நாம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் செல்ல வேண்டுமென்றால் அதற்குரிய வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். அதற்கான முறையான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். வனத்திற்குள் நடைபயணம் மேற்கொள்ளவோ, குறிப்பிட்ட பகுதிக்கு சென்று சுற்றிப் பார்க்கவோ, ஆராய்ச்சி செய்யவோ அனுமதிக்கப்பட்டால் உங்களுடன் பாதுகாப்புக்காக ஓரிரு வேட்டைத் தடுப்புக்காவலர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.
அப்படி செல்லும்போது அந்த வேட்டைத் தடுப்புக் காவலர்கள் தன் கையில் ஒற்றை அரிவாளுடன் வருவதை காணலாம். அந்த அரிவாளும் சிறிய அளவில் ஒரு வெட்டு வெட்டினால் ஒரு மரத்தை கூட வெட்டத்தக்கதாக இல்லாத மொண்ணையாக இருப்பதையும் கவனிக்கலாம். 'இதை வைத்துக் கொண்டு இவர் எப்படி சிறுத்தை மற்றும் யானைகளிடம் நம்மை பாதுகாப்பார்?' என்ற கேள்வியும் அதை முன்வைத்தே நம் மூளைக்குள் சுடர்விடும்.
நீங்கள் அந்த வேட்டைத் தடுப்புக் காவலரிடம், அல்லது உடன் அரிவாளுடன் வரும் பழங்குடி நபரிடம், 'இந்த அரிவாளை வைத்து யானையை விரட்ட முடியுமா?' என்று கேட்டுப் பாருங்கள். 'இதை வச்சு ஒண்ணுமே பண்ண முடியாதுங்க. யானைய பார்த்தா அப்படியே அசையாம நின்னுக்கணும். அதையும் மீறி யானை நம்மை பார்த்து வந்தா ஆளுக்கொரு பக்கமா ஓடத்தான் வேண்டும்!' என்பார் கூலாக.
இது எனக்கு மட்டுமல்ல; வனத்திற்குள் சென்று வரும் பலருக்கும் நிச்சயம் ஏற்பட்ட அனுபவமாக இருக்கும். அப்புறம் எதற்கு அரிவாள்? அந்த அரிவாளை வைத்துக் கொண்டு நகருபவரை கவனியுங்கள். பத்தடி, இருபதடி தாண்டியதும் அங்குள்ள மரத்தில் அரிவாளின் பின்னால் இருக்கும் முதுகால் லேசாக ஒரு தட்டுத் தட்டிவிட்டே நகருவார். அது மட்டுமல்லாது ஒரு சில இடங்களில் அந்த மரங்களில் உள்ள சிறுகிளைகளை வெட்டிப் போட்டுக் கொண்டும் வருவார். அது யானைக்கான சங்கேத ஒலி மற்றும் செயல்பாடு என்றால் யாராவது நம்புவார்களா?
காட்டு யானை மிகவும் நுட்பமான விலங்கு. 2 கிலோமீட்டர் தூரத்திலேயே ஆள் அரவத்தையும், விநோதமான வாசனையையும் தன் மோப்ப சக்தியாலும், கேட்டல் திறனாலும் உணர்ந்து கொள்ளும் சக்தி மிக்கது. அந்த வகையில் இங்கே இவர் ஒரு கிளையை ஒடித்துப் போடும் சத்தமோ, மரத்தை டொக், டொக் என்று தட்டும் ஓசையோ கேட்டு அது சுதாரித்துக் கொள்ளும். பக்கத்தில் இருந்தால் இந்த சத்தம் கேட்டு தூரமாகவும் சென்று நின்று கொள்ளும். மிக நெருக்கத்தில் இருந்தால் அதுவும் பதிலுக்கு ஓசை கொடுக்கும்.
கிளை ஒடிப்பது சன்னமான அளவில் ஒலி கேட்டால் காட்டு யானை குறிப்பிட்ட தொலைவில் உள்ளது என்று பொருள். அதுவே கிளை ஒடிக்கும் சப்தம் அதிகமாக கேட்டால் அது மிக கிட்டத்தில் இருக்கிறது என்று பொருள். அத்துடன் அதன் பசுஞ்சாண, மூத்திர வாசமும் கூடவே வரும். அதை தன் நுகர்வு சக்தி மூலமாகவே கண்டு கொள்ளும் நம்முடன் வரும் பழங்குடியின நபர், அப்படி பக்கத்தில் யானைகள் இருந்தால் நம்மை அங்கேயே நிறுத்தி அவை எங்கே நிற்கிறது என்பதை ஆராய்ச்சி செய்து, அது தொலைவில் சென்ற பின்பே வனத்திற்குள் பயணத்தைத் தொடர்வார் வேட்டைத் தடுப்புக் காவலர்.
இப்படி வனாந்திர பயணத்தின்போது கருப்பு, பச்சை நிறத்தில் அடர் வண்ண உடைகளையே அணிந்து செல்ல வேண்டும். வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிந்தால் மிருகங்கள் மிரண்டுவிடும். குறிப்பாக காட்டு யானைகள் வெள்ளை ஆடை அணிந்தவர்களை குறி வைத்து துரத்தித் தாக்கும்.
அதில் முக்கியமாக, 'நாம் வாசனை மிக்க சோப்பு, ஷாம்பு போட்டு குளித்து விட்டு காட்டுக்குள் போகவே கூடாது. அந்த வாசனையை தனது மோப்ப சக்தியால் தூரத்திலிருந்தே கண்டு பிடித்து மிரண்டு வந்து தாக்கும்!' என்பன போன்ற தகவல்களையும் கூட அவசியம் இப்பயணம் மேற்கொள்கிறவர்கள் அறிந்து அதற்கேற்பவே தன்னை தயார்படுத்தி பயணப்பட வேண்டும்.
இதை இங்கே எதற்கு சொல்கிறேன் என்றால் யானை எந்த அளவுக்கு நுட்பமான விலங்கு என்பதை மீண்டும் வலியுறுத்த மட்டுமல்ல, அதற்கு வாசனை திரவியங்கள், குறிப்பாக நறுமணம் கொண்ட ஆயில் வகையறாக்கள் ஆகாது என்பதை தெளிவுபடுத்தவே.
ஆனால் இதையெல்லாம் துளியும் சட்டை செய்யாது ஒரு ஜாதிமல்லி உள்ளிட்ட பூக்கள் மற்றும் வேறு வகை விளைபொருட்களில் நறுமணச்சாறு எடுக்கும் கம்பெனி ஒன்று வனாந்திரத்தை ஒட்டியே அமைந்திருந்தால் எப்படியிருக்கும்? பில்லூர், வெள்ளியங்காடு கிராமத்தை ஒட்டியுள்ள மருதூர் கிராமத்தில் அப்படித்தான் ஜாதி மல்லியை கொண்டு எசென்ஸ் (நறுமண ஆயில்) தயாரிக்கும் ஃபேக்டரி இயங்கி வருகிறது.
வெள்ளியங்காட்டை அடுத்துள்ள மருதூரிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது இந்த ஃபேக்டரி. 20 ஆண்டுகளாக இந்த ஃபேக்டரியில் ஜாதிமல்லிப் பூவைவாங்கி வந்து கூடவே ஒயிட் பெட்ரோல் மற்றும் ரசாயனப் பொருட்கள் சிலவற்றை சேர்த்து ஜாதிமல்லி எசென்ஸ் (நறுமண எண்ணெய்) தயாரிக்கிறார்கள். இதற்காக இங்கே கர்நாடகா பகுதியிலிருந்து மட்டும் தினசரி பத்து முதல் பதினைந்து டன் ஜாதி மல்லி வருவதாக பொதுமக்கள் சொல்கிறார்கள்.
இது மட்டுமல்லாது, காரமடை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளின் விவசாயிகளிடமிருந்தும் ஜாதிமல்லியை விலைக்கு வாங்குகிறார்கள்.
இதன் மூலம் ஒரு நாளைக்கு 2 டன்னுக்கும் குறையாது ஜாதிமல்லி சக்கை கழிவுகள், இந்த ஃபேக்டரி பகுதிகளிலேயே கொட்டப்படுகிறது. ஜாதிமல்ல சாறு தயாரிக்கும்போதும், அது வேகும்போதும் ஒரு வகை வாசம் வீசியதென்றால், இந்தக் கழிவுகள் கொட்டப்பட்டதால் எழுந்த அழுகல் வாசமும் இந்த பிராந்தியத்தையே உலுக்கியுள்ளது. பொதுமக்களும் அவஸ்தைப் பட்டு 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஃபேக்டரிக்கு எதிராக போராட்டங்களும் செய்துள்ளனர். அதை அகற்றாமல் நாங்கள் குடியிருக்கவே முடியாது என்றும் பொங்கியிருக்கிறார்கள்.
அதன்பிறகு அதிகாரிகள் வந்து சமாதானம் பேசி, 'இனிமேல் கழிவுகளை தங்கள் இடத்திலேயே கொட்டி அழித்து விடுகிறோம்!' என்று வாக்குறுதியை தொழிற்சாலைக்காரர்கள் கொடுக்க, போராட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து கழிவுகள் வெளியே கொட்டப்படவில்லை என்றாலும் கூட, அவை தொழிற்சாலைக்குள்ளேயே கொட்டப்பட்டு, மண்போட்டு மூடப்பட்டாலும், மழைக்காலங்களில் அதில் கிளம்பும் நாற்றமும், ஃபேக்டரியில் சென்ட் தயாரிக்கும் வாசமும் இரண்டற கலந்து வீசவே செய்கிறது.
இதை வைத்து மறுபடி மக்கள் போராட்டம் எழாமல் இருப்பதற்காக இந்த தொழிற்சாலையின் சார்பாக இந்த ஊருக்குள் உள்ள கோயிலுக்கு ரூ. 20 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து கொடுத்திருக்கிறார்கள். இதனால் இந்த ஊரில் உள்ளவர்கள் அமைதி காப்பதாக அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் சொல்லுகிறார்கள். ஊர்ப் பொதுமக்கள் வேண்டுமானால் சகித்துக் கொண்டிருக்கலாம். அதுவே சுற்றுப்பகுதி வனங்களில் உள்ள காட்டு யானைகள் சும்மாயிருக்குமா?
அடிக்கடி ஊருக்குள் வந்து விடுகின்றன. மருதூர் கிராமத்தில் சுமார் ஐம்பது அறுபது குடியிருப்புகள்தான் உள்ளன. அதைத்தாண்டி உள்ள கிராமங்களிலும் (பெல்லாதி, சிக்காராம்பாளையம், மருதூர், தேக்கம்பட்டி, ஜடையம்பாளையம், வெள்ளியங்காடு, தோலம்பாளையம்) போறதோட, கிழக்கே 10 கிலோமீட்டர் தூரம் உள்ள ஜோதிபுரம், பெரியநாயக்கன்பாளையம், பிரஸ் காலனி வரை ஊடுருவி விடுகின்றன.
அப்படியே அங்கு பெருமளவு உள்ள வாழைத்தோப்புகளையும் ஒரு வழியாக்கி விடுகின்றன. அதில் பல பேர் யானைகள் தூக்கி வீசியும், மிதிபட்டும் இறந்துள்ளனர்.
இதைப்பற்றி வெள்ளியங்காட்டை சேர்ந்த விவசாய சங்கத்தலைவர் மூர்த்தியிடம் பேசியபோது, ''20 வருஷம் முன்னால வரைக்கும் காட்டை விட்டு யானைகள் இங்கே வந்து நாங்க பார்த்ததில்லை. இப்ப 10 வருஷமாத்தான் இப்படி வருது. இப்படி வர்ற யானைகள் மெயின் ரோட்டையும் தாண்டி குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கரும்பு பயிரிடும் போது தோட்டங்களுக்குள் யானைகள் புகுந்த அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. அப்போதெல்லாம் இப்போது போல யானைகளிடம் மூர்க்கம் தென்பட்டதில்லை. அந்த அளவுக்கு இந்த சென்ட் வாசம் அவற்றை பாதித்திருக்கிறது.
அதுவும் தவிர, இந்த ஃபேக்டரி இருக்கிற பகுதியில் கட்டாஞ்சி மலை நீரோடை ஒன்று வருகிறது. இதில் மழை பெய்தால் வெள்ளம் வரும். அதில் இந்த ஃபேக்டரியின் கழிவுகளும் கூடவே வருகிறது. அதை குடிக்கும் கால்நடைகள், காட்டு மிருகங்கள் எந்தமாதிரியான உபத்திரவத்திற்கு ஆளாகும்? இந்த சென்ட் ஃபேக்டரி ஜாதிமல்லி எசென்ஸ் மட்டுமல்ல, கறிவேப்பிலை எசென்ஸ், மிளகாய் எசென்ஸ் என பல்வேறு வகை விளைபொருட்களிலிருந்தும் சாறுகள் தயாரிக்கிறது. எப்போதெல்லாம் எந்தப் பொருள் மலிவாக உள்ளதோ, அந்தப் பொருட்களை மிக குறைந்த விலைக்கு டன் கணக்கில் வாங்கி, இந்த எசென்ஸ் தயாரிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பொருளும் கர்நாடகா மாநிலத்திற்கே பெருமளவு செல்கிறது.
அங்கேயெல்லாம் இந்த ஃபேக்டரி தடை செய்யப்பட்டதால்தான் இங்கே வந்து அமைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் எதற்காக அங்கேயிருந்து மூலப்பொருட்களை வாங்கி, எசென்ஸ் தயாரித்து அங்கேயே அனுப்ப வேண்டும். அதை அதிகாரிகளும் ஆளும் அரசியல் புள்ளிகளும் தெரிந்தேதான் அனுமதித்திருக்கிறார்கள். அவர்களுக்கென்ன இங்கே வதைபடுவது யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளும், அதன் மூலம் விவசாயிகளும், பொதுமக்களும்தானே?'' என வேதனையுடன் குறிப்பிட்டார்.
இதே காரமடை ஒன்றியத்தில் ஒரு விவசாயி யானைகள் வராமல் இருக்க அமைக்கப்பட்ட அகழியில் மனிதக்கழிவுகளை கொட்டி வைத்த சங்கதியை பேசியிருந்தோம். அதில் அவை எந்த அளவு நாற்றம் தாக்குப்பிடிக்க முடியாமல் காட்டுக்குள் சென்றிருக்கும். அதுவே அது தன் வலசைப்பாதையில் செல்லும்போது மற்ற விளைநிலங்களை எப்படி மூர்க்கம் கொண்டு தாக்கியிருக்கும் என்பதையும் சிந்தித்திருந்தோம்.
அதேபோல் கோவை எட்டிமடையில் ஒரு பெண்மணி தன் தோட்டத்தில் காட்டு யானைகள் புகாமல் இருக்க, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் பழைய மாட்டுச்சாணத்தை போட்டு கலக்கி வைத்திருந்த விஷயத்தையும், அந்த பெண்ணையே அடுத்தநாள் பட்டப்பகலில் தேடி வந்து அடித்து கொன்ற ஒற்றை யானையின் செயலையும் குறிப்பிட்டிருந்தோம்.
அதை இதே சென்ட் பாக்டரிக்கு பொருத்திப் பாருங்கள். இந்த பகுதியில் வலசை செல்லும் யானைகள் இந்த வாசத்தில் பாதிக்கப்பட்டு என்னவெல்லாம் செய்யும். அவை இதுவரை செய்ததெல்லாம் பெரிய விஷயமே இல்லை. இனி செய்யப்போகும் செயல்தான் பெரும் விபரீதமாக மாறும். இதை ஏன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள்? எல்லாம் பணம், வருமானம், பதவி, தன் நிலை காத்துக் கொள்ளல் என்பதைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?
மீண்டும் பேசலாம்.
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago