யானைகளின் வருகை 66: எப்படி அகலும் சூழல் அவலம்?

By கா.சு.வேலாயுதன்

2013- 2014 ஆம் வருடம் மேட்டுப்பாளையம் கோயில் யானைகள் நலவாழ்வு புத்துணர்ச்சி முகாம் நடந்து முடிந்து, நஞ்சன் இறந்த அதே கால கட்டம். முகாம் நடந்த தேக்கம்பட்டி, விளாமரத்துார் வனப்பகுதிகளில் சூழல் கேடு தலைவிரித்தாடியது.

வனங்களைக் காக்கவேண்டிய வனத்துறையினரே இப்படி மருத்துவக்கழிவுகளை வனங்களில் விட்டுச் சென்றுள்ளனரே. இது நியாயந்தானா? என்றும் இப்பகுதி கிராம மக்களிடம் கேள்விகள் புறப்பட்டது.

வேறொன்றுமில்லை. வனத்துறை யானைகள், கோயில் யானைகளை வைத்து நடத்தப்பட்ட விளாமரத்தூர், தேக்கம்பட்டி பகுதிகளின் நடுவே பவானி ஆறு ஓடுகிறது. இதன் கரைகளில்தான் இந்த யானைகள் முகாம் நடந்தது என்பதையும் ஏற்கெனவே கண்டோம். இந்தப் பகுதிகளில் காட்டு யானைகள் மட்டுமன்றி மான்கள், காட்டுப்பன்றிகள், காட்டு எருமைகள், கரடிகள், நரிகள், கழுதைப்புலிகள், சிறுத்தைகள் என ஏராளமான வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க வருகின்றன. இங்கே மனிதர்களுடன் இரண்டறக் கலந்து பழகிய கோயில் யானைகளைக் கொண்டு வந்தால் வனவிலங்குகளுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் சொல்லித்தான் இங்கே யானைகள் நலவாழ்வு புத்துணர்ச்சி முகாம் நடத்தவும் எதிர்ப்பு தெரிவித்தனர் சூழலியாளர்கள். ஏற்கெனவே கோர்ட்டுக்கும் சென்றிருந்தனர்.

அதையும் மீறித்தான் தமிழக அரசு இங்கே முகாமை நடத்தி முடித்தது. யானைகளும் முகாம் முடித்து (மதம் பிடித்திருந்த நஞ்சன், பாரி தவிர) அதனதன் இருப்பிடம் சென்று சேர்ந்தன. ஆனால் அந்த முகாமில், 48 நாட்களுக்கும் யானைகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி (சிரிஞ்ச்), மருந்து பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை அகற்றாமல் அப்படியே விட்டுச் சென்றிருந்தனர் ஊழியர்கள். குறிப்பாக காட்டு யானைகள் அதிகம் நடமாடும் விளாமரத்துார் வனப்பகுதியில் இவை ஆயிரக்கணக்கில் குப்பை மேடுகளாக காட்சியளித்தன. அதை அக்கம்பக்கம் உள்ள கிராமத்து சிறுவர்கள், பள்ளிக் குழந்தைகள் எடுத்து வந்து விளையாட்டுப் பொருட்களாக விளையாடவும் தொடங்கினர். தவிர, பவானி ஆற்றில் இந்தக் கழிவுகள் சேகரமாவதால் பில்லூர் அணையில் நீர் திறந்து விடப்படும்போதெல்லாம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரப்பகுதி பவானி ஆற்றோரக் கிராமங்களின் கரையோரங்களில் பரவிக் கிடந்தன.

தேக்கம்பட்டி, விளாமரத்தூர், வேப்பமரத்தூர், நெல்லித்துறை, வனபத்திரகாளியம்மன் கோயில் துவங்கி மேட்டுப்பாளையம் தாண்டியும் கூட (சுமார் 15 கிலோமீட்டர் தொலைவு) இந்த மருத்துவக் கழிவுகள் ஆற்றின் கரையோரங்களில் கிடந்தது. அங்குள்ள கிராமத்து மக்கள் இந்த நீரைத்தான் குடிநீராக பயன்படுத்துகின்றனர். துணி துவைக்க ஆற்றில் இறங்குகிறார்கள். அதில் இந்த மருத்துவக் கழிவுகள், ஊசி கிடந்து காலைப் பதம் பார்க்கவும் செய்துள்ளன. மனிதர்களுக்கு பயன்படுத்தும் ஊசியைவிட யானைகளுக்கு பயன்படுத்தப்படும் ஊசியும் மருந்தும் மிகப் பெரியது. அது காலில் ஏறுவது ஒரு வகை ஆபத்து என்றால், அதையே சிறுவர்கள் எடுத்து விளையாடுவது அதை விட ஆபத்தல்லவா? என பொங்க ஆரம்பித்தனர் மக்கள்.

சூழல் ஆர்வலர்களோ, ''முகாமில் வந்து தங்கிய யானைகளுக்கு காசநோய், பாதரோகம், குடற்புழு நீக்கம், உடலில் ஏற்பட்ட கொப்பளங்களுக்கு எல்லாம் மருத்துவம் நடந்ததாக சொல்கிறார்கள். அதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களில் அந்த கிருமிகள் இருக்காதா? இந்த மருத்துவக் கழிவுகள் மட்டும் முகாம் நடந்த சுமார் 5 ஏக்கர் பரப்பில் மலிந்து கிடக்கிறது. இதை அள்ளிச்செல்ல ஒப்பந்ததாரர்களை முகாம் நடக்கும் நாட்களிலேயே நியமித்திருந்தார்கள், அவர்கள் சரியாக அள்ளாமல் விட்டுச் சென்றதால் இந்த நிலை. வனத்துறையினர்தான் சுற்றுச் சூழலை காப்பாற்ற வேண்டியவர்கள். அவர்களே இப்படி இருந்தால் எப்படி?'' என கேள்வி எழுப்பினர்.

நாம் சென்ற போதும் இங்கே காடெல்லாம் மருத்துவக் கழிவுகளாக காணப்பட்டது. இது செய்தியாக வெளிவர உடனே பதறியடித்து இரண்டு மூன்று நாட்களில் காட்டையே சுத்தம் செய்தனர் வனத்துறை ஊழியர்கள். அமெரிக்க குப்பை என்றில்லை, உள்ளூர் தொழிற்சாலைக் கழிவுகள், இப்படி முகாமில் விடப்பட்ட மருத்துவக் கழிவுகள் பற்றியெல்லாம் ஊடகங்களில் செய்தியானால் மட்டும் அக்கறை எடுத்து வேக, வேகமாக நடவடிக்கை எடுப்பதும், அப்படியில்லா விட்டால் அதை கண்டு கொள்ளாமல் விடுவதும்தான் நகராட்சி, வனத்துறை, வருவாய்த்துறை, அறிநிலையத்துறை என வரும் அரசு அலுவலர்களின் பணியாக இன்றளவும் இருந்து வருகிறது. அதுதான்

இப்படிப்பட்ட போக்கு மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் சுற்றித்திரியும் வனவிலங்குகளுக்கு மட்டுமல்லாது, இப்பகுதி நகரத்தில் வாழும் மக்களுக்கும் கூட நோய்த் தொற்றுகளை மேலும், மேலும் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதன் அடியாழத்தை கேட்டால் யாவருக்கும் மூச்சிரைக்கும்.

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் உருவாகி, கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையை அடைந்து, பின்னர் சமதளப் பகுதியை வந்தடைகிறது கோவை, ஈரோடு மாவட்டங்களின் ஜீவநதியான பவானி.

மலைக்காடுகள் வழியே பல கி.மீ. தூரம் பயணிக்கும் இந்த நதி, மக்கள் நெருக்கம் மிகுந்த மேட்டுப்பாளையம் நகரை வந்தடையும் வரை மட்டுமே அதன் இயற்கையான தூய்மை நீடிக்கிறது. அதன் பின்னர் சுமார் 1.75 லட்சம் மக்கள் தொகை கொண்ட மேட்டுப்பாளையம் நகரின் ஒட்டுமொத்தக் கழிவு நீரும் எந்தவித சுத்திகரிப்பும் செய்யப்படாமல், நேரிடையாக இந்த ஆற்றில் விடப்படுகிறது. நகர மக்கள் பயன்படுத்தும் அனைத்து சாக்கடைக் கழிவுகளும் பவானியில் கலக்கிறது. இப்படி, பவானியின் முகப்புகளில் 24 இடங்களில் கிளை வாய்க்கால்களாக சாக்கடைகள் கலக்கின்றன என புள்ளிவிவரம் சொல்கின்றனர் இந்நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர்கள். அது மட்டுமா? நகராட்சியின் 33 வார்டுகளில் 30 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடைகளில் ஒரு கடைக்கு தினசரி 10 ஆயிரம் பிளாஸ்டிக் டம்ளர்கள் குப்பையில் போடப்படுகின்றன. இப்படி, ஒரு நாளைக்கு சேரும் சுமார் 4 லட்சம் பிளாஸ்டிக் டம்ளர்கள் பவானியில் சங்கமிக்கின்றன.

வெளிநாட்டு, உள்நாட்டு மக்கும், மக்காத கழிவுகளை கப்பல்கள், கன்டெய்னர்கள் மூலம் தருவித்து காகித அட்டை தயாரிக்கும் ஒரு பிரம்மாண்ட கம்பெனி வெளியேற்றும் கழிவுகளும் பவானியில்தான் கலக்கின்றன. டெர்ரி துணிகள், டர்க்கி டவல்கள், ஜீன்ஸ் துணிகள் தயாரிக்கும் இரண்டு பெரிய கம்பெனிகளும் சாய, சலவைப்பட்டறை கழிவுகளை பவானியில்தான் விடுகின்றன என்பதை ஏற்கெனவே கண்டோம்.

இவையெல்லாம் சேர்ந்து மேட்டுப்பாளையத்திலிருந்து கரூர், கொடுமுடி, கூடுதுறை சென்று காவிரி ஆற்றில் பவானி கலக்கிறது. மேட்டுப்பாளையத்தை தாண்டி சிறுமுகை பேரூராட்சி, சிக்கதாம்பாளையம், ஜடையம்பாளையம் ஊராட்சிகள் மற்றும் பவானி சாகர் அணையை சுற்றியுள்ள நூற்றுக்கணுக்கான கிராம மக்கள் இந்த மாசடைந்த பவானி நீரைத்தான் குடிநீராகப் பயன்படுத்துகின்றனர். இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் சுகாதாரக் கேட்டால் பாதிக்கின்றனர்.

இங்குள்ள நீரேற்று நிலையங்களில் குளோரின் கலந்து ஆற்றுநீரை குடிநீராக விநியோகித்த போதிலும் தூய்மையடைவதில்லை. இப்பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் குடிநீரை 2 நாட்கள் சேமித்து வைத்தாலே துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் இதைப் பயன்படுத்தும் மக்களுக்கு பலவித நோய்கள் வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள். ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களோ, ஆற்று நீரில் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ கூட முடிவதில்லை. ஆற்றில் இறங்கினால் தோல் அரிப்பு வந்துவிடுகிறது என புலம்பித் தீர்க்கின்றனர்.

இதை சரிசெய்யவேண்டுமானால், மேட்டுப்பாளையம் நகரின் அத்தனை கழிவுநீரையும் சுத்திகரிக்க வேண்டும். அதற்கு இங்கு ஓடும் பல்வேறு கழிவு நீர் வாய்க்கால்களையும் ஒன்றிணைக்க வேண்டும். நதியின் முகத்துவாரங்களில் 24 இடங்களில் கழிவுநீர் கலப்பதை அப்படியே 5 இடங்களாக சுருக்கி அந்த 5 மையங்களிலும் மையத்திற்கு ஒன்று வீதம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். இதற்கு ரூ.11 கோடி செலவாகும். அவ்வளவு பெரிய நிதியை செலவிடும் சக்தி இந்த சின்ன நகராட்சிக்கு இல்லை. இதற்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய நான்காண்டுகளுக்கு முன்பே பலமுறை அரசிடம் கோரிக்கையும் விட்டது நகராட்சி.

நகர மன்றத்திலும் தீர்மானங்கள் போட்டு அனுப்பினர் மக்கள் பிரதிநிதிகள், அனுமதி வரவில்லை. இதையே தொடர்ந்து வலியுறுத்தியதால் மூன்று வருடங்களுக்கு முன்பு மத்திய நீர்வள ஆதார பாதுகாப்பு மையத்தில் மனு கொடுத்து நிதி கோரும்படி ஆலோசனை வழங்கியது தமிழக அரசு. அதையும் செய்து பார்த்தனர் நகராட்சி நிர்வாகத்தினர். அதைத் தொடர்ந்து மத்திய நீர்வள ஆதார பாதுகாப்பு மைய அதிகாரிகளும் இப்பகுதிக்கு வந்து ஆய்வில் ஈடுபட்டனர். நகராட்சி அதிகாரிகளும் கோப்புகளை தூக்கிக் கொண்டு அவர்களுடன் அலைந்து திரிந்து உள்ள சூழல்களை விளக்கினர். அந்த அதிகாரிகள் சென்றது சென்றதுதான். அதைத் தொடர்ந்து பில்கேட்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட தன்னார்வ அமைப்பு ஒன்று இந்த பணியை தான் செய்து தருவதாக முன்வந்து ஆய்வில் ஈடுபட்டது. அதுவும் கிணற்றில் போடப்பட்ட கல்தான்.

இப்படி சூழல்கேட்டில் மாசுபட்டு தத்தளிக்கும் பவானி நீரைத்தான் இன்னமும் மக்களும் பருகுகிறார்கள். இந்த நதியையும், நதி சார் காடுகளையும், நகரத்தையும் சுற்றிச்சுற்றி வரும் வனவிலங்குகளும் இதே நீரைத்தான் குடிக்கிறது. பிறகு எப்படி அகலும் இங்குள்ள சூழல் அவலம்? எப்படி குறையும் வயிற்று உபாதைகளால் இறக்கும் யானைகளின் எண்ணிக்கை?

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்