கூடலூர் ஊட்டியிலிருந்து சரியாக 50 கிலோமீட்டர் தூரம். இதைத் தாண்டி 35 கிலோமீட்டர் தூரம் சேரம்பாடி. இங்குள்ள நாயக்கன்சோலை, கண்ணன்வயல், சோலாடி, கோல்ஸ்லேண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மூங்கில்காடுகள் எக்கச்சக்கம். இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் டீ எஸ்டேட்டுகள் இருந்தாலும் (சர்ச்சைக்குரிய செக்சன் -17 நிலங்கள்), அந்த எஸ்டேட் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்தான் இந்த மூங்கில்காடுகள் இருந்தன.
நீதிமன்ற உத்தரவின்படி மட்டுமல்ல, இங்கு ஜீவித்திருக்கும் நூற்றுக்கணக்கான யானைகளை முன்னிட்டும், இந்த மூங்கில் காடுகளை காப்பாற்றும் பொறுப்பும், கடமையும் வனத்துறைக்குத்தான் உள்ளது. இந்த சேரம்பாடியிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தால் ஒரு மும்முனை சாலை சந்திப்பு வந்துவிடும். இவ்வழியாகத்தான் கேரளாவில் புகழ்பெற்ற வயநாடு- முத்தங்கா, தமிழகத்தின் முதுமலை, கர்நாடகாவின் பந்திப்பூர் சரணாலயங்கள் வெவ்வேறு பாதைகளில் வரவேற்புப் பலகைகளை வைத்து வரவேற்கின்றன. இந்த காடுகளை ஒட்டிய பகுதிகளில்தான் சப்தத்தோடு, சோலாறு ஆகிய ஆறுகள் உற்பத்தியாகி கேரளாவை நோக்கிப் பாய்கின்றன. இதன் நீர்வளம்தான் இங்குள்ள விவசாயத்தையும், காடுகளையும் எப்போதுமே பசுமை கொஞ்சி பூத்துக்குலுங்கச் செய்கின்றன. கேரளாவிற்கு சென்று தமிழகத்திற்குள் திரும்பும் பவானி ஆற்றுக்கும் இவைதான் ஆதார சுருதியாக திகழ்கின்றன.
இந்ந பூகோள அமைப்பிலிருந்தே சீஸனுக்கு சீஸன் யானைகள் இந்த சேரம்பாடி மூங்கில் காடுகள் வழியாக எப்படிப் பயணிக்கும் என்பதையும், அவற்றுக்கு எந்த அளவுக்கு இங்குள்ள மூங்கில் காடுகள் உணவாகும் என்பதையும் நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். காட்டு யானைகளின் முக்கிய உணவுப் பொருளே மூங்கில் இலைகளும், அதன் குருத்துகளுமே என்பதைப் பல இடங்களில் தெளிவுபடுத்தி இருக்கிறோம். பொதுவாக மூங்கில் மரங்கள் வானத்து மேகங்களை தன் வசப்படுத்தி மழை பொழிய வைப்பதில் வல்லமை பெற்றவை. மண்ணில் விழும் மழைத்துளிகளையும் நிலத்திலேயே நிலை நிறுத்தி வைக்கும் ஆற்றலும் மிகுந்தவை. இங்குள்ள நீராதாரங்கள் தொடர்ந்து இருந்தாக வேண்டுமென்றால் அவசியம் மூங்கில்காடுகள் இருந்தே தீர வேண்டும்.
அப்படிப்பட்ட காடுகளைத்தான் கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் மாத வாக்கில் வாரக்கணக்கில் கும்பல் கும்பலாக வெட்டிக் கொண்டிருந்தார்கள் நூற்றுக்கணக்கான மனிதர்கள். லாரி, லாரியாக அவை ஏற்றப்பட்டு கேரள பகுதிக்குள் சென்று கொண்டுமிருந்தன. இதை எதிர்த்து இயற்கை ஆர்வலர்கள் பல்வேறு புகார்கள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பினர். எதுவும் எடுபடவில்லை. அதனால் பதறினர் சூழலியாளர்கள். சேரம்பாடி என்றாலே மூங்கில்காடுகள்தான் முக்கால்வாசி நிலங்களில் விரிந்திருக்கும்.
''இதையெல்லாம் நாற்பது, ஐம்பது ஆண்டுகாலமாக வெட்டிக் கடத்தி நாசம் செய்து நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள். அதில் எஞ்சியிருப்பது இந்த மூங்கில்கள்தான். இதையும் வெட்டி அழித்து விட்டால் இது மொட்டைக்காடுதான். யானைகள் நிறைந்திருக்கும் பூமி வளமுள்ளது என்பார்கள். அந்த யானைகளே இங்கு இல்லாமல் அழிந்தே போகும். அதனூடே இயற்கை வளமும் அழியத்தான் போகிறது!'' எனப் பதறினர் நம்மிடம் பேசிய மூங்கில்காடுகள் அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்த இயற்கை ஆர்வலர்கள்.
இப்பகுதியைச் சேர்ந்த பழங்குடிகளின் தலைவர் மணி ஓசன் என்பவர், ''இந்தப் பக்கம் எங்க ஆதிவாசிகள் செட்டில்மெண்ட் நிலங்கள் நிறைய இருக்கு சாமி. நாங்க இங்கே 30 குடும்பங்கதான் இருக்கோம். அதுவும் இந்த மூங்கில்காடுகளை ஒட்டியே இருக்கோம். இதெல்லாம் அழிச்சுட்டா நாங்க இருக்கவே முடியாது. ஏன்னா இங்கே வர்ற பெரிசு (யானைகள்) சாப்பிட மூங்கில் குருத்துகள் கிடைக்காம, எங்களையும் எங்க குடிசைகளையும் தாக்க ஆரம்பிச்சுடும். அதோட கோபத்துக்கு ஆளான நம்மாள தாங்க முடியுமா சாமி?'' என்று அழமாட்டாத குறையாகக் கேட்டார்.
இந்த விவகாரத்தைப் பற்றி வன உயிரின மருத்துவர் நைஜில் ஓட்டர் குறிப்பிடும்போது, ''இந்த ஒரு மாசத்துல மட்டும் இந்த சுற்றுவட்டாரத்துல ஏழு பேரை யானைகள் அடிச்சு கொன்னிருக்கு. ரெண்டு நாள் முன்னாடிதான் ஜனங்க எல்லாம் கூடி பெரிசா யானைக கட் அவுட் செஞ்சு வச்சு, யானைகள் கொன்னதுக்கு நஷ்ட ஈடும், மிருகங்ககிட்ட இருந்து மக்களுக்கு பாதுகாப்பும் கேட்டு போராட்டம் செஞ்சாங்க. இனி இப்படி மூங்கில் காடுகளை வெட்டினா, யானை சாப்பிடறதுக்கு சாப்பாடு (மூங்கில்கள்) சிக்காம போயிடும். அப்புறம் நேரா ஜனங்க வச்சிருக்கிற வாழை, தென்னை, பாக்குத்தோப்புகளுக்குத்தான் வரும். தோப்புகளை அழிக்கிறதும் இல்லாம ஆளுகளையும் அடிச்சுக் கொல்லும்!'' என்றார் வேதனையோடு.
கூடலூர் பகுதியில் முதுமலையை அடுத்துள்ள மசினக்குடி வனப் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு (இன்றைக்கு 34 ஆண்டுகள்) இதேபோன்றதொரு மூங்கில் காடுகள் வேட்டை நடந்திருக்கிறது. அதன் பிறகு அங்கே மூங்கில்களே துளிர்க்கவில்லை. ஏனைய மரங்களும் வறண்டு சுருங்கி விட்டன. யானைகள் வரத்தும் சுத்தமாகக் குறைந்துவிட்டது. வரும் யானைகளும் விவசாய நிலங்களில் புகுந்து விளைச்சலை சேதப்படுத்துவது, வீட்டிற்குள் புகுந்து அரிசி, பருப்பு சாப்பிடுவது என ஆகி விட்டதாம். அதுபோலவே சேரம்பாடியும் ஆகிவிடக்கூடாது என்று அச்சத்தை வெளிப்படுத்தினார் இவர்.
இந்த மூங்கில்களை வெட்டக்கூடாது என இயற்கை ஆர்வலர்கள் கூடலூர் வனத்துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களோ இதை மாவட்ட நிர்வாகம்தான் அனுமதித்திருக்கிறது. நாங்கள் தலையிட முடியாது என சொல்லி விட்டனர். மாவட்ட கலெக்டரோ, ''இது முந்தைய கலெக்டர் கொடுத்த அனுமதி. இதில் என் பங்களிப்பு ஏதுமில்லை!'' என்றே மழுப்பியிருக்கிறார். ஆனால், உண்மையில் முந்தைய கலெக்டர் அப்படி செய்திருக்கவே முடியாது என்பது இயற்கை விரும்பிகளின் ஒருமித்த குரலாக இருந்தது.
ஏனென்றால் முந்தைய நீலகிரி கலெக்டராக இருந்தவர் சுப்ரியா சாஹூ. மரம வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் காட்டியவர். நீலகிரி மாவட்டத்தில் மரம் நடுவதில் கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியவர். செக்சன்-17ன் கீழ் வரும் நிலங்களில் ஒரு மரத்தைக் கூட அவர் வெட்ட அனுமதியளித்ததில்லை. அப்படிப்பட்டவர் நிச்சயம் இந்த நூறு ஏக்கர் மூங்கில்களை வெட்ட அனுமதி அளித்திருக்க மாட்டார் என்பதே கூடலூர் மக்களின் பேச்சாக இருந்தது. இதேபோல் இரண்டாண்டுகள் கூடலூர் டிஎப்ஓவாக இருந்த ஸ்ரீ வத்ஸவாவும் மரம் வெட்டுவதற்கு கடும் கண்டிப்பு காட்டியவர். இப்படியொரு அனுமதியை அவரும் தந்திருக்கவே முடியாது என்றே பலரும் உறுதிபட பேசினர்.
ஆக, இதில் வேறு அரசியல் நடந்திருக்கிறது என்பதே அவர்களின் வெளிப்பாடாக இருந்தது. கூடலூர் வனக்கொள்ளையர்களிடம் ஆளுங்கட்சி பிரமுகருக்கு படு நெருக்கம். அவர் தலையீட்டினால் சம்பந்தப்பட்ட தனியார் எஸ்டேட்டிற்கு மூங்கில்கள் வெட்டும் அனுமதியை வழங்கியிருக்கிறது மாவட்ட நிர்வாகம்.
''இந்த மூங்கில் காடுகள் வெட்டும் அனுமதி விஷயத்தில் முன்னாள் கலெக்டர் பெயரிலேயே ஒரு மோசடிக் கடிதம் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அதை முன்வைத்தே மூங்கில் காடுகள் வெட்டப்பட்டு வருகின்றன. அதற்கு கூடலூர் வனத்துறை அலுவலர்கள் சிலரும் உடந்தை. அதைக் கண்டும் காணாதது போல் இருந்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது மாவட்ட நிர்வாகம். இதில் என்ன நடந்தது என்பதற்கு உடனே நீதி விசாரணை வைக்க வேண்டும். மாவட்ட கலெக்டரையும் மாற்ற வேண்டம். சூழல் அக்கறை கொண்ட அதிகாரியையே நீலகிரி மாவட்ட கலெக்டராக நியமிக்க வேண்டும்!'' என்றெல்லாம் தமிழக பசுமை இயக்கம் என்கிற அமைப்பு தமிழக அரசுக்கு புகார் மனுவும் அனுப்பியிருந்தது.
அப்போது இந்த விவகாரத்தில்அடிபட்ட ஆளுங்கட்சி பிரமுகரை கேட்டபோது ரொம்பவும் கோபப்பட்டார். ''எனக்கும் அந்த மரம் வெட்டுபவர்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை!'' என்று சுருக்கென்று பதிலளித்தார்.
இவ்வளவு பிரச்சினைகள் நடந்த பின்பும், செய்திகள் ஆன பின்பும் அரசு நிர்வாகம் மூங்கில்கள் வெட்டுவதை தடுத்ததா? அவர்கள் வசம் இருந்த அரசு உத்தரவு அசலா, போலியா? என்று கண்டுபிடித்தார்களா? அதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததா? எதுவுமே இல்லை. சுமார் 100 ஏக்கர் மூங்கில் காடுகளை அழித்துவிட்டே ஓய்ந்தது அந்தக் கும்பல்.
மீண்டும் பேசலாம்.
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago