ஒரு விஷயம் நடப்பதை சுட்டிக்காட்டுவதை விட, அந்த விஷயத்தை சரிசெய்வதற்கான தீர்வை இங்கு சொல்வதில்தான் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஏனென்றால் நேற்று பிறந்த வளர்ந்து நிற்கும் சிறு குழந்தையும் கூட ஆலோசனை என்பது அட்வைஸ் (புத்திபுகட்டுதல்) போலவே எடுத்துக் கொள்கிறது.
இந்த சமூகத்தில் யாருக்கும் அட்வைஸ் என்பது பிடிக்காத விஷயம். ஏறத்தாழ தீர்வுகளும் கூட அப்படியே! இதை பெரிசா சொல்றானே, இவனுக்கு இதைப்பத்தி என்ன தெரியும்? ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் போய் டாக்டர் பட்டம் வாங்கி வந்தானா? என்பது போல கேட்பது இயல்பானதாக இருக்கிறது.
இங்கே நாம் நிறைய அனுபவங்களை சேகரித்து வைத்துக் கொண்டு, அதில் சிறு அளவில் சாறாக குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் தீர்வு மட்டும் சொல்லிவிட்டால், அந்தத் தீர்வு கொச்சைப்படுத்தப்பட்டு, கிடைத்த அனுபவ அறிவையும் சாகடிக்க முயற்சிகள் நடக்கிறது.
உதாரணமாக இங்கே யானைகள் சம்பந்தப்பட்ட ஓரிரு சம்பவங்களை மட்டும் எடுத்துக்கொண்டு தீர்வுகளுக்குள் நுழைவோம். மேட்டுப்பாளையம் வனம் சார்ந்த நெல்லித்துறை கிராமத்தில் ஒரு ஆண் யானை உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தை அத்தியாயம் 69-ல் சொல்லியிருந்தோம்.
ஒரு காட்டு யானை அங்குள்ள தோட்டங்களில் புகுந்து அழிச்சாட்டியம் செய்கிறது. அதை ஓரிரு வாரகாலம் விரட்டி காட்டுக்குள் விடுகிறார்கள் மக்கள். அதையும் மீறி ஒருநாள் ஒரு பாக்குத்தோப்புக்குள் புகுந்து, பாக்கு மரங்களை முட்டுகிறது. அதில் ஒரு பாக்கு மரம் உயரத்தில் செல்லும் மின்கம்பியில் பட்டு மின்சாரத்தை பாய்ச்சுகிறது. அதில் கீழிருந்த யானை உடல் கருகி உயிரை விடுகிறது. இவ்வளவுதான் நடந்த சம்பவம்.
ஆனால் இதற்கு முன்பே 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் பில்லூர் அணை கட்டப்பட்டிருக்கிறது. அதற்கு மேலே மலை முகடுகளில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அசுர நகர வளர்ச்சிக்கேற்ப இப்பகுதியில் ஓடும் பவானியிலிருந்து குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அதன் ராட்சஷ குழாய்கள் காடுகளில் பயணிக்கின்றன.
அதேபோல் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தைக் கொண்டு போகவும், உயர் அழுத்த மின் கம்பிகள், உயர் மின்கோபுரங்கள், மின் கம்பங்கள் மூலம் காடுகளுக்குள் கொண்டு செல்லப்படுவதும் விவரிக்கப்பட்டுள்ளது. இதுவெல்லாம் மனித தேவைக்கான மாற்றம். விஞ்ஞானத்தின் வளர்ச்சி. இதனூடே மின் கம்பிகள் வரும் பகுதியில் யானைகள் வரக்கூடாது என்று உத்தரவு போட முடியாது.
ஆனால் மனிதனுக்கு போட முடியும். அப்படி உருவானவைதான் மின் சட்டங்கள், விதிமுறைகள் எல்லாமே. உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் மின் கம்பிகள் உள்ள பாதைகளில் இருமருங்கும் குறிப்பிட்ட இடைவெளியில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக்கூடாது, தென்னை, பனை, பாக்கு போன்ற மரங்கள் வளர்க்கக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதிலும் பாக்கு மரங்கள் என்பது இயல்பாகவே வளைந்து கொடுப்பவை. ஒரு மரத்தில் காய் பறிப்பில் ஈடுபடுபவர்கள் இதில் அடுத்த மரத்திற்கு தாவும் போது கூட கிளையை அப்படியே ஸ்பிரிங் மாதிரி வளைத்தே பக்கத்தில் உள்ள மரத்திற்கு தாவுவதை, இந்த விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் அறிந்திருப்பர். அப்படிப்பட்ட பாக்கு மரத்தை மின் உற்பத்தி செய்யப்படும் மின் நிலையத்தின் பகுதியில், அந்த மின்சாரம் கொண்டு செல்லப்படும் பகுதியில் வைத்தால் என்ன ஆகும்?
சாதாரணமாக மழைநீர் அந்த கம்பியில் சொட்டினாலும், காற்றில் ஈரப்பதம் மிகுந்திருந்து, அதில் மின் கம்பியில் நீர் படிந்து கீழே விழும்போது அதில் கடத்தப்படும் மின்சாரம், சுற்றுப்புற ஈரப்பதத்தில் பாய்ந்து எப்படிப்பட்டவர்க்கும், மின் அதிர்வலைகளை ஏற்படுத்திவிடும். அந்த இடத்தில் பாக்கு மரம் இருந்து, அதில் யானை முட்டினால் அது என்ன கதிக்கு ஆளாகும்?
இது யானை செய்த தவறா? பாக்குமரங்கள் செய்த தவறா? இயற்கையின் சீற்றமா? மின்சாரத்தை கண்டுபிடித்த மனிதன். அதை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு போக அறிந்த மனிதன். அந்த மின்சாரத்தின் மூலம் தன் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்ட மனிதகுலம், அதன் எதிர்வினை குறித்த அறிவும், அதை நடைமுறைப்படுத்தும் சிந்தனையும், நேர்மையும் கொண்டிருக்க வேண்டாமா? எனக்கு விதிமுறை தெரியாது; சட்டம் தெரியாது என்று சம்பந்தப்பட்டவர்கள் சொல்வார்களேயானால், பாக்கு மரத்தை அங்கே வளர்த்து, அதில் கிடைக்கும் லாப நட்டக்கணக்கை போடுவதற்கு மட்டும் எங்கிருந்து அறிவு கிடைத்தது?
சரி, அவருக்குத்தான் அறிவில்லை. இந்த மின்வடக்கம்பி செல்லும் வழியில் மரங்கள் இடிக்கிறதா? கம்பங்கள் பழுதாகியுள்ளதா? கம்பிகள் அறுந்து தொங்குகிறதா? வேறு வகையில் வழியில் மின்சாரக் கசிவு இருக்கிறதா? குறிப்பிட்ட மின்கம்பிகள் செல்லும் பாதையில் விதிமுறைப்படி இடைவெளியில் விவசாயம் செய்யப்படுகிறதா? கட்டுமானங்கள் இடைவெளி விட்டு நடக்கிறதா? என்றெல்லாம் கண்காணிக்கத்தானே மாதத்திற்கு ஒரு முறை மின்விநியோகத்தை பராமரிப்பு நாள் என்று நிறுத்துகிறார்கள்.
அந்த நாளில் அதை சரிபார்த்து சோதனை செய்ய வேண்டிய மின் ஊழியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். முழுமையாக சோதனை செய்ய ஊழியர் பற்றாக்குறை என்றால் அதை நியமிக்க வேண்டியவர்கள் யார்? அந்த அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அந்த அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்கு வேறு பணிவிடைகள் செய்து கொண்டிருந்தார்கள் என்றால், அந்த ஆட்சியாளர்களை தட்டிக் கேட்பவர்கள் யார்? அவர்களை தேர்ந்தெடுப்பவர்கள்தானே? சரி, இது வெறும் மின்துறை சம்பந்தப்பட்ட விஷயமா? என்றால் அதுவும் இல்லை.
இதே மின்கம்பி செல்லும் பாதையோரம் வனத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வனத்துறையினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் ரோந்து சென்று பார்க்க வேண்டியவர்கள்தானே? இப்படி பாக்கு மரங்கள் இருப்பதால் உயர் அழுத்த மின்கம்பியில் பட்டால் வனவிலங்குகளுக்கு சேதமாகும் என்பதை தன் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து, அவர்கள் மாற்றுத்துறையான மின்வாரியத்துறைக்கு அறிவித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியதுதானே?
குறிப்பிட்ட விவசாயிகள் விதிமுறை மீறி பாக்குமரங்களை அந்த இடத்தில் வைத்திருப்பதை அறிந்து அவர்கள் மீது ஓரிரு முறையாவது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் அதைப் பார்த்தாவது மற்ற விவசாயிகள் சுதாரித்து, தன் பாதையை சரிசெய்திருப்பார்கள்தானே? சரி, இப்படியொரு விதிமுறையோ, சட்டதிட்டமோ இல்லையென்றாலும் கூட புதிய சட்டங்களை, சட்டத் திருத்தங்களை உருவாக்கிட வேண்டியதும் ஆட்சியாளர்களின் தலையாயப் பணிதானே?
இந்த ஒரு யானை இறந்த சம்பவத்திற்கே இத்தனை கேள்விகள், இத்தனை வியாக்கியான, தீர்வு வழிமுறைகள் என்றால் நாம் இதுவரை 75 அத்தியாயங்கள் வரை எத்தனை மனிதர்கள் யானைகள் மிதித்து இறந்ததையும், எத்தனை யானைகள் மனிதத் தவறுகளால் இறந்திருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம். அதற்கெல்லாம் எத்தனை வழிமுறைகள், எத்தனை தீர்வுகள், கருத்தோட்டங்களை சொல்லுவது? சொல்ல முடியும்?
இப்போது கோவை வனத்துறையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வனக்கோட்டத்தில் நடந்து வரும் யானை மனித மோதலை தடுக்கும் பொருட்டு களிறு என்றொரு திட்டத்தை கடந்த ஓரு வருட காலமாக செயல்படுத்தி வருகின்றனர் அதிகாரிகள். இதற்காக ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் வனத்தை ஒட்டியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் விவசாயிகள், வனத்துறை, உள்ளாட்சி மன்றங்களை பிணைத்து, இயற்கை மற்றும் சூழலியாளர்களை வைத்து கூட்டம் போடும் நிகழ்ச்சியை செய்கிறார்கள்.
யானைகள் மற்றும் வனவிலங்குகளின் அருமையை, தேவையை, அது வனத்தை காக்கும் விஷயங்களை விரிவாக எடுத்துச் சொல்லி, அந்த வனத்திற்கும், நம் வளத்திற்குமான தொடர்பை நம் மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் எதை பயிரிடலாம். எதை பயிரிடக்கூடாது, எதைச் செய்தால் காட்டு விலங்குகளிடமிருந்து தப்பிக்கலாம். எதை செய்தததனால் அவை நம் ஊருக்குள் வருகின்றன போன்ற விஷயங்கள் வலியுறுத்தப்படுகின்றன. அந்தக் கூட்டத்திற்கு வருபவர்கள் அவரவர் வாழ்நிலையில் நின்றே பெரும்பாலும் பேசுகிறார்கள். தீர்வும் சொல்கிறார்கள்.
இப்படியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஊர், ஊராக நடக்கும்போது மனித-யானை மோதல் மெல்ல, மெல்ல தவிர்க்கப்பட்டு, தடுக்கப்பட்டுவிடும் என நம்புகிறார்கள். அது எப்படி சாத்தியமாகும்? இங்கே பாக்கு மரத்தில் முட்டி உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இறந்த யானையின் கதையை எந்த அளவுக்கு உயிரோட்டமாக, உணர்வுகள் ததும்ப எடுத்து சொல்கிறார்கள். அப்படியே சொன்னாலும் விவசாயிகளின் இடத்தில் நின்று, அதை புரியும்படி சொல்கிறார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழுகிறது.
மாறாக, ஒரு விவசாயி தன் தோட்டத்தில் ஒரு நாளில் நான்கைந்து கூலியாட்களை வைத்து, குடும்பத்தோடு இணைந்தும் ஆயிரம் தென்னை மர நாற்றுகளை நட்டுவிட்டார். இரவில் புகுந்த நூற்றுக்கணக்கான பன்றிக்கூட்டம் அதை ஒரே வேகத்தில் தோண்டியெடுத்து, நாற்றின் கீழுள்ள கிழங்குப்பகுதியை கடித்து குதறி விடுகிறது. அல்லது அந்த நாற்று சிறிது பெரிதாகி குருத்து விட்டு மினுக்கும்போது ஒரு யானைக்கூட்டம் வந்து பிடுங்கி குருத்தை மட்டும் சாப்பிட்டும், சாப்பிடாமல் அழித்துவிட்டு போனால் நிலைமை என்ன ஆகும்.
அதில் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அந்த கண நேரத்தில் எழும் கோப, தாப உணர்ச்சி வேகத்திற்கு இந்த விழிப்புணர்வு கூட்டம் எந்த அளவு பயன்படும்? இதை நாம் பிரச்சாரம் செய்யும்போது, அதற்கு எதிரான முரண்கள்தானே உருவாகும்? விவசாயத்தையும், காப்பாற்ற வேண்டும்? வனத்தையும், வனவிலங்குகளையும் காப்பாற்ற வேண்டும் என்று வெறும் அறிவுப்பூர்வமான வியாக்கியானம் சொல்வதால் மட்டும் உணர்வுகளை அடக்கி ஆள முடியுமா? உணர்ச்சி வேலை செய்யும்போது, எப்பேற்பட்ட சிந்தனாவாதிக்கும் அறிவு வேலை செய்யாது என்பதுதான் தியரி.
ஆக, உணர்ச்சி வேகத்தில் எழும் அனுபவத்தை, அதேமாதிரியான உணர்ச்சி வேகத்தில் எழுந்து கிடைக்கும் எதிர்நிலை அனுபவ அறிவுதான் வீழ்த்த முடியும். யானையால் அழிவு என்பதும் யானை அழியக்கூடாது என்பதும் ஒன்று உணர்வாகவும். இன்னொன்று அறிவாகவும் இருந்தால் அப்படித்தான் இருக்கும். 'நீ வந்து தோட்டத்தில் விவசாயம் செஞ்சு பாரு தெரியும்!' என கோபக்குரல் எழுப்ப வைக்கும்.
அதுவே இரண்டுமே அனுபவப்பூர்வமான அறிவாக இருந்தால், அதுவும் ஒரே தளத்தில் (விவசாயி தளத்தில், சூழலியாளர்கள் தளத்தில், அதிகாரிகள் தளத்தில், ஆட்சியாளர்கள் தளத்தில் என பல தளங்கள்) இருந்தால் மட்டுமே இரண்டு ரக அனுபவ உணர்வுகள் சங்கமித்து தீர்க்கமான அறிவு செயலாற்றும்.
இந்தத் தொடரை வாசிக்கும் வாசகர்கள் ஒரு விஷயத்தை மற்ற வாசிப்பிலிருந்து உணர்ந்திருப்பார்கள் என்பதை நம்புகிறன். இத்தொடர் படிக்கும்போது மெல்ல, மெல்ல அது வாசிப்பு சுகத்தை தாண்டி, அவர்களின் அனுபவிப்பாகவே மாறிக் கொண்டிருக்கும் என்பதே அது.
அந்த அனுபவிப்பு ஒரு கட்டத்தில் அவர்கள் அனுபவித்ததாகவே உணர்ந்து, அதுவாகவே மாறிவிடும் சக்தி மிக்கதாகவும் மாறும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அப்படியான மாற்றம் ஒவ்வொரு வாசகர்களுக்கும் முழுமையாக எட்டிய பின்புதான், இதற்கான தீர்வுகளை ஒவ்வொன்றாக சொல்லும்போது, அதுவும் அவரவர்களின் அனுபவிப்பாகவே உணர்வார்கள்.
எனவேதான் இப்போதே தீர்வுகளை நோக்கி பயணப்படுவது சரியானதாக இருக்காது என நம்புகிறேன். எனவே கொஞ்சம் பொறுத்திடுங்கள். அந்த தீர்வுகளை பல அத்தியாயங்களில் விரிவாக பேச வேண்டியிருக்கிறது. அதற்கு முன்பு இன்னமும் நம் வாசகர்கள் பல அத்தியாயங்களுக்குள் நுழைந்து தானே யானையாகி நிற்க வேண்டியிருக்கிறது.
இதுவரை கடந்த 20 ஆண்டுகளில் யானைகளின் வலசைகளின் சேதங்களை மட்டும்தான் பார்த்து வந்துள்ளோம். அடுத்தது இந்த வலசைகளை பிணைக்கும் முதுமலை, பந்திப்பூர், முத்தங்கா, ஆனைமலை வனச் சரணாலயங்களில் நடந்துள்ள மாற்றங்களை முழுமையாகப் பார்த்துவிட்டு அதற்குள் நுழைந்து வருவோம். அப்போதுதான் நம் மனிதகுலத்தின் நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு என சகலத்திலும் யானைகள் குறித்த அவலங்கள் உள்ளுக்குள் ஏறி, அதற்கான தீர்வுகளை அக்கறையாய் கேட்க வைக்கும். அதுவே பின்னாளில் நம் சமூகத்தில் கல்வியாய் மலர்ந்து, நம் குழந்தைகளுக்கும் புகட்டி, அவர்கள் வழி நம் ஜீன்களிலும் உள்ளேற்ற வைக்கும்.
மீண்டும் பேசலாம்.
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago