யானைகளின் வருகை 101: கடமானை குதறிய காய்வெடி

By கா.சு.வேலாயுதன்

அந்த கடமான் கூடலூர் பாடந்துறை அருகே சுற்றித் திரிந்தது. அதன் கீழ் தாடை சுத்தமாக கசகசத்து தொங்கிய நிலையில் நாக்கு இரண்டடிக்கு வெளியே தள்ளி கண்கள் வெளியே பிதுங்க பரிதாபமாக சுற்றிலும் பார்த்துக்கொண்டே அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் பதறிப்போய் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்கள்.

''கடமான் கடைவாய் வரை கிழிந்து தொங்குவதற்கு காய்வெடிதான் காரணம். உடனே அது சுற்றித்திரியும் இடங்களில் உள்ள தோட்டங்களை ஆய்வுக்குட்படுத்தி எங்கே காய்வெடிகள் வைக்கப்பட்டிருக்கிறதோ, அதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வேட்டைக்காரர்களோ, விவசாயிகளோ யாரானாலும் கைது செய்ய வேண்டும். தவிர அந்த கடமானால் எதுவும் சாப்பிடவும் முடியாது; தூங்கவும் முடியாது. எனவே அதை தேடிப்பிடித்து உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்!'' என்று நேரடியாக வனத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிடவும் செய்தனர் சிலர்.

ஆனால் அதிகாரிகளோ, ''அது நிச்சயம் வெடியினால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்க முடியாது. சிறுத்தைகள் ஏதாவது தாக்கியிருக்கும். அதில் அது தப்பி கடைவாய் கிழிசலுடன் சுற்றித் திரியும்!'' என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் கடமானைப் பார்த்தவர்கள், ''சிறுத்தை தாக்கியிருந்தால் இப்படியிருக்காது. சிறுத்தை ஒன்று மானின் முதுகைப் பிடிக்கும். அல்லது குரல்வளையை கடித்துத் குதறும். சிறுத்தையிடம் பிடிபட்ட மானாவது, தாடை கிழிபட்ட நிலையில் தப்புவதாவது?'' என்று அவர்களிடமே வாதிட்டனர். எதுவும் எடுபடவில்லை. எனவே இதற்காக வனத்துறை தலைமைக்கும், முதல்வருக்கும் புகார்கள் அனுப்பினர்.

இது காய்வெடி செய்த காரியம்தான் என்பதை தெரிந்து கொண்டேதான் அதை மூடிமறைக்கப் பார்க்கிறது உள்ளூர் வனத்துறை என்பது புகார் அனுப்பினவர்களின் குற்றச்சாட்டு.

''இந்த வெடிகள் கர்நாடகா மாநிலம் குண்டல் பேட்டில் (சம்பவ இடத்திலிருந்து 30 கிலோமீட்டர் தூரம்தான்) ரூ.40, ரூ.50 விலையில் கிடைக்கிறது. இதே வெடிகளை ஊட்டி அருகே உள்ள கல்லெட்டி கிராமத்தில் ஒரு நபர் குறைந்த விலைக்கு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவையெல்லாம் வனத்துறையினருக்கு முழுசாகத் தெரியும். அவர்களை வெடிமருந்து தடைச் சட்டத்தில் போலீஸாரோ, வனத்துறையினரோ கைது செய்யலாம்தான். ஆனால் இந்த காய்வெடிகள் தயாரிப்பு ஆண்டுக்கணக்கில் நடந்து வந்தும், அதைக் கண்டு கொள்வதேயில்லை என்றால் என்ன அர்த்தம். இந்த விஷயத்தில் அவர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் நன்மை இருக்கிறது என்றுதானே?'' என்றே அவர்கள் குறிப்பிட்டார்கள்.

ஆனால் இந்த விஷயத்தை விவசாய சங்கத்தவர்கள் சிலர் வேறு விதமாகவே பார்த்தனர். ''இந்த காய் வெடிகள் விஷயத்தில் விவசாயிகளை குற்றம் சொல்ல முடியாது. வனத்துறையினர் வனங்களில் காலம் காலமாக இருந்து வரும் உயிரினங்களின் சமநிலையைப் பாதுகாக்கத் தவறி விட்டதைத்தான் இங்கே அதற்கு சுட்டிக்காட்ட வேண்டும். இப்போதெல்லாம் கூடலூர் வனங்களில் காட்டுப்பன்றிகள் அதிகரித்து விட்டன. அதற்குக் காரணம் போதுமான அளவு நரிகள் இல்லாததுதான். ஒரு பன்றி பத்துப் பனிரெண்டு குட்டிகள் போடும்போது, முன்பெல்லாம் அதில் ஏழெட்டு குட்டிகளையாவது குள்ளநரிகள் கொண்டு போய் தின்றுவிடும். பன்றிகளின் எண்ணிக்கையும் காட்டுக்குள் கட்டுக்குள் இருக்கும். ஆனால் சமீபகாலங்களில் பெருமளவு காடுகள் இங்கு அழிக்கப்பட்டதால், நரிகள் வசிக்க, போதுமான பாதுகாப்பு இல்லை. அதனால் அவை அழிந்தே போய்விட்டன. இந்த சூழலில் விவசாயிகள் தங்கள் விளைச்சலை பாதுகாக்கவே அதிகப்படியாய் காய்வெடிகளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இது குற்றம்தான் என்பதை மறுக்க முடியாது. என்றாலும் அவர்களின் விளைச்சலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளதுதானே?'' என்பதே அவர்களின் வாதமாக இருந்தது.

இதைப்பற்றி வனத்துறையில் பணிபுரியும் கால்நடை மருத்துவர் ஒருவரிடம் பேசியதில், ''2 நாட்கள் முன்பு சத்தியமங்கலம் பகுதியில் ஒரு கிணற்றில் காட்டெருமை ஒன்று விழுந்துவிட்டதாக தகவல் கிடைத்து அங்கு சென்று விட்டேன். அங்கிருந்த போதுதான் கூடலூரில் கடமான் ஒன்று தாடை கிழிந்து இப்படி திரியும் தகவல் வந்தது. கிணற்றில் விழுந்த காட்டு மாடு ஒன்றை எடுத்துவிட்டு கூடலூர் செல்லப் புறப்பட்டபோது திருப்பூர் நகருக்குள் ஒரு காட்டு மாடு புகுந்துவிட்ட தகவல் வந்தது. அதனால் அங்கு சென்று அதற்கு மயக்க ஊசி போட்டு காட்டுக்குள் விட்டோம். இனிமேல்தான் கூடலூர் சென்று அந்த கடமானைத் தேடிப்பிடிக்க வேண்டும். அதன்பிறகே அது காய்வெடியால் அப்படி ஆனதா? வேறு காரணமா? என்றே கண்டு பிடிக்க முடியும்!'' என்றார்.

கடைசி வரை கடமானுக்கு சிகிச்சை எதுவும் நடந்ததா, காப்பாற்றப்பட்டதா. அது எதனால் அப்படி தாடை கிழிந்து தொங்கியது? என்பதற்கெல்லாம் எந்தப் பதிலும் வனத்துறையிடம் கிடைக்கவில்லை.

அந்த கடமான் காட்டுக்குள் சென்று எங்கே விழுந்து செத்ததோ, மக்களும் அடுத்த விஷயத்திற்கு சென்று விடுமளவு சங்கதிகளும் நடந்தன. அதிலொன்றாகவே அடுத்த பண்டிகைக் கால மான் வேட்டை விவகாரம் கிளம்பியது. இதற்கு முந்தைய வருடம் மான்வேட்டை பக்ரீத் பண்டிகைக்கு சர்ச்சையானது என்றால் இது ரம்ஜான் பண்டிகைக்கு பாடாய் பட்டது.

இந்த விவகாரம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தாலுக்காவில். 'ரம்ஜான் வரும் பின்னே. மான்வேட்டை வரும் முன்னே!' என்று கூட பழமொழியை மாற்றிப் போட்டு மக்களை பேச வைத்தது. அதையே பாஜக துண்டுப் பிரசுரமாக அச்சடித்து ஊர் முழுக்க வழங்கியது. சுவரொட்டிகளாகவும் ஒட்டியது. பந்தலூரில் மான்வேட்டைக்காரர்கள் விஷயத்தில் வனத்துறை தொடர்ந்து பாராமுகமாகவே இருக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால் இந்த பகுதியே தீவிரவாதிகளின் கூடாரமாகி விடும்! என அதை அரசியலும் ஆக்கிக் கொண்டிருந்தனர் அக்கட்சியினர்.

பந்தலூரிலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில்தான் கேரள எல்லை தொடங்குகிறது. பந்தலூரைச் சுற்றியுள்ள பச்சைப் பசேல் காடுகள்தான். இங்கும் கரடி, சிறுத்தை, கடமான், காட்டுப்பன்றி, புள்ளி மான், குறைக்கும் மான், காட்டு மாடு என வனவிலங்குகள் ஏராளமாக சுற்றுகிறது. இவற்றை வேட்டையாட வேட்டைக்காரர்களும் அதிகமாகவே அலைகின்றனர்.

அதை உறுதிப்படுத்த ஏராளமான மான்வேட்டைக்காரர்கள் இங்கு கையும் களவுமாக தொடர்ந்து பிடிபட்டும் உள்ளார்கள். உதாரணமாக 2004-ம் ஆண்டு இங்குள்ள கூவமூலா வனப்பகுதியில் கேளையாடு என்றழைக்கப்படும் குரைக்கும் மானின் இறைச்சியுடன் ஒரு கும்பல் பிடிபட்டது. அந்த கும்பல் சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே ஜாமீனில் வந்தது. அந்த கும்பலில் இருப்பவர்களே மீண்டும் இப்பகுதியில் மான்கள் வேட்டையாடுவதாக மக்களிடம் புகார்கள் கிளம்பின.

அதற்கு அடுத்த ஆண்டு புளியம்பாறை வனப்பகுதியில் ஜீப்பில் மான்கறி கடத்தி இருவர் இறைச்சியுடனே கைதானார்கள். அவர்களும் அலுங்காமல், குலுங்காமல் சில நாட்களில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்கள். அப்படித்தான் 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் ஒருநாள். நாடுகாணி சோதனைச் சாவடி அருகே 40 கிலோ மான்கறி, தலையில் கட்டும் வேட்டை டார்ச் லைட், அதற்குப் போடும் பேட்டரி செல், துப்பாக்கி தோட்டா சகிதம் ஒரு கார் பிடிபட்டது. அதிலிருந்து ஒரு கும்பல் தலைதெறிக்கும் வேகத்தில் தப்பியோடி விட, ஒரே ஒருவன் மட்டும் வனத்துறையினரிடம் பிடிபட்டான். மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது கடைசி வரை தெரியவேயில்லை.

இப்படி புளியம்பாறை, நாடுகாணி செக்போஸ்ட், கூவமூலா பகுதிகளில் பிடிபட்ட மான்கறி வேட்டைக்காரர்கள் எல்லோருமே இஸ்லாமியர்கள். அத்துடன் இந்த சம்பவங்கள் எல்லாமே சொல்லி வைத்ததுபோல் ரம்ஜான் பண்டிகையை ஒட்டியே நடந்தது. அதனால் இந்த மான்கறி கேரளப் பகுதி வாழ் முஸ்லிம் மக்களுக்காகவே கொண்டு போகப்படுகின்றன என்ற பேச்சு பந்தலூர் பகுதியை பதற வைக்க ஆரம்பித்தது.

இந்த நிலை 2007-ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையின் போது உச்சகட்ட நிலையை அடைந்தது. அதை பாஜக அரசியலாக்கி துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டதும், அந்த சம்பவங்களில் அரசியல் விஐபி குடும்பம் ஒன்றும் சர்ச்சைக்குள் சிக்கியதுதான் ஹைலைட்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்