ரஜினி அறிந்த அரசியல் ஆழம்: 31-ம் தேதி வியூகத்தை கட்டுடைக்கும் ரசிகர்கள்!

ரசிகர்களைச் சந்திக்கவோ, பொது மேடைக்கோ அவ்வளவு சுலபமாய் வந்து விடுவதில்லை ரஜினி. அப்படி அபூர்வமாய் வரும் வேளைகளில் எல்லாம் ஏதாவதொரு வார்த்தையை அவர் உதிர்த்தாலே அதை அவர் எந்த மாதிரி அர்த்தத்தில் உணர்ந்து சொன்னாரோ தெரியாது. ஆனால் அவர் எண்ணம், சிந்தனை, உணர்வையும் தாண்டி அது ஆயிரம் அர்த்தங்கள் கொண்டு புறப்பட்டு விடுவது வாடிக்கையாகி உள்ளது.

அதிலும் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அவர் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் புறப்படும் அரசியல் அர்த்தங்கள் இருக்கிறதே. அதைச் சொல்லி மாளாது. 'சிஸ்டம் கெட்டுப் போச்சு!' என்றார். தமிழக அமைச்சர்கள் பதறினார்கள். அந்தக் கருத்தை தான் சொன்னதாக பின்னர் தெரிவித்தார் கமல். அதற்குப் பிறகு ரசிகர்கள் சந்திப்பு.

அதில், 'போர் வரட்டும் பார்த்துக்கலாம்!' என்று சொன்னது ஊடக உலகில் அர்த்தங்களை அனர்ந்தங்களாக்கியது. முரசொலி மேடையில் கமல்ஹாசன். பார்வையாளர்களின் முதல் வரிசையில் ரஜினிகாந்த். 'எனக்கு தற்காப்பை விட தன்மானமே முக்கியம்!' என சொல்லி திராவிடம் குறித்தெல்லாம் விரிவாகப் பேசினார் கமல். ரஜினிக்கு அது அரசியல் சூடு போட்டதாகவே பேசப்பட்டது.

அதற்குப் பதிலடி போல் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினி ''அரசியலில் வந்து வெற்றியடைய வேண்டும் என்று சொன்னால் சினிமா பெயர், புகழ், செல்வாக்கு மட்டும் இருந்தால் போதாது. அதுக்கு மேல் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அது மக்களுக்கு மட்டும்தான் தெரியும். எனக்கு சத்தியமாகத் தெரியாது. அது கமல்ஹாசனுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். தெரிந்து இருந்தாலும் அதை எனக்குச் சொல்ல மாட்டார். ஒரு வேளை இரண்டு மாதத்துக்கு முன்பு கேட்டு இருந்தால் சொல்லியிருப்பாரோ என்னவோ. 'இல்லண்ணே, நீங்க திரையுலக மூத்த அண்ணன். நீங்க என்கிட்ட சொல்லணும். சொல்லுங்க. நான் உங்க தம்பி என்று சொன்னால், 'நீ என் கூட வா சொல்றேன்!'னு சொல்றார்!'' என்றார் ரஜினி.

இந்தப் பேச்சு கமலின் அரசியல் பேச்சுக்கான எதிர்வினையா? கேலியா, கிண்டலா, நக்கலா? என்றெல்லாம் சர்ச்சைகள் கிளம்பி அடங்கியது.

இதற்கிடையில் அதிமுக கோஷ்டிகள், திமுக அரசியல், 2ஜி வழக்கு விடுதலை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், தினகரன் வெற்றி என தமிழக அரசியல் களம் வேறு வேறு கோணத்தில் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்க, இப்போது ரசிகர்கள் சந்திப்பை நடத்திய ரஜினி, 'அரசியல் எனக்கு புதுசு அல்ல. அதுல என்ன கஷ்டம், அதன் ஆழம் என்ன எல்லாம் எனக்குத் தெரியும். அது தெரியலைன்னா ஓ.கே.ன்னு வந்துடுவேன். தெரிஞ்சதுனாலதான் இவ்வளவு தயக்கம். போர்னு வந்தா ஜெயிச்சாகணும். ஜெயிக்கிறதுன்னா வீரம் மட்டும் போதாது. வியூகம் வேண்டும். இது (கையை சுழற்றி தலையில் தட்டி காட்டி) வேணும்!' என ரொம்ப சாதுர்யமாகப் பேசியிருக்கிறார்.

அதையும் தாண்டி, தனது அரசியல் நிலைப்பாட்டை ரசிகர்களுக்கு 31-ம் தேதி அறிவிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதை முன்வைத்து திரும்பவும் ரஜினியை சுற்றி அரசியல் சர்ச்சைகள் சுழல ஆரம்பித்துள்ளது. 'கட்சி ஆரம்பிப்பேன் என்று அறிவிப்பாரா? இல்லை மறுபடியும் ஆண்டவனை கைகாட்டிச் செல்வாரா?' என்று ரசிகர்கள் மட்டுமல்ல, பல்வேறு அரசியல் நோக்கர்களும் கசகசத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வியாக்கியானம். 'ரஜினி எம்.எல்.ஏவுக்கு ஆசைப்படலாம். முதல்வர் பதவிக்கு கூடாது!' என்கிறார் எஸ்.வி.சேகர். இன்னும் சிலரோ, தன் உடல்நிலை கருதி, சூழல் கருதி அரசியலுக்கு வரவே கூடாது என அவருக்கு மீடியாக்கள் மூலம் ஆலோசனை சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். ரஜினிக்கு அரசியலில் என்ன தெரியும் என்று பேசியவர்கள், தற்போதைய அவர் பேச்சுக்கு, 'இவருக்கு நிச்சயம் அரசியல் தெரியாது. அவரின் சினிமா பாணி 'பஞ்ச்' டயலாக்குகளில் இதுவும் ஒன்று!' என்று திரும்பவும் கேலி பேச ஆரம்பித்துள்ளார்கள்.

ஆனால் அதைத்தாண்டி, 'ரஜினிக்குத் தெரியும் அரசியல் யாருக்குமே தெரியாது!' என்று பொங்கிக் கொண்டிருக்கிறார்கள் அவரை சந்தித்து வந்த ரசிகர்கள்.

எப்படி?

ரஜினியை சந்தித்த ரசிகர்கள் சிலரிடம் பேசினோம்.

''ரஜினியை பலரும் குறைத்து மதிப்பிடுவதையே வழக்கமாக வைத்துள்ளார்கள். அவர் அப்படி இல்லை. மிக ஆழமாக யோசிக்கிறார், சிந்திக்கிறார் என்பதை இந்த முறையும் அவர் பேச்சு நிரூபித்திருக்கிறது. அவருக்கு அரசியலே தெரியாது என்பவர்கள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர் 1996-ல் தமாகா-திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததில்தான் அரசியலே பேசினார் என்று பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல, அதற்கு முன்பு அவர் பேசிய செய்திகளை தாங்கிய, பேட்டியளித்த பத்திரிகைகளை புரட்டிப்பார்த்தால் புரியும். சுதந்திர இந்தியாவில் முதல் தலைமுறை சந்தித்த தேர்தல்கள் எல்லாம் சுதந்திரப் போராட்ட தியாகத் தன்மையின் வீரியத்தால் சுடர்விட்டு, அதற்கேற்ப வென்றவை. அதற்குப் பிறகு வந்த தேர்தல்கள் எல்லாம் வெவ்வேறு உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப நடந்தவை. அதில் வென்றவர்களும் அந்த சூழல்களை நன்கு பயன்படுத்திக் கொண்டவர்களே.

அந்த வகையில் தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா வரை சினிமா மோகமே வென்றிருக்கிறது. இறுதி நிலையில் பணபலமும், அதிகார பலமுமே முன்னணியில் நின்று வென்றிருக்கிறது. அதன் உச்சம்தான் தற்போது தினகரன் ஆர்.கே நகரில் சுயேச்சையாக நின்று வென்றது. சுருக்கமாகச் சொன்னால் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் நடந்த இடைத்தேர்தல்களில் சென்னை போன்ற நகர்ப்புறத்தில் நடந்த ஒற்றை தொகுதியில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி வேட்பாளர்களை ஓரங்கட்டி சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஜெயித்த கதை எங்குமே நடந்ததில்லை. அதற்கும் முன்மாதிரியாக திகழ்ந்திருக்கிறது தமிழ்நாடு.

எப்படி இது நடந்தது? ஒற்றை தொகுதியில் அந்த சுயேச்சையை ஜெயிக்க வைக்க எப்படிப்பட்ட சக்திகள் வேலை செய்தன. அதற்காக குவிக்கப்பட்ட கோடிகள் எவை. அதை வாக்காளர்களுக்கு கொண்டு போய் சேர்த்த விசுவாசமிக்க தொழிற்சாலைகள் எவை? அதன் தொழிலாளர்கள் யாரெல்லாம்? இந்த ஒற்றை தொகுதி வென்றதன் மூலம் தமிழகத்தின் மற்ற 233 தொகுதிகளை எப்படி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் தினகரன். அதன் மூலம் அவருக்கு அனைத்து தொகுதிகளிலும் கிடைத்திருக்கும் அசகாய சூர அரசியல் விளம்பரம் எத்தகையது? அது எந்த அளவுக்கு வரப்போகும் பொதுத்தேர்தலில் அவருக்கு கை கொடுக்கப் போகிறது. அதிமுகவையே கைப்பற்ற வைக்க இருக்கிறது. அதற்குள் நடக்கும் அரசியல் வியூகங்கள் எல்லாம் என்னென்ன? இதெல்லாம் தெரியாதவராகவா இருக்கிறார் ரஜினி? நிச்சயம் இல்லை.

அவர் காங்கிரஸில் மூப்பனாருடன் இணக்கமாக இருந்தவர். இன்றைக்கும் கட்சி மாச்சர்யங்கள் தாண்டி ப.சிதம்பரம், ஆர்.பிரபு என வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் மட்டுமல்லாது, தேசிய அளவில் அமிதாப்பச்சன் வரை நெருக்கமாக இருக்கிறவர். அமிதாப் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி அரசியல் தொடங்கி இன்றைய சோனியா, ராகுல்காந்தி அரசியல் வரை நகர்பவர். இந்தப் பக்கம் இப்படி என்றால் பாஜக பக்கம் அமித்ஷா, நரேந்திர மோடி வரை எப்படி துண்டு போட்டு ரஜினியை தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை யார் அறிகிறார்களோ இல்லையோ, அரசியல் தலைவர்கள் அறிவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியே ரஜினி பற்றிய எந்த ஒரு விஷயத்திற்கும் எதிர் வினையாற்றாதவர்.

அதை விட ஜெயலலிதா எந்த சோவை அரசியல் குருவாக வைத்திருந்தாரோ, எந்த சோவின் பேச்சை கேட்டு அரசியலில் நகர்ந்தாரோ, அதே சோவுடன் நெருக்கமாக இருந்தவர். அப்படியே இருந்தாலும் சோ சொல்வதை கூட கருத்துகளாக கவனமாகக் கேட்டுக்கொண்டு, செயல்படுத்துவதை ரொம்பவும் சிந்தித்தே முடிவெடுத்தவர். இப்போதும் கூட தனக்கு சினிமா மூலம் மங்காத மக்கள் செல்வாக்கு இருக்கிறது. கட்சி ஆரம்பித்தால் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப தொழிலதிபர்கள் கொட்டிக் கொடுக்கவும் தயாராக உள்ளார்கள். ஆனால் அதையெல்லாம் பயன்படுத்தி தேர்தல் வியூகங்களை வெல்லும் அளவுக்கு தன்னிடம் வியூகங்கள் சரியாக இருக்கிறதா என்பதையே அவர் யோசிக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால் அந்தக் காலம் போல் இல்லை. இப்போது ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் உள்ள நூற்றுக்கணக்கான வாக்காளர் மையங்களிலும் (பூத்களில்) ஒவ்வொரு கட்சிக்கும் பூத் கமிட்டிகள் உள்ளன. அவற்றில் 100 வாக்காளர்களை சந்திக்க 11 பேர் கொண்ட ஒரு கமிட்டி இருக்கிறது .அவர்கள் மூலம் தேர்தலுக்கு முன்பே வாக்காளர்களுக்கு வேண்டியதை கொடுத்து தங்களுக்கு சாதகமான ஓட்டாக மாற்றும் வேலைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது சேவையாக, கட்சியாக இருந்த நிலை மாறி இன்றைக்கு தொழிலாகவும், தொழிற் சாலையாகவுமே மாறிவிட்டது. அதை முன்பு ஆண்ட, தற்போது ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகள் பிரமாண்டமாக செய்து கொண்டிருக்கின்றன.

இந்த அரசியல் தொழிற்சாலைகள் உருவாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன. அதன் நீண்டகால அனுபவ மைய சுழற்சியாகவே ஆர்.கே. நகரில் தினகரன் வெல்கிறார். இந்த அரசியல் மாற்றும் என்பது தமிழக அரசியலுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியல் சூழலுக்கே புதுமாதிரியான வியூகம். இந்த அரசியல் ஆழத்தை வலிமையாகப் புரிந்து கொண்டதன் விளைவையே இப்போதைய ரஜினியின் பேச்சு காட்டுகிறது. அந்த ஆழத்தை உணர்ந்து கொண்டு அதற்கேற்ற வகையிலான வெளிப்பாட்டுத்தன்மை 31-ம் தேதி அவர் வெளியிடும் அறிவிப்பில் நிச்சயம் இருக்கும். அதைக்கூட பகிரங்க அரசியல் பிரவேச அறிவிப்பாக செய்ய மாட்டார். சூசகமாக கொளுத்திப்போட்டுவிட்டு மறுபடியும் மீடியாக்கள், அரசியல் நோக்கர்களின் ரியாக்ஷனை ஆழமாக ஊடுருவிப் பார்ப்பார்!'' என்று ரஜினியை சந்தித்த ரசிகர்கள் சிலர் கூறினார்.

ரஜினியை சந்திக்காத சில ரசிகர்கள், ''எங்களுக்கு அழைப்பு வரவில்லை. இருந்தாலும் பொறுமையாக இருங்கள். சீக்கிரமே உங்களுக்கு தகவல்கள் வரும். இன்னும் மூன்று மாதத்தில் அரசியல் மாநாட்டை நடத்த உள்ளார் ரஜினி என்று தலைமையில் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு காத்துக் கொண்டிருக்கிறோம்!'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE