யானைகளின் தும்பிக்கையில் ஏற்றப்பட்ட தார்த்தீ புகைப்படம் எடுத்த அந்த அனுபவத்தை மீண்டும் தொடர்ந்தார் மதிமாறன்.
''உதாரணமா கூடலூர் முதுமலை அருகே ரிவால்ட்டோன்னு ஒரு யானை இருக்கு. இதற்கு தும்பிக்கை ஐந்தாறு அங்குலம் இல்லை. முனையுடன் தும்பிக்கை இல்லாததால் அதால எந்தப் பொருளையும் எடுத்து சாப்பிட முடியலை. அதனால ஜனங்களே அதுக்கு கையால் தீனி கொடுத்து வர்றாங்க. அதுக்கேத்த மாதிரி ஜனங்க கூட அதுவும் பழகிடுச்சு. அது கூட இப்படி தார்த்தீயால்தான் கருகியிருக்கும்ங்கிறதுதான் அங்குள்ளவங்க கருத்தா இருக்கு.
பர்லியாறு பலாப்பழ வியாபாரிகள்தான் இப்படி ஒரு கொடூரத்தை செஞ்சுட்டு வர்றாங்கன்னு கேள்விப்பட்டு அங்கேயே ஒரு தடவை போயிட்டேன். அங்கே எதிர்பார்த்த மாதிரியே இந்த 3 யானைகள் பட்டப்பகலில் வந்தன. நானும் படம் பிடித்துக் கொண்டிருந்தேன். அதற்கு முன்பு வரை இங்குள்ள கடைக்காரர்கள் கொதிக்கும் தாரை கரண்டியில் எடுத்து யானை மீது வீசி விரட்டுகிறார்கள். அதில் அலறி காட்டுக்குள் ஓடும் யானைகள் ஒரு சில நாட்களாவது திரும்பி அந்த இடத்திற்கு வருவதில்லை. எனவேதான் இந்த கொடூரத்தை கடைக்காரர்கள் செய்கிறார்கள் என அறிந்திருந்தேன். ஆனால் நான் அங்கே கண்ட காட்சி என்னையே நடுங்க வைத்துவிட்டது. கொதிக்கும் தாரை ஊற்றியதோடு மட்டுமல்லாது, அதன் துதிக்கையிலேயே தாருடன் தீ வைத்து கொளுத்தியது என்னை பதற வைத்து விட்டது.
நான் புகைப்படம் எடுத்த கையோடு, அந்த தார் ஊற்றி, தீ வைத்தவரை நெருங்கி, 'ஏன் இப்படி செய்றீங்க. வனத்துறைக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?'ன்னு கேட்டேன். அவ்வளவுதான். அந்த ஆள் மட்டுமில்லாம, இன்னும் பல வியாபாரிகளும் என்னை சூழ்ந்துட்டாங்க. எனக்கு அடியும் விழுந்துடுச்சு. கடைக்காரங்க என் கேமராவுல இருக்கிற போட்டோவை அவங்க கண்ணு முன்னால அழிங்கிறாங்க. அதே நேரத்துல எனக்கும் சப்போர்ட்டா சில பேர் வந்துட்டாங்க. அவங்களால கூட கடைக்காரங்களை சமாளிக்க முடியல. அப்ப யானைக நடுரோட்டுல நின்னுட்டும் இருக்கு. அதே நேரத்துல அங்கே சயர்ன் போட்ட வண்டி. பார்த்தா அது நீலகிரி கலெக்டர் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டேல் வண்டி.
அவரும், அவருடன் வந்த அதிகாரிகளும் அங்கே இறங்கியே வந்துட்டாங்க. அதுல வியாபாரிகள் ஓடிப்போயிட்டாங்க. அதுக்கப்புறம் இங்குள்ள வேற வியாபாரிகளைப் பார்த்து சத்தம் போட்டார். ஃபாரஸ்ட், ஹைவேஸ் அதிகாரிங்களை அங்கேயே கூப்பிட்டு வச்சு, இனிமே இங்கே கல்லாறு தொடங்கி பர்லியாறு வரைக்கும் யாரும் பலாப்பழங்கள் விற்கக்கூடாதுன்னு உத்தரவு போட்டார். இது நடந்து இன்னைக்கு மூணு வருஷம் இருக்கும். இப்ப வரைக்கும் யாரும் பலாப்பழம் இந்த ஏரியாவில் விற்கறதில்லை. இல்லாவிட்டால் இன்னைக்கு வரைக்கும் எத்தனை யானைகள் கொதிக்கும் தார்த்தீயால் உயிர் போயிருக்குமோ? தும்பிக்கை இழந்திருக்குமோ?’
என ரொம்பவும் கனிந்துருகிய மதிமாறன், மேற்கு வங்கத்தில் தார்த்தீ பற்ற வைக்கப்பட்ட யானை புகைப்படம் உலக சிறந்த புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் விஷயத்தை தன் அனுபவத்துடன் இணைத்து இப்படிப் பேசினார்.
''எனக்கு இந்த சிறந்த புகைப்படத்தை கூட இப்போதைய செய்தித்தாள்கள் பார்த்துத்தான் தெரிஞ்சுட்டேன். அதுபோன்றதொரு, அதையும் மீறின கொடூரம் பர்லியாறில் நடந்தது. பெரிய அளவில் என்னிடம் கேமராவும் இல்லை. இதை உலக சிறந்த புகைப்பட தேர்வுக்கு அனுப்பும் யோசனைகளும் கிடையாது. ஆனால் இந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியாது. ஓரிரு பத்திரிகைகளுக்கு இந்த படங்களை அளித்திருக்கிறேன். சில புகைப்படக் கண்காட்சிகளில் இதை வைத்திருக்கிறேன். பலரும் பார்த்து விட்டு ஐயோ என்று பதறியும் இருக்கிறார்கள்!'' என்றார்.
பர்லியாறு முதல் கல்லாறு வரை ஊட்டி சாலையில் பலாப் பழக்கடைகள் அகற்றப்பட்டு விட்டது. என்றாலும் முன்னை விட இதே சாலையில் தென்படும் காடுகளிலும், தோட்டங்களிலும், பாக்குத் தோப்புகளிலும் கூட ஊடுபயிராக பலா மரங்கள் மிகுந்துள்ளது. அதை இங்கே பயணம் செய்யும் போது நம்மால் காண முடிகிறது.
அதனால் இங்கே பகலிலேயே சுற்றித்திரியும் காட்டு யானைகளுக்கும், பலாமரங்களை ஒட்டி நின்று பழங்களை பறித்து சாப்பிடும் யானைகளுக்கும் குறைவில்லை. ஊட்டி, கூடலூர், குன்னூர் செல்பவர்கள் இப்படி திரியும் காட்டு யானைகளை தங்களது செல்போன்களில் படம் பிடிப்பதும், யானைகள் அவர்களை துரத்துவதும், வாகனங்களை விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டம் பிடிப்பதும் இன்னமும் இங்கே தொடர்கதையாகவே உள்ளது. அதே சமயம் விவசாயிகளின் புலம்பல்களும் இதற்கேற்ப கூடுதலாக ஒலிக்கிறது.
பொதுவாக பலா மரங்கள் சித்திரை, வைகாசி மாதங்களில் மரத்துக்கு 20 முதல் 30 பழங்கள் வரை காய்ப்பதும், அதை விற்பதும் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. கல்லாறு பழப் பண்ணையைப் பொறுத்தவரை அந்தந்த பலா மரங்களில் என்ன வகை பலா என்று ஒவ்வொன்றிலும் பெயர்ப்பலகையே இருக்கும். அதில் காய் பழுத்து தொங்கும் வேளைகளில் சுற்றுலாப் பயணிகள் கேட்கும் போது பறித்து விலைக்கு விற்பதும் உண்டு. அதிலும் வேர்ப்பலா, சிங்கப்பூர் பலா போன்றவை நல்ல சுவை கொண்டவை. அதில், பலா கொட்டையும் மிகச் சிறிதாக இருக்கும்.
கடந்த 2009-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் கல்லாறு மற்றும் பர்லியாறு பழப் பண்ணைக்கு போடப்பட்டிருந்த சுற்றுச்சுவர், வேலிகள் அழிந்து விட்டன. எனவே, பழப்பண்ணைக்குள் வரும் வன விலங்குகளைத் தடுக்க முடியாமல் தவிக்கின்றனர். அது மட்டுமல்லாது கனிகள் பழுக்கும் காலங்களில்தான் இப்பகுதிக்கு யானைகள் இடப்பெயர்ச்சியும், நடைபெறுவதால் அவற்றின் வருகையை கட்டுப்படுத்தவே முடிவதில்லை. சில வருடங்களில் 20 காய்கள் பிடிப்பதே அரிதாக இருந்த பலா மரங்களில் கூட 100-க்கும் மேற்பட்ட பலாப்பழங்கள் காய்த்து தொங்க ஆரம்பித்து விடுகின்றன. அவை சீசனுக்கு முன்கூட்டியே பழுத்தும் விடுகிறது.
இதனால் திரும்பிய பக்கமெல்லாம் பலாப்பழ மணம் கமகமக்கிறது. இந்த மணத்தை நுகர்ந்து, காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கின்றன. 20 அடி உயரம் வரை உள்ள பழங்களை யானைகள் சாப்பிட்டு விடுகின்றன. 40 அடி உயரமான மரத்தில் பழுத்து வெடித்து நிற்கும் பலாப்பழத்தை கைகளை விட்டு நோண்டி, நோண்டி கடித்து துப்பி விடுகின்றன குரங்குகள்.
எனவே ''நாங்கள் அறுவடை செய்யும் முன்பே இவை சாப்பிட்டு முடித்து விடுகின்றன. அதிலும் பலாப்பழத்தை சாப்பிட வரும் யானைகள், சுற்றி இருக்கும் வாழை, தென்னை, பாக்கு மரங்களையும் பதம் பார்த்துவிடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு ஏகப்பட்ட சேதம் ஏற்படுகிறது. பாக்குமரத்தை பொறுத்தவரை நடுத்தண்டில் சோறு மாதிரியான பகுதி நல்ல சுவையுடன் இருக்கும். எனவே மரங்களை முறிக்கும் யானைகள் அவற்றையும் சாப்பிட்டு விட்டுத்தான் நகர்கிறது. இதை வனத்துறையினரும் விரட்டியடிக்க நடவடிக்கை எடுப்பதில்லை!'' என்ற புலம்பல்கள் வி இங்குள்ள விவசாயிகள் மத்தியில் ஒலிக்கின்றன.
இதன் எதிர்வினை. தோட்டங்களில் மின்வேலிகள் நிறைகின்றன. காய்வெடிகள் வைக்கப் படுகின்றன. அவற்றில் சிக்கி யானைகள் மட்டுமல்ல, மற்ற விலங்குகளும் இறக்கின்றன.
கோவை மாவட்டத்தில் வரும் யானைகளின் வலசைப்பாதையில் மட்டும்தான் யானைகளுக்கான இயல்பு வாழ்க்கைக்கான சேதாரம் அதிகம் நடந்துள்ளன என்று பார்த்தால், அதை விட கொடுமை, அவற்றின் புகலிடமாக விளங்கும் நீலகிரி மாவட்ட காடுகளில்தான் நடந்துள்ளன. கோவை ஊரகப்புற வலசைகளில் 20 ஆண்டுகளாகத்தான் இதில் அதீத சிக்கல்கள் புறப்பட்டுள்ளது என்றால் நீலகிரி காடுகளின் சேதங்களை விவரிக்க நூற்றாண்டுகள் கூட உள்ளே செல்ல வேண்டியிருக்கிறது.
அந்த வகையில் இந்த தார்த்தீ காட்சிகளை 1989-90ம் ஆண்டுகளிலேயே ஓவேலி பள்ளத்தாக்கு பகுதிகளிலேயே கவனித்து நெஞ்சம் நொந்ததாக குறிப்பிட்டார் விவசாயிகள், தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் செல்வராஜ்.
''கூடலூர், ஓவேலி பசுமை எழில் கொஞ்சும் ஏரியா. தேயிலை, காபி எஸ்டேட்டுகள், பல்வேறு விவசாய தோட்டங்கள் மட்டுமல்லாது, பலா, அத்தி என பல்வேறு பழத்தோட்டங்களும் உள்ளன. இந்த வனப்பகுதியில் பல்வேறு வகையான மரங்களும், செடி, கொடிகளும் காணப்படுகின்றன. அதனால் வன உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாகவும் இருக்கிறது. அந்த வகையில் மா, பலா, வாழை என சாப்பிட வரும் காட்டு யானைகளை விரட்ட, அப்போது அந்த கொடூரமான உத்தியைத்தான் கையாண்டு வந்தார்கள்.
அதாவது ஒரு பெரிய தார் உருண்டையை இரும்பு சட்டியில் வைத்துக் கொள்வார்கள். அதை எடுத்துக்கொண்டு உயரமான மரத்தின் மீது ஏறிக் கொள்வார்கள். அந்த சட்டியில் உள்ள தார் உருண்டையின் மேற்பரப்பில் தீ பற்ற வைத்திருப்பார்கள். அதன் மேற்பரப்பில் மட்டும் தீ எரிந்து அடிப்பகுதி குழகுழப்பாகி இருக்கும். அந்த சமயம் பலாவை சாப்பிட வரும் யானைகள் மீது இந்த தார் உருண்டையை அப்படியே கொட்டுவார்கள். அதனால் யானைகளின் முதுகோ, தலையிலோ, பின்புறத்திலோ, குழகுழத்த தார் ஒட்டி வழிவதோடு தீயும் பரவி விடும். அப்படியே எரிச்சல் தாங்க முடியாது அந்த காட்டு யானைகள் ஓட்டம் பிடிக்கும்!'' என சொல்லி நிறுத்தியவர் பிறகு கூறியவை மேலும் அதிர்ச்சியூட்டும் ரகம்.
மீண்டும் பேசலாம்.
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago