ஆர்ட்டிஸ்ட் ஆர்டிஐ ஆன கதை

பு

துச்சேரியில் அமைச்சர் அலுவலகத்தில் டீ வாங்கியது தொடங்கி ஆளுநர் மாளிகைக்கு காய்கறிக்கு செலவிட்ட தொகை வரை இந்த ஆர்டிஐ ரகுபதிக்கு தெரியும்.

‘அலுவலக நேரத்தில் தன்னை சந்திக்க முன் அனுமதி பெறத் தேவையில்லை’ என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது கைப்பட எழுதிக்கொடுத்த அனுமதி அட்டையை பெற்ற பெருமைக்குரியவர் இந்த ஆர்டிஐ ரகுபதி.

புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் தெருவில் அவரது அலுவலகத்தில் அவரை சந்தித்தோம். “பாரதிதாசன் நடத்திய குயில் பத்திரிக்கையில் எனது தந்தை துணை ஆசிரியராக இருந்தார். நான் பத்தாம் வகுப்புதான் படித்தேன். அதன்பிறகு ‘ஆர்டிஸ்ட்’ வேலைக்குச் சென்று பேனர் வரையத் தொடங்கினேன். அப்போதுதான் முன்னாள் முதல்வர் சண்முகத்தை பார்த்தேன். அவர் எளிமையும் நேர்மையும் எனக்கு பிடித்தது. அப்போது பேனர்களுக்கு மவுசு இருந்ததால் புதுச்சேரியில் உள்ள முக்கியமான அரசியல்வாதிகள் பலரை தெரியும்.

2006-ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பற்றி அறிந்து, நான் வசித்த ரெட்டியார்பாளையம் பகுதியிலுள்ள சாலை கள் போடப்பட்ட விவரங்களை ஆர்டிஐ-யில் கேட்டேன். நான் எதிர்பார்த்ததை விட கூடுதல் விவரங்கள் கிடைத்தன. அப்போது தொடங்கியதுதான் இந்த ஆர்டிஐ பயணம். பல பொதுவான காரியங்களுக்காக தகவல் பெறத் தொடங்கி, இதுவரை அரசுத்துறைகளிடமிருந்து 3 ஆயிரம் மனுக்கள் தாக்கல் செய்து பதில் பெற்றுள்ளேன். மேல் முறையீடு சென்ற சம்பவங்களும் உண்டு.

குறிப்பாக அமைச்சர்கள் தங்களின் சொந்த வீட்டுக்கு வாடகை வாங்கியது தொடர்பாக ஆர்டிஐ மூலம் முன்பு தகவல் பெற்றேன். இதன் பிறகு பொறுப்புக்கு வந்த அமைச்சர்கள் யாரும் சொந்த வீட்டுக்கு வாடகைப்படி வாங்குவதில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்திய திருப்தி எனக்கு.

கடந்த காலத்தில் அமைச்சர்கள் அலுவலகத்தில் டீ செலவுக்காக பல லட்சம் செலவு செய்தது; இல்லாத கடையில் டீ வாங்கியதாக பில் வாங்கியது போன்ற விவரங்கள் ஆர்டிஐ-யில் கிடைத்தது. அதை வெளியிட்டோம்.

முன்பு ஆளுநராக இருந்த இக்பால் சிங் காய்கறி செலவு லட்சக்கணக்கில் இருந்தது தொடர்பாக தகவல் கிடைத்தது. எனது வீட்டுக்கே வந்து விசாரித்தனர். அதிலிருந்து காய்கறி வாங்கும் விவரங்களை ஆய்வு செய்ய தொடங்கினார்கள். இது ஆர்டிஐ-யால் ஏற்பட்ட மாற்றம்.

வாரியத் தலைவர்களாக 25 பேரை நியமித்தனர். அவர்கள் செலவின விவரங்களை வாங்கி, உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தேன். தொடர்ந்து வாரியத்தலைவர்களுக்கு சட்ட விதிகள் வகுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவும் ஆர்டிஐ-யின் விளைவு தான்.

விதவை பெண்ணுக்கு இலவச மனைப்பட்டா, ஜிப்மரில் மாற்றுத் திறனாளிக்கு மீண்டும் பணி போன்றவை ஆர்டிஐ-யால் நடந்ததுள்ளன. பொதுவான விஷயங்களில் மறைக்கப்படுவதைதான் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறேன். இதனால் தவறுகள் செய்வதற்கு தயக்கம் ஏற்படும். இதுதான் நமக்கு வேண்டும்” என்றார்.

இப்படிச் செய்வதால் ரகுபதிக்கு சில பாதிப்புகள் ஏற்படத்தான் செய்தது. இதுகுறித்து அவர் நம்மிடம் கூறும்போது, “என் வாழ்வாதாரம் பாதிக்கத்தான் செய்தது. சம்பாதிப்பதை விட இதுபோன்ற சமூக விசயங்களில்தான் ஆர்வமும் திருப்தியும் உள்ளது. வாழ்நாள் உள்ள வரை ஆர்டிஐ-யை பயன்படுத்துவேன். இதுதொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறேன்’’ என்கிறார் இந்த ஆர்டிஐ புலி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE