குழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள்! - சாண்ட்விச் பர்கர்

என்னென்ன தேவை?

கோதுமை பிரெட் அல்லது சிறுதானிய பிரெட் - 4 துண்டுகள்

வெங்காயம் - 1

உருளைக் கிழங்கு - 3

கேரட் - 1

பீன்ஸ் - 4

பட்டாணி - 50 கிராம்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - அரை டீஸ்பூன்

மிளகாய்த் தூள், சீரகத் தூள் - தலா அரை டீஸ்பூன்

கரம் மசாலாத் தூள், இஞ்சி-பூண்டு விழுது - தலா அரை டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

வட்டமாக வெட்டிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி - சிறிதளவு

உப்பு, நெய், எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

உருளைக் கிழங்கை வேகவைத்து, மசித்துக்கொள்ளுங்கள். வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சீரகம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணியுடன் தேவையான உப்பு சேர்த்து மூடிவையுங்கள். காய்கள் வெந்தவுடன் உருளைக் கிழங்கை மசித்து சேருங்கள். பிறகு சீரகத் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து சிறு தீயில் வையுங்கள். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கிவையுங்கள். ஆறியதும் வாழை இலையில் கட்லெட்களாகத் தட்டிக்கொள்ளுங்கள்.

தோசைக் கல்லில் நெய் விட்டு, தட்டிய கட்லெட்டுகளைப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகும்படி சுட்டெடுங்கள். அதே தவாவில் மீண்டும் நெய் சேர்த்து பிரெட்டை டோஸ்ட் செய்துகொள்ளுங்கள். டோஸ்ட் செய்த பிரெட்டின் மேல் பொரித்த கட்லெட்டை வைத்து, மேலே வட்டமாக வெட்டிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி வைத்து மற்றொரு பிரெட்டால் மூடிவிடுங்கள். டூத் பிக்கால் இரண்டு பிரெட்களையும் இணைத்துவிடுங்கள். தக்காளி சாஸ் தொட்டுக்கொண்டு சாப்பிட, சுவை அள்ளும்.

விசாலா ராஜன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE