குலம் காத்த பெத்தனாட்சி’க்கு வயசு 22..! அழைப்பிதழ் கொடுத்து கேக் வெட்டி விழா !

By கே.கே.மகேஷ்

இந்தியப் பசுவின் அதிகபட்ச வயது பதினெட்டு. 15 வயதுக்கு மேல் பசு, கன்று ஈன்று பால் தருவதில்லை என்பதால், விவசாயிகளே அவற்றை விற்றுவிடுவது வழக்கம்.

ஜல்லிக்கட்டுக்குப் பேர் போன மதுரை அலங்காநல்லூரில் விவசாயி பார்த்திபன் வளர்க்கிற பசு, 22 வயதை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. ‘பெத்தனாட்சி’ என்ற பெயர் கொண்ட அந்தப் பசுவின் பிறந்த நாளை மாட்டுப்பொங்கலன்று கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறார் பார்த்திபன்.

“வீட்டில் மொத்தம் 8 பசுக்களை வளர்க்கிறீர்கள். இதற்கு மட்டும் ஏன் பிறந்த நாள் கொண்டாட்டம்-?” என்று பார்த்திபனிடம் கேட்டோம்.

“பசுவானது மூன்று வயதில் முதல் கன்றை ஈனும். நன்றாகப் பராமரிக்கப்படும் பசுக்கள் ஆண்டுக்கு ஒரு கன்று வீதம், 14 வயது வரையில் தொடர்ந்து குட்டி போட்டு பால் தரும். வயதாக வயதாக பசுக்களுக்குப் பல் தேய்ந்துபோகும். கடவாய்ப் பற்கள் எல்லாம் சுத்தமாக விழுந்துவிடும். எனவே, இரையெடுக்க முடியாமல் இறந்துபோய்விடும். அவ்வாறு இறக்கும்முன்பாக விவசாயிகள் அவற்றை அடிமாட்டுக்கு கொடுத்துவிடுவார்கள். எனவே, கோசாலையில் உள்ள மாடுகளைத் தவிர மற்ற மாடுகள் 18 வயதைத் தொடுவதே அரிது.

‘பெத்தனாட்சி’ எங்கள் குலசாமி. அவளை அடிமாட்டுக்கு அனுப்ப எங்களுக்கு விருப்பமில்லை. அவள் 17 வயது வரையில் கன்று ஈன்றாள். மொத்தம் 14 கன்றுகள். மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி வரை பார்த்துவிட்டாள். அவளை கோமாதாவாகவே நாங்கள் கருதுகிறோம்.

மாட்டுப்பொங்கலன்று பிறந்த அவளுக்கு ஆண்டுதோறும் அதேநாளில் கோமாதா வேடமிட்டு, பொங்கல் கொண்டாடுவது வழக்கம். அந்த வழக்கப்படி இந்தாண்டு அவளது 22வது பிறந்த நாளைக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறோம். எனக்குத் தெரிந்து, இத்தனை வயது வரை வாழ்கிற பசு இதுதான். கை மாறாமல், 22 வயது வரையில் பிறந்த வீட்டிலேயே வாழ்கிற பசுவும் இதுதான்” என்றார் பெருமையாக.

அந்தப் பசுவைப் பார்த்தோம். வயோதிகம் காரணமாக கால்கள் எல்லாம் வளைந்துவிட்டன. எழுந்திருக்கவே சிரமப்படுகிறது. கைத்தாங்கலாக அதைத் தூக்கிவிடுகிறார்கள். பசும்புல்லை மெல்வதற்கு பல் இல்லாததால், புற்களை அவல் போல சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொடுக்கிறார்கள். புண்ணாக்கு, பருத்திக்கொட்டை போன்றவற்றை மிக்ஸியில் இட்டு அரைத்து தண்ணீருடன் கலந்து கொடுக்கிறார்கள். “பெத்தனாட்சியை எங்க வீட்டு பெரியாட்களில் ஒருவராகத்தான் பார்க்கிறேன். அவள் கொடுத்த பாலைக்கொடுத்துத்தான் என் பிள்ளைகளை வளர்த்தேன். வீட்டில் உள்ள டிவி முதல் பிள்ளைகளின் படிப்பு வரையில் எல்லாம் அவள் கொடுத்த வருமானத்தில் வந்தது. இப்போது அவள் உழைத்து ஓய்ந்துவிட்டாள். வயதான அவளை, இறப்பு வரையில் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது எங்கள் கடமை” என்கிறார் பார்த்திபனின் மனைவி மாரீஸ்வரி.

ஜனவரி 15ம் தேதி (மாட்டுப்பொங்கல்) அன்று நடைபெறும் பிறந்த நாளுக்காக பத்திரிகையும் அடித்திருக்கிறார்கள். அதில் பார்த்திபன், மாரீஸ்வரி பெயருடன், பெத்தனாட்சியின் மகள் (!) புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. “அன்றைய தினம் பெத்தனாட்சிக்கென வாழைப்பழம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை எல்லாம் கலந்து கேக் செய்யவும், அதற்கு பீட்ரூட் சாறு கொண்டு வண்ணமேற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேக்கை அவள் சாப்பிடுவாள். மிச்சத்தை அவளின் சந்ததிகளுக்குப் பங்கு போட்டுக்கொடுப்போம். கூடவே, அன்றைய தினம் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம்” என்கிறார்கள் பார்த்திபனின் குடும்பத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE