இதற்கு முந்தைய வருடங்களின் டிசம்பர் மாதங்களில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் எஸ்டேட் பகுதிகளில் நுழைந்தே வந்துள்ளன. ஆனால் இந்த அளவுக்கு யாரையும் பிடுங்கி துவம்சம் செய்ததில்லை. இத்தனை குடியிருப்புகளை, ரேஷன் கடைகளை தாக்கியதில்லை என்று பொதுமக்கள் குமுற, இந்தப் பகுதிகளுக்கு அப்போது நேரில் சென்று பார்த்தேன். அப்போது நான் முதலில் சென்றது வால்பாறையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாணிக்காபுரம் எஸ்டேட் பள்ளி.
மூலைக்கு மூலை இடிந்து அதன் சுவர்கள், ஜன்னல்கள் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதற்கு செல்லும் வழியில் எங்கும் யானைக்கழிவுகள்தான். 'பார்த்து கவனமா போங்க. இப்ப எல்லாம் பட்டப்பகலிலேயே கரடிகளும் யானைகளும் எஸ்டேட்டுகளில் உலாவுகின்றன!' என எஸ்டேட் தொழிலாளர்கள் எச்சரிக்கையும் செய்தனர்.
மாணிக்கா எஸ்டேட் மக்களிடம் பேசியதில், ''இங்கே 90 குடும்பங்கள் இருக்கு. அதில் பெரும்பாலானவங்க 40 முதல் 50 வருஷத்துக்கு மேலா இரண்டு தலைமுறையா குடியிருக்கோம். இத்தனை வருஷமா இப்படி மிருகத்தொல்லை இருந்ததில்லை. ஏழெட்டு வருஷமாத்தான் இப்படி. இந்த வருஷம் அதிகமாகவே ஆயிருச்சு. அதிலும் கார்த்திகை, மார்கழி மாதம் வந்துட்டா போச்சு. பட்டாளம், பட்டாளமா யானைகள் வந்துடுது. இது கேரளா பார்டர். அங்கே ஐயப்பசாமி சரணம் கோஷம் போட்டு போடறவங்க அதிகமாயிட்டாங்க. அதனாலதான் அங்குள்ள யானைகள் எல்லாம் இங்கே வந்துடுது!'' என புகார் தெரிவித்தனர்.
கரடி கடித்த திலகராணியை சந்தித்துப் பேசியபோது, ''அது என் இடுப்பு உசரத்துக்கு இருக்கும். நல்ல நீளம். அகலம். தேயிலை செடிக்குள்ளே அது புகுந்து வந்ததே தெரியலை. சட்டுனு தொடையைப் புடுச்சுடுச்சு. அது கூட இன்னொரு கரடியும் இருந்தது. நான் கத்தினதுதான் எனக்குத் தெரியும். அப்படியே மயக்கம் போட்டுட்டேன். மத்தவங்க கத்திட்டு ஓடி வந்து கரடிய விரட்டியிருக்காங்க. இல்லாட்டி போனா கரடி என்னை பிறாண்டியே கொன்னுருக்கும்!'' என நடுக்கம் மாறாமலே பேசினார்.
''உயிரைப் பணயம் வச்சு எஸ்டேட்டுல தேயிலை பறிக்கிறோம். இந்த பொண்ணுக்கு நாலு வயசுல குழந்தை இருக்கு. புருஷனும் விட்டுட்டு ஓடிப் போயிட்டான். எனக்கும் கூலி வேலை. இது மாதிரிஅசம்பாவிதம் நடந்துட்டா எங்களை ஆதரிக்கத்தான் நாதியில்லை!'' என்றார் திலகராணியின் தந்தை.
அப்போதைய வால்பாறை எம்எல்ஏவிடம் பேசியபோது, ''எங்களை மறிச்ச யானை சாதாரண யானையல்ல. வால்பாறைக்கு நானும் கோவையிலிருந்து தொடர்ந்து வந்துட்டுதான் இருக்கேன். டாப் ஸ்லிப், மேல்முடி, ஆழியாறு பகுதிகளில்தான் மாலை, காலை நேரங்களில்தான் யானைகள் தென்படும். ஆனா 21-வது கொண்டை ஊசி வளைவுல நட்ட நடு மத்தியானத்துல இப்படி யானை வந்து பிளிறிகிட்ட எங்க காரை நோக்கி வந்ததை யாருமே நம்ப முடியாது. அந்த அளவு இங்கே இப்ப கேரளத்திலிருந்து யானைகள் வர ஆரம்பிச்சுடுச்சு. இதை நான் முறைப்படி அரசுக்கு தெரிவிச்சிருக்கேன். பொதுவா வனவிலங்குகளால் உயிரிழப்போருக்குத்தான் அரசாங்கம் நிவாரண நிதியாக ஒரு லட்சம் ரூபாய் தருகிறது. பாதிப்புகளுக்கு தருவதில்லை. வால்பாறையைப் பொருத்தவரை வனவிலங்குகளால் உயிர்ச்சேதம் மட்டுமல்ல பொருட்சேதமும் அதிகமாக நிகழ்கிறது. எனவே இதை சிறப்பு கவனத்தில் கொண்டு அதற்கும் நிதி உதவி செய்ய வேண்டும். வனவிலங்குகள் அதிகமுள்ள பகுதிகளில் அரசாங்க செலவில் மின் வேலிகள் போட்டுத் தரவேண்டும். இதை அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்போகிறேன்!'' என குறிப்பிட்டார்.
அதற்குப் பிறகு பல முறை இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசினார் தங்கம். அதன் பிறகும் வால்பாறையில் காட்டு யானைகளால் உயிரிழப்பு, சிறுத்தைகளால் சிறுவர், சிறுமிகள் பலி தொடர அப்போதெல்லாம் மக்கள் போராட்டங்கள் சாலை மறியல் எல்லாம் பெரிய அளவில் நடைபெற்று வந்துள்ளது. அந்த போராட்டங்களுக்கும் முன்னிலை வகித்தார் தங்கம். அதன் தொடர்ச்சியாக வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் நிவாரண உதவியும், உயிரிழப்போருக்கு ரூ.3 லட்சமும் அளிக்க ஆரம்பித்தது தமிழக அரசு.
ஒரு முறை சிறுத்தையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து நிதியுதவியை தந்து விட்டு திரும்பும்போது ஒரு எஸ்டேட் குடியிருப்பில் 15 யானைகள் கொண்ட குழு பகலிலேயே கபளீகரம் செய்து கொண்டிருந்தது. அதை எம்எல்ஏவுடன் சென்று பார்த்தபோது அங்குள்ள மக்கள் ஒரு பாடு புலம்பித்தீர்த்தனர்.
''இந்த யானைக்கூட்டம் இங்கே வந்து குழுமி 15 நாட்கள் ஆகி விட்டன. இப்போது வரை இந்த ஒரு எஸ்டேட்டை விட்டு நகர மாட்டேங்குது. வனத்துறையினரும் பட்டாசு வெடித்தும், சத்தம் போட்டு விரட்டியும் பார்த்து விட்டனர். ஓரிடத்தில் நகரும் யானைகள், இன்னொரு இடத்திற்கு வந்து விடுகின்றன. மறுபடி அங்கே விரட்டினால் பழைய இடத்திற்கே சென்று நின்று விடுகிறது. நாங்க எப்படித்தான் வாழ்வது?'' என உணர்ச்சி பொங்கி கேள்விகள் கேட்டனர்.
ஐயப்ப சீசனுக்கு கேரளாவிலிருந்து திசை திரும்பும் காட்டு யானைகள்தான் இப்படி வருகிறது என்பது சாதாரண மக்களின் பேச்சாக இருந்தது. ஆனால் வனத்துறையில் பணிபுரியும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் வேறொரு அதிர்ச்சியான கருத்தை தெரிவித்தார்கள்.
''இந்த யானைகளில் பெரும்பாலானவை கேரளத்திலிருந்து வருவது உண்மைதான். ஆனால் உண்மையில் அவை காட்டு யானைகள் அல்ல. கேரள மக்களில் குறிப்பிட்ட சில குடும்பங்களில் அந்தக் காலம் முதற்கொண்டே யானைகள் வளர்க்கும் பழக்கம் இருந்தது. அவை திருவிழாக்களிலும் பங்கேற்கும். அப்படி ஒரு குடும்பத்தில் பத்து, பதினைந்து யானைகள் கூட இருந்ததுண்டு. இப்போதெல்லாம் யானைகளை வைத்து தீனி போடுவது பெரிய செலவாக உள்ளது. அதை பராமரிக்கவும் ஆட்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் முந்தைய தலைமுறையினரைப் போல, அடுத்து வந்த தலைமுறையினர் யானைகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டுவதில்லை.
எனவே தங்களால் பராமரிக்க முடியாத யானைகளை கொண்டு போய் சோலைக்காடுகளில் விட்டு விடுகிறார்கள். அது மட்டுமல்லாது அவற்றை தமிழகத்தை நோக்கி விரட்டியும் விட்டு விடுகிறார்கள். அவை சோலைக்குள் உள்ள காட்டு யானைகளுடன் இணைந்து வாழ்வதில் இயல்பு சிக்கல் உள்ளது. தவிர அவை மனிதர்களுடனும், மனிதர்கள் கொடுக்கும் உணவுப் பதார்த்தங்களையுமே உண்டு பழகி விட்டதால் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே வருகின்றன. காட்டு யானைகளாக இருந்தால் ஒரு கல் எடுத்து வீசினாலே சென்றுவிடும். பட்டாசு வெடிச் சத்தத்துக்கு ஓட்டமாக ஓடும். இப்போது இந்த யானைகள் வாண வெடிகளை வீசினால் கூட நகருவதில்லை. மனிதர்கள் விரட்டினால் அவர்களை எதிர்த்தும் வருகிறது. அவைதான் இனப்பெருக்கம் செய்து, அதன் குட்டிகளுக்கும் தனது பழக்க வழக்கத்தையே கற்றுக் கொடுக்கிறது!'' என்றனர்.
இந்தக் கருத்து அன்றைக்கு வால்பாறை மற்றும் கேரள எல்லையோர கிராமங்களில் வெறும் பேச்சளவில்தான் இருந்தது. இப்போதெல்லாம் பெ.நா.பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, சத்தியமங்கலம் காடுகள் வரை பணியில் உள்ள வேட்டைத் தடுப்புக் காவலர்கள் இதை உறுதிபடவே சொல்கிறார்கள்.
''இப்படி உருவாகியுள்ள யானைகளை நாங்கள் பார்த்தாலே கண்டுபிடித்து விடுவோம். சுவர்களை இடிப்பது. உணவுப்பொருட்களை ரேஷன் கடைகள் தேடி எடுத்து சாப்பிடுவது. மனிதர்களை பார்த்தால் எதிர்த்துக்கொண்டு வருபவை பெரும்பாலும் மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கு அடிமைப்பட்டு, பிறகு காட்டுக்குள் சென்று ஒட்டியும், ஒட்டாமலும் வாழும் யானைகளே!'' என்கிறார்கள் அவர்கள்.
சரி, இந்த விவகாரம் மட்டும்தான் காட்டு யானைகள் ஊருக்குள் வர காரணமா? நிச்சயம் இல்லை. இது ஒரு அங்கம்தான். வனத்துறையினரின் செயல்பாடும்தான். காட்டை காக்க வேண்டிய அவர்கள். காட்டில் வாழும் பழங்குடிகளுக்கு இம்சை கொடுப்பதும் இதற்கு மூலகாரணம் என்கிறார்கள் அவர்கள் நலன் காக்கும் அமைப்பினர்.
மீண்டும் பேசலாம்.
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago