்து விட்டாலோ, பேசி விட்டாலோ அவர்களை ஊரை விட்டே ஒதுக்கி வைக்கும் நிலை இன்றும் இருக்கிறது. இப்படி ஒதுக்கி வைக்கப்படும் பெண்கள் ஒரு வாரம் தனியே ஒரு அறையில் வசிக்க வேண்டும். தம் சமூகத்தலைவர் (மூப்பன்) வழிகாட்டுதலில் பாரம்பர்ய வழக்கப்படி கட்டுப்பாடுடன் இருந்தால் திரும்பவும் அவள் தன் இனத்துடன் சேர்த்துக் கொள்ளப்படுவாள். அல்லது திரும்பவும் கட்டுப்பாட்டை மீறினால் மீண்டும் ஆறு மாத காலம் ஒதுக்கி வைக்கப்பட்டு தனி அறையிலேயே வசிக்க வேண்டும்.

அவருக்கு உணவு, உடை எல்லாமே ஊர்க்காரர்கள் கொடுத்துவிடுவார்கள். அப்படியும் அந்த பெண் ஊர்க் கட்டுப்பாட்டை மீறினால் அவளை ஊரை விட்டே வெளியேற்றி விடுவார்கள். இதேபோல் திருமணச் சடங்குகளில், பெண் பூப்பெய்தும் சடங்குகளில் எல்லாமே பல கட்டுப்பாடுகள் உள்ளன.

இவர்கள் வசிக்கும் கிராமங்களுக்கு இருசக்கர வாகனங்கள் கூட இன்றைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்கு கூட தொட்டில் கட்டியே 30- 40 கிலோமீட்டர் தூரம் தூக்கி வரப்படுகின்றனர். அதில் நிறைய பெண்கள் வழியிலேயே இறந்த சம்பவங்களும் நடந்துள்ளன. அப்படியிருந்தும் இவர்கள் மலையை விட்டு, தம் இயற்கை வளங்களை விட்டு கீழிறங்கி வரவும் மறுக்கிறார்கள். அதற்கு கீழ்நாட்டுக்காரர்கள் (தரைப்பகுதியில் வசிப்பவர்கள்) யாவரும் தங்களை விட தாழ்ந்தவர்கள், தாம் குடித்துவிட்டு மீதி தரும் தண்ணீரை குடிப்பவர்கள் என்ற எண்ணப்போக்கு இவர்களிடம் மிகுதியாக உள்ளது.

இப்படிப்பட்டவர்களுக்கான கல்வி, மருத்துவம், பொருளாதாரம் விஷயங்களில் எல்லாம் நம் அரசாங்கம் புதியதொரு கண்ணோட்டத்திலும், திட்டத்திலும் செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படி அவர்களை இயல்பு நிலையிலேயே வைப்பதும், அதற்கேற்ப திட்டங்கள் தீ்ட்டி நடைமுறைப்படுத்துவதும்தானே நமக்குத் தேவை.

ஆனால் அதற்கு எதிராக என்னவெல்லாம் நடக்க வேண்டுமோ, அத்தனையும் நடந்தது. அவர்களை புலிகள் காப்பகம் திட்டம் மூலம் கீழே கொண்டு வர முயற்சி எடுத்தது வனத்துறை. அவர்கள் அதில் முரண்டு பிடிக்க, கட்டாயமாக வெளியேற்றவும் நடவடிக்கைகளை தொடர்ந்தது. எனவே வனத்துறைக்கும், அரசுக்கும் எதிராக போராட்டங்களும் எழுந்தது. ஒரு சிலர் சமூக விரோத சக்திகளுக்கும் துணை போக ஆரம்பித்தனர். அதனூடே காடுகளுக்குள் பல்வேறு சமூக விரோத சம்பவங்களும் நடந்தது. எப்படி?

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE