2003 மற்றும் 2004 ஆம் வருடம் போலவே அடுத்த வருடமும் யானைகள் முகாம் முதுமலையில் வனத்துறை- அறநிலையத்துறை- கால்நடைத்துறை மோதல்களுடன்தான் தொடர்ந்து நடந்தது. அப்போதே, 'கோயில் யானைகள் ஊட்டி மலையில் லாரிகளில் கொண்டு வருவதில் பெரிய சிரமம் உள்ளது. தமிழகம் முழுக்க இருந்து வரும் லாரிகளில் கொண்டு வரப்படும் கோயில் யானைகள் மேட்டுப்பாளையத்தில் நிறுத்தப்பட்டு இளைப்பாறுகின்றன.
அவற்றிற்கு, அவை மலையில் பயணப்படும் அளவுக்கு உடல் நலத்துடன் உள்ளதா? மருத்துவப் பரிசோதனைகளும் அங்கேதான் செய்யப்படுகிறது. யானைகள் கொண்டு போகப்படும் போதும், 48 நாள் புத்துணர்ச்சி முகாம் முடிந்து வரும்போதும் மேட்டுப்பாளையத்திலேயே எடை போடப்படுகிறது.
தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு எந்த சிரமமும் இல்லாமல் சீக்கிரமே லாரிகளில் கொண்டு வரப்பட்டு விடுகின்றன யானைகள். ஆனால் மேட்டுப்பாளையத்திலிருந்து முதுமலைக்கு கொண்டு போவதில்தான் 8 மணி நேரத்திற்கு மேல் காலவிரயமும், அவை குலுங்கி, இடித்து பயணிப்பதிலும் மிகச் சிரமமும் ஏற்படுகிறது. எனவே இந்த முகாமை மேட்டுப்பாளையத்திலேயே நடத்தலாம்' என்றெல்லாம் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் முணுமுணுப்புகள் எழுந்த வண்ணம் இருந்தது.
அதையே சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்களும் சுட்டிக்காட்ட ஆரம்பித்தனர். ஆனால் அதற்கு இடமே அளிக்காத வண்ணம் 2006-ம் ஆண்டில் திமுக ஆட்சி அமைந்தது 5 ஆண்டுகள் யானைகள் முகாமும் நடக்கவில்லை. 2011-ல் அதிமுக ஆட்சி அமைந்ததும், உடனே கோயில் யானைகள் முகாமிற்கும் ஆளாய் பறந்தனர். வழக்கம் போல் முகாம் முதுமலையிலேயே நடத்தப்பட திரும்ப பழைய சர்ச்சைகளோடு புதுப்பிரச்சினைகளும் கிளம்பின.
பொதுவாக அதுவரை நடந்த யானைகள் புத்துணர்ச்சி முகாம்களில் ஐம்பத்தி நான்கு முதல் 63 யானைகள் வரை கலந்து கொண்டிருக்கின்றன. 2012-ம் ஆண்டிலோ மிகவும் குறைந்து 37 யானைகள் மட்டுமே முதுமலைக்கு வந்தன. 'நோய்க்கிருமிகள்' விவகாரத்தில் கோயில் யானைகள் முகாமை முதுமலையில் நடத்தக்கூடாது என்றெல்லாம் கோரிக்கை விடுத்திருந்த சூழல்வாதிகள் நீதிமன்றத்திற்கும் சென்றிருந்தனர் என்பதை ஏற்கெனவே கண்டோம். இதையெல்லாம் பொருட்படுத்தாமலே அதற்கு முந்தைய கால ஆட்சிகளில் அதிமுக அரசு கோயில் யானைகள் முகாம்களை நடத்தியது.
இந்த சூழ்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு முதுமலைக்கு ஆண்டாள் என்கிற கோயில் யானை நோய்த்தொற்று காரணமாக அதைக் குணப்படுத்த முதுமலை கொண்டு வரப்பட்டது. (பொதுவாக இதுபோன்ற நோய்வாய்ப்பட்ட யானைகள் சாதாரண காலங்களிலும் தனிப்பட்ட முறையில் முதுமலைக்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டு புத்துணர்வு கொடுத்து திரும்ப கோயில்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம்) அதை முதுமலையில் வைக்கக் கூடாது. இதனால் அதனிடம் உள்ள நோய்த்தொற்றுகள் மற்ற வனவிலங்குகளுக்கும், முகாம் யானைகளுக்கும் பரவிவிடும் என்று அதன்மீது தனிப்பட்ட முறையிலும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து 'நோய்த்தொற்று உள்ள யானைகளை முதுமலையில் வைக்கக் கூடாது!' என்று கோர்ட்டும் உத்தரவு வழங்கியிருந்நது.
அந்த உத்தரவை சுட்டிக்காட்டி 2011 டிசம்பரில் முதுமலையில் கோயில் யானைகள் முகாம் நடத்தக் கூடாது. தேவைப்பட்டால் வேறு இடத்தில் அரசு நடத்தட்டும் என்று கோர்ட்டில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மனு செய்திருந்தனர். அதன் பேரில் நீதிமன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்க, 'வனவிலங்குகள், மற்றும் வனத்துறை முகாம் யானைகளுக்கும், இதற்கும் துளிகூட சம்பந்தமில்லாத பகுதியிலேயே கோயில் யானைகள் முகாம் நடத்தப்படுகிறது!' என்று கோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதையடுத்து, 'கோயில் யானைகள் முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு பின்பே முதுமலை முகாமுக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்ற நிபந்தனையுடன் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்திருக்கிறது நீதிமன்றம். எனவே இந்த இக்கட்டான சூழலை சரிப்படுத்த, தமிழக அரசு ஒவ்வொரு கோயில்களிலும் உள்ள அந்தந்த கோயில் யானைகளை அந்தந்த இடங்களிலேயே நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை மருத்துவர்களை கொண்ட பரிசோதனை செய்தது. அதற்கு பிறகே யானைகளை முகாமுக்கு அனுப்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால் வரவிருந்த 45 கோயில் யானைகளில் 8 யானைகளுக்கு நோய்த் தொற்று காணப்பட்டது. எனவே மற்ற 37 யானைகள் மட்டுமே அந்த ஆண்டு முகாமில் பங்கேற்றது.
இந்த சிக்கல்களை எல்லாம் களையவே அடுத்த ஆண்டு 2012- 2013 முதல் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வன பத்திரகாளியம்மன் கோயிலை ஒட்டிய பவானி ஆற்றின் கரையில் கோயில் யானைகள் நல வாழ்வு முகாம் மாற்றப்பட்டது. அப்போதிருந்து தமிழக அரசின் கோயில் யானைகள் முகாமிற்கும், சூழலியலாளர்களுக்கும் எதிரும் புதிருமான நிலை ஏற்பட்டு வில்லங்கங்களும் வர ஆரம்பித்தன.
முதுமலை என்பது காட்டு யானைகளின் புகலிடம் (சரணாலயம்) என்றால் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பகுதி காட்டு யானைகளின் வழித்தடங்களில் முக்கியமான பகுதி. இந்தியாவிலேயே ஆசிய யானைகள் வழித்தடங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளது. அதில் 11 இடங்கள் முக்கியமானது. அதில் ஒன்றுதான் இது என்பதை அத்தியாயம் 51ல் கல்லாறு-கெத்தனாரி வலசையில் விரிவாக காட்டியிருந்தோம்.
முதுமலையில் எப்படி நோய்த் தொற்று காட்டு யானைகளுக்கு ஏற்படுமோ, அதே மாதிரிதான் இங்கே கோயில் யானைகள் முகாம் ஏற்படுத்தினாலும் நடக்கும். தவிர, இங்கே வலசை போகிற யானைகள் மூர்க்கம் மிக்கதாகவும், இனச்சேர்க்கை செய்யக்கூடிய பருவத்திலும் இருக்கிறது. எனவே அந்த யானைகள் இந்த கோயில் யானைகள் முகாமிற்குள் புகுந்து பெரும் பாதகம் நடக்கும் என்று சர்ச்சைகள் இங்கும் கிளம்பியது.
அதைவிட அந்த ஆண்டு நடந்த முகாமில் அபசகுனம் போல் முதலாவதாக வந்த ராமேஸ்வரம் கோயில் யானை முகாம் தொடக்கவிழாவுக்கு முன்பே இறந்தது.
அந்த முகாமுக்கு வந்த 35 யானைகளில் ராமேஸ்வரம் கோயிலின் 60 வயது 'பவானி'யும் ஒன்று. இது மேட்டுப்பாளையம் முகாமுக்கு வந்தவுடன் லாரியிலிருந்து கீழே இறக்கி, முகாம் கொட்டகைகள் உள்ள திடலில் இறங்கி நடந்துள்ளது. அப்போதே அது சோர்வாகவே நடந்து வந்தது. அதன் களைப்பு தீருவதற்காக முகாமையொட்டிய பவானி ஆற்றில் பவானியை குளிக்க இறக்கினர் பாகன்கள். அப்போது மாலை 6 மணி. தண்ணீரில் இறங்கிய பவானி அப்படியே மயங்கி விழுந்தது. அதை பாகன்கள் மூலம் எழுப்ப முயற்சித்தும் முடியவில்லை.
பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு இரவு 10 மணியளவில் பெல்ட் கட்டித்தான் பவானியை வெளியே எடுத்தனர். மயங்கிய நிலையிலேயே இருந்ததால் முகாமுக்கு அருகில் உள்ள அரசு மர கிடங்குக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் அது இறந்து விட்டது. யானையை 12 மணி நேரத்துக்கும் மேலாக லாரியில் நிற்க வைத்து கொண்டு வந்ததால்தான் அதன் உடல் பலவீனப்பட்டது. ஆற்று தண்ணீரில் இறக்கியதும் உடல்நிலை மேலும் மோசமாகி ஜன்னி கண்டே இறந்திருக்கிறது. அதை அபசகுனமாக கருதி உடனடியாக தகவல் தெரிவிக்காத அதிகாரிகள் அடுத்தநாள் முகாம் தொடக்க விழா முடிந்த பிறகே அறிவித்தனர்.
அதன்பிறகும் அங்கு காட்டு யானைகள் படையெடுப்பும், அவற்றை முகாமிற்குள் நுழைந்து விடாமல் இருக்க, பட்டாசு வெடித்து விரட்டும் வைபவமும்தான் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பாகன்களாலும், வனத்துறையினராலும் நடத்தப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையோடு ஒரு வழியாக அந்த 48 நாட்கள் முகாம் நடந்து முடிய, அதன் தொடர்ச்சியாக சில மாதங்கள் கழித்து கோடநாட்டில் தங்கியிருந்த முதல்வர் திடீர் பயணமாக முதுமலை சென்றார். அங்கே காவேரி என்ற யானை அவரை முட்டித்தள்ளிய சம்பவமும் நடந்தது.
மீண்டும் பேசலாம்.
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago