உலக அளவில் மிகப் பெரிய ஆன்லைன் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் நேரடி சில்லரை வர்த்தகத்திலும் இறங்கிவிட்டது. முதற்கட்டமாக அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 'அமேசான் கோ' என்கிற பெயரில் மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டை திறந்துள்ளது. இதன்மூலம் நேரடி சில்லரை விற்பனை துறையின் முதல் முயற்சியிலேயே அனைத்து சில்லரை வர்த்தக ஜாம்பவான்களையும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
குறிப்பாக சில்லரை விற்பனை துறையில் இதுவரை யாரும் முயற்சிக்காத வகையில் பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டாக இதை அமைத்துள்ளது. பில் போடக்கூட ஆளில்லாத இந்த சூப்பர் மார்க்கெட் முழுவதும் சென்சார்கள், கேமராக்களின் கட்டுப்பாட்டில் இயங்கும். தானியங்கி முறையில் கடையின் செயல்பாடுகள் அனைத்தும் நடக்கின்றன. தொழில்நுட்ப வல்லுநர்கள் அமேசானின் முயற்சியை திரும்பிப் பார்க்கின்றனர். புதிய நுகர்வு அனுபவத்தை அளிப்பதால் வாடிக்கையாளர்களிடையே பலத்த வரவேற்பு பெற்றுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் பிரமாண்டமான வெற்றிகளுக்கு அடிப்படையான காரணம் அந்த நிறுவனம் உருவாக்கும் நவீன தொழில்நுட்பங்கள்தான். ஆரம்பத்தில் புத்தக விற்பனை அங்காடியாக தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் சர்வதேச அளவிலான சந்தையை உருவாக்கியதற்குப் பின்னால் அதன் தொழில்நுட்ப முயற்சிகள்தான் பக்கபலமாக இருக்கிறது. போன் மூலம் மட்டுமல்ல, செயலி மூலமான சேவையிலும் அமேசான்தான் முன்னோடி. அமெரிக்கா முழுவதும் உள்ள அமேசான் பொருள் சேமிப்பு கிடங்குகள் தானியங்கி முறையில்தான் இயங்குகின்றன. இந்தியாவில் அந்த நிறுவனத்தின் பெங்களூரு மையத்தில்கூட பாதிக்கு பாதி சென்சார் தொழில்நுட்பம்தான். தொழில்நுட்ப வளர்ச்சிதான் போட்டியாளர்களிடமிருந்து அந்த நிறுவனத்தை தனித்துக் காட்டுகிறது.
ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியின் இன்னொரு பக்கம் தொழிலாளர் வேலைவாய்ப்புகளில் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்கிற அச்சம் உள்ளது. 'அமேசான் கோ' மனித உழைப்பை அப்புறப்படுத்தும் தொழில்நுட்பம், இதை ஆதரிக்கக்கூடாது என குரல்கள் அமெரிக்காவில் இப்போதே ஒலிக்கத் தொடங்கிவிட்டன.
உலக அளவில் மிக அதிக அளவில் வேலைவாய்ப்பை அளிப்பதும், பணியாளர்கள் தேவைகளை உருவாக்கி வரும் சில்லரை வர்த்தக துறையில், ஒரு சூப்பர் மார்கெட்டில் பில் போடுவதற்குக் கூட ஆள் தேவையில்லை என்றால் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் நிலை என்னவாகும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்கின்றனர்.
அமெரிக்கா முழுவதும் சுமார் 35 லட்சம் காசாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர வால்மார்ட், காஸ்கோ போன்ற மிகப் பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சந்தையில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. அமேசான் கோ நிறுவனம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை இந்த நிறுவனங்களும் பயன்படுத்தத் தொடங்கினால் இவர்கள் வேலைவாய்ப்பு மிகப் பெரிய கேள்விக்குறியாகும்.
ஆனால், இந்த தொழில்நுட்பத்தை இதர நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் திட்டமில்லை. மேலும் சூப்பர் மார்க்கெட்டுகளை திறக்கும் எண்ணமில்லை என்கிறார் அமேசான் கோ நிறுவனத்தின் துணைத் தலைவர் கியானா பெருனி. ஆனால் வரும் ஆண்டுகளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஏனென்றால் அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான பாரம்பரிய உணவு சூப்பர் மார்க்கெட்டான ஹோல் புட் மார்கெட்டை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளது. அதில் ஒரு சூப்பர் மார்கெட்டைத்தான் இப்போது அமேசான் கோவாக மாற்றியுள்ளது. அடுத்தடுத்த சூப்பர் மார்க்கெட்டுகளில் இதை சோதனை முயற்சியாக தொடங்கவும் வாய்ப்புகள் இல்லை என்று சொல்ல முடியாது.
ஆனால் பெருனியோ, நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான உணர்வுகளை உருவாக்க விரும்பினோம். அதனால்தான் உருவாக்கினோம் என்கிறார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொழிலாளர்களில் வேலைவாய்ப்பில் சிறிய மாற்றத்தைத்தான் உருவாக்கும். அமேசான் கோ சூப்பர் மார்க்கெட்டுக்கான உணவுப் பொருட்களை தயாரிக்கவும், உரிய வரிசையில் அடுக்கவும், தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்யவும், வாடிக்கையாளர்கள் தேடும் பொருளுக்கு உதவி செய்யவும் பணியாளர்கள் இருப்பார்கள். தொழில்நுட்பம் வேலை திறனில்தான் மாற்றங்களை கொண்டு வருகிறது என்கிறார். ஒருவகையில் பெருனி சொல்வதிலும் உண்மை உள்ளது. ஏனென்றால் அமேசான் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம் தொழில்நுட்பம் மட்டுமல்ல தொழிலாளர்களும்தான். பொருள்களை எவ்வளவு விரைவாக கொண்டு சேர்க்கிறதோ அந்த அளவுக்கு அதற்கான போட்டியாளர்களை சமாளிக்க முடியும். இதற்கு பின்னால் மிகப்பெரிய அள்வில் தொழிலாளர்களின் உழைப்பும் உள்ளது. ஆனால் தொழில்நுட்ப நிறுவனங்களின் பின்னால் உள்ள இந்த தொழிலாளர்கள் உழைப்பு ஒருநாளும் நம் கவனத்துக்கு தெரிவதில்லை.
ஏற்கெனவே அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சிக்கல் தீவிரமாக உள்ள நிலையில் அமேசான் கோ சூப்பர் மார்க்கெட்டை அனைத்து மாகாணங்களிலும் தொடங்க அனுமதிக்கப்படுமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. அமெரிக்காவிலேயே இதுதான் நிலைமை எனில் மிக அதிக மனித வளத்தை கொண்டுள்ள இந்தியாவுக்கு வந்தால் என்ன நடக்கும்… கற்பனைக்கு எட்டாத அச்சம் உருவாவதை தவிர்க்க முடியவில்லை.
அமேசான் கோ கற்பனைக்கும் எட்டாத கடை என்றால், அந்த தொழில்நுட்பம் கற்பனைக்கு எட்டாத விளைவுகள் உருவாக்கும் என்பதே உண்மை.
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago