யானைகளின் வருகை 92: புலிக்காடு துஷ்பிரயோகம்!

By கா.சு.வேலாயுதன்

18.02.2015 அன்று மாலை 3.30 மணிக்கு பிதிர்காடு வனப்பகுதியில் புலி பதுங்கியதை மக்கள் பார்த்தனர். அதை சுற்றி வளைத்த அதிரடிப்டையினர் சுட்டுக் கொன்றனர். இதில் இரண்டு அதிரடிப்படையினருக்கு துப்பாக்கிச் சூட்டில் காயமும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போதே சில சூழல்வாதிகள், ''புலியை கொன்றிருக்கவே கூடாது. அதை மயக்க ஊசி போட்டு உயிரோடு பிடித்து சரணாலயத்தில் அல்லது மிருகக்காட்சி சாலைகளில் விட்டிருக்கலாம்!'' என வாதாடினர். இதற்கு வனத்துறையினர் மனிதர்களைக் கொன்றுதின்ற புலியை மீண்டும் சரணாலயத்தில் விட்டால் மனிதர்கள் வாழும் இடம் தேடி வந்து அவர்களைக் கொன்றுதின்னும். மிருகக்காட்சி சாலையில் இதனை வைத்துப் பராமரிப்பது சிரமம் என்பதோடு, வேறு சில சிக்கலான பிரச்சினைகளையும் சந்திக்க நேரும் என குறிப்பிட்டனர்.

அதே சமயம் புலி கொல்லப்பட்டதற்கு பிதிர்காடு, பாட்டவயல், முக்கட்டி, நிலா கோட்டை பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பல நாட்கள் பாதிக்கப்பட்டிருந்த தொழிலையும் செய்யத் தொடங்கினர். ஆனால் இதை மேலும் சில சுற்றுச்சூழல் தன்னார்வலர்கள், 'புலி வசிக்கும் இப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும்!' என்ற கருத்துகளை முன் வைத்தனர். இதனால் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 'எங்கள் மண்ணை விட்டு வெளியேறச் சொல்ல இவர்கள் யார்?' என்று கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டதோடு, சாலை மறியல்களிலும் ஈடுபட்டனர்.

பொதுவாக புலிகள் மனிதனை வேட்டையாடும் குணம் கொண்டவை அல்ல. வயது முதிர்ந்த புலிகள் மான் போன்ற காட்டு விலங்குகளை வேட்டையாட முடியாது. அந்த அளவுக்கு அதன் உடல் சோர்வுற்று, ஓடத் திராணியற்று இருக்கும். அந்த சமயங்களில்தான் ஓடமுடியாத விலங்குகளை தன் பசிக்கு இரையாக்கிக் கொள்கிறது. அதில் மனிதனும் அகப்பட்டுக் கொள்கிறான்.

எனவே உப்புச்சுவையுள்ள மனித ரத்தத்தை சாப்பிட்டுப் பழகிய புலி, அதையே தேட ஆரம்பிக்கும். தொடர்ந்து மனிதர்களையே குறிவைத்து அடித்துச் சாப்பிடும். அப்படி ஆட்கொல்லிப் புலியாக மாறிய புலிகளை சுட்டுக்கொல்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதே அப்போது வனத்துறையினர் அளித்த விளக்கமாக இருந்தது.

அதையும் தாண்டி பொதுமக்கள் நலன், வனவிலங்குகள் காடுகள் நலன் பேணுபவர்கள், 'ஒரு புலி வாழ்வதற்கு 40 சதுர கிலோமீட்டர் பரப்பு தேவை. இதில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகிறது. அப்படியிருக்கும்போது வனத்துறையினர் லாப வேட்டைக்காக காடுகளையும், புல்வெளியையும் அழித்து, சுற்றுச்சூழல் சமன்பாட்டை சீர்குலைத்துள்ளனர். இதனாலேயே புலிகளின் முக்கிய இரையான மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அருகி வருவதற்கான காரணம். எனவேதான் யானைகளைப் போலவே புலிகளும் காட்டை விட்டு வெளியேறுகின்றன. அவை மனிதனை அடித்துக் கொல்கின்றன. மனித ரத்தத்தை சுவைத்த புலி ஆட்கொல்லி புலியாக உருவகம் கற்பிக்கப்படுகிறது.!' என்பதை இன்றளவும் வலியுறுத்தியே வருகின்றனர்.

அதை நிலகிரியல் புலிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கையைப் பார்ததாலே புரிந்து கொள்ளலாம் என்கின்றனர் அவர்கள். அந்த வகையில் அவர்கள் கொடுத்த ஒரு தோராயக் கணக்கு இது.

1954-ம் ஆண்டு மசினக்குடி, மாவனல்லா, சீகூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு புலி 15 நபர்களை கடித்துக் கொன்றது. 1990-ம் ஆண்டு மஞ்சக்கொம்பை பகுதியில் 2 குழந்தைகளை சிறுத்தை அடித்துக் கொன்றது. 2003-ம் ஆண்டு ஊட்டி குருத்தக்குளி பகுதியில் ஒரு பெண்ணை கருஞ்சிறுத்தை கொன்றது. அதன் தொடர்ச்சியாகத்தான் 2014-ம் ஆண்டு ஜனவரி 4 ஆம்தேதி சோலாடா கிராமத்தைச் சேர்ந்த கவிதா (வயது 32), 6-ம் தேதி அட்டபெட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் (வயது 58), 8-ம் தேதி குந்த சப்பை கிராமத்தில் முத்துலட்சுமி ஆகியோர் புலி அடித்துக் கொல்லப்பட்டனர். அதே போல் 2015-ம் ஆண்டில் பாட்டவயல் அருகே பாஸ்கரன் (வயது 65), 14-ம்தேதி மகா (34 வயது) அடித்துக் கொன்றதோடு, ரித்தீஷ் என்பவரையும் அடித்துக் காயப்படுத்தியதன் பின்னணியில் கடைசியாக சுட்டுக் கொல்லப்பட்ட ஆட்கொல்லிபுலி.

''சாதாரண புலிகளுக்கும் ஆட்கொல்லிப் புலிகளுக்கும் நிறைய வித்தியாசமுண்டு. ஆட்கொல்லிப் புலியை கொல்வதும் தவறுதான். அதை வாழ விடவேண்டும். அதற்காக மனிதர்கள் அவை வசிக்கும் காடுகளிலிருந்து பல நூறு கிலோமீட்டர் தள்ளி வந்து குடியிருப்புகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று சில சூழலியாளர்கள் வாதம் செய்கிறார்கள். அது முற்றிலும் தவறு என்பதை வனத்துறையினரே நம்மிடம் இப்படி விளக்கினர்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் 2010-ம் ஆண்டு கணக்குப்படி 60 புலிகள் இருந்ததாக கணக்கு உள்ளது. 2014-ம் ஆண்டு 70 லிருந்து 75 புலிகள் இருப்பதாக வனத்துறை கணக்கு சொல்கிறது. 40 சதுர கிலோமீட்டர் தூரம் சுற்றளவுக்குள் ஒரு ஆண் புலி மட்டுமே வாழும். மற்றொரு ஆண்புலியை அந்த எல்லைக்குள் அனுமதிக்காது.

இதனால் புலிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். வாரத்தில் 2 அல்லது 3 தடவை மற்ற விலங்குகளை வேட்டையாடும். வருடத்திற்கு 72 விலங்குகளைக் கொன்று உண்ணும். புலிகள் வேட்டையாடும்போது காயம் ஏற்பட்டால் அது ஆறாமல் புரையோடி விட்டால் வேட்டையாடும் சக்தியை இழந்துவிடும். இதே போல் வயதான புலிகளாலும் வேட்டையாட முடியாது. இப்படிப்பட்ட புலிகள், கிராமங்களுக்குள் புகுந்து தன் பசியை தீர்க்க வீட்டு விலங்குகளையும், மனிதர்களையும் தாக்கும்.

எனவே அதற்கேற்ப வன எல்லை விஸ்தரிக்க வேண்டும். அங்கே காலங்காலமாக மனிதர்கள் வாழ்ந்தால் அதிலும் பெருவாரியாக அங்கே மனிதர்கள் இருந்தால் அகற்ற முடியுமா? என்பதுதான் வனத்துறையினர் கேட்கும் கேள்வி. இதில் புலிகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தும் போது இதை எல்லாம் ஆய்வு செய்து உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன்தான் புலிகள் காப்பகங்களை தொடங்க வேண்டும். இதைத்தான் வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்த சட்டம் 2006 கூறுகிறது. இதேபோல் அந்தப் பகுதி மக்களுடைய உரிமைகளும், வாழ்வு ஆதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வன உரிமை அங்கீகார சட்டம் 2006 கூறுகிறது.

இந்த சட்டங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் முதுமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதாகவே முதுமலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் சொல்கிறார்கள். இதனால் வனவிலங்குகளுடன் பின்னிப்பிணைந்து இருந்த வாழ்க்கை உறவு விரிசல் ஏற்படுத்தப்படுகிறது. இதன் விளைவுதான் வனவிலங்குகளுக்கும், மனிதனுக்கும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மோதலாகும்!'' என்கிறார் கூடலூர் விவசாயிகள், தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த செல்வராஜ். இதையொட்டி அரசுக்கு கடந்த ஆண்டுகளில் பல மகஜர்கள் கொடுத்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டங்கள் இதற்காக நடந்துள்ளதாகவும் சொல்கிறார் அவர்.

''மக்களின் கருத்து கேட்காத சட்டவிரோத புலிகள் காப்பகமாக முதுமலை (நீலகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு, ஆனைமலை (கோவை) அறிவிக்கப்பட்டது போலவே மேகமலை (தேனி) அறிவிக்கும் நிலையில் இருக்கிறது. ஏற்கெனவே களக்காடு முண்டந்துறை (நெல்லை) புலிகள் காப்பகமாக செயல்படுவதோடு, குமரி மாவட்டத்திலும் புலிகள் காப்பகம் கொண்டு வரப்படலாம் என்ற தகவல்கள் உள்ளன. இந்த புலிகள் காப்பகப் பகுதிகளில் எல்லாம் கிராம சபைகள் சட்ட விரோதப் புலிகள் காப்பகத்தை கைவிடக் கோரி முறைப்படி தீர்மானங்கள் நிறைவேற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இப்போதும் தெரிவித்து வருகின்றன.

சட்ட விரோத இந்த புலிகள் காப்பகத்தால் புலிகளுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும். சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் ஏற்பட்ட நிலை இவற்றுக்கும் ஏற்படும் ஆபத்துள்ளது. சரிஸ்கா ராஜஸ்தானில் உள்ளது. இங்கே புலிகளையும், கானுயிர்களையும் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் புலிகள் காப்பகம் திட்டத்தை உருவாக்கினர். இதற்காக பல திட்டங்களையும் செயல்படுத்தியதாக கணக்கு காட்டினர் வனத்துறையினர். ஒரு புலிக்கு ரூ.2 கோடி வீதம் செலவுக் கணக்கு எழுதப்பட்டது. ஆனால் புலிகளை இவர்கள் காக்கவில்லை என்பதை மத்திய அரசு கண்டுபிடித்தது.

மத்திய அரசு நியமித்த ஒரு குழு 2005-ம் ஆண்டு அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தது. அக்குழு அந்தப் பகுதிக்கு சென்று பல நாள் பார்த்ததில் ஒரு புலி கூட அங்கு இல்லை என கண்டுபிடித்தது. இனி வனத்துறையை நம்பிப் பயனில்லை என்று உணர்ந்த மத்திய அரசு 1972-ம் ஆண்டு வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்தியது. 'வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச்சட்டம் 2006' சட்டப்படி இனிமேல் புலிகள் பாதுகாப்பு திட்டம் என்பது அந்தப் பகுதி கிராம மக்களின் ஒப்புதல் பெற்றிருப்பதோடு, கிராம சபைகளின் தீர்மானமும் முக்கியமானதாக (சட்டப்பிரிவு 38 V (5) (11) சொல்கிறது. இப்பிரிவின்படி விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு பொது நீதி விசாரணை போன்றவை முறையாக செய்யப்பட்டு மக்கள் பங்களிப்போடும், கண்காணிப்போடும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த சட்டத்திற்கு புறம்பாக சட்டவிரோதமாக அவசர கதியில் புலிகள் காப்பகங்கள் அமைக்கப்படுவதே நோக்கம். மக்களையும், புலிகளையும் காப்பதல்ல. அதில் கிடைக்கும் அபரிமித நிதியையும், அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்வதே ஆகும். எனவேதான் புலிக்காடு, இயல்பான புலிக்காடாகவும், அவற்றை நேசிக்கும், இயைந்த வாழ்வு வாழும் பழங்குடிகள், விவசாயக்குடிகள் நலனும் பாதுகாக்கப்படவுமான போராட்டங்களை நாங்கள் செய்து வருகிறோம்!'' என்கிறார் செல்வராஜ்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்