யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!

மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் ஏழாயிரம், எட்டாயிரம் ஆண்டுகளாக மலைமக்களும், ஆதிவாசிகளும் வாழ்கிறார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. டால்மன்கள் எனப்படும் ஆதிவாசி மக்களின் புதைகுழிகள் நீலகிரி காடுகள் முழுவதும் காணப்படுவதாக நீலகிரி மேனுவல் கூறுகிறது.

இப்பகுதிகளில் உள்ள குகை ஓவியங்களும் இதையே உணர்த்துகின்றன. தமிழக, கேரள, கர்நாடக மலைப்பகுதிகள் அனைத்திலும் சிதைந்து போன பழங்கால நகரங்களையும், நடுகற்களையும் காணலாம். மனிதன் காலடிபடாத கன்னி நிலம் என்று ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் இல்லை என்பதை இவை தெளிவாகவே நமக்கு நிரூபிக்கின்றன. சுதந்திரத்திற்கு முன்புதான் பல அரசு அதிகாரிகளும், உள்நாட்டு சிற்றரசர்களும் வேட்டைக்கு உரிமம் பெற்றிருந்தனர்.

அவர்களால் உள்நாட்டு கள்ள வேட்டைக்காரர்களை ஓரளவு கட்டுப்பாட்டில் வைக்க முடிந்தது. காலனியாட்சி முடிந்ததும், இக்கட்டுப்பாடு தளர்ந்தது. உரிமம் பெற்ற வேட்டைக்காரர்களும், கள்ள வேட்டைக்காரர்களும் போட்டி போட்டுக் கொண்டு புலிகளையும் மற்ற விலங்குகளையும் தீர்த்துக் கட்டினர். அதிலும் ஆங்கிலேயேர்களுக்கு இயற்கை வரலாற்றில் ஈடுபாடு மிகுதி. அவர்கள் விட்டுச் சென்ற பதவிகளில் அமர்ந்த உள்நாட்டுத் தலைவர்கள் பல்வேறு விதமான சமூக பின்புலத்திலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு இயற்கை வரலாற்றில் ஆர்வம் கிடையாது. அவர்கள் பார்வையில் புலிகள் ஒழித்துக்கட்ட வேண்டிய தொல்லையாக இருந்தது.

சமூகத்தின் பொதுச் சொத்தாக கருதப்பட்ட காடுகளை தனியுடமையாக அல்லது அரசு உடமையாக மாற்றி அமைக்கும் முயற்சிகள் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியாவில்தான் தோன்றியது. என்றாலும் மனிதர்களற்ற காடு என்ற கோட்பாடு முழுவடிவம் பெற்றது அமெரிக்க ஐக்கிய நாடுகளில்தான்.

அங்குள்ள செவ்விந்தியர்கள் காட்டின் நிசப்தத்தை குலைக்கின்றனர். அசிங்கமாகவும், அழுக்காகவும் உள்ளனர். அவர்களைப் பார்க்கவே அருவெறுப்பாக உள்ளது. காட்டைப் பாதுகாக்க அவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தவர்கள் வெள்ளையர்கள்தான். அடுத்த 80 ஆண்டுகளில் காட்டிலிருந்து ஆதிவாசி மற்றும் இதர மலைவாழ் மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக வெளியேற்றப்பட்டனர். 1969-ல் அவர்களது இறுதிக்குடியிருப்பும் தீயணைப்புப் பயிற்சி என்ற பெயரில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு காடு தூய்மையாக்கப்பட்டது.

இந்த யோசெமைட் தேசியப்பூங்காதான் இன்றுள்ள ஏராளமான வனவிலங்கு சரணாலயங்களுக்கு முன் உதாரணமாக அமைந்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ஆதிவாசி மற்றும் மலைவாழ் மக்கள் உள்ளநாட்டிலேயே அகதிகளாக்கப்படவும் இந்தப் பூங்காதான் கோட்பாடு அடிப்படையை அளித்தது. மனிதர்களற்ற காடு என்ற கோட்பாடு மிகுந்த யோசெமைட் பூங்காவிலிருந்துதான் உருப்பெற்றது.

இதற்கான பிரச்சாரத்தை உலகம் தழுவிய 5 மிகப்பெரிய நிறுவனங்கள் முன்னெடுத்துச் செல்கின்றன. இந்நிறுவனங்கள் மேற்குலகு நாடுகளை முக்கியமாக அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டே இயங்கி வருகின்றன. இவை சுற்றுச்சூழலை காக்க செலவழிக்கும் தொகை ஒரு சிறிய நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்திற்கு ஈடானதாகும்.

உலகில் எந்த இடத்திலிருந்தும் மக்கள் வனப் பாதுகாப்பு என்ற பெயரில் வெளியேற்றப்பட்டாலும் இந்த நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றின் பங்கு நிச்சயம் அதில் இருக்கும். ஆதிவாசி மற்றும் இதர மலைமக்கள் தலைவர்கள் இந்த நிறுவனங்களை பிங்கோஸ் (Big NGOS) என்று வெறுப்புடனே உச்சரிக்கின்றனர். இதில் வேடிக்கையான ஒரு விஷயம். இந்த என்ஜிஓக்களுக்கு நிதியளிப்பவர்கள் பட்டியலில் உலக வங்கி முதற்கொண்டு சூழலை கெடுத்த உலகப்பெரு நிறுவனங்கள்தான் முதன்மையாக உள்ளன.

5 நிறுவனங்களில் ஒரு நிறுவனத்திற்கு நிதியளித்து வளர்த்த இருவரின் செயல் சூழல் கேட்டில் உலகப் பிரசித்தம் பெற்றது. வியாட்நாம் போரில் அமெரிக்கா இந்தோனேஷியா காடுகளில் நாப்பாம் போன்ற குண்டுகளை மழையெனப் பொழிந்தது. காடுகளில் போராளிகள் ஒளிந்து கொண்டதால் அவர்களை விமானம் மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்காக அடந்த மலைக்காடுகளில் மரங்களை இலைகளை உதிரச் செய்யும் ரசாயனங்களை வீசினார்கள். இதேபோன்று அமேசான் காடுகளிலும் பேரழிவு ஏற்படுத்தப்பட்டது. இந்த பாதகச் செயலை செய்ததே இந்த இருவரின் நிறுவனங்களே. இவர்கள்தான் இன்றைக்கு வனச்சூழல் பராமரிப்புக்கு உகந்தவர்களா?

1972-ல் புலிகள் அழிவதைத் தடுக்க டைகர் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது நாட்டில் 1827 புலிகள் இருந்தன. இப்போது புலிகளின் எண்ணிக்கை 1411 ஆக குறைந்துவிட்டன. 30 ஆண்டுகளில் பல நூறு கோடி ரூபாய் செலவுக்குப் பிறகு புலிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எனவே புலிகளை காக்க தனிக் காப்பகங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் விஷயம் அவ்வளவு எளிமையானது இல்லை. வன உரிமைச் சட்டம் செயல்படுத்தப்படுவதை தடுக்க கண்டுபிடிக்கப்பட்ட வழிதான் புலிகள் காப்பகம்.

புலி நாட்டின் எல்லா இடங்களிலும் இருக்கிறது. இந்த ஒரே ஒரு காரணத்தை சொல்லியே எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஆதிவாசி மற்றும் இதர மலை வாழ் மக்களை வெளியேற்றி விடலாம். வன உரிமைச்சட்டத்தின் கீழ் ஆதிவாசி மற்றும் இதர மலைவாழ் மக்கள் தங்கள் நிலங்களின் மீது உரிமையை பெறுவதற்குப் பதிலாக அவர்கள் வாழும் பகுதிகளை புலிகள் காப்பகங்களுக்குள் கொண்டு வந்து மொத்தமாக வெளியேற்றி விடவேண்டும் என்பதே இப்புலி பாதுகாவலர்களின் நோக்கம்.

புலிகள் காப்பகம் என்பது மிகவும் லாபகரமான வணிகம் ஆகும். பல்லாயிரம் கோடி ரூபாய் புலிகளைக் காக்க கொட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர மக்களோடு தனது அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் வனத்துறைக்கும், அதிகார அரசுக்கும் வாய்ப்பளிக்கிறது. வன உரிமைச்சட்டம் வனத்தினுள்ளேயே மக்களை கவுரவமாக வாழ வழி செய்கிறது. புலிகள் காப்பகமோ அவர்களை விரட்டியடிக்க வழி செய்கிறது.

''புலியைக் காப்பாற்ற ஒரு பகுதியை ஒழித்துத்தான் ஆகவேண்டும் என்றால் வன நில உரிமைச் சட்டத்திலேயே ஒரு குறிப்பிட்ட பகுதியை 'கிரிட்டிக்கல் வைல்ட்லைஃப் ஹேபிடெட்' (Critical Wild life Habitat) என்று அறிவிக்க பிரிவு 1(2) (1) வழி வகை செய்கிறது. ஆனால் அந்த சட்டப்பிரிவின்படி அதை அமல்படுத்தி விட்டால் அப்பகுதியை வேறு எந்த பணிக்கும் பயன்படுத்துவதை இச்சட்டம் கண்டிப்பாக தடை செய்கிறது. உண்மையிலேயே புலிகளை காப்பதுதான் நோக்கம் இவர்களுக்கு என்றால் இப்பிரிவின் கீழ் புலிகள் காப்பகங்களை அறிவித்திருப்பார்கள்.

ஆனால் அரசு Wild Life (Protection) Act,ல் ஒரு திருத்தம் கொண்டு வந்து புலிகள் காப்பங்களை அமைக்க வழி செய்தது. அது டைகர் திருத்தம் எனப்படுகிறது. இத்திருத்தத்தில் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பகுதியை வேறு பணிகளுக்கு பயன்படுத்தத் தடையில்லை. எனவே அரசின் நோக்கம் தெளிவாக தெரிகிறது. மக்களை புலிகள் காப்பக பெயரால் வெளியேற்றிவிட்டு, ஆற அமர சுரங்கம், தனியார்களுக்கு விடுவது போன்ற செயல்களை செய்யலாம் என்பதே ஆகும். ஆக, புலிகள் காப்பகத் திட்டம் புலிகளுக்காக அல்ல; பணம் படைத்த மனிதப் புலிகளுக்காக எனத் தெளிவாகிறது!'' என்று தன் விவரணையை முடித்துக் கொண்டார் செல்வராஜ்.

டைகர் புராஜக்ட், டைகர் திருத்தம் குளறுபடிகளால் யானைகளும், புலிகளும் எத்தகைய துன்பங்களை அனுபவித்து வருகின்றன என்று பார்த்தோம். அதே சமயம் மற்ற வனவிலங்குகள் என்ன கதிக்கு ஆளாகின? கறியான கடமான்கள், விலைபோன வனத்துறை, பக்ரீத் பண்டிகைக்கு நடத்தப்பட்ட மான்வேட்டை, மான்கள் வேட்டையாடிய விஐபி குடும்பம், கடவாய் கிழிந்த கடமான், பித்தலாட்டத்திற்கு பயன்பட்ட மண்ணுள்ளிப்பாம்புகள், வீட்டின் கதவுகளை தட்டிய கரடிக்கூட்டம், பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட நாகப்பாம்பு விஷம், ஓயாமல் நடந்த கருங்குரங்கு வேட்டை, காட்டி கறியாக கடத்தப்பட்ட காட்டுமாடுகள், இதையெல்லாம் மூடி மறைக்க ஏற்படுத்தப்பட்ட வனத்தீ.. அழிந்த காடுகள்-கருகிய மிருகங்கள் என வரிசையாய் பார்க்கலாம்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE