யானைகளின் வருகை 77: துதிக்கையில் கொளுத்தப்பட்ட தீ; இது பர்லியாறு நரகம்!

By கா.சு.வேலாயுதன்

 

'நரகம் இங்குதான் இருக்கிறது' என்ற தலைப்பிலான புகைப்படம் ஒன்று நம் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வெளிவந்து, பல்வேறு செய்தி பத்திரிகைகளிலும் பிரசுரமாகியிருக்கிறது.

மேற்கு வங்கத்தின் பன்குரா மாவட்டத்தில் சில இரக்கமற்ற மனிதர்கள் தார் பந்துகளில் தீ மூட்டி வீசி எறிய ஒரு தாய் யானையும் குட்டி யானையும் தீப்பற்றிய தேகத்தோடு தப்பி ஓடும் காட்சி அது. இந்த புகைப்படம், இந்த ஆண்டுக்கான சிறந்த வனவிலங்கு புகைப்படத்துக்கான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் அதில் காணப்பட்ட செய்தி. அந்த கொடும் நரகத்தை நாம் மேற்கு வங்கத்திற்கு சென்றுதான் காண வேண்டுமா? அதை விட பயங்கரம் ஒன்றை நம் நீலகிரி மலையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்தது.

அது பகல் நேரம் 11.30 மணி. தேன் சுவையூறும் பழுத்த பலாவின் அற்புத வாசனை அந்த பிராந்தியத்தையே கொள்ளை கொண்டிருக்கிறது.

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் அந்த நான்காவது கொண்டை ஊசி வளைவின் முனையில் நின்றிருந்தது 3 யானைகள். அவை ஒவ்வொன்றும் துதிக்கையை உயர்த்தி உறிஞ்சி உறிஞ்சிப் பார்த்தது. அதில் சின்ன குட்டிக்கு உற்சாகம் தாங்கவில்லை. தாய் யானையின் துதிக்கையை பிடித்துக் கொண்டு இழுத்தது. தாய்க்கும் வாயிலிருந்து எச்சில் வழிகிறது. அடுத்ததாக நின்ற சகோதரி யானையையும் அழைத்துக் கொண்டு அந்த வளைவில் இறங்கியது பெரிய யானை.

அந்த இருபக்க சாலையின் இடது திருப்பங்களில் சர்ரென்று திரும்பிய வாகனங்கள் யாவும் அப்படியே பிரேக்கடித்து நின்றன. அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக கருதவில்லை யானைகள். ஜெய்ஜாண்டிக்காக சாலையில் நடந்தது. அடுத்த திருப்பத்தில்தான் பலா மணம் நெருக்கத்தில். திரும்பியதும் ஏராளமான கடைகள். அங்கே வரிசையாய் கூறு போட்டு, குவிக்கப்பட்டிருக்கும் பலா பழங்கள். வெட்டி வைக்கப்பட்ட பழங்களும் கூடவே.

நேராக அந்த பலாப்பழக் கடைகளை நோக்கித்தான் குன்றுகள் போன்ற உருவங்கள் நகர்ந்தன. பலாப்பழக் கடைகளுக்கு எதிராக இருந்த டீக்கடை, பலசரக்கு கடை, உணவு விடுதிகளின் முன்பு நின்றவர்கள் ஓட்டம் பிடித்தனர். பலர் கடைகளுக்குள் பாதுகாப்பாக புகுந்து கொண்டனர்.

ஆனால் அந்த பலாப்பழ கடைக்காரர்களுக்கு மட்டும் கெக்களிப்பு. வன்மம். அதையும் மீறி ரெளத்திரம்.

குவிக்கப்பட்டிருந்த பலாப்பழங்களுக்கு பின்னே உயரமான மேஜை அமைத்து, அதற்கு பின்னே உயரமான தடுப்புச்சுவற்றின் மேடைமீது அமர்ந்திருந்தவர்களின் பக்கத்தில் எரியும் அடுப்பு. ஒரு டப்பாவில் அங்கே சலக்,புலக் தாளத்துடன் கொதிக்கிறது சாலை போடப் பயன்படுத்தப்படும் தார். சுற்றுச்சுவர் மேடை மீது அமர்ந்திருந்தவரின் கையில் ஒரு பத்தடிக்கும் குறையாத சவுக்குக்குச்சி. அதன் முனையில் துணி சுற்றப்பட்டுள்ளது.

கடைக்காரரையோ, அவர் கையில் உள்ள கழியையோ, அவருக்கு அருகில் கொதிக்கும் தார் டப்பாவையோ துளியும் சட்டை செய்யாத பெரிய யானை ஒரு பலாவை அலாக்காக தும்பிக்கையில் தூக்குகிறது. தன் காலின் கீழே போட்டு ஒரு மிதி மிதிக்கிறது.

பிளந்த பலாவில் சுளைகள் பிதுங்கி வழிய, அதை அப்படியே எடுத்து தன் கால்களின் இடையில் தும்பிக்கை ஆட்டிக் கொண்டிருக்கும் குட்டிக்கு தருகிறது. திரும்பவும் மற்றொரு பலாவை எடுக்கிறது. உடைக்கிறது. தான் உண்கிறது. அதனுடன் இருக்கும் சகோதரி யானையும் தன் பங்குக்கு அங்குள்ள பலாவை எடுத்து உடைத்து தான் உண்டு, குட்டிக்கும் தருகிறது.

இந்த கண்கொள்ளாக் காட்சியை சாலையில் பலர் படம் பிடித்துக் கொண்டிருக்க, யாருமே எதிர்பாராத விதமாக அந்த கடைக்காரர்களில் ஒருவர் தன் பக்கத்தில் கொதித்துக் கொண்டிருந்த தார் சட்டிக்குள் ஒரு கரண்டியை விட்டு கொதிக்கும் தாரை எடுத்து யானைகளின் மீது வீசிகிறார். அந்த சூடுபட்ட யானைகள் பிளிறல் காட்டி அலறல் காட்டும் நேரம் கூட ஆகவில்லை.

மறுபுறம் ஒருவர் சவுக்கு குச்சி பந்தத்தை தாரில் விட்டு, தீயில் கொளுத்தி அதை அப்படியே பலாவை எடுத்துக் கொண்டிருந்த யானையின் துதிக்கை மீது செருகிறார். அவ்வளவுதான். அங்கே ஒரே பிளிறல் சப்தம். திரும்பத்திரும்ப இதேபாணியை கடைக்காரர்கள் கடைபிடிக்க, ஒரு யானையின் முதுகில் வீசப்பட்ட தார் துளிகளும் தீப்பற்றிக் கொள்ள ஓடுகிறது. நடுரோட்டில் நின்று துடிக்கிறது. குட்டியானை தாய் யானையுடன் இணைந்து 'ஆ.. ஊ..!' என்று, தார்த்தீ அலறாத குறையாக தும்பிக்கையை நீட்டி நீட்டி துடிக்கிறது.

ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் அல்ல. கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணிநேரம் அந்த சாலையை தர்ணா செய்வது போல் மறித்து நின்று விடுகிறது யானைகள். சாலையின் இருபுறமும் பல கிலோமீட்டர் தொலைவில் வாகனங்கள் தேங்கி நிற்க, அந்தப் பகுதியே களேபகாரக் காடாக காட்சியளிக்கிறது. நீலகிரியின் நுழைவு வாயிலாக விளங்கும் பர்லியாறு பாலத்தின் அருகேதான் இந்த கொடூரம் தொடர்ந்துமூன்று வருடங்களுக்கு முன்பு வரை அரங்கேறி வந்தது.

அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது கோத்தகிரியை சேர்ந்த மதிமாறன் என்ற பத்திரிகை புகைப்படக்காரர். எப்படி? அவரே விளக்குகிறார் கேளுங்கள்:

''நீலகிரியின் அடிவாரம் கல்லாறு. இங்கே தொடங்கி, பர்லியாறு மூன்றாவது, நான்காவது கொண்டை ஊசி வளைவுகள் வரை ஐந்தாறு கிலோமீட்டர் மலைப்பாதையில் ரெண்டு பக்கமும் பலாமரங்க அதிகமாயிருக்கு. இது நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் உள்ள முக்கியமான வலசை. அதனால இங்கே எப்பவும் 20, 30 யானைகள் குழுக்குழுவாக இருப்பதை பார்க்கலாம். இந்த கல்லாறு, பர்லியாறுக்கு பக்கத்துல மட்டும் ஆர்டர்லி, ஹில் குரோவ் என ரெண்டு மலைரயில் ஸ்டேஷன்கள் இருக்கு. இந்த இடங்கள்ல அடிக்கடி காட்டு யானைகள் குறுக்கே நின்னுடும். அதனால் ரயில் பல மணிநேரம் தாமதித்து புறப்படுவதும் உண்டு. இந்த ஸ்டேஷன் இடைவெளிக்குள்ளே மட்டும், 6 குகை ரயில்பாதை (மொத்தம் நீலகிரி ரயில்பாதையில் 16 குகைகள்) குறுக்கிடுது.

அங்கே எப்பவும் உள்ளே புகுந்து யானைகள் நின்னுடறது வழக்கமா இருக்கு. அதை ரயில்வே கேங்மேன் கண்காணித்த பிறகே அந்த வழியில் வரும் மலை ரயிலுக்கு சிக்னல் கொடுக்கறது வழக்கம். இப்படி காட்டு யானைகள் நிறைஞ்சிருக்கிற பகுதியில் ரொம்ப காலமாக விவசாயிகள் மட்டுமில்லாம, அரசு தோட்டக்கலைப் பண்ணையும் பலாமரங்கள் போட ஆரம்பிச்சுடுச்சு. அதனால் இங்கே வர்ற யானைகள் அதை சாப்பிட்டுப் பழகிடுச்சு. பலா மணம் வீசும் மூன்று, நான்கு மாத சீசனில் யானைகள் இந்த இடத்தை விட்டு நகர்றதும் இல்லை. சாதாரணமாக மரத்தில் தொங்கும் பலா வாசத்திற்கே வந்துவிடும் யானைகள், அவை பழுத்த பின்பு அறுத்து குவித்து கடைகளாக விரித்தால் என்ன ஆகும்.

அப்படித்தான் கல்லாறு தொடங்கி பர்லியாறு வரை ஏகப்பட்ட பலாப்பழக் கடைகளை வச்சுட்டாங்க வியாபாரிகள். அங்கங்கே காரை, வேனை நிறுத்தி அவற்றை வாங்கிச் செல்வதை வழக்கமாகிட்டாங்க சுற்றுலா பயணிகள். அந்த பலாப்பழக் கடைகளுக்கு சவாலாக வனவிலங்குகள் அழிச்சாட்டியம் செய்தது. அதில் குரங்குகள் சேட்டை ரொம்ப. அப்படி பலாப்பழத்தை தேடி வர்ற வரும் குரங்குகள் மேலே மிளகாய் தூளை எறிவது, தீப்பற்றி வீசுவது, தார் காய்ச்சி ஊற்றுவதுன்னு அவற்றை விரட்ட ஆரம்பிச்சாங்க கடைக்காரங்க.

அதேசமயம் யானைகளும் இந்த பலாப்பழக் குவியல்களை நோக்கி வர ஆரம்பிச்சுடுச்சு. அதற்கேற்பவும் புது டெக்னிக்குளை பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க கடைக்காரங்க. அப்படித்தான் ஒரு கட்டத்தில் தாரைக் காய்ச்சுவதையும், கொதிக்கும் தாரை, கடைகளை நோக்கி வரும் யானைகளை நோக்கி எறிவதையும், அதன் துதிக்கையில் தீ வைப்பதையும் நிரந்தரமாகவே ஆக்கிட்டாங்க. அதில் பல யானைகள் தும்பிக்கை கருகி, அது அழுகி காட்டுக்குள் திரிவதும், புண் புரையோடி அந்த யானைகள் காட்டுக்குள்ளேயே சாவதும் சகஜமாயிடுச்சு!'' என்றவர் கொஞ்சம் மூச்சிரைக்க நிறுத்தினார்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்