ஆடு, மாடு மேய்த்தலில்தான் மசினக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்களின் வாழ்வே அடங்கியிருக்கிறது. இதன் மூலம்தான் தினசரி வருமானம் ரூ.50, ரூ.60 என ஈட்டுகிறார்கள் அம்மக்கள். விவசாய நிலங்களை கால்நடைகள் மேய்க்கத் தடை வந்தால் இப்படிப்பட்ட கூலித் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வெளியூர்களுக்கு புலம் பெயர்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவேதான் அத்தனை மக்களும் உச்சகட்ட கொதிப்பில் உள்ளதாகவும், கிளர்ச்சியில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார் அப்போது வர்கீஸ்.
இந்த சீகூர், சிங்காரா வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பத்து பள்ளிக்கூடங்களும், பழங்குடி மக்களால் முக்கிய தெய்வமாக வழிபடப்படும் பொக்காபுரம் மாரியம்மன் கோயிலும் உள்ளது. சரணாலய விஸ்தரிப்பினால் இங்கே மனித நடமாட்டமே கட்டுப்படுத்துவதோடு, வனத்துறையின் சோதனைச் சாவடிகளும் ஏற்படுத்தப்படும். அதன் மூலம் மக்களுக்கு மேலும் நெருக்கடிகளே சேரும்.
இதுபற்றி பொக்காபுரம் மாரியம்மன் கோயில் பூசாரி பைரனிடம் பேசியபோது, ''முதுமலையிலுள்ள ஒம்பட்டா, இம்பூர் மாரியம்மா கோயிலுக்கு (20 வருடங்கள் முந்தைய செய்தி இது) போக முடியறதில்லை. மக்கள் அதுல ரொம்ப கஷ்டப்பட்டு வருத்தம் தெரிவிக்கிறாங்க. நம்ம குலதெய்வத்தை நம்ம மறந்துட்டோம். அதனாலதான் நம்மளுக்கு வராத கஷ்டமெல்லாம் வருதுன்னு இப்பவும் இந்த பொக்காபுரம் அம்மன்கிட்ட வந்து அழுகறாங்க. இதே நிலை இனி இந்த அம்மனுக்கும் வந்துடும். அப்ப எங்க ஜனங்க யார்கிட்டதான் தன் கஷ்டத்தை சொல்லி அழுவாங்க?'' என்று உணர்ச்சி வசப்பட்டார்.
ஆனால் அப்போதைய முதுமலை வனசரணாலய அதிகாரி உதயணன் மக்களின் இந்தப் பயம் தேவையற்றது என்றே உறுதிபடப் பேசினார். 'சாணம் பொறுக்கும்போது வனப்பிரதேசத்தின் மேல் மண்ணும் ஒட்டிக் கொண்டு போகிறது. இது நிலத்திற்கு அபாயம். அது மட்டுமல்ல, இங்கே பல்லாயிரக்கணக்கான கால்நடைகளை மேய விடுகிறார்கள். அதில் ஏதாவது ஒரு மாட்டுக்கு நோய் வந்தால், அது எல்லாவற்றுக்கும் பரவி விஷயம் விபரீதமாகி விடும். நோய் வந்த மாடுகளின் எச்சில் பட்ட மண்ணில் மான்களோ, வேறு விலங்குகளோ புல் மேய்ந்தால் அவற்றுக்கும் அந்நோய் பரவிவிடும். சீகூர், சிங்காரா பகுதியை முதுமலை வனத்துடன் இணைப்பதன் காரணம் இப்பகுதியில் அதிகம் நடமாடும் கழுதைப் புலியை பாதுகாப்பதற்குத்தான்!' என்றவரிடம், 'சரி, சரணாலயமாக இந்தப் பகுதிகள் விஸ்தரிக்கப்பட்டால், மக்களின் கதி என்ன ஆகும்?' எனக் கேட்டேன். அதற்கு அவர், 'மேய்ச்சல் நடைபெறத் தடை இருக்காது. ஆனால் சாணம் பொறுக்க முடியாது. பட்டா நிலங்களில் விவசாயத்திற்கு தடை இருக்காது. சாலைகள் மூடப்படாது. கோயில், பள்ளிகள் பற்றி எவ்வித அச்சமும் பொதுமக்களுக்கு வேண்டியதில்லை!' என்றார் தீர்மானமாக.
இந்த காலகட்டத்தில் சரணாலய விஸ்தரிப்பை எதிர்த்து, மசினக்குடி மக்களுக்காக ஆதரவுக் குரல் கொடுத்திருந்தார், அப்போதைய ஆளுங்கட்சி (திமுக) கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ.,வான முபாரக். அரசு கொண்டு வரும் சட்டத்திற்கு எதிராக நீங்களே இருப்பது ஏன் என அவரிடம் கேட்டதில், ''வனங்களைக் காப்பது போலவே வனப்பகுதியில் வாழும் மக்களையும் காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. இவர்கள் ஒன்றும் இங்கே திடீரென்று வேறு இடத்திலிருந்து வந்து குடியேறிய மக்கள் அல்ல. காலம், காலமாக இங்கேயே வசித்து வருபவர்கள். சீகூர், சிங்காரா ரேஞ்சை முதுமலையுடன் இணைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்துள்ளேன்!'' என்றே உறுதிபட குறிப்பிட்டார்.
அதே சமயம் முபாரக் எம்.எல்.ஏவுக்கு எதிராக நீலகிரியில் குறிப்பிட்ட சில இயற்கை ஆர்வலர்கள், சூழலியாளர்கள், ''இவரது செயல் வாக்கு வாங்குவதன் நோக்கமே!'' என வெகுண்டு பேசினர்.
அப்போது தமிழக வனத்துறை அமைச்சராக இருந்தவர் பொங்கலூர் பழனிச்சாமி. அவரை கேட்டதில், ''அந்த வனச்சரகப் பகுதியை மேலும் சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில்தான் அதை விஸ்தரிக்க எண்ணினோம். திட்டத்தை மத்திய அரசு ஒப்புதலுக்கும் அனுப்ப திட்டமிட்டோம். அந்தப் பகுதிகளில் ஏழை, எளிய மக்களுடளை கேடயமாக வைத்து வசதி படைத்தவர்கள் பலரும் மாடு மேய்க்கிற சாக்கில் சாணம் பொறுக்கி விற்பதை வழக்கமாக வைத்திருப்பதும், அவை பெரிய அளவில் அண்டை மாநிலங்களுக்கு செல்வதாகவும் புகார்கள் வந்தன. அதைத் தடுக்கும் விதமாகவே நடவடிக்கை எடுத்தோம். இதில் அப்பாவி மக்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரியவரவே, அந்தப் பகுதியை முன் எப்போதும் போலவே தொடர அனுமதித்து விட்டோம். என்றாலும், வனப்பகுதியை சேதப்படுத்தும் விதமான நடவடிக்கைகளை மட்டும் தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்!'' என்றார்.
இந்தத் தகவல்கள் செய்தியாக வந்ததன் பின்னணியில் மசினக்குடியில் மக்கள் போராட்டம் அப்போதைக்கு தற்காலிகமாக நின்றது. இயல்பு வாழ்க்கையும் நடந்தது. ஆனால் அது நீண்டகாலம் நீடிக்கவில்லை. புலியிடம் தப்பித்து புதை மணலில் சிக்கியது போல் என்பார்களே, அதுபோல இங்கே புதைமணலில் தப்பி புலியிடம் மாட்டிக் கொண்டார்கள் மக்கள். இது வெறும் உவமானத்திற்கான புலி அல்ல. நிஜப்புலி.
அதுதான் முதுமலை சரணாலயம், முதுமலை புலிகள் காப்பகமாக மாறிய கதை. அதற்குள் போவதற்கு முன்பு மசினக்குடியை தாண்டிய புரட்சிப் போரட்டம் ஒன்றை நடத்திய முத்தங்கா ஆதிவாசிகள் விவகாரத்தைப் பார்ப்போம். தமிழகத்தின் மசினக்குடியில் 1998-ம் ஆண்டு நடந்தது அரசுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டம். ஆனால் முத்தங்காவில் நடந்ததோ, அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டம். புதிய கற்கால மனிதர்களும், நவீன கால மனிதர்களும் தத்தமது ஆயுதங்களை வைத்துக் கொண்டு எதிரெதிராக நின்று ஒரு போர் நடத்தினால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இந்த முத்தங்கா 2003-ம் ஆண்டு பிப்ரவரி மாத கடைசியில் யுத்தபூமியாக மாறியிருந்தது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வரும் இந்த வனப்பகுதி கொச்சியிலிருந்து பெங்களூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுல்தான் பத்தேரி காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. இன்னும் எளிதாக - எல்லோருக்கும் புரியும்படி சொன்னால் முதுமலை உயிரினப் பூங்காவிற்கு கிழக்குப்புற எல்லையில் மசினக்குடி எப்படி அமைந்திருக்கிறதோ, அதேபோல்தான் முதுமலை சரணாலயத்தின் வடமேற்குப்புற எல்லையில் அமைந்திருக்கிறது கேரளா பகுதியான முத்தங்கா. அதேபோல் முதுமலைக்கு வடக்கே அமைந்துள்ளது பந்திப்பூர் (கர்நாடகா) உயிரினப் பூங்கா.
இதே முத்தங்காவை கூடலூரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தூரம் கரடு முரடான பாதையில் சென்றாலும் முத்தங்காவை அடையலாம். இந்த முத்தங்கா வனப்பகுதியில் கேரள அரசின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் நிலங்கள் எல்லாமே இங்கே காலம் காலமாக வசித்து வரும் பூர்வீகக்குடிகளான ஆதிவாசிகளுக்கே சொந்தமானது. அதைத் திரும்ப அவர்களிடமே கொடுக்க வேண்டும் என்று தொடர் போராட்டம் ஒன்றை நடத்தி வந்தார் பழங்குடி மக்கள் தலைவியான ஜி.கே.ஜானு.
முத்தங்கா சரணாலய நுழைவுப் பகுதி, அலுவலகங்கள் முன்பும், கேரள அரசின் தலைமைச் செயலகம் முன்பும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் செய்தும் அரசு கண் திறக்கவில்லை. 'பழங்குடிகளுக்கு நிலங்கள் கொடுக்கப்படும்' என்று அரசு தொடர்ந்து சொல்லி வந்தாலும், அந்தக் குறிப்பிட்ட நிலங்களை அவர்களுக்கு கொடுப்பதை நீலகிரி சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சூழல் அமைப்புகள் எதிர்த்து வந்ததை சுட்டிக்காட்டி தாமதம் செய்து வந்தனர் ஆட்சியாளர்கள். சூழல்வாதிகள் கடும் எதிர்ப்புக்கு காரணமும் இருக்கிறது.
அதாவது முத்தங்காவில் ஆதிவாசிகள் இழந்ததாகச் சொல்லப்படும் சுமார் நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள பூமியில் ஈட்டி, தேக்கு, மூங்கில், சந்தனம் போன்ற மரங்கள் மிக அதிகம். மேலும் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான் போன்ற பல வனவிலங்குகள் ஏராளமாக தங்கி, தன் உறைவிடமாகவே அதை ஆக்கிக் கொண்டிருந்தன. 'இது அடர்ந்த காட்டுப்பகுதி. ஆதிவாசிகளுக்கு இடம் தந்தால் வனவளம் அழியும். வனவிலங்குகள் அழியும்!' என்று கூறி முட்டுக்கட்டை போட்டு வந்தனர் எதிர்ப்பாளர்கள். எனவே இது கேரள அரசுக்கு பெரும்தலைவலியை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் 2003 பிப்ரவரி 3-ம் தேதியன்று சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் முத்தங்காவை முற்றுகையிட்டனர். ஐநூறுக்கும் அதிகமான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. அங்கு பல குடிசைகள் போடப்பட்டு, பழங்குடிகள் அதில் அதிரடியாய் குடியேற்றம் நடத்தினர்.
மீண்டும் பேசலாம்.
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago