மணல் இறக்குமதிக்கு அரசின் கட்டுப்பாடுகள் : தமிழக ஆறுகள் தப்பிக்குமா?

By நீரை மகேந்திரன்

இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் தங்கத்தைவிடவும் அதிக மதிப்பு மிக்க பொருள் ஆற்று மணல் என்றால் மிகையில்லை. மணல் தட்டுப்பாடு, மணல் கொள்ளை, மணல் லாரி, மணல் குவாரி, மணல் திருட்டை தடுக்க முயன்ற ஏட்டு கொலை, தலையாரி தற்கொலை, கிராம மக்கள் போராட்டம், போராட முயன்றவர்களை போலீஸ் கைது என தினசரி செய்திகளில் தவறாமல் இடம் பெற்று விடுகிறது மணல் தொடர்பான செய்திகள்.

காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தாமிரபரணி, நொய்யல், பவானி என தமிழகத்தின் அத்தனை நீராதரங்களிலும் ஈவு இரக்கம் இல்லாமல் நடந்த மணல் கொள்ளையின் விளைவு இன்று நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்தில். இதை தடுக்கும் முயற்சிகளில் பலரும் பல விதங்களில் போராடினாலும் தீர்வு எட்டியபாடில்லை.

ஒருபக்கம் கட்டுமானத் துறை வளர வளர மணல் தேவையும் அதிகரித்து வருகிறது. மணல் விநியோகத்தை முறைப்படுத்துகிறேன் என்கிற பெயரில், ஆற்றில் மணலை அள்ளும் குவாரிகளை அரசே தொடங்கி அவற்றை குத்தகைக்கு விட்டது. அதிலும் குறிப்பிட்ட சில அரசியல் பின்புல பிரமுகர்களின் ஆதிக்கம். ஆறுகளின் உயிர் ஊசலாடுவதைப் பொறுக்க முடியாத சூழலியல் அக்கறை கொண்டவர்களின் தொடர்ச்சியான சட்டப் போராட்டங்கள் காரணமாக உயர் நீதிமன்றம் ஆற்றில் மணல் அள்ள தற்போது தடை விதித்துள்ளது.

முதலில் ஒரு சில மணல் குவாரிகளை நீதிமன்றம் அனுமதித்தாலும், தற்போது ஒட்டுமொத்தமாக மணல் குவாரிகளை நடத்த தடை செய்துள்ளது. இதனால் தற்போது கள்ளத்தனமாக மணல் திருடுவதும், விற்பதும் அதிகரித்துள்ளது. மணல் தட்டுபாட்டை பயன்படுத்தி ஒரு டன் மணலை 12 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விலைவைத்து விற்கின்றனர் மணல் திருட்டு கும்பல்கள்.

கட்டுமானத் தொழில் பாதிப்பு

தொடர்ச்சியான மணல் தட்டுப்பாடு மற்றும் குவாரிகள் தடை காரணமாக கட்டுமான நிறுவனங்களின் பணிகள் முடங்கியுள்ளன. மணலுக்கு மாற்றாக குவாரி மண் எனப்படும் எம் சாண்ட் பயன்படுத்தலாம். ஆனால் அதை ஏனோ கட்டுமானத் துறையினர் விரும்புவதில்லை. தவிர தேவைக்கேற்பவும் கிடைப்பதில்லை. இதனால் கட்டுமானத் துறையில் பல ஆயிரம் மக்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பிட்ட தேதியில் கட்டிடங்களை முடிக்காமல் கோடிக்கணக்கில் நிறுவனங்களுக்கும் இழப்பு என்கிறார் நவீன்ஸ் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் நவீன்குமார்.

இறக்குமதி மணல்

இந்த நிலையில்தான் புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.ஆர்.எம் ராமையா எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனம் மலேசியாவிலிருந்து 54 ஆயிரம் டன் மணலை தமிழகத்திற்கு இறக்குமதி செய்தது. தமிழகத்தைவிட குறைந்த விலையில் முறையான ஆவணங்களுடன் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டுவந்தது. ரூ.7 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள அந்த மணலுக்கு 2 கோடியே 88 லட்சம் சுங்க வரி செலுத்தியுள்ளனர். தவிர ஜிஎஸ்டியாக ரூ.38 லட்சமும் செலுத்தியுள்ளது அந்த நிறுவனம்.

ஆரம்பத்தில் 1000 டன் மணல் வரை கேரளத்துக்கும், தமிழகத்தின் சில பகுதிகளுக்கும் கொண்டு சென்ற நிலையில், திடீரென மாவட்ட நிர்வாகமும், கனிமவள அதிகாரிகளும், இறக்குமதி செய்யப்பட்ட மணலை துறைமுகத்தில் இருந்து வெளியே விடாமல் தடுத்துள்ளனர் . முதல் முறையாக மலேசியாவில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்ட 54 ஆயிரம் டன் மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த இறக்குமதி மணலை வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டி அந்த நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பதிலளித்த கனிம வளத்துறை அதிகாரிகள், 'தங்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறவில்லை என்றும், தரம் குறித்து சோதிக்க வேண்டும்' என்றும் கூறினர்.

''மலேசியாவில் கட்டுமானத்துக்கு பயன்படுத்தி வருவதுடன் அங்கு பல சோதனைகளுக்குப் பிறகுதான் ஏற்றுமதிக்கு அனுமதிக்கின்றனர். பல கட்டுமான நிறுவனங்கள் தரத்தை சோதித்த பின்னர்தான் ஆர்டர் கொடுத்தனர். நாங்களும் பல்வேறு தரசோதனைகளில் இந்த மணல் கட்டுமானத்துக்கு தரமானதுதான் என்று சான்றிதழ் பெற்றுள்ளோம்'' என்கிறார் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா.

தூத்துக்குடி துறைமுகத்தில், மரம், காப்பர், நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் வந்து இறங்குகின்றன. முறையான அனுமதி, விதிமுறைகளைக் கடைபிடிக்கும் போது மணலுக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். இதே காலத்தில் கொச்சினுக்கு கொண்டு செல்லப்பட்ட மூன்று கப்பல் மணலை அந்த மாநில அரசு சோதனைக்குப் பின்னர் அனுமதித்துள்ளது. ஆனால் உயர் நீதிமன்றம் மணலை எடுத்துப் பயன்படுத்த அனுமதி அளித்தும், அரசு மேல்முறையீட்டுக்குச் சென்றுள்ளது. தீர்ப்பு நிலுவையில் உள்ளது.

இந்த மணலை அரசே எடுத்து விநியோகம் செய்தாலும் எங்களுக்கு சிக்கல் இல்லை. இறக்குமதிக்கான செலவு, வரிகளை உள்ளிட்ட செலவுகளை அளித்தால் அரசே எடுத்துக்கொள்ளட்டும். ஆனால் அதற்கும் அரசிடமிருந்து பதில் இல்லை. மணலை துறைமுகத்தில் இருக்கும் நாட்களில் அதற்கான வாடகை, முதலீடு முடக்கம் என பல வகையில் எங்களுக்கு நஷ்டம் என்கிறார் இவர்.

மணலை துறைமுகத்தில் இருந்து வெளியே கொண்டுவர ஒப்பந்தம் எடுத்துள்ள ஜானகி டிரேடர்ஸ் நிர்வாக இயக்குநர் சிதம்பரம் கூறுகையில், கப்பலில் இருந்து மணல் இறக்கப்பட்டபோதே, மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் துறைமுகத்துக்குள் நுழைந்து மணலை இறக்கவிடாமல் தடுத்ததாக குறிப்பிடுகிறார்.

வெளிநாடுகளில் இருந்து ஆற்றுமணலை இறக்கி தமிழகத்துக்கு கொண்டுவர பல்வேறு தொழில் அதிபர்கள் ஆர்வமாக இருப்பதாகவும், தமிழக அரசு அனுமதித்தால் தற்போது உள்ள மணல் தட்டுப்பாட்டை போக்கி அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் மணல் சப்ளை செய்ய முடியும் எனவும், தமிழக ஆறுகள் காப்பாற்றப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் மணல் இறக்குமதி தொடர்பாக அரசு பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, இறக்குமதி செய்யப்படும் மணலை தமிழக பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களே விநியோகம் செய்வார்கள். விலையையும் தீர்மானிப்பார்கள் என அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் மணல் விநியோகத்தை அரசே ஏற்று நடத்துவது முறையா என்பதைத் தாண்டி, நேரடியாக அரசே இறக்குமதி செய்துகொள்ளலாமே எதற்கு இறக்குமதியாளர்களிடமிருந்து இடைத்தரகர் வேலையை அரசு செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் மணலை ஏதாவது ஒரு காரணம் சொல்லி நிராகரித்தால் முதலீட்டுக்கு மோசம் என்பதால் இந்த முயற்சிகளிலிந்து அவர்கள் பின்வாங்கி விடுவர்,. இதனால் தமிழ்நாட்டுக்குத்தான் நஷ்டம் என்கின்றனர்.

ஏற்கெனவே புதுக்கோட்டை நிறுவனம் இறக்குமதி செய்த மணலை எடுக்கவிடாமல் மேல்முறையீட்டுக்குச் சென்றுள்ள நிலையில் தமிழக அரசு புதிய உத்தரவுகளை வெளியிட்டது கவனிக்கத்தக்கது. ஆனால் புதிய உத்தரவுக்குப் பின்னர்தான் சென்னையைச் சேர்ந்த நிறுவனம் கடந்த 4-ம் தேதி 'கிரேட்டன் ஈகிள்' என்ற கப்பல் மூலம் 58 ஆயிரம் டன் மணல மலேசியாவிலிருந்து துாத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. புதிய வழிகாட்டுதல்கள்படி அந்த மணலை தமிழக அரசே கொள்முதல் செய்து கொள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால் அந்த நிறுவனம் மணல் கப்பலை கர்நாடக மாநிலம் மங்களுரு துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

பல வருடங்களாக தமிழகத்தில் ஆறுகளை சூறையாடி மணல் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட போதெல்லாம் கண்டும் காணாமலும் இருந்த கனிம வளத்துறையினர், பொதுப்பணித்துறையினர் முறையான சுங்கவரி கட்டி இறக்குமதி செய்யப்பட்ட மணலை வெளியில் எடுத்து வர தடை போட்டுள்ளது ஏன்? என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுகிறது.

இது தொடர்பாக சில கனிமவளத்துறை அதிகாரிகளிடம் பேசுகையில், ''இறக்குமதி செய்யப்படும் மணலுக்கு கனிமவளத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் எடுக்கப்படும் மணல் விலையை விட குறைந்த விலைக்கு இந்த மணல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வெளிநாட்டு மணல் மார்க்கெட்டுக்கு வந்தால் எங்கே உள்ளூரில் 50 மடங்கு விலைக்கு விற்கப்படும் மணல் விற்கமுடியாத சூழ்நிலை ஏற்படுமோ என்று அச்சம்தான் காரணம். ஏனென்றால் தமிழகத்தில் உள்ள மணல் மாஃபியாக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கையில்தான் இத்தனை ஆண்டுகாலம் மணல் பிசினஸ் இருந்து வருகிறது. இதன் காரணமாகவே இந்த முட்டுக்கட்டைகள்'' என்கின்றனர்.

இறக்குமதி மணல் தரமான இருக்கிறது. யார் இறக்குமதி செய்தால் என்ன.. அல்லது அரசே விநியோகம் செய்வதில் இறக்குமதியாளர்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. மணலைப் பயன்படுத்தியவர்களும் தரமாக இருக்கிறது என்று குறிப்பிடுகின்றனர். கர்நாடகா, கேரளாவில் இறக்குமதி மணல் விற்பனை செய்யலாம். ஆனால் தமிழகத்தில் போடப்பட்ட கட்டுப்பாடுகள்தான் அதிர்ச்சி அளிக்கிறது என்கின்றனர் கட்டுமான நிறுவனங்கள்.

மலேசியாவிலிருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்வதில் நிலவும் குழப்பமான சூழலுக்கு அரசு முடிவு செய்ய வேண்டும். கட்டுமான நிறுவனங்களையும் அது சார்ந்துள்ள தொழிலாளர்களின் வாழ்வையும் காப்பாற்றுவதோடு, குறைந்த செலவில் சொந்த வீடு என்ற சாமானியர்களின் கனவு மெய்ப்படும். தவிர இனிமேலாவது தமிழக ஆறுகள் தப்பிப் பிழைக்கட்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்