முடங்கிய தமிழகம்!- 8: தடுமாறும் போக்குவரத்துத் துறை!

By கிருத்திக்

ந்தியாவின் மிகப் பெரிய அரசுப் போக்குவரத்துக் கழகத்தைக் கொண்டுள்ள மாநிலம் தமிழகம். நாடு முழுக்க ஒரு நாளில் ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கைக்கு இணையாக (சுமார் 2.3 கோடி) தமிழக அரசுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகளிலும் மக்கள் பயணிக்கிறார்கள்! ஏப்ரல் மாத நிலவரப்படி, 1,757 உபரிப்பேருந்துகள் உள்பட 22,533 பேருந்துகள், நாளொன்றுக்குச் சராசரியாக 92.55 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்குப் பேருந்துகளை இயக்குகிறார்கள். பதிலிப் பணியாளர்களையும் சேர்த்து, 1,43,195 பேர் பணிபுரியும் பெருமை கொண்ட அரசு சார் நிறுவனம் இது.

ஆனால், அவ்வளவு பெரிய போக்குவரத்துத் துறையில் நடக்கும் விஷயங்கள் இந்தப் பெருமைக்குக் களங்கம் சேர்க்கின்றன. தனியார் பேருந்து கட்டணத்தைவிட அரசுப் பேருந்துகளில் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூட்டமும் இருக்கிறது. ஆனால், நஷ்டம் என்கிறார்கள். “போக்குவரத்துக் கழகத்தின் தினசரி கட்டண வசூல், 20.74 கோடி மட்டுமே. அதில், 51.4% தொகை ஊழியர்களின் சம்பளத்துக்கே போய்விடுகிறது” என்கிறார் போக்குவரத் துறை அமைச்சர்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதி, கடன்சங்கத் தொகை, எல்.ஐ.சி. என பல வழிகளில் பிடித்தம் செய்த தொகையைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு செலுத்தாமல் தனது செலவினங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது அரசு. அந்தத்தொகை மட்டுமே சுமார் ரூ. 4,500 கோடி ரூபாய். ஓய்வுபெற்று பல ஆண்டுகளாகியும் இன்னும் வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதிய நிலுவை மட்டுமே ரூ. 1,700 கோடி!

இந்தத் தொகையைக் கேட்டும், 13-வது ஊதிய உயர்வு கோரியும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினார்கள் ஊழியர்கள். கடைசியில் சம்பள உயர்வுக்குப் பதிலாக, மாதாந்திர இடைக்கால நிவாரணமாக ரூ.1,200 மட்டுமே கிடைத்தது. ஓய்வூதிய நிலுவையோ, நிலுவையிலேயே இருக்கிறது. பிறகெப்படி ஊழியர்களின் சம்பளத்துக்கு 51% என்கிறீர்களா? தங்களின் ஊழியத்தை தாங்களே நிர்ணயிக்கும் இடத்தில் இருக்கும் அதிகாரிகளுக்குத்தான் பெரும்பாலான தொகை செல்கிறது. அவர்கள் யாரும் பணப்பலன்களின்றி ஓய்வுபெற்றதாக வரலாறு இல்லை.

மலைக் கிராமங்களுக்கு 208 சிற்றுந்துகளை இயக்க ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது அரசு. ஆனால், இதில் 50 பேருந்துகள் கூட இயக்கப்படவில்லை. ஏற்கெனவே கிராமங்களுக்கு விடப்பட்ட சிற்றுந்துகளில் 75% வருமானமில்லை என்று, வழித்தடத்தை மாற்றி இயக்குகிறார்கள். இதனால், பேருந்து வசதி அறவே இல்லாமல் மாவட்டத்திற்கு 20 கிராமங்கள் அல்லலாடுகின்றன.

சென்னையில் இருந்து திருச்சிக்கு ஸ்ரீரங்கம் வழியாக உணவகம், கழிப்பறையுடன் கூடிய அதிநவீன அம்மா பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தார் ஜெயலலிதா. இப்போது அந்தப் பேருந்துகளைக் காணவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கென சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 10 பேருந்துகளும் என்னாகின என்றே தெரியவில்லை.

மாவட்டத் தலைநகரங்களுக்கிடையே ஏற்கெனவே ஓடிக்கொண்டிருந்த பேருந்துகளைச் சிறப்புப் பேருந்துகள் என்ற பெயரில் சென்னைக்குத் திருப்பிவிடுவதால், விழாக்காலங்களில் சிறுநகரங்களில் பேருந்துக்கு வழியின்றி மக்கள் தவிக்கிறார்கள்.

மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும் என்று 2011 தேர்தல் அறிக்கையிலேயே சொன்னது அதிமுக. 2016 தேர்தல் வந்தபோது, அவசரமாக சென்னையில் மட்டும் இந்தத் திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்தார் ஜெயலலிதா. மீண்டும் அதிமுக வென்றால், திட்டத்தைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்துவோம் என்றவர்கள், சென்னையிலேயே அத்திட்டத்தின் பயனாளிகளைக் குறைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அரசுப் போக்குவரத்துக்கழத்தின் முக்கிய பிரிவுகளான இயந்திர மறுசீரமைப்புப் பிரிவு, பேருந்து கூண்டு கட்டும் பிரிவு, உருளிப்பட்டை புதுப்பிக்கும் தொழிற்கூடங்கள், பேருந்து தரச்சான்று அளிக்கும் பிரிவுகள் போன்றவற்றில் ஊழியர்கள் பற்றாக்குறை கடுமையாக இருக்கிறது. இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்குக் கடிவாளம் போட ஆளில்லை. ‘மோட்டல்’கள் என்ற பெயரில் பயணிகளின் பணத்துக்கும், உடல் நலத்துக்கும் வேட்டு வைக்கிற சாலையோர உணவகங்களைக் கண்காணிக்கவும் ஆளில்லை. அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் 28 ‘பயண வழி உணவகங்கள்’ தொடங்கப்பட்டன. தரம் மற்றும் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தாததால் அவையும் செயலிழந்துவருகின்றன.

போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டில், மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையும் வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுத் துறை வாகனங்களின் பழுதுநீக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 20 மாவட்டத் தலைநகரங்களில் பணிமனைகளும், மூன்று மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களும் செயல்படுகின்றன. இங்கேயும் ஊழியர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, தனியாரிடமே அரசு வாகனங்களைப் பராமரிப்புக்கு அனுப்புகிறார்கள். போலி ரசீது விளையாட்டும் நடக்கிறது. 2016- 17-ம் நிதியாண்டில் மட்டும், பயனற்றவை என்று கூறி 1,482 வாகனங்களைக் கழித்திருக்கிறது வாகனப் பராமரிப்புத் துறை!

ஜெயலலிதா அறிவித்த மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. சென்னையில் அது மெட்ரோ ரயில் திட்டமாக மாற்றப்பட்டு, பாதியளவுக்குப் போக்குவரத்தும் தொடங்கிவிட்டது. ஆனால், மதுரை, கோவையில் அத்திட்டம் செயல்படுத்தப்படவே இல்லை. அதிமுகவுக்கு மொத்தம் 50 எம்.பி.க்கள் இருந்தும், தமிழகத்தில் நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கும் ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்தவோ, நிதி பெறவோ மத்திய அரசிடம் போதிய அழுத்தம் கொடுக்கப்படவில்லை. விமான நிலைய விரிவாக்கத்திட்டங்களும், புதிய வழித்தடங்களைத் தொடங்கும் முயற்சிகளையும் முன்னெடுக்கவும் ஆளில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஸ்திரமற்ற ஆட்சியாளர்களால் பல போக்குவரத்துத் திட்டங்கள் வளர்ச்சி காணாமல் முடங்கிக் கிடக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்