வாசிப்பைத் தாண்டி.. திருச்சி மாவட்ட மைய நூலகத்தின் பன்முக சேவை

வம்பர் 14-ம் தேதியிலிருந்து தேசிய நூலக வாரவிழா தொடங்கியிருக்கிறது. இந்த நேரத்தில், வாசிப்பு மட்டுமில்லாமல் அனைத்துத் தரப்புக்கும் பயன்படும் பல்கலை நிலையமாக திகழும் திருச்சி மாவட்ட மைய நூலகத்தைப் பற்றியும் கொஞ்சம் பேசுவோம்.

திருச்சி, சிந்தாமணியில் அமைந்திருக்கும் இந்த நூலகத்தில் பல்வேறு தலைப்புகளில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகத்தின் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை மட்டுமே சுமார் 43 ஆயிரம். தினமும் ஆயிரம் பேருக்குக் குறையாமல் இந்நூலகத்துக்கு வருகிறார்கள்.

வாசிப்பைத் தாண்டி..

ஞாயிற்றுக் கிழமைகளில் சதுரங்க விளையாட்டுப் பயிற்சி, மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைகளில் ஓவியப் பயிற்சி, அதற்கடுத்த ஞாயிறு கதை சொல்லும் நிகழ்ச்சி என குழந்தைகளைக் குஷிப்படுத்துகிறார்கள். கதை சொல்லும் நிகழ்ச்சியில் பெற்றோரும் கதை சொல்லி தங்களின் கற்பனை வளத்தை வளர்த்துக் கொள்கின்றனர்.

வெள்ளிக்கிழமைகளில் மாலையில் இங்கு யோகா வகுப்புகள், ஞாயிறுகளில் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்பு, மூன்றாம் புதன் கிழமைகளில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக் கிழமைகளில் பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனை இங்கே நேரலையாக ஒளிப்பரப்புகிறார்கள்.

கவனச் சிதைவுக்கு ஆளாகிறார்கள்

தவிர, பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கணினி மூலம் ஆடியோ புத்தகங்களைப் பயன்படுத்தும் பயிற்சிகளும் இங்கு தரப்படுகின்றன. இப்படி பன்முகத் தன்மை கொண்டு விளங்கும் இந்த நூலகம் குறித்து நம்மிடம் பேசிய மாவட்ட நூலக அலுவலரான ஏ.பி.சிவகுமார், “நமது குழந் தைகளை, புத்தக அறிவோடு மட்டுமல்லாது சிந்தனைத் திறன், படைப்பாற்றல், மனிதநேயம் கொண்டவர்களாகவும் வளர்க்க வேண்டியது அவசியம். இப்போதுள்ள குழந்தைகள் கணினி, அலைபேசி உள்ளிட்ட காரணிகளால் கவனச் சிதைவுக்கு ஆளாகிறார்கள். அதனால் அவர்கள், வாசிப்புப் பழக்கத்தையும் வளர்த்துக் கொள்வதில்லை, தெருவவில் இறங்கி விளையாடுவதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.

இதை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நமது நூலகத்தில் குழந்தைகளுக்கு படிப்பு தவிர்த்து பல்வேறு பயிற்சிகளை அளிக்கிறோம். வீட்டிலும் குழந்தைகள் வாசிப்புப் பழக்கத்துக்கு வரவேண்டும் என்றால் அதற்கான சூழலை அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும் என பெற்றோருக்கும் நாங்கள் ஆலோசனை சொல்வோம்.

இதன் மூலம் பெற்றோருக்கும் வாசிப்பின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்த்தி வருகிறோம். சதுரங்கம் உள்ளிட்ட அனைத்து விதமான பயிற்சிகளையும் அதன் பயிற்றுநர்கள் எவ்வித கட்டணமும் வாங்காமலேயே சேவை உள்ளத்துடன் அளித்து வருகிறோம். தற்போது ஒவ்வொரு பயிற்சிக்கும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் வருகிறார்கள். அடுத்த கட்டமாக, பெண்களுக்கான உடல் நலம், கணினி, சேமிப்பு, ஆரோக்கியமான உணவு தயாரித்தல் பயிற்சிகளையும் எதிர்காலத்தில் அளிக்க இருக்கிறோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE