இரக்கமுள்ள மனசுக்காரர்.. ஏழைக்கெல்லாம் சொந்தக்காரர்..

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தூ

ங்காநகரமான மதுரையின் நடைபாதைகளில், யாரோ ஒருவரை எதிர்பார்த்து வயிற்றுப் பசியோடு காத்திருக்கின்றனர் சிலர். ஒரு ஆட்டோ விரைந்து வருகிறது. அதில் பல பார்சல்கள். ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த பார்சலை பெற்றுக் கொள்கின்றனர். அப்போதே வயிறு நிரம்பிய மகிழ்ச்சியில் கைகூப்புகின்றனர். அடுத்த இடம் நோக்கி பார்சலுடன் பறக்கிறது ஆட்டோ.

ஒருவேளை உணவுக்குகூட வழியின்றி நடைபாதைகளிலும், சாலையோரங்களிலும் பசியால் துடிப்பவர்கள், உடல் வற்றிப்போய் மரணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகம். மற்றொரு புறம், ஹோட்டல்கள், வசதிபடைத்தவர்களின் வீடுகள், திருமண மண்டபங்களில் தட்டுத் தட்டாக உணவுகள் வீணாகி, குப்பைத் தொட்டிக்குப் போகின்றன. இவ்வாறு யாருக்கும் பயனின்றி வீணாகும் உணவுகளைச் சேகரித்து சாலையோரவாசிகளின் பசியாற்றுகிறார் மதுரையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் டி.ஆர்.வாசுதேவன் (31).

மதுரை காமராஜர் சாலை பகத்சிங் தெருவில் வசிக்கும் இவர், பகல் முழுவதும் ஆட்டோ ஓட்டிவிட்டு, இரவில் வீடு திரும்புகிறார். அன்றைய பொழுதை முழுமையடையச் செய்யும் அவரது சேவை, அதற்குப் பிறகுதான் தொடங்குகிறது. இரவு 10 மணிக்கு மீண்டும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். ஹோட்டல்களுக்குச் சென்று, மீதமாகும் உணவுகளை சேகரித்துக்கொண்டு, வீட்டுக்கு வருகிறார். அங்கு தனது தாயுடன் சேர்ந்து, உணவை தனித்தனியே பார்சல் செய்கிறார். ஆதரவற்றவர்களின் இருப்பிடங்கள் நோக்கிச் செல்கிறார். சிறிது நேரத்தில், பசித்தவர்களின் வயிறு போல, வாசுதேவனின் மனமும் நிறைகிறது.

இந்த சேவை பற்றி வாசுதேவன் கூறியதாவது:

‘‘ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பம். மதியம் பள்ளிக்கூடத்தில் சத்துணவு சாப்பிடுவேன். இரவு அப்பா காசு கொண்டுவந்தாதான் சாப்பாடு. பசி வயிற் றைக் குடையும். எங்கேயாச்சும் கல்யாணம், காதுகுத்து நடக்குதான்னு, அம்மாவுக்குத் தெரியாம மண்டபம், மண்டபமா சுத்துவேன். 6-ம் வகுப்புக்கு மேல படிக்கல. ஆட்டோ ஓட்டுறேன். அதனால, சாப்பாட்டுக்கு பிரச்சினை இல்லை. ஆனா, சின்ன வயசுல நான் அனுபவிச்ச பசியின் கொடுமை இன்னமும் மனசைவிட்டு நீங்கல. அதனாலதான், பசிக்கிறவங்களுக்கு சோறு போடறத ஒரு கடமையா செய் றேன்.

2005-ல் ஒரு கேட்ரிங் சர்வீஸ் சாப்பாட்டு பார்சலை மண்டபத்துக்கு சவாரி ஏத்திட்டுப் போனேன். அங்கு நிறைய சாப்பாடு மீதமாகிடிச்சு. அதை எடுத்துட்டுப்போய், ராத்திரி ரோட்டுல தூங்கிட்டிருந்த ஆதரவற்றவங்களை தட்டி எழுப்பிக் கொடுத்தேன். அன்னிக்கு தொடங்கின உதவி, இப்போ வரை தொடருது.

என்னோட இந்த சேவையைப் பார்த்த சில ஹோட்டல்காரங்க தினமும் இரவு மீதமாகும் சாப்பாட்டைக் கொடுப்பாங்க. ஹோட்டலில் சாப்பாடு கிடைக்காத நாட்கள்ல, மண்டபங்கள்ல விசேஷம் எதுவும் நடக்குதான்னு பார்ப்பேன். மீதமாகுற உணவைத் தரமுடியுமான்னு கேட்பேன். கொடுத்தா, அதையும் பயன்படுத்திக்குவேன்.

பிரியாணி, மீன், மட்டன், சப்பாத்தி, புரோட்டா என நான் தினமும் விதவிதமா கொண்டு போவேன். அதனால, என்னை எதிர்பார்த்து காத்திருப்பாங்க. சின்ன வயசுல, நானும் அம்மாவும் இரவு சாப்பாட்டுக்காக அப்பாவை எதிர்பார்த்து காத்திருந்ததுதான் ஞாபகம் வரும்..’’ என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார் வாசுதேவன்.

‘‘விரைவில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து இந்த சேவையைத் தொடரப் போறேன். இப்படி செஞ்சா, இன்னும் நிறைய பேரின் பசியைத் தீர்க்க முடியுமே!’’ - கருணையோடு நம்பிக்கையும் மிளிர சொல்கிறார் வாசுதேவன்.

படங்கள்: ஜி.மூர்த்தி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்