'அரசியலில் வந்து வெற்றியடைய வேண்டும் என்று சொன்னால் சினிமா பெயர், புகழ், செல்வாக்கு மட்டும் இருந்தால் போதாது. அதுக்கு மேல் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அது மக்களுக்கு மட்டும்தான் தெரியும். எனக்கு சத்தியமாகத் தெரியாது!' எனப் பேசியதன் மூலம் தமிழகத்தில் மீண்டும் புதிய அரசியல் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
'தற்காப்பு முக்கியமல்ல; தன்மானமே முக்கியம்!' என்றும், 'ஆசையில் வரவில்லை; அன்பால் வருகிறேன்!' என்றும் அரசியல் அண்மையில் பஞ்ச் டயலாக் பேசிவந்த நடிகர் கமல்ஹாசனுக்கு இது பதிலடியாகவே ரஜினி ரசிகர்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
'தமிழக அரசியலில் மூத்தவரான கருணாநிதி கூட இந்த அளவுக்கு அரசியல் பொடி வைத்து பேச முடியுமா சந்தேகமே. அதையே தூக்கி சாப்பிட்டு விட்டார் எங்கள் தலைவர்(ரஜினி). இது ஆரம்பம்தான். இனி பாருங்கள், சரவெடிகள் பறக்கும்!' என்று அவர்கள் புளகாங்கிதப்பட்டு பேசத் தொடங்கியிருக்கின்றனர்.
உண்மையில் ரஜினி கமலுக்கு போட்ட சூடுதானா இது? அல்லது கட்சி தொடங்கும் எண்ணத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு பாஜகவிற்கு போக திட்டமிட்டுள்ளாரா? போர் வரட்டும் பார்க்கலாம் என்று மூன்று மாதங்களுக்கு முன்பு சொல்லிச் சென்றவர் இப்போது போர் வராமலே இப்படி பேச என்ன காரணம்? 'இப்போதைய பேச்சு ரஜினியின் அரசியல் மதிநுட்பத்தையே காட்டுகிறது!' என்கிறார்கள் அவரின் செயல்பாடுகளை கவனிக்கும் அரசியல் நோக்கர்கள்.
ரஜினியின் அரசியல் என்பது மற்ற அரசியல்வாதிகளைப் போன்றதல்ல. ஆன்மிகம் கலந்த நுட்ப மயமானது. பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவிப்பது போல் அரசியல் நோக்கர்கள், அரசியல் அனுபவஸ்தர்கள் யாரையும் கலந்தாலோசித்து எடுக்கும் முடிவு அல்ல. மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பது என்பது வெளியுலகுக்கானதே ஒழிய, முடிவு செய்வதை சுயமாகவே தெளிந்து தெளிகிறார் ரஜினி. அதற்கு அவரின் ஆன்மிகவாதிகளுடனான தொடர்பு துணை நின்றிருக்கிறது.
உதாரணமாக ரஜினிஷ் (ஓஷோ) தத்துவங்களில் ஊறித் திளைத்த ரஜினி, அந்த தத்துவ கோட்பாட்டில் ஒன்றான, 'அடக்கி வைக்கப்பட்ட ஆசை ஆபத்தானது. வெடித்து பீறிடக் கூடியது!' என்ற தன்மையையே அரசியலிலும் பயன்படுத்துகிறார்.
கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழகத்தில் அரும்பெரும் தலைவர்களாக சுடர்விட்டுக் கொண்டிருந்த நிலையில் நாம் கட்சி ஆரம்பித்தால் ஒன்றிரண்டு தொகுதி வெற்றியோடு காணாமல் போய்விடுவோம் என்பதை உணர்ந்தே இருந்தார். எனவேதான் அவர்களின் காலகட்டங்களில் அந்தந்த சமயங்களுக்கு ஏற்ப அரசியல் வாய்ஸ் (குரலாக) மட்டுமே கொடுத்து வந்தார். மூப்பனார் வந்தாலும், அவருக்குப் பின் வாசன் வந்தாலும், அதைத் தாண்டி மோடியும், அமித்ஷா வந்தாலும் அவர்களுக்கெல்லாம் வணக்கம் போட்டு வழியனுப்புவதிலயே குறியாக இருந்தார். எந்த இடத்திலும், எந்த கட்சிக்கும் போகும் முடிவை அவர் எடுக்கவில்லை.
இப்போது தமிழகத்தின் பிரதான தலைமையிடம் (கருணாநிதி, ஜெயலலிதா) வெற்றிடமான நிலையில் தனது வலிமையை சோதிக்கப் பார்க்க முடிவு செய்துள்ளார். அதற்கு முன்னேற்பாடாகவே முன்பு எப்போதும் இல்லாத அளவு அரசியல் பொடி வைத்து பேசினார். கட்சி ஆரம்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவரிடமிருந்த இந்த நுட்பமான அரசியல் போக்கை நிரூபிக்கும் வகையிலேயே தற்போதும் சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறப்புவிழாவிலும் அரசியல் பேசியுள்ளார் ரஜினிகாந்த் என்பது தெளிவாகிறது.
எப்படி?
சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா. அதில் சிவாஜியின் வெற்றிப்படங்கள் குறித்து பேசலாம். அவரின் குணநலன்கள் குறித்தும் கூறலாம். தான் சிவாஜி கணேசன் மீது காதல் கொண்டு சிவாஜி ராவ் பெயரில் சினிமாத்துறைக்கு வந்த காலங்களில் சிவாஜியை பார்த்த பார்வையை, அவர் மீதான கண்ணோட்டத்தை சொல்லலாம். அன்றைக்கு எப்படி எம்ஜிஆரும், சிவாஜிகணேசனும் திரைவானில் மின்னி சுடர்விட்டார்களோ, அதற்கு முன்னர் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் சுடர்விட்டதை கூறியிருக்கலாம். அதே நகர்வில் சிவாஜிகணேசனுக்கு இணையாக நடிப்பில் சிகரமாக இருந்து வரும் கமல்ஹாசனை மேற்கோள் காட்டியிருக்கலாம்.
இதுபோல ஆயிரம் வெற்றிகரமான விஷயங்களை விட்டுவிட்டு, சிவாஜி கணேசனின் அரசியல் தோல்வி குறித்து இங்கே எதற்குப் பேச வேண்டும். அதில்தான் ரஜினியின் அரசியல் தந்திரமும், சூட்சுமமும் அடங்கியிருக்கிறது. அதுவும் எப்படி அதை எடுத்தாள்கிறார் பாருங்கள்.
''சிவாஜிகணேசன் ஒரு நடிகராக இருந்திருந்தால் மட்டும் கண்டிப்பாக அவருக்கு சிலை, மணிமண்டபம் அமைத்திருக்க மாட்டார்கள். அவர் நடிப்புத்துறையிலிருந்து, தன் நடிப்பு ஆற்றலிலிருந்து வரலாறு படைத்த சுதந்திர போராட்ட வீரர்களையும், சுதந்திரத்திற்கு பாடுபட்ட சரித்திர புருஷர்களையும், அவர்களுடைய வரலாற்றையும் படமாக்கி கடைகோடி மக்கள் வரைக்கும் சென்றார். 'சிவபுராணம்', 'கந்தபுராணம்' மாதிரி படங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார். கடவுள் மறுப்புக் கொள்கை உச்சத்தில் இருந்த போதே நெற்றியில் விபூதி போட்டு தன்னுடைய நடிப்பு ஆற்றலை மட்டுமே நம்பி உச்சத்தை தொட்டவர் சிவாஜி கணேசன். எனவேதான் அவருக்கு இந்த மணிமண்டபம்!'' என்று சொல்லிவிட்டு,
''இது சினிமாத்துறை, அரசியல் துறை இரண்டும் கலந்த விழா. சிவாஜி நடிப்பில் மட்டுமல்ல, அரசியலிலும் அவரது ஜூனியர்களுக்கு ஒரு பாடத்தை சொல்லி கொடுத்துப் போயிருக்கிறார். அவர் அரசியலில் தனிக்கட்சி ஆரம்பித்து, அவர் சொந்தத் தொகுதியிலேயே தோற்றுப்போனார். அது அவருக்கு நடந்த அவமானம் அல்ல. அந்த தொகுதி மக்களுக்கு நடந்த அவமானம். இதில் ஒரு செய்தியை அவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அரசியலில் வந்து வெற்றியடைய வேண்டும் என்றால் சினிமா பெயர், புகழ், செல்வாக்கு மட்டும் போதாது. அதுக்கு மேல் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அது மக்களுக்கு மட்டும்தான் தெரியும். எனக்கு சத்தியமாக தெரியாது!'' என்கிறார். அதற்கு பிறகு வந்த வசனங்கள்தான் வெகு சாமர்த்தியமாக கமலை நோக்கி வீசப்படுகிறது.
''அது கமல்ஹாசனுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். தெரிந்து இருந்தாலும் அதை எனக்கு சொல்ல மாட்டார். ஒரு வேளை இரண்டு மாதத்துக்கு முன்பு கேட்டு இருந்தால் சொல்லியிருப்பாரோ என்னவோ. இல்லண்ணே, நீங்க திரையுலக மூத்த அண்ணன். நீங்க என்கிட்ட சொல்லணும். சொல்லுங்க. நான் உங்க தம்பி என்று சொன்னால், 'நீ என் கூட வா சொல்றேன்!'னு சொல்றார்!'' என்று ஒரே போடாய் போட்டும் விடுகிறார்.
இந்த பேச்சு கமலின் கடந்த கால அரசியல் பேச்சுக்கான எதிர்வினையா? கேலியா, கிண்டலா, நக்கலா? என்று கேட்பவர்கள், நிச்சயம் இது யதார்த்தமாக வந்து விழுந்த வார்த்தையாக கருதவேயில்லை. அதை அவரின் ரசிகர்களும் ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள். இந்த கூட்டத்தில் முன்னதாகவே பேசி அமர்ந்து விட்டார் கமல். ஒருவேளை ரஜினிக்கு அடுத்தபடியாக பேசியிருந்தால் அவருக்கு பதில் சொல்லுகிற மாதிரியான அரசியல் பொறி வார்த்தைகள் பறந்திருக்கலாம். அநேகமாக அடுத்த மேடையில் இதற்கு கமல் பதிலடி கொடுக்கலாம் என்றும் சொல்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். அவர்களில் சிலரிடம் மேலும் பேசியதில் உணர்ச்சி மயமான கருத்துக்களே வெளிப்பட்டன.
''இரண்டு மாதம் முன்பு நடந்த முரசொலி பவள விழாவில் மேடைக்கு செல்லாமல் வரிசையில் அமர்ந்து விட்டார் ரஜினி. அதுவே அந்த விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசனுக்கு ஒரு வாய்ப்பாக போய்விட்டது. விழா அழைப்பிதழ் தனக்கு கொடுக்கப்பட்ட போது, 'ரஜினி வருகிறாரா?' என்று கேட்டதாகவும், 'அவர் வருகிறார், ஆனால் மேடைக்கு வரமாட்டார். பார்வையாளர் வரிசையில் மட்டுமே அமர்வார்!' என்று சொன்னதாகவும், எனவே தானும் மேடைக்கு வராமல் ரஜினியுடனே அமர விரும்பியதாகவும், பிறகு அழைப்பிதழை பார்த்த பின்புதான் இந்த மேடையை எந்த அளவு மிஸ் பண்ண இருந்தோம்!' என்று உணர்ந்து கொண்டதாகவும் அந்த மேடையிலேயே குறிப்பிட்டார். அப்போது, 'இந்த மேடை நூற்றாண்டுகள், ஐம்பதாண்டுகள் பத்திரிகை தொழிலில் அனுபவம் கண்ட மேதைகள் அமர்ந்திருக்கும் மேடை. ஒரு காலத்தில் பத்திரிகை ஆரம்பித்து அது நிறுத்தப்பட்ட நிலையில் பத்திரிகையாளனாக வாழ்ந்த நானும் இந்த மேடையில் அமர, பங்கேற்க கிடைத்த வாய்ப்பென்பது எப்படிப்பட்டது!' என்றெல்லாம் கூறி புளகாங்கிதப்பட்டார்.
அதே மேடையில், 'எனக்கு தற்காப்பை விட தன்மானமே முக்கியம்!' என சொல்லி திராவிடம் குறித்தெல்லாம் விரிவாக பேசினார். அப்போதே ரஜினிக்கு அது அரசியல் சூடு போட்டதாகவே பட்டது. அதிலிருந்துதான் கமலின் அரசியல் பேச்சு மேடைக்கு மேடை, மீடியாக்கள் சந்திப்புக்கு சந்திப்பு வீரியம் பெற்று விளையாடியது. அவர் யாரைத் தாக்குகிறார் என்பது நீண்டகாலம் எங்களுக்கே புரிபடாத நிலையில் இருந்தது. கடைசியில் எங்கள் தலைவர் கட்சி தொடங்குவதற்கே அது சிக்கலை உருவாக்கியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
அந்த முரசொலி மேடையில் தலைவரும் ஏறியிருக்க வேண்டும். கமலுக்கு பதில் தந்திருக்க வேண்டும். அப்போது இல்லாவிட்டாலும் வேறு இடத்திலாவது அதற்கு எதிராக பேசியிருக்க வேண்டும் என்ற அழுத்தம் எங்களுக்குள் அப்போதிலிருந்தே இருந்து கொண்டே இருக்கிறது. அந்த அழுத்தத்திற்கு இப்போதுதான் சிகிச்சை தந்திருக்கிறார் ரஜினி. அதுவும் அழுத்தமாக, ஆழமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்!'' என்கிறார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி ரசிகர் மன்றத்தில் மாவட்டப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர்.
இதைப்பற்றி பேசும் மற்றொரு ரசிகர், ''அன்றைக்கு முரசொலி மேடையில் தலைவர் ரஜினி ஏறாமல் இருந்ததே நல்லது. அந்த மேடை திமுக தன் அரசியலுக்கு பயன்படுத்திட முயற்சித்த மேடை. அதை தெரிந்தே அந்த மேடையேறுவதை தவிர்த்தார் தலைவர். ஆனால் அங்கு கமல் மூலம் அப்படி ஒரு வலி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அந்த வலிக்கு மருந்திட்டு சிகிச்சையளித்து, பிறகு அதே வலியை கொடுத்தவருக்கு உணர்த்துவதுதானே ஆன்மிகம் கற்றுக் கொடுத்திருக்கும் கோட்பாடு. அதை இப்போது போட்டு உடைத்து விட்டார் ரஜினி. சினிமாவில் மிகப்பிரபலமடைந்து விட்டால் மட்டும் அரசியலில் ஜெயித்து விட முடியாது. மக்கள் அதையும் தாண்டி பல விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். அது ரஜினியிடம் இருந்ததால்தான் அன்றைக்கு கருணாநிதி, மூப்பனார், சோனியா காந்தி, வாஜ்பாய் முதற்கொண்டு, இன்றைக்கு அமித்ஷா, மோடி வரை இவரை பச்சைக் கம்பளம் விரித்து வரச் சொல்லிக் காத்திருக்கிறார்கள். ஆனால் அங்கே போனால் என்ன ஆவோம் என்ற சிந்தனை கூடவா இவருக்கு இல்லாமல் இருக்கும்.
சரி, அப்போதே கட்சி ஆரம்பித்திருந்தால் என்ன வாகியிருக்கும்? கருணாநிதி, ஜெயலலிதா விளையாடும் அந்த அரசியல் ஒலிம்பிக் ஓட்டக்காரர்களுடன், அவர்கள் மைதானத்தில் புத்தம்புதிதாக விளையாடுவது எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும்? அது விஜயகாந்தின் தேமுதிக போலவே ஆக்கியிருக்கவும் வாய்ப்புண்டு அல்லவா? அது எல்லாம் புரிந்தேதான் அமைதி காத்திருக்கிறார் ரஜினி. இப்போது எல்லாம் கனிந்து வரலாம் என்ற சூழலில் இப்படி கமல் மூலம் புதியதொரு சலசலப்பு வந்தால் சும்மாயிருப்பாரா? அது எதற்காக வந்தது? அது யாரால் வந்தது? அதன் பின்னணி சக்திகள் என்ன என்பதை தெளிந்து தெளியாமல் இருந்திருப்பாரா? எல்லாம் தெளிந்துதான் இப்போது இப்படி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினால் ஏற்படும் வலியை கூட கமலுக்கு ஏற்படுத்தாமல் பேசியிருக்கிறார் ரஜினி!''
என்ற சில ரசிகர்கள், இதே சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஒருவர் மேடையில் அமர்ந்திருந்த கமல், ரஜினியை குறிப்பிட்டு, 'தற்போதைய தமிழ் திரையுலகின் மக்கள் திலகமும், நடிகர் திலகமும்' என்று சுட்டிக் காட்டிப் பேசியதை சுட்டிக்காட்டி, ''அரசியலைப் பொறுத்தவரை எம்ஜிஆர்தான் ரஜினி; கமல் வெறும் சிவாஜி என்பதை அந்த அமைச்சரே சொல்லிவிட்டார். இதற்கு மேல் என்ன வேணும்?''என்று கேட்கவும் செய்தார்கள்.
கடைசியாக நாம் பேசிய கோவை மாவட்டத்தை சேர்ந்த ரஜினி மன்ற பொறுப்பாளர் ஒருவர், ''அரசியலில் முதிர்ச்சி பெற்ற கருணாநிதியை விடவும் சாதுர்யமான பேச்சு இப்போது ரஜினி பேசியிருப்பது. அதை முன்வைத்தே அவரின் அரசியல் நகர்வை கவனிக்க வேண்டும். ஏற்கெனவே செப்டம்பர் மாதம் ரசிகர்களை இரண்டாவது கட்டமாக சந்திக்கப் போவதாக அறிவித்திருந்தார் ரஜினி. கமல்ஹாசனின் இரண்டு மாத கால அரசியல் பேச்சு, அதில் கிடைத்த அனுபவங்கள் மூலம் அவர் தன் அரசியல் வியூகத்தை வேறு திசையில் மாற்றிக் கொண்டதாகவே அவருக்கு நெருக்கமானவர்களிடமிருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. அதை வைத்துப்பார்த்தால் ரசிகர்களுடனான அந்த சந்திப்பு இனி நடக்காது என்றே தோன்றுகிறது.
நேரடியாக தொடக்க விழா அரசியல் மாநாடு என நடத்தி விடவே வாய்ப்பு அதிகம்; அதற்கு தயாராக இருங்கள் என்றே அதில் விஷயங்கள் கசிகிறது. திடீரென்று ஒரு நாள் காலை எங்களுக்கு இப்படியொரு அழைப்பு வரும். எண்ணி சில நாட்களில் மாநாடும் நடக்கும். அது எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அப்போது மக்கள் உணர்வார்கள்!'' என்று ஆச்சர்ய தகவல்களை சொல்லிவிட்டு அகன்றார்.
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago