யானைகளின் வருகை 129: பழங்குடியினர் கல்வியில் கபளீகரம்

By கா.சு.வேலாயுதன்

குழிப்பட்டியில் 117 புலையர் குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கிருந்து 5 முதல் 10 கிலோமீட்டர் இடைவெளிகளில் காட்டுப்பட்டி, கருமுட்டி, குருமலை என மலைக்கிராமங்கள். இவற்றுக்கும் இரு சக்கரவாகனத்தில் ஒற்றையடி மலைப்பாதையில் குதித்து குதித்து, ஆங்காங்கு விழுந்தெழுந்தே செல்ல வேண்டியிருந்தது.

அங்கெல்லாம் ஐநூறுக்கும் மேற்பட்ட முதுவர், மலசர், இருளர் இன ஆதிவாசி குடும்பங்கள் வவந்தனர். இந்த மொத்த கிராமங்களையும் சேர்த்தால் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் தேறுவார்கள். இவர்களில் ஆரம்ப பள்ளிக்கு செல்லும் வயதில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் இருந்தனர். அவர்கள் எல்லோரும் கல்வியறிவு பெற வேண்டும் என்று பத்தாண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதுதான் குழிப்பட்டி தொடக்கப்பள்ளி.

"இதற்கு ஒரு ஹெட்மாஸ்டரும், ஒரு அசிஸ்டென்ட்டும் இருப்பதாக கல்வித்துறை கணக்கேட்டில் உள்ளது. ஆனால் ஒரே ஒரு டீச்சர் எப்போதாவது வருவார். இன்னொரு வாத்தியார் வந்ததேயில்லை!' என்கிறார் ஊர் மூப்பன் வெள்ளையன்.

ஊருக்குள் படித்தவர்கள் என்று முருகன், தேவி, ராஜேஸ்வரி என்று மூன்று பேர் மட்டுமே தென்பட்டார்கள்.

அதில் முருகன் பேசும்போது, "இந்த பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது படித்து டி.சி வாங்கியவர்கள் யார் என்று எங்களுக்கே இதுவரை தெரியாது. மலைக்கு கீழே அமராவதி பள்ளிக்குச் சென்றுதான் நான் எட்டாவது வகுப்பு வரை படித்தேன். அதேபோலத்தான் தேவி, ராஜேஸ்வரி ஆகியோரும் பத்தாவது படித்தார்கள். நாங்கள் எல்லாம் காட்டு வேலைதான் செய்து கொண்டிருக்கிறோம். இந்த கிராமத்திற்குள் அடங்கிய பதினெட்டு செட்டில்மெண்ட்டும் (18 கிராமங்கள்) அமராவதி வனச்சரகத்திற்குள் வருகிறது. வனஅதிகாரிகள் எல்லாம் இது புலிகள் காப்பகம்னு அறிவிச்சுட்டதால மலையை விட்டு கீழே இறங்கச் சொல்லி மாறு மிரட்டிப் பார்த்தாங்க. நாங்க மசியலை. இது எங்க பூமி. பிரிட்டீஸ்காரர்கள் அளந்துவிட்ட விவசாய பூமியைப் பறிக்க யாருக்கும் உரிமையில்லை. நாங்க வாழ்ந்தாலும் இந்த மண்ணோடுதான். செத்தாலும் இந்த மண்ணோடுதான்னு நிறைய போராட்டம் செஞ்சபின்னாடிதான் எங்களை விட்டு வச்சிருக்காங்க. அப்படி போராட்ட குணம் உள்ள நாங்க படிப்பறிவு அடைஞ்சா என்ன ஆகும். முதல்ல இங்கே பள்ளிக்கூடம் வைக்கவே நிறைய தடை போட்டாங்க வன அதிகாரிக. அதையும் மீறித்தான் பள்ளிக்கூடம் வந்தது. அப்படியும் வாத்தியாருக வர்றதில்லை!" என்று குமுறினார்.

"இங்கேயே தங்கி வாத்தியார்க படிப்பு சொல்லிக்கொடுக்க பள்ளிக்கூடத்துலயே ரூம் கட்டிக் கொடுத்திருக்கு அரசாங்கம். சாப்பாடும் நாங்களே செஞ்சு கொடுத்துடறோம். ஆனா வாத்தியார்கள் மட்டும் பள்ளிக்கூடம் வரமாட்டேங்கறாங்க. அதுக்கு எங்க புள்ளைகளும் ஒரு காரணம். வாத்தியார்மார்களை கண்டாலே ஓடி ஒளிஞ்சுக்குவாங்க!" என்று வெள்ளந்தியாகப் பேசினார் சின்னத்தம்பி என்பவர்.

இந்த கிராமத்திலிருந்து ஐந்து கி.மீ தூரம் மாவடப்பு. இதுவும் யானைகள் புலி, சிறுத்தை, மான்கள் சரமாரியாக உலாவும் அடர்ந்த வனாந்தர பகுதிதான். இங்கு உள்ள தொடக்கப்பள்ளி ஆரம்பித்தும் அப்போது பத்துவருடங்கள் கடந்திருந்தது.

அதுவும் நாம் சென்றபோது பூட்டப்பட்டே கிடந்தது. அங்கு ஓடியாடித் திரிந்த சிறுவர்களை மடக்கிப் பிடித்து, 'பள்ளிக்கூடம் போறீங்களா?' என்று கேட்டபோது, 'ஆமாம் என்றே தலையாட்டினார்கள். 'எத்தனையாவது படிக்கிறீங்க?' என்றபோது ஆளாளுக்கு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பேந்தப்பேந்த விழித்தார்கள். சுப்பிரமணி என்ற சிறுவன் மட்டும், 'நாலாம் வகுப்பு!' என்றான். 'அப்புறம் ஏன் பள்ளிக்கூடம் போகலை?' என்று கேட்டதற்கு, 'வாத்தியார் வந்து படிப்பிச்சு கொடுத்தாத்தானே போறதுக்கு?' என்றான் துடுக்காக.

பள்ளிக்கூடத்துல வச்சுத்தான் மாசமாசம் வந்து ஃபாரஸ்டர்க முதியோர் பென்சன் கொடுப்பார்கள். எப்போதாவது கூட்டம் போட்டு எங்களுக்கு வேலையும் கொடுப்பாங்க. நர்ஸம்மாக்கள் எப்பவாவது வந்து (சுகாதாரப் பணியாளர்கள்) மருந்து மாத்திரை இங்கே வச்சுத்தான் கொடுப்பாங்க. ஆனா பள்ளிக்கூட வாத்தியார்கள் மட்டும் இங்கே வந்து பாடம் நடத்தினதேயில்லை!" என்றார் இங்கு வசிக்கும் இளைஞர் குப்புசாமி.

"குழிப்பட்டி, மாவடப்பு மட்டுமல்ல, இதுக்கும் அப்பால இருக்கிற குருமலை, கோடந்தூர், தளிஞ்சி செட்டில்மென்ட்களிலும் இதே மாதிரி பள்ளிக்கூடங்கள் இருக்கு. அதை சுத்தியிருக்கிற பதினெட்டு செட்டில்மென்ட்டுகளில் கிட்டத்தட்ட பத்தாயிரம் மக்கள் வசிக்கிறாங்க. அவங்கள்ல பள்ளிக்கூடம் போற மாதிரி பசங்க பொம்பளைப்புள்ளைக மட்டும் முன்னூறு பேருக்கும் மேல இருப்பாங்க. அவங்க எல்லாம் பள்ளிக்கூடம் போகாம மாடு மேய்க்கத்தான் போறாங்க. அதுக்கு காரணமே வாத்தியார்கள் வராததுதான்!" என்றார் இவர்.

மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை, கோடந்தூர், தளிஞ்சி என ஐந்து பள்ளிகளுக்கும் ஒரு ஹெச்.எம், ஒரு அசிஸ்டென்ட் டீச்சர் என்று தலா இரண்டு பேர் என மொத்தம் பத்துபேர் உள்ளார்களாம். அதில் மாவடப்பு பள்ளி ஆசிரியர்கள் இங்கே வந்து போன நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். குழிப்பட்டியில் அசிஸ்டென்ட் மட்டும் எப்போதாவது வந்து போவார், ஆனால் ஒரு நாள் கூட பிள்ளைகளை அமர வைத்து பாடம் நடத்தி பார்த்ததில்லை. கோடந்தூரில் ஹெச்.எம் எட்டிப் பார்ப்பதில்லை. அசிஸ்டென்ட்டோ இங்கே போஸ்டிங்கில் இருந்து கொண்டு வேறொரு பள்ளியில் டெபுடேஷன் ஒர்க் செய்து கொண்டிருந்தார்.

குருமலையில் ஒரே ஓர் ஆசிரியை. எப்போதாவது வருவார். ஆதிவாசிப் பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுத்துவிட்டு போய்விடுவார் என்றார்கள். தளிஞ்சியிலோ, ஐந்து வருடம் பள்ளிக்கு வராமலே காலத்தை ஓட்டிய ஹெச்.எம். பாதுகாப்பாக ரிட்டயர்டு ஆகிவிட்டார். எஞ்சியிருக்கும் அசிஸ்டெண்ட் சுத்தமாக எட்டிப் பார்ப்பதில்லை. ஆனால் இவர்களெல்லாம் மாத சம்பளம் மட்டும் முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் (7 வருடங்களுக்கு முன்பு) சுளையாக வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இந்த மலைகளில் வசிக்கும் பழங்குடியினர் அல்லாத சிலரோ, "இங்கே உள்ள பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, பெத்தவங்களுக்கும் பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பும் எண்ணமே இருந்ததில்லை. டீச்சர், வாத்தியார்கள் காடு, மலையெல்லாம் கஷ்டப்பட்டு வந்து தங்கி படிப்பு சொல்லிக் கொடுக்கத்தான் ஆசைப்படறாங்க. இந்த ஜனங்க கேட்கணுமே. 'அந்த டீச்சர்மார்கள் மாசம் முப்பதாயிரம் சம்பளம் வாங்க எம்புள்ளைக பள்ளிக்கூடம் போகணுமா? எதுக்கு போகணும்னனு எதிர் கேள்வி கேட்கிறாங்க. அதுல நொந்து போய்த்தான் வாத்தியார்கள் யாருமே வர்றதில்லை!" என்றனர் வேடிக்கையாக.

'அவர்கள் வெள்ளந்தியாக அப்படி சொன்னாலும், அவர்களுக்கு படிப்பு அருமையைப் புரியவைத்து, விழிப்புணர்வூட்டி குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வரவேண்டிய வேலையும் ஆசிரியர்களுடையதுதானே? அதை ஏன் செய்யவில்லை?" என்று திருப்பிக் கேட்கிறார் குழிப்பட்டி குப்புசாமி.

இப்பள்ளிகளுக்கு வாத்தியார்கள் வரவில்லையா? மாணவர்கள் வராததால் ஆசிரியர்கள் வரவில்லையா? கோழியிலிருந்து முட்டையா? முட்டையிலிருந்து கோழியா என்பது போல் சமூக அக்கறையுடன் நமக்கு பல்வேறு தகவல்களை சொல்லிக் கொண்டே வந்தார் நம்முடன் வந்த சேகர்.

"காட்டுக்குள்ளே மலைவாசி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும். அப்படிப்பட்ட ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து இங்கே அனுப்ப வேண்டும். வாரம் ஒருமுறையோ, மாசம் ஒருமுறையோ தங்கள் ஊருக்குச் சென்றுவிட்டு வந்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் உணர்வு உள்ள எத்தனையோ ஆசிரியர்கள் இன்றும் உள்ளார்கள். அவ்வளவு ஏன்? மலைவாசி மக்களிலேயே ஒருவரை இந்தப் பள்ளிகளுக்கு ஆசிரியராக நியமிக்கலாம். அதை எந்த ஒரு கல்வி அதிகாரியும் செய்வதில்லை. மாறாக இந்தப் பள்ளிக்கு போஸ்டிங் போனால் பள்ளிக்கூடத்திற்கே போக வேண்டியதில்லை என்று ஆசிரியர்களிடமே பேரம் பேசுகிறார்கள். அதற்கு ஒரு தொகையும் வாங்கிக் கொள்கிறார்கள். பள்ளிக்கூடமே போகாமல் கையெழுத்தை போட்டு சம்பளம் வாங்கிக்கொள்ள கல்வி அதிகாரிக்கு மாதம் ரூ.2,000 தந்து விடுகிறார்கள்.

தவிர சம்பந்தப்பட்ட மலை கிராமத்தில் இதைப்பற்றி வாய்திறக்காமல் இருக்க, குழந்தைகள் பள்ளிக்கூடம் வருவதை தடுக்க அங்கு வசிக்கும் கொஞ்சம் விவரமான சிலருக்கு மாசம் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் கவனித்து விடுகிறார்கள். இந்த வசதியால்தான் இந்த மலைக்கிராமங்களுக்கு போஸ்டிங் வாங்க ஆசிரியர்கள் ஆளாளுக்கு ஆளாக பறக்கிறார்கள்.

ஒரு முறை உடுமலையில் ஆசிரியர்கள் பணிஇடமாறுதல் சம்பந்தமான கவுன்சில் நடந்தது. அதில் ஏராளமானோர் இந்த ஐந்து பள்ளிகளையே குறி வைத்திருந்தார்கள். அதிகாரிகளிடமும் பேரம் பேசியிருந்தார்கள். அதற்கு எதிராக இதை எப்படியாவது தடுத்து அர்ப்பணிப்பு உள்ள ஆண் ஆசிரியர்களை இங்கே அனுப்ப அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் இனி அடுத்ததாக வரும் ஆசிரியர்களும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்தப் பள்ளிகளுக்கே எட்டிப்பார்க்க மாட்டார்கள் என்றெல்லாம் அதிகாரிகளிடம் பேசியிருந்தேன். அது நடக்கவேயில்லை!" என்றார் வேதனையோடு.

- மீண்டும் பேசலாம்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்