கல்விக்கு கைகொடுக்கும் விவசாயி

டிக்காததால் தனக்கு நேர்ந்த அவமானங்கள் இனி யாருக்கும் நேரக்கூடாது என்ற வைராக்கியம்தான் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்தி தரத் தூண்டியிருக்கிறது பெரியகுளம் விவசாயி சரவணனுக்கு.

தேனி மாவட்டத்தில் 10-ம், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு குருபெயர்ச்சி விழாவின்போதும் கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறார் விவசாயி சரவணன். இந்த உதவிகளைச் செய்வதற்காகவே ஸ்ரீ குரு தட்ஷிணாமூர்த்தி சேவா சங்கத்தையும் ஆரம்பித்திருக்கிறார்.

பெரியகுளத்தில் அவரைச் சந்தித்து அவரது சமூக சேவை பற்றி கேட்டபோது, “எனது முன்னோர்கள் விவசாயத் தொழில் செய்து வந்தனர். அதே தொழிலை எனது தந்தை செய்தார். நான் 10-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் படிப்பை பாதியில் விட்டேன். காலம் செல்லச் செல்ல படிக்காத காரணத்தால் வெளியிடங்களில் எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் தினமும் புதுப்புது அனுபவங்களை கற்றுக் கொடுத்தது. படிக்காமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு என்று உணர்ந்தேன். நான் செய்த தவறை எனது குழந்தைகள் செய்யக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு தரமான கல்வியை கொடுத்து வருகிறேன்” என்றார்.

மாணவ, மாணவிகளுக்கு முடிந்தவரை உதவிகளை செய்யும் சரவணன் 2009 முதல் பரிசுத்தொகைகளை வழங்கத் தொடங்கினார். இதற்காக தொடங்கப்பட்டதுதான் ஸ்ரீ குரு தட்ஷிணாமூர்த்தி சேவா சங்கம். உதவித் தொகை வழங்குவதற்கான நிதி ஆதாரம் குறித்து கேட்டபோது, “முதலில் ரூ.50 வீதம் பொதுமக்களிடம் நன்கொடை பெற்றோம். ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கவேண்டி வந்ததால் நன்கொடை பணம் போதுமானதாக இல்லை. எனவே எனது சொந்த பணத்தை கொடுக்க தொடங்கினேன். தற்போது வரை அது தொடர்கிறது” என்று சொன்னார். 

கல்விக்கு உதவுவது மட்டுமல்லாமல் ஏழை பெண்கள் திருமணத்துக்கு சீர்வரிசை கொடுத்து புது வாழ்க்கை தொடங்கவும் காரணமாக இருக்கிறார். இதற்காக கோயில்கள் மற்றும் ஜமாத்தில் (பள்ளிவாசல்) சொல்லி வைத்து ஏழை பெண்களை தேர்வு செய்கிறார். இதுவரை 15 பேரின் திருமணம் இவரது சீர்வரிசையால் சிறப்பாக நடந்துள்ளது.

இதுபோக ஏழை மாணவ, மாணவிகள், இளைஞர்கள் போட்டித் தேர்வை எதிர்கொள்ள வசதியாக ‘திண்ணை’ என்ற கல்வி நிறுவனத்தின் உதவியுடன் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இலவச பயிற்சி வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளார். இதுதவிர ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைக்கவும் மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட உழுபடைக் கருவிகளை ஏழை விவசாயிகள் வாடகைக்கு எடுப்பதை தடுக்க அவர்களுக்கு சொந்தாக வாங்கித் தரவும் திட்டமிட்டு இருக்கிறார் விவசாயி சரவணன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE