யானைகளின் வருகை 56: விஸ்கோஸில் கொலைப் பழிசுமந்த ஜீவன்கள்!

By கா.சு.வேலாயுதன்

 

அதிகாலை நேரம். ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த புதர்கள் அடர்ந்த மூடப்பட்ட தொழிற்சாலைக்குள் ஒருவன் செத்துக் கிடந்தான். அதை அந்தப் பக்கம் காலைக்கடன் கழிக்கச் சென்ற பொதுமக்கள் பலர் பார்த்தனர். முகமெல்லாம் ரத்தம் வடிந்து, மண்டை சிதறி, எங்கோ கொடூரமாக தாக்கப்பட்டு கொலையுண்டுதான் அவன் கிடந்தான். பார்த்தவர்கள் எல்லாம் நமக்கு எதுக்கு வம்பு என்றுதான் தெறித்து வேறு பக்கம் ஓடிப்போனார்கள். இப்படியொரு பிணம் இங்கே கிடக்கிறது என்ற தகவலைக் கூட யாரும் ஒருவருக்கொருவர் மூச்சு விட்டுக் கொள்ளவில்லை.

பொழுது புலர்ந்து சூரியன் உச்சிவானுக்கும் வந்து விட்டான். அந்த பிணம் அங்கே அப்படியேதான் கிடக்கிறதா? என்று அந்தப் பக்கமாய் போய் நோட்டம் விட்டவர்கள் ஆடிப்போய்விட்டனர். ஏனென்றால் போலீஸ் வரவில்லை. மோப்ப நாய் வரவில்லை. எந்த விசாரணையும் தொடங்கவில்லை. ஆனால் அங்கே கிடந்த பிணத்தை காணோம். அது கிடந்த தடயம் கூட இல்லாமல் துடைத்து விடப்பட்டும் விட்டது.

மறுபடியும் ஊருக்குள் இதுபற்றி கசமுசா பேச்சு கிளம்பியது. அந்தப் பேச்சும் வெகுநேரம் நீடிக்கவில்லை. திக்குக்கு ஒன்றாக ஊரைக்கடந்து போலீஸ் வேன்கள், வனத்துறை ஜீப்புகள், அதிகாரிகள் என அந்தப் பக்கம் வேகமெடுத்து சென்றனர். அந்த வாகனங்கள் எல்லாம் ஏற்கெனவே பிணம் கிடந்த பகுதிக்கு அப்பால் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் மரங்களடர்ந்த ஒரு பகுதிக்குச் சென்றன. அதிலிருந்து இறங்கினவர்கள் எல்லாம் அங்கே கிடந்த பிணத்தை தடய சோதனைக்கு உட்படுத்தி, நீள்வட்டங்கள், சதுர வட்டங்கள் சாக்பீஸால் வரைந்து, பிளிச்சிங் உள்ளிட்ட பவுடர்களை போட்டு ஆராய ஆரம்பித்தனர். பொதுமக்களையும் விசாரிக்க ஆரம்பித்தனர்.

''ஆமாம் ராத்திரி முழுக்க ஏழு யானைகள் கூட்டம் ஒன்று இங்கே நின்றது. அதனிடம்தான் இவர் மாட்டியிருக்கிறார். யானை பிளிறல் சத்தம் கூட கேட்டது. நாங்கள் யாரும் வெளியில் வரவில்லை. அப்புறம் பார்த்தால் இந்தக் காட்டுக்குள் இவர் இப்படி செத்துக் கிடக்கிறார்!'' என்று சாட்சியங்கள் கொடுக்க ஆரம்பித்தனர். இறந்தவனின் மனைவி, குழந்தைகள் வந்தார்கள். கதறி அழுதார்கள். அத்தனை பேருமே அந்தப் பக்கம் சுற்றித்திரியும் காட்டு யானைகளை சபித்துக் கொட்டினார்கள்.

ஆனால் அதிகாலையில் அந்த தொழிற்சாலை புதரில் ரத்த விளாறுடன் கிடந்த ஒரு ஆளின் உடலை பார்த்த ஊரின் ஒரு பகுதி மக்கள் இந்த காட்சியையும் பார்த்துவிட்டு, 'இப்படியும் நடக்குமா?' என்று மூக்கின் மீது விரல் வைத்தனர். சாட்சாத் அதிகாலை நேரம் அங்கே எந்த மனிதன் பிணமாகக் கிடந்தானோ, அதே ஆளின் உடல்தான் இரண்டு கிலோமீட்டர் தள்ளி இங்கே யானைகள் நடமாடும் பகுதியில் கிடந்தது.

'ஒரு விஷயத்தை மூடி மறைக்கணும்னா அதை கிணத்துல போடு, அல்லது கமிஷனை போடு!' ன்னு கிண்டலாக மறைந்த எழுத்தாளர் கல்கி சொல்வார். ஆனால் இங்கே யாரோ செய்த கொலைகளை காட்டு யானைகள் பழி சுமந்து திரிந்தது. 'யானை வந்து மறுக்கப் போகுதா? இல்லை போலீஸ்தான் காட்டு யானையை கைது செய்யப்போகிறதா?' என்ற எண்ணம் வலம் வந்த இடம் சிறுமுகை விஸ்கோஸ் தொழிற்சாலை.

ஒரு நகரிலோ, கிராமப் பகுதியிலோ ஒரு தொழிற்சாலை வந்தால் அதனால் சூழல்கேடு வரும். அதில் காடுகள் பாதிக்கப்படும். நீர்நிலைகள் கெடும். வனவிலங்குகள் தன் திசை மாறி ஊருக்குள் வரும் என்பது யதார்த்தம். ஆனால் இந்த விஸ்கோஸ் தொழிற்சாலையின் நிலை தலைகீழ். இந்த தொழிற்சாலை செயல்பட்ட 40 ஆண்டு காலத்தில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வரவில்லை. இந்த ஃபேக்டரியை முகர்ந்து கூட பார்க்கவில்லை. ஃபேக்டரி மூடப்பட்ட பின்பு, அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் எல்லாம் புலம் பெயர்ந்த பிறகுதான், இங்கே காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்தன. குறிப்பாக காட்டுயானைகள் மீது கொலைப்பழிகளும் விழுந்தன.

எப்படி? அது ஒரு பெரிய வரலாறு. அதை சுருக்கமாக காண்போம்.

1959ல் மேட்டுப்பாளையம் நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுமுகை கிராமத்தில் தொடங்கப்பட்டது விஸ்கோஸ் ஆலை. மரக்கூழ் அட்டை, அதிலிருந்து செயற்கைப் பட்டு நூல் எல்லாமே சுயமாக தயாரித்து வடமாநிலங்களுக்கும் அனுப்பி வந்தது. அந்த காலகட்டத்தில் அரசு ஊழியர்களை விட, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்களை விட பன்மடங்கு ஊதியமும் சலுகைகளை பெற்று வந்தவர்கள் கோவை மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர்கள். அதைவிட அவர்களுக்கு வருடம்தோறும் அளிக்கப்பட்டு வந்த தீபாவளி போனஸ் என்பது யாருக்குமே கிடைக்காதது.

அந்தக் காலத்தில் தோட்டங்காடு, அலுவலக வேலை என உள்ளவர்களை விட பஞ்சாலைத் தொழிலாளி மாப்பிள்ளை என்றால் மட்டுமே மவுசு. அந்த அளவுக்கு நகை, சீதனம் செய்து பெண் கொடுப்பார்கள். அதை விட பல மடங்கு சம்பளமும், போனஸூம் இன்னபிற சலுகைகளும் கொடுக்கப்பட்ட ஃபேக்டரி இந்த விஸ்கோஸ் ரேயான் பாக்டரி. 'வேலை செஞ்சா விஸ்கோஸ் கம்பெனியில் வாட்ச்மேன் வேலையாவது செய்யணும்!' என்று பெருமை பொங்க மக்கள் பேசிய நிறுவனம் இது. அப்படிப்பட்ட இந்த நிறுவனம் தன் செயற்கை பட்டு உற்பத்தியை 90 சதவீதம் குஜராத் மாநிலத்திற்கே அனுப்பி வந்தது.

அங்கு 90களில் ஏற்பட்ட நிலநடுக்கம் சேலைத் தயாரிப்பு மில்களை நலிவு நிலைக்கு கொண்டு சென்று விட்டது. அதனால் இங்கே தயாரிக்கப்பட்ட ரேயான், மரக்கூழ் அபரிமிதமாக தேக்கம் அடைந்து விட்டது. அது ஒரு பக்கம் இடியாக ஃபேக்டரிக்கு விழ, இன்னொரு பக்கம் சூழல் பிரச்சினை.

இந்த ஆலையை ஒட்டியே பவானி ஆறு செல்கிறது. அதற்கடுத்ததாகவே பவானி சாகர் அணையும் அமைந்துள்ளது. அதில் இந்த ஆலைக்கழிவுகள், குறிப்பாக மரக்கூழ் தயாரிப்பில் வெளியாகும் கழிவுநீர் கலக்க சூழல் பிரச்சினை எழுந்தது. இதனால் சுற்றுப்புற கிணறுகள், நீர்நிலைகள் எல்லாம் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்ல, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அதிகாரிகள் வழிகாட்டுதல் தர, அப்படி அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களும் எண்பது கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டன.

அதுவும் முழுமையான டிஸ்சார்ஜ் நீரை வெளியேற்றாமல் இருக்க நிறைய பிரச்சினைகளை ஆலை சந்தித்தது. ஒரு கட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட நீரைக்கூட ஆற்றில் விடக்கூடாது; ஃபேக்டரி தன் நிலத்திலேயே விட்டுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவுகள் வர, அதற்கென 800 ஏக்கர் நிலத்தை நிர்வாகம் வாங்கியது. அதில் குழாய்கள் மூலம் சுத்திகரித்த நீரை கொண்டு போய் தென்னை, வாழை உள்ளிட்ட பல்வேறு விவசாயம் செய்ய ஆரம்பித்தது ஃபேக்டரி.

அந்தக் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்க, திரும்பவும் பொங்கினர் விவசாயிகள். அதையும் நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஃபேக்டரி நிர்வாகத்திற்கு. இந்த எதிர்பாராத வில்லங்கங்களால் ஆலை முழுமையாக நலிவுற்றது. தொழிலாளர்களுக்கு 40 சதவீதம் வரை போனஸ் கொடுத்து வந்த நிர்வாகம், ஒரு கட்டத்தில் (2000 ஆம் ஆண்டில்) ஃபேக்டரிக்கு மின்கட்டணம் (ரூ.8 கோடி) செலுத்த முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நலிந்த ஆலை பட்டியலிலும் கொண்டு வரப்பட்டு, ஒரு கட்டத்தில் ஆலையே மூடப்பட்டது.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்கு போராட ஆரம்பித்தனர். கம்பெனியை ஏலத்தில் விட்டு, விற்று தொழிலாளர்களுக்கான நஷ்ட ஈடு, வைப்பு நிதி ஆகியவற்றை தர நிர்வாகம் உத்தேசித்தது. இதற்கான பூர்வாங்க வேலைகள் அரசு தரப்பிலும், நிர்வாக தரப்பிலும் நடக்க ஆண்டுகள் பல கடக்க, ஃபேக்டரி முழுக்க புல், பூண்டுகள் முளைத்து புதர்காடுகளாக மாறின.

அதையடுத்து இந்த ஃபேக்டரியின் பின்புறம் ஓடும் பவானி ஆற்றில் இரவு நேரங்களில் பரிசல்களாக வர ஆரம்பித்தன. அந்த பரிசல்கள் திரும்பிப் போகும்போது ஃபேக்டரியில் உள்ள விலைமதிக்க முடியாத தாமிரம், செம்பு, பிளாட்டின பொருட்கள் எல்லாம் ஏற்றப்பட்டே திரும்பின. பரிசல்களில் எல்லாம் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களை ஒப்பிடத்தக்க கொள்ளையர்களே நிறைந்திருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு மோதிக் கொண்டதில் பலர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் பவானி ஆற்றில் மர்மப் பிணங்களாக மிதந்தன. புதர்காடுகளுக்குள் போடப்பட்டு நாற்றமெடுக்கவும் செய்தன.

இந்த கொள்ளையர்களின் மாமூல் தொகை மூலம் பல போலீஸ்காரர்கள், போலீஸ் அதிகாரிகள், இன்னபிற அரசு அலுவலர்கள், சட்ட ஆலோசகர்கள் பெரும் கோடீஸ்வரர்கள் ஆனார்கள். பாவம் இந்த நேரத்தில் இங்கே உட்புகுந்து இளைப்பாறிய காட்டு யானைகள்தான் கொலைப்பழிகள் சுமக்கத் தொடங்கின.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்