நில் கவனி சொல் டிஎஸ்பியின் பிரச்சாரம்

By எஸ்.கோவிந்தராஜ்

க்களிடம் போக்குவரத்து விதிகளை எடுத்துச் சொல்வதில் வித்தியாசமான அணுகுமுறையை கையாள்கிறார் ஈரோடு போக்குவரத்துப் பிரிவு டிஎஸ்பி ஏ.சேகர்.

தினமும் ஏதேனும் ஒரு பள்ளி, கல்லூரி அல்லது மக்கள் அதிகம் கூடுமிடங்களில் ஒரு பேச்சாளரைப் போல போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி விடுகிறார். இதனை பள்ளி மாணவர்கள் நின்று நிதானித்து கவனித்து பெற்றோரிடம் போய் சொல்லச் சொல்கிறார். கல்லூரி மாணவர்கள் என்றால் அவர்களின் எதிர்காலத்தையும் பெற்றோரின் கனவையும் பற்றி பேசுகிறார். இதுபோக பேச்சு, எழுத்து, கவிதை, பட்டிமன்றம், நடனம், நாடகம், ஓவியம் உள்ளிட்ட போட்டிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும் நடக்கிறது.

இதுமட்டுமல்ல போக்குவரத்துக் காவலர்கள் மீது புகார் இருந்தாலும் போன் நம்பர் கொடுத்து பேசச் சொல்கிறார். இந்த வித்தியாசமான அணுகுமுறை குறித்து டிஎஸ்பி ஏ.சேகரிடம் பேசினோம்.

“திருப்பூர் மாவட்டத்தில் ஆரம்பித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தற்போது ஈரோட்டிலும் தொடர்கிறது. ஈரோடு அரசு பேருந்து நிலையம் அருகே நடத்தும் கண்காட்சியை மாணவர்களை பார்வையிடச் செய்கிறோம். மாணவர்கள் காட்டும் ஆர்வம் சலிப்பில்லாமல் பயணிக்க வைக்கிறது” என்று சொல்கிறார்.

சேலம் மேட்டூரைப் பூர்வீகமாகக் கொண்ட டிஎஸ்பி சேகர், கல்லூரிக் காலங்களில் பேச்சுப்போட்டிகளில் ஆர்வம் கொண்டவர். அவிநாசியில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக இருந்தபோது, எஸ்பி பாலகிருஷ்ணனின் ஆலோசனைப்படி சாலை விபத்துகள் தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தை எடுத்தார். ‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்ற அந்தப் படம் 50 நிமிடம் ஓடக்கூடியது. இந்த குறும்பட சிடிக்கள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் சென்று சேர்ந்துள்ளது.

அதேபோல, ‘எது குற்றம்?’ என்ற தலைப்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு குறும்படத்தை 2012-ல் தயாரித்தார். அதனை 2 ஆயிரம் சிடிக்களாக மாற்றி திருப்பூர் மாவட்டம் முழுவதும் விநியோகித்துள்ளார்.

தற்போது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘மனிதா உனக்கு தேவை மதுவா; மனித உயிரின் விலை மலிவா’ என்ற பாடலையும் ஈரோடு எஸ்பி சிவக்குமார் எழுதிய, ‘எதுக்கு இந்த வேகம், ஏன் இந்த சோகம்’ என்ற பாடலையும் நிகழ்ச்சிகளில் பாடி, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

கடந்த இரண்டரை மாதங்களில் 30 ஆயிரம் பேரை சந்தித்து பிரச்சாரம் செய்துள்ள சேகர், மார்ச் 22-க்குள் ஒரு லட்சம் பேரை சந்திக்க இலக்கு வைத்து சுழன்று வருகிறார். நில், கவனி, சொல் என்பதே இவரது பிரச்சார பாணியாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE