புலி வேட்டை என்றால் ஜிம் கார்பெட் நினைவுக்கு வருவார். மான்வேட்டை என்றால்? நிச்சயம் இந்தி நடிகர் சல்மான்கான்தான் நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு 2002, 2003-ம் ஆண்டுகளில் மானும், சல்மான்கானும் பிரபலப்பட்டிருந்தார்கள்.
அந்த காலகட்டத்தில்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் ஷூட்டிங் போன இடத்தில் மான்வேட்டையாடி வகையாக மாட்டிக் கொண்டிருந்தார் சல்மான்கான். அதே காலகட்டத்தில் சல்மான்கான்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் மான் வேட்டைக்காரர்கள் கொடிகட்டிப் பறந்தார்கள்.
சல்மான்கானுக்கு அங்குள்ள வனத்துறை மணிகட்டியதுபோல் இவர்களுக்கு மணி கட்ட ஆளில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள் வன உயிர்களின்பால் பற்று கொண்டவர்கள். அந்த ஏக்கத்தை அழுத்தமாகப் பதிவு செய்தது 23-11- 2003 அன்று கூடலூரில் நடந்த மான்கறி கடத்தல் சம்பவம்.
கூடலூரில் முதுமலைக்கும் அதைத் தாண்டியுள்ள மசினக்குடிக்கும் இடையே ஏகப்பட்ட ரிசார்ட்டுகள் (தனியார் கேளிக்கை மற்றும் தங்கும் விடுதிகள்) உள்ளன. இங்கே பெரும்பாலும், வெளி மாநிலத்தவரும், வெளிநாட்டவருமே தங்குவது வழக்கம். இங்கு பல ஆண்டுகளாகவே வெகு தாராளமாக மான்கறி உணவுகள் கிடைத்து வந்தன. சல்மான்கான் விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்ட பின்னர் வனத்துறை கடும் நடவடிக்கையில் இறங்கியதால் மான்கறி சப்ளை கட்டுக்குள் வந்தது. இந்த நெருக்கடிகளின் காரணமாக மான்கறி வேட்டை கூடலூர் சுற்று வட்டாரத்தில் வேறுவிதமாக நடக்க ஆரம்பித்தது.
இங்கு மசினக்குடி, தொரப்பள்ளி, சிங்காரா, கூடலூர், சேரம்பாடி, பாட்டவயல் போன்ற ஏரியா காடுகளில்தான் மான்கள் அதிகமாக காணப்படுகிறது. இப்பகுதிகளில் தேயிலை, காபி எஸ்டேட்டுகள் நிறைய உள்ளன. அவற்றின் சொந்தக்காரர்கள் பெரும்பாலும் கேரளாக்காரர்கள். அவர்களது குடியிருப்புகளுக்கும், எஸ்டேட்டுகளுக்கும் வெளியூர்வாசிகள் வருவதும், தங்குவதும் அதிகரித்துள்ளது. கூடவே அங்கே மான்கறியும் மணக்க ஆரம்பித்திருக்கிறது.
அந்த வகையில் தொரப்பள்ளி அருகே ஒரு கிறிஸ்துவப் பாதிரியார் வகையாக மாட்டினார். மான்வேட்டையாடி வந்தவர்களுக்கு விருந்து வைத்ததோடு, அதில் மீதியான கறியை தன் குளிர்சாதனப் பெட்டியிலும் வைத்திருந்தார். அதைப்பற்றி தகவல் அறிந்த வனத்துறை அவர் வீட்டை சோதனையிட்டு மான்கறியை கைப்பற்றியதோடு, அவரிடமிருந்த அனுமதி பெறாத நாட்டுத் துப்பாக்கி ஒன்றையும் எடுத்துக் கொண்டது.
கைது செய்யப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் சென்று உடல்நிலை சரியில்லை என படுத்துக்கொண்டதோடு, அங்கே, இங்கே ஆட்களைப் பிடித்து, ரூபாய் நாலு லட்சத்தை மான்கறி வைத்திருந்ததற்கான அபாரதமாக செலுத்திவிட்டு வெளியே வந்துவிட்டார். ஆனால் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக நீதிமன்றத்தின் படியேறி இறங்கிக் கொண்டிருந்தார்.
இதேபோல் கூடலூர் சிங்காரா பகுதியில் உள்ள மார்வாடி ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு சம்பவம். இங்கே வந்த ஈரோடு பார்ட்டிக்கு மான்கறி விருந்து வைத்து மாட்டிக் கொண்டார் தோட்டத்துச் சொந்தக்காரர். அவருக்கு ரூபாய் ஏழு லட்சம் அபராதம் போடப்பட்டது. அதைச் செலுத்தினாரா என்பதெல்லாம் வனத்துறைக்கே வெளிச்சம். ஆனால், 'இதில் சம்பந்தப்பட்ட ஈரோடு பார்ட்டி மான்கறி விருந்து சாப்பிட மட்டும் வரவில்லை. தொடர்ந்து மான்கறித் துண்டுகளை பேக்கிங் செய்து தனது ஜீப்பில் ஈரோட்டிற்கு கடத்திதொடர்ந்து கடத்திச் சென்றது!' என்பதுதான் மக்களிடம் பேசப்பட்ட விஷயமாக இருந்தது. உண்மையான இயற்கை விரும்பிகள் இந்த விஷயங்களை எல்லாம் வனத்துறையினர் காதில் போட்டும், அவர்கள் கண்டும் காணாமலே இருந்தனர். இந்த நிலையில்தான் 28-ம் தேதி அந்தச் சம்பவம் நடந்தது.
கேரளாவின் பெருந்தலமன்னாவிற்கு செல்லும் பாதையிலுள்ளது கீழ்நாடுகாணி, ஓவேலி. இப்பகுதியிலிருந்த தனியார் நிலத்திலிருந்து அன்று ஒரு ஜீப் புறப்பட்டது. கேரள பதிவு எண் கொண்ட அந்த ஜீப் மரப்பாலம் புளியம்பாறை என்ற பகுதிக்கு வந்தபோது அதனை மறித்துள்ளனர் வனத்துறை அதிகாரிகள். ஆனால் ஜீப் நிற்கவில்லை. சந்தேகப்பட்ட அதிகாரிகள் உடனே அந்த ஜீப்பை விரட்டி மடக்கியும் விட்டனர். ஜீப்பிலிருந்த நால்வரில் இருவர் தப்பியோடி விட, மீதி இரண்டு பேரை பிடித்துள்ளனர். அத்துடன் ஜீப்பிலிருந்த மூன்று பைகளில் ஐம்பது கிலோ எடையுள்ள கடமான் கறியும் அகப்பட்டிருக்கிறது.
பிடிபட்டவர்களிடம் விசாரித்ததில், தப்பித்த இருவரும், பிடிபட்டவர்களில் முகம்மது என்பவரும் கேரளாவின் வண்டூரைச் சேர்ந்தவர்கள்; மாட்டிக் கொண்டவர்களில் ஒருவர் கீழ்நாடுகாணியை சேர்ந்த வாப்பு என்பவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது. 'இந்தக் கடத்தல் சம்பவம் நடந்தது காலை பத்து மணிக்கு. அவர்கள் மான் வேட்டையாடியது புளியம்பாறை, காப்பிக்காடு பகுதியில். அந்த இடத்தின் சொந்தக்காரர் சலீம் என்பவரும் கேரளாவைச் சேர்ந்தவர்தான்!' என வந்த தகவல்கள் எல்லாம் சாதாரண விஷயங்கள்தான். அதற்கு மேல் வந்த விஷயங்கள்தான் பயங்கரமானவை.
அதாவது மான்களை வேட்டையாடுவது, அவற்றை உரித்துக் கறியாக்குவது, அந்தக் கறியை உலர்த்தி (கறியை கெடாமல் பாதுகாக்க சுடுபாறைகளின் மீது கிடத்தி பக்குவப்படுத்துவார்களாம்) கேரளாவிற்கு கடத்துவதுதான் இவர்களின் நிரந்தர தொழிலாகவே இருந்திருக்கிறது.
கேரளாவில் இந்த மான்கறி ரூ.300 முதல் ரூ.400 வரை (2003-ம் ஆண்டில்) விற்றிருக்கிறது. இந்த மான்வேட்டை தினசரி நடந்துள்ளது. இந்த மான் இறைச்சி கடத்தல்காரர்கள் எங்கு பிடிபட்டார்களோ, அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில்தான் சலீமின் எஸ்டேட். உடனடியாக அங்கே சென்றிருந்தால் சலீமையும், வேட்டைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியையும் வனத்துறையினர் கைப்பற்றியிருக்க முடியும்.
அதை அவர்கள் செய்யவில்லை. மாறாக இருவரைக் கைது செய்தவர்கள் எட்டு கிலோமீட்டர் தொலைவு எதிர்திசையில் உள்ள வனச்சரக அலுவலகம் வந்துள்ளனர். பிறகு திரும்பவும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று சலீமின் எஸ்டேட்டிற்கு சென்றனர். அதற்குள் சலீம் தப்பி விட்டார். அந்த அளவுக்கு வனவிலங்குகள் வேட்டையாடுபவர்களுடன் இணக்கம் கடைபிடித்து வருவதாக புகார் தெரிவித்தனர் கூடலூர் பகுதி சூழலியலாளர்கள்.
''இங்கே மான்கள் மட்டுமல்ல, பறவைகள், காட்டு அணில்கள் என்று பலவும் வேட்டையாடப்படுகிறது. அவற்றை கடைவீதியில் விற்பதற்கே ஒரு புரோக்கர் கூட்டம் அலைகிறது. அதில் காட்டி எனப்படும் காட்டு மாட்டுக்கறி புரோக்கர்களிடம் கேட்டால் போதும். எண்ணி சில நிமிடங்களில் ரகசியமாக பையில் போட்டுக் கொண்டுவந்து கொடுத்து விடுவார்கள். சாதாரணமாக காட்டி உயிரோடு இருக்கும்போது 700 முதல் 800 கிலோ வரை எடை வரும். அதை உரித்துக் கறியாக்கி, எலும்பை நீக்கிவிட்டு பதப்படுத்திப் பார்த்தால் நிச்சயம் 300 கிலோவுக்கு தேறும். இப்படி ஒரு காட்டியில் ரூ.70 ஆயிரம் வரை சம்பாதித்து விடுகிறார்கள். இதையெல்லாம் வனத்துறையிடம் பல முறை சொல்லிவிட்டோம். யாருமே நடவடிக்கைக்கு அசைவது கூட கிடையாது. அந்த அளவுக்கு மான்கறிக்கு எஸ்டேட்காரர்கள், ரிசார்ட்டுக்காரர்களிடம் விலைபோய் விட்ட வனத்துறையினர், புரோக்கர்களின் காட்டுக் கறிக்கும் விலை போயிருக்கிறார்கள்!'' என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது.
கூடலூர் பகுதிகளில் பெரும்பான்மையாய் கேரளத்தைச் சேர்ந்தவர்களே உள்ளனர். அவர்களிடம்தான் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. ''அவர்கள் நிலங்களில்தான் சாதாரணமாக வனவிலங்குகள் உலா வருகிறது. அதனால் அவர்கள் அதை வேட்டையாடுவதும் எளிது. கேரளா எல்லை மிக அருகாமையில் இருப்பதால் கறியை அங்கு கடத்திச் சென்று விற்பதும் எளிதாகவே உள்ளது!'' என்றனர் அவர்கள். இந்த விவகாரத்திலும் வனத்துறை அதிகாரிகள், 'நடவடிக்கை எடுத்து வருகிறாம். அதற்கான புகாரை பொதுமக்களே தரலாம்!' என்ற வழக்கமான விளக்கத்தையே தந்தனர்.
அந்த விளக்கம் வழக்கமான சப்பைக்கட்டு என்பதற்கு ஆதாரமாக வந்தது அடுத்ததாக நடந்த மான் வேட்டை. அது பக்ரீத் பண்டிகைக்காக ஸ்பெஷலாக நடத்தப்பட்டது என்பதுதான் கூடுதல் சிறப்பு.
மீண்டும் பேசலாம்.
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago