மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்த மனிதரைச் சுற்றி ஒரே கூட்டம். வழக்கமாக மனு எழுதிக்கொடுப்போர் உட்காருகிற இடம் அது. 'இன்று திங்கட்கிழமை கிடையாதே, மனு கொடுக்க இவ்வளவு ஆட்கள் வர வாய்ப்பில்லேயே?' என்று எட்டிப்பார்த்தால், ஆச்சரியம்.
ஜீன்ஸ் அணிந்த ஒருவர் ஜடை வளர்த்து உட்கார்ந்திருந்தார். புத்தம் புதிய ஜீன்ஸ் தரை துடைக்கிற துணியைப்போல அழுக்காகியிருந்தது. அவரது பக்கத்தில் பத்துப் பதினைந்து உணவுப் பொட்டலங்கள், ரூபாய் நோட்டுக் குவியல். சில ரூபாய் நோட்டுகள் காற்றில் பறப்பதுபோல உருண்டு கொண்டிருந்தன. அதெல்லாம் என்னதல்ல என்பதுபோல பற்றற்று உட்கார்ந்திருந்தார் அவர். சுற்றி நின்றவர்களின் முகத்திலும், உடல்மொழியிலும் அநியாயத்துக்குப் பவ்யம். புரிந்துவிட்டதா, தலைவன் ஒரு சாமியார். பக்த கூட்டம் இட்ட பெயர் 'கலெக்ட்ரேட் சித்தர்'.
என்ன செய்கிறார் சாமி என்று வேடிக்கை பார்த்தோம். ''சாமி, கடன் தொல்லை தாங்க முடியல. செத்துப்போயிடலாம்னு தோணுது. நீங்க தான் ஒரு வழி சொல்லணும்'' என்று கலங்கிய கண்ணோடு தீர்வு கேட்டார் முதியவர் ஒருவர். 45 டிகிரி சாய்கோணத்தில் வானத்தை நோக்கிப் பார்த்து, கை விரல்களால் அந்தரத்தில் கோலமிட்டபடி சிந்தனையில் ஆழ்ந்தார் 'சித்தர்'. கூட்டமே அவர் வாயில் இருந்து என்ன வார்த்தை வரப்போகிறதோ என்று 'வாய் மேல் விழி வைத்து'க் காத்திருந்தது. 'கபார்' என்று காற்றில் வெறும் கையை வீசி எதையோ பிடிக்கிறார். (மேலிருந்து வந்த இறைவாக்கை 'கேட்ச்' செய்கிறாராமாம்).
''உன்னைப் பிடிச்ச சனி இன்றோடு தொலைந்தது. நேரே வடக்கே பார்த்துப் போ. ஒரு மாடு உன்னைப் பார்த்து வரும். அது பசுவா, காளையா, எருமையா என்றெல்லாம் பார்க்காதே. பிடித்துக்கொண்டுபோ. செல்வம் குவியும். கடன் தணியும்'' என்றார் தீர்க்கமான குரலில்.
''சாமி, மாட்டுக்காரன் பிரச்சினை செய்யமாட்டானா?'' என்று பக்தர் பவ்யமாகக் கேட்க, ''யோவ், அது எவன் மாடுமல்ல. உனக்கு ஆண்டவன் அனுப்புகிற மாடு. நேரே வடக்கே பார்த்துப்போன்னா, போயேன்'' என்று கட்டளையிடுகிறார். மறுகணமே ஜல்லிக்கட்டில் மாடுபிடிப்பது போல கிளம்பிப் போனார் அந்தப் பெருசு. சரியாக வடக்குத்திசையில் கால்நடை உதவி இயக்குநர் அலுவலகம் இருக்கிறது. அங்கே 'ஊசி' போட மாடுகள் அடிக்கடி வரும் என்பது 'சித்தரு'க்குத் தெரியாதா என்ன? பாவம், யாருடைய மாடு பறிபோகப் போகிறதோ தெரியவில்லை.
அவர் கிளம்பியதும், ஒரே நேரத்தில் நான்கைந்து பேர் தங்கள் பிரச்சினையைச் சொல்ல ஆரம்பிக்க அவர்களை அமர்த்திவிட்டு, லேடீஸ் பர்ஸ்ட் என்கிறார் சாமி. வணங்கியபடி அந்தப் பெண் தொடங்கினார். ''சாமி என் கணவர் இறந்துவிட்டார். என் மேல் சந்தேகப்பட்டு ஒரு பெண்ணும், அவளது கணவரும் என்னை அடித்தார்கள். காதில் கிடந்த கம்மலை காதோடு அறுத்துவிட்டார்கள். நியாயம் கேட்டு எஸ்.பி., கலெக்டர் எல்லோரிடமும் புகார் செய்துவிட்டேன். ஒன்றும் செய்ய முடியிவல்லை. மனவேதனையாக இருக்கிறது சாமி. அவர்களை ஒரு வழி பண்ண வேண்டும். வழி சொல்லுங்க சாமி'' என்றார்.
ம்ம்... ங்கும் என்று சாமி இரும, ஒருவர் ஓட்டமாய் ஓடிப்போய் மினரல் வாட்டர் வாங்கிக்கொண்டு வருகிறார். அதற்குள்ளாக இன்னொருவர் ஓடிப்போய், இளநீரே வாங்கி வந்துவிட்டார். இரண்டையும் ஒரு பொருட்டாக மதிக்காதது போல, பார்வையால் புறக்கணித்துவிட்டு, ஏற்கெனவே கிடந்த குடிநீர் பாக்கெட் ஒன்றை உடைத்து உறிஞ்சினார் சாமி.
''ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளோடு போராடுகிறவன் ஜெயிக்கவே முடியாது. எனவே, அவள் கணவனை மரியாதையுடன் பார். முடிந்தால் சிரி. அவள் எரிச்சல்படுவாள். தன் கணவனோடு சண்டை போடுவாள். அவள் கொட்டம் தானே அடங்கும்'' என்று சிரித்தார் சாமி. புரியுது சாமி என்று ஜாக்கெட்டில் இருந்து 20 ரூபாயை எடுத்து காணிக்கை போட்டுவிட்டு நகர்ந்தார் அந்தப்பெண்மணி.
அடுத்தும் ஒரு இளம் பெண்ணுக்கே பேச வாய்ப்பு கொடுத்தார் சாமி. அவர் விவரமானவர் போல. ''சாமி என் பெயர் கீதா. ஒத்தக்கடையில் இருந்து வருகிறேன். நான் என்ன காரியத்தை நினைத்து வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள் போதும்" என்றார். வழக்கம்போல வானத்தோடு சைகையில் பேச்சுவார்த்தை நடத்திய சாமி, கடைசியில் அருள்வாக்கு சொன்னார். ''ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. உன்னிடம் பணமில்லை அதுதானே?'' என்று கேட்டார் சாமி.
''இல்லை சாமி தப்பு. நான் நினைச்சு வந்த காரியம் வேற. நான் டிஎன்பிஎஸ்சி எக்ஸாமுக்குப் படிக்கிறேன். விஏஓ வேலை கிடைக்குமான்னு கேட்க வந்தேன்'' என்று சொல்லி கேலியாய்ச் சிரித்தபடியே நகர்ந்துவிட்டார்.
''இந்தப் புள்ளைக்கு எம்புட்டுத் திமிருன்னு பாரு, இவளுக்கெல்லாம் வேலை கிடைக்காது சாமி. நீங்க என் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லுங்க சாமி'' என்று உள்ளே புகுந்தார் இன்னொருவர். சாமியார் மறுபடியும் இரும, இளநீர் பார்ட்டி அவரிடம் இளநீரை நீட்டினார். அப்போது, 'எக்ஸ்கியூஸ்மி சார். ஒரு 2 நிமிஷம்' என்றோம். இளநீரைப் புறக்கணித்துவிட்டு, 'ம்' என்று தலையாட்டினார் சாமி.
''நான் ஒரு பத்திரிகையாளன். இந்த நாட்டில் உள்ள அரசியல் குழப்பம் எப்போது தீரும்?'' என்றேன். ''இன்னும் 3 மாசத்துல பெரிய மாற்றம் இருக்கிறது. அடுத்து தேசிய அளவில் 2018 ஆகஸ்ட் மாதத்துக்குள் மாற்றத்துக்கான அறிகுறிகள் தோன்றும்'' என்றார்.
''அதைவிடுங்க சாமி ஆர்.கே.நகரில் யார் ஜெயிப்பா?'' என்று கேட்க, ''அங்கு போட்டியிடும் அத்தனை பேரின் ஜாதங்களையும் பார்த்துத்தான் சொல்ல முடியும். என் கணிப்புப்படி, பிரபு என்ற பெயர் கொண்டவர்தான் ஜெயிக்க வாய்ப்புள்ளது'' என்றார்.
''சாமி, அந்தப் பெயரில் பிரதான வேட்பாளர்கள் யாருமில்லையே? சுயேச்சை வேட்பாளரா?'' என்றேன். ''பிரபு என்றால் பிரபு அல்ல, மகாபிரபு என்று முன்னாலா பின்னாலோ ஒட்டு இருக்கலாம்'' என்றார். ''மகாபிரபு என்றால், தினகரனா?'' என்றால் வெடியாய் சிரிக்கிறார்.
சாமியின் சொந்த ஊர் காரைக்குடியாம். பெயர் சிதம்பரம் என்றார். ''உங்கள் பெயர் கொண்ட அரசியல்வாதியின் எதிர்காலம் எப்படியிருக்கும்?'' என்று கேட்டபோது, ''அவர் திறமையானவர், அனுபவமிக்கவர். ஆனால், ஆணவக்காரராயிற்றே? எனவே, அவர் ஓரங்கட்டப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் அவர் அவமானப்பட நேரிடலாம்'' என்றார்.
ஆக, மணி சங்கர் அய்யருக்கு அடுத்து, ராகுலின் நடவடிக்கை சிதம்பரம் மேல்தான் போல.
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago