வால்பாறை காடுகளில் காட்டு யானைகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்க புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது நேச்சர் கான்வர்சேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு. இந்த அமைப்பினர் 2002-ம் ஆண்டிலிருந்து இங்கே காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தையும், அதனால் மக்களுக்கான பாதிப்பையும் ஆராய்ந்து வனத்துறையினருக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை சில அத்தியாயங்கள் முன்பு கண்டோம்.
அவர்கள் 1994-ல் தொடங்கிய அந்த ஆய்வில் 1994 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரை 45 பேர் வால்பாறை சாலையிலேயே காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளனர் என்பதை கண்டறிந்துள்ளனர். அப்படி இறந்தவர்களில் 39 பேர் காட்டு யானை நின்றிருந்ததை அறியாமலே அதன் முன்பு சென்று அகப்பட்டுள்ளனர் என்பதுதான் அந்த கண்டடைவின் உச்சம்.
இந்த ஆய்வில் குறிப்பிட்ட ஆறு கூட்டங்களை சேர்ந்த காட்டு யானைகள் (ஒரு கூட்டத்தில் 12 யானைகள் முதல் 20 யானைகள் வரை) மட்டுமே டிசம்பர் தொடங்கி ஜூன் மாதம் வரையில் அலைவது கண்டறியப்பட்டுள்ளது. வால்பாறையில் யானைகளின் வலசையே சாலையாகியிருப்பதால் அந்த பழக்கதோஷத்தில் காட்டு யானைகள் சாலையிலேயே (வலசையிலேயே) நிற்பதும், தனக்குண்டான மூங்கில் போன்ற தீவனங்களை தேடுவதும், அவை கிடைத்த இடத்தில் உண்பதையுமே வழக்கமாக வைத்துள்ளது.
அப்படி அங்கே யானைகள் நிற்பதை அறியாமல் அதனருகே சென்று சிக்கி மிதிபட்டு சாகும் மனிதர்கள் எண்ணிக்கையே கடந்த 20 ஆண்டுகளில் 90 சதவீதம் இருந்திருக்கிறது. எனவே இப்படி யானைகள் சாலையில் நிற்பதைக் கண்டால் உடனே தங்களுக்கு தகவல் சொல்ல கிராமம்தோறும் மக்கள் குழுக்களை ஏற்படுத்தியுள்ளார்கள் இந்த அமைப்பினர். இதற்காக வால்பாறை மலைகளில் வசிக்கும் வெவ்வேறு கிராமத்தவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்.
பேருந்து அல்லது வேறு வாகனத்தில் வரும் போதோ, வீட்டில் இருக்கும்போதோ, எஸ்டேட்டில் பணிபுரியும்போதோ எங்கே யானைகளைக் கண்டாலும் உடனே இந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ் தகவல் கொடுக்க வேண்டும். இதற்காகவே இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நான்கு பேர் இயங்கிக் கொண்டிருப்பர். அவர்கள் உடனே தங்கள் போன் மூலம் வனத்துறைக்கு தகவல் கொடுப்பர். தவிர இந்த நான்கு பேரும் தன் பட்டியலிலுள்ள அத்தனை பேருக்கும் குரூப் எஸ்.எம்.எஸ் போட்டுவிடுவார்கள்.
அந்த எச்சரிக்கை தகவலில், 'யானை இந்த இடத்தில் இத்தனை மணிக்கு நிற்கிறது', 'இந்த இடத்தில் ரேசன் கடையை உடைத்துக் கொண்டிருக்கிறது' போன்ற தகவல்கள் இடம் பிடிக்கும். தகவல் பெற்றவர்கள் குறிப்பிட்ட இடத்தில் இருந்தால் உஷராக இருக்க வேண்டும் என்பதே ஏற்பாடு, வனத்துறை அந்த இடத்திற்கு வந்து அந்த யானைகளை விரட்டி சோலைக்குள் விடும் வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நலம்.
யானைகளை விரட்ட விசிலடிப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற எதிர்மறை செயலால்தான் யானைகள் ஆக்ரோஷமாகி குடியிருப்புகளை உடைப்பது, ரேசன் கடைகளை சூறையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இதை இந்த அமைப்பினரும், வனத்துறையினரும் கிராமம்தோறும் எடுத்துச்சொல்லி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல. ரேசன் கடைகளில் பொருட்கள் ஸ்டாக் வைத்திருந்தாலும், அதில் பொருட்கள் இருந்தால் பகலிலேயே யானைகள் அதை சாப்பிட வந்துவிடும் நிலை தொடர்ந்து இருக்கிறது. அதற்கு மாற்றாக மொபைல் ரேசன் கடைகளையும் பரிட்சார்த்தமாக நடத்தவும் செய்திருக்கிறார்கள்.
''இந்த ஏற்பாடுகளை 2011-ம் ஆண்டு முதல் முன்னெடுத்ததன் மூலமாக காட்டு யானைகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் மிகவும் குறைந்திருக்கின்றன. இந்த ஏற்பாட்டிற்கு பிறகு 2013லிருந்து வால்பாறையில் யானை அடித்து மரணம் என்பது குறைந்துவிட்டது. 2013-ல் ஒருவரும், 2016-ல் ஒருவர் மட்டுமே இறந்துள்ளனர். 2017-ல் மட்டும் 3 பேர் யானை தாக்கியதில் மரணித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் ஏன் இப்படி என்பதற்கான காரணங்களை இப்போது ஸ்டடி செய்ய ஆரம்பித்துள்ளோம்!'' என்கிறார் இந்த அமைப்பின் உறுப்பினரில் ஒருவரான கணேஷ்.
காட்டு யானைகளால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைக்க, இப்படி மட்டுமல்ல, இன்னமும் பல விதங்களில் சரிசெய்ய வனத்துறையினர், சூழலியாளர்கள், வன ஆய்வாளர்கள் முயற்சி எடுத்துக்கொண்டுதான் உள்ளார்கள். அதைப் பற்றிய செய்திகளும் மீடியாக்கள் மூலம் வெளி வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த முயற்சிகளை எல்லாம் பாராட்டலாம். ஆனால் போற்ற முடியுமா? யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.
இதுவெல்லாம் நிச்சயமாக யானை-மனித மோதலுக்கு நிரந்தரத் தீர்வை தந்து விடுவதில்லை. என்னைப் பொருத்தவரை மனிதர்கள் ஒருவருக்கொருவர் வாழ்வதற்கு எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமோ? அதுபோலவே மனித மனம் மாறினால் ஒழிய இது சாத்தியமில்லை என்பதே உண்மை. இதற்கு பழங்குடியின மக்களின் வாழ்நிலைக்குள்தான் திரும்ப செல்ல வேண்டியிருக்கிறது.
காட்டு யானைகளுடன் மட்டுமல்ல, காட்டில் வாழும் அத்தனை உயிரினங்களுடன் வாழும் மனிதர்கள் அவர்கள். நாகரிக காலத்தில் இன்றைக்கு அவர்கள் எவ்வளவோ தூரம் மாறி வந்துவிட்டாலும் காட்டுயிர்கள் மீது அவர்கள் கொள்ளும் நேசம் இருக்கிறதே.
நானும் கொங்கு மண்டலக்காடுகளில் செய்தி சேகரிப்புக்காக நிறைய அலைந்திருக்கிறேன். பழங்குடி மக்களிடம் உண்டு, உறவாடி, அவர்களின் கஷ்ட நஷ்டங்களை எனக்குள் ஏற்றி செய்திகளாக்கி வெளிப்படுத்தியும் இருக்கிறேன். அவர்களில் ஒற்றை மனிதன் கூட, தன்னை இம்சைப்படுத்தும், தங்கள் வாழ்வையே நாசப்படுத்தும் காட்டு யானைகளைக் கொல்ல வேண்டும் என்று ஒரு வார்த்தையை சொல்லிக் கேட்டதில்லை.
சமீபத்தில் கூட ஆனைகட்டிக்கு ஒதுக்குப்புற மலையில் இருக்கும் பனப்பள்ளி மலை கிராமத்திற்கு சென்றேன்.
பழமை மாறாமல் இருக்கும் பழங்குடி பெரியவர்கள். ஆடு, மாடு மேய்த்தலையே கர்மமாக ஜீவிக்கிறவர்கள். 'யானை வருமா?'என்று கேட்டேன்.
''வருமாவா? காலையில கதவைத் திறந்தா ஊட்டு வாசலில்தான் நிக்கும். மேய்ச்சலுக்குப் போன எங்க ஆடு, மாடுக அந்தப் பக்கம் மேயும். இந்தப் பக்கம் பார்த்தா பெரியவன்க மூங்கிலை ஒடிச்சுட்டு நிற்பானுக. அதுவும் நாங்களும் ஒண்ணு. எங்களோட வாசம் அதுக்குத் தெரியும். அதுகளோட வாசம் எங்களுக்கு தெரியும். இப்ப இளந்தாரிப் பசங்கதான் குடி அதிகமாகிப் போச்சு. செங்கல்சூளை வேலைக்குப் போனா கிடைக்கிற கூலிய பொண்டாட்டிக்கு கொடுக்கிறாங்களோ இல்லையோ பிராந்திக்கடையில குடுத்துட்டு, குடிச்சுட்டு வந்துடறாங்க. அவங்க குடிச்சுட்டு ரோட்டுலயா நடக்கிறாங்க. நேரா பெரியவன் (யானை) நிக்கறது கூட தெரியாம மோதிடறாங்க. அதுக என்ன செய்யும் பாவம் தூக்கி வீசிடுது!'' என்கின்றனர் அவர்கள்.
இதோ, அதற்குப் பிறகு மாங்கரை பக்கம் உள்ள செங்கல் சூளைக்குள் பிரவேசிக்கிறேன். அங்கே சாலையோரம் உள்ளது ஒரு டீக்கடை. அங்குள்ள பெண்மணி பேசுகிறார்:
''இங்கே தினம் தவறினாலும் தவறும் சின்ன விநாயகன், பெரிய விநாயகன் வர்றது தவறாது. சாயங்காலம் ஆறு மணி, ஏழு மணிக்கு வடக்கே போறவனுக, விடியாக்காத்தால ஊரெல்லாம் சுத்திட்டு தெற்கே திரும்பிப் போவானுக. போகும்போது நம்ம இருந்தா ஒரு சிக்னல். ஒரு சின்ன பிளிறல் போட்டுட்டுதான் போவானுக. அதுகளுக்கு சின்ன ஒண்டி, பெரிய ஒண்டின்னும் பேரு. பெரியவன் சில சமயம் எங்க கடை முன்னாலயே நிக்கும்.
'ஏண்டா விநாயகா, இன்னைக்கு ஒண்ணும் கிடைக்கலியா?'ம்பேன். 'ஓ'ன்னு ஒரு பிளிறல் போட்டுட்டு போகும். சின்ன ஒண்டிதான் ரொம்ப லூட்டி. சொன்ன பேச்சைக் கேட்காது. ராத்திரியில ஒரு நாள் கடைக்குள்ளே புகுந்துடுச்சு. இருந்த அரிசி, பருப்பு, மிக்சர், முறுக்கு எல்லாம் சாப்பிட்டுடுச்சு. நாங்க பின்பக்க வழியா ஓடியாந்துட்டோம். மறுபடி கூரையெல்லாம் வேஞ்சு. பெருந்துன்பம்.
அடுத்தநாளும் சின்னவன் வந்துட்டான். 'ஏன்டா சின்ன விநாயகா. நாங்க நிம்மதியா இருக்கிறது புடிக்கலியா?'ன்னு கேட்டோம். அதுவும் மசமசன்னு நின்னுச்சு. நாங்க பேசினது பெரிய விநாயகனுக்கு கேட்டுடுச்சு போல அந்தப் பள்ளத்துல இருந்து வந்துச்சு பாரு. இது ஓடிப்போயிடுச்சு. அப்புறம் அதுக என்ன பேசிக்கிச்சோ என்னவோ. அதுக்கப்புறம் தினம்தோறும் இதே வழியிலதான் ரெண்டுமே அடுத்தடுத்து போகும். நின்னு ஒரு பார்வையும் பார்க்கும். போடா போன்னா போயிடும். ஆனா பாருங்க. போன வாரம்தான் சின்ன விநாயகன் ஒரு ஆளை அடிச்சுக் கொன்னுட்டான். செங்கல் சூளையில் இருக்கிற ஆள். காலையில அது எதிர்ல வர்றது தெரியாம எதுக்காலயே போயிட்டான். அவன் விதி அவ்வளவுதான். என்ன செய்றது?''
ஒரு உயிர் கண்முன்னே போன பிறகும் இந்தப் பெண்மணிக்கு எங்கிருந்து வந்தது யானைகளின் மீதான கரிசனம்?
- மீண்டும் பேசலாம்...
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago