தி
னமும் பொழுது விடிந்து பொழுது போனால் மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையில் பயணிக்கிறவன் நான். அப்படி பயணிக்கும் சமயங்களில் எத்தனையோ விபத்துக்களை கண்ணுக்கு எதிரிலும், அது நடந்து சற்று நேரத்திலும் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும், விபத்து நடந்த இடத்தைச் சுற்றி நிற்பவர்கள் அங்கு என்ன நடந்தது என்பதை அறியும் ஆவலில்தான் இருப்பார்களே தவிர, விபத்தில் சிக்கியவருக்கு நம்மால் என்ன செய்யமுடியும் என யோசிக்க மாட்டார்கள்.
வாரத்துக்கு நாலு நாயாவது..
இத்தகைய சூழலில்தான் சமீபத்தில் ஒருநாள் அதே நான்கு வழிச் சாலையில் அந்தக் காட்சியையும் பார்த்தேன். அந்த மனிதருக்கு சுமார் 40 வயது இருக்கும். தனது இரு சக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு, வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்த நாயை ஏதோ செய்துகொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்தபோது, முழுவதுமாக இறந்துவிட்ட அந்த நாயின் காலில் சணல் கயிற்றைக் கட்டி இழுத்துக் கொண்டிருந்தார். நாம் அருகில் போனதைக் கூட கவனிக்காமல் நாயை சாலையிலிருந்து சற்று தொலைவுக்கு இழுத்துச் சென்று அங்கே சிறிய குழியை தோண்டி புதைக்கவும் செய்தார்.
அதுவரை பொறுமையாக இருந்துவிட்டு, “உங்க நாயாண்ணே..?” என்று கேட்டேன். “இல்லை” என்று தலையாட்டினார். “நீங்க அடிச்சிட்டீங்களாண்ணே..?” என்ற எனது அடுத்த கேள்விக்கு சிரித்தார். “இல்ல தம்பி.. இந்த நாலு வழிச் சாலை வந்த பின்னாடி, 10 கிலோ மீட்டர் இடைவெளியில, வாரத்துக்கு நாலு நாயாவது இப்டி அடிபடுது. அடுத்த 5 நிமிஷத்துல லாரி, பஸ் எல்லாம் அடுத் தடுத்து ஏறி, செத்த நாயை நசுக்கிட்டுப் போயிடுது. தொடர்ந்து பல வண்டிகள் ஏறி, நாய் கூழாகிப் போறதால ஒரே நாற்றமா அடிக்குது.
முட்டாள்தனமா தெரியலாம்
நான் தினமும் இந்தச் சாலையில் தான் போகிறேன். அந்த நாற்றத்தை என்னால், ஜீரணிக்கவே முடிய வில்லை. டோல்கேட் காரங்களும் கண்டுகொள்வதில்லை. மனுசன அடிச்சுப் போட்டாலே கேக்க நாதியில்லாத இந்தக் காலத்துல, இந்த வாயில்லா ஜீவன்கள அடிச்சுப் போட்டா கேட்க யாரு இருக்கா? நியாயம் கேட்க முடியாட்டிப் போனா லும் ஏதோ நம்மால முடிஞ்சது.. அடிச்சுக் கெடக்குற நாய்கள் மேல வண்டிகள் ஏறி அது நசுங்கி நாற்ற மெடுக்கும் முன்பாக நானே அதுகள பாதுகாப்பான தூரத்துல கொண்டுபோய் போடுறேன். வாய்ப்பிருந்தால் புதைத்தும் விடுகிறேன்” என்று அவர் சொன்னதைக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது.
“நீங்க ப்ளு கிராஸ் அமைப்பில் இருக்கீங்களா.. வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கீங்களா?” என்று கேட்டேன். “அப்படியெல்லாம் எதுவுமில்லை.. என்னைய பெரிய ஆளாக்கீடாதீங்க. கிராமத்துல ஒரு பழமொழி சொல்வாங்க, கேட்டுருக்கீங்களா.. முட்டாளுக்கு ஒரு இடத்துல நாற்றம், அறிவாளிக்கு 3 இடத்துல நாற்றம்னு. அது இதுக்கும் பொருந்தும். நான் செய்யுறது மற்றவங்களுக்கு முட்டாள்தனமா தெரியலாம். ஆனா, நான் செய்யுற இந்தக் காரியத்தால நான் மட்டுமில்ல இந்த வழியா போற நீங்க உள்பட எல்லாரும் நாற்றம் தொந்தரவு இல்லாம போறோமே. இதுக்கு வெறும் 2 ரூபாய் சணல் கயிறு மட்டும்தான் செலவு” என்றார்.
அந்தச் சிரிப்பு
பத்திரிகையாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, “அண்ணே, உங்க பேரு, ஊரு விவரம் எல்லாம் சொல்லுங்கண்ணே.. நீங்க செய்யுற வேலைய நாட்டுல நாலு பேரை செய்ய வெச்சா, இது மாதி்ரியான மனதை கஷ்டப்படுத்துற கோரக் காட்சிகளை மத்தவங்க கண்ணுல படாம தவிர்க்கலாமே” என்றேன். பதிலேதும் சொல்லாமல், ஒரு மாதிரியாகச் சிரித்துக்கொண்டே போய்விட்டார். “மற்றவங்கள விடுப்பா.. முதல்ல இந்தக் காரியத்தை உன்னால செய்ய முடியுமாப்பா?” என்று கேட்பது போல் இருந்தது அந்தச் சிரிப்பு.
இதேபோல், என்னைப் பாதித்த இன்னொரு மனிதர். அவருக்கு 65 வயது இருக்கும். தனியார் பள்ளி வேன் ஒன்றில் நடத்துநராக வேலை செய்கிறார். அந்த வேன் ஒரு பையனை அழைத்துச் செல்ல, மதுரை யானைமலை அருகே உள்ள ஒரு கிராமத்துக்குள் தினமும் வரும். நான்கு வழிச்சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் உள்வாங்கி இருக்கிறது அந்தக் கிராமம். பேருந்து வசதி இல்லாத கிராமம் என்பதால், காலையில் ஒத்தக்கடை அரசுப் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் உள்பட நிறைய பேர் நான்கு வழிச் சாலையை நோக்கி நடந்தே போவார்கள்.
இதென்ன ஷேர் ஆட்டோவா?
பையனை ஏற்றிக் கொண்டு வருகிற வழியில் அந்த வேன் நின்று, நடந்து வருகிற அத்தனை குழந்தைகளையும் ஏற்றிக் கொண்டுபோய், நான்கு வழிச் சாலையில் இறக்கிவிடும். பள்ளிக்குழந்தைகள் என்றில்லை, ‘இரண்டாம் குழந்தைப் பருவத்தில்' இருக்கும் மூத்த குடிமக்களுக்கும் இந்த இலவசப் பயணம் உண்டு.
‘இதென்ன ஷேர் ஆட்டோவா, கண்டகண்ட இடத்துல நிறுத்தி ஆட்களை ஏற்றுவதற்கு.. என்று அந்த ஸ்கூல் வேனின் பழைய டிரைவர், பெரியவரிடம் சண்டை போட்டதும் உண்டு. ஆனாலும், அந்தப் பெரியவர் விடாப்பிடியாக அவர்களை ஏற்றிச் செல்வார். இதுபற்றி பள்ளியில் புகார் கூறப்பட்டு, பெரியவர் எச்சரிக்கப் பட்டிருக்கிறார். ஆனாலும், அவர் தனது சேவையை நிறுத்தவில்லை. இப்போதுள்ள டிரைவர் பெரியவரின் சேவைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதால் அவருக்கு நிம்மதி!
மனமிருந்தால் மார்க்கமுண்டு
“வண்டி, வாகனம் வெச்சுக்க வழியில்லாமத்தான் ஏழைப் பிள்ளைங்க நடந்து போகுதுங்க. வேனில் இடம் இருக்கிறப்ப அதுகளையும் ஏத்திட்டு வந்தா குறைஞ்சா போயிருவோம்.. இல்ல, அதுகள ஏத்துறதுனால கூடுதலா டீசல் செலவாகப் போகுதா? மனமிருந்தால் மார்க்கமுண்டு தம்பி” என்று சொல்லும் அந்தப் பெரியவர், “ வயசான காலத்துல நாலெட்டு எடுத்து வைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத்தான் தெரியும் அதனாலதான், வழியில நடந்து வர்றவங்கள பார்த்தா இரக்கம் வருது” என்கிறார்.
பெரியவர் உண்மையிலேயே ரொம்பப் பெரியவர்!
ஓவியம்: முத்து, வெங்கி
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago