காய்கறி அடை

மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் பெரும்பாலான குழந்தைகள் க்ரீம் பிஸ்கட், சாட் வகைகள், பதப்படுத்தப்பட்ட நொறுக்குத் தீனி ஆகியவற்றைச் சாப்பிடுகிறார்கள். இவற்றில் இருக்கும் சுவையூட்டிகளும் மணமூட்டிகளும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும். வீட்டிலேயே சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் வகைகளைச் செய்யலாம்.

அவை தரத்துடன் இருப்பதுடன் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்கிறார் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த பிருந்தா ரமணி. நிமிடங்களில் தயாரித்துவிடக்கூடிய சில மாலை நேர நொறுக்குத் தீனி வகைகளை நம்முடன் இங்கே அவர் பகிர்ந்துகொள்கிறார்.

என்னென்ன தேவை?

வரகரிசி, தினை, கம்பு, சாமை அரிசி, குதிரைவாலி அரிசி,

சிவப்பரிசி - தலா கால் கப்

பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு - தலா அரை கப்

காய்ந்த மிளகாய் - 6

கேரட் - 1

மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் - தலா அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

முட்டைகோஸ் - சிறிதளவு

நறுக்கிய வெங்காயம், தேங்காய்த் துருவல் - தலா அரை கப்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசி, பருப்பு வகைகளைத் தண்ணீரில் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் அவற்றுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். கேரட், முட்டைகோஸைத் துருவி, அரைத்த மாவுடன் கலக்கவும். தேங்காய்த் துருவலையும் அதனுடன் சேர்க்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்துச் சூடானதும் சிறிதளவு மாவை எடுத்து ஊற்றித் தேய்க்கவும். இது கொஞ்சம் கனமாக இருக்கும். நடுவில் மாவுக் கரண்டியால் ஒரு ஓட்டை போடவும். அடையைச் சுற்றிலும், நடுவிலும் எண்ணெய் விடவும். தீயைச் சற்றுக் குறைத்துவைத்து நன்றாக வேகவிடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும். இதை வெங்காயச் சட்னி அல்லது தேங்காய்ச் சட்னியைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

எல்லா வகை அரிசியும் சேர்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எது கிடைக்கிறதோ அதை வைத்தும் செய்யலாம். ஒன்றிரண்டு அரிசி வகைகள் கிடைக்காவிட்டால் அவற்றுக்குப் பதில் கேழ்வரகு, கோதுமை சேர்த்துச் செய்யலாம்.

காய்களும் இவற்றைத்தான் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேங்காய் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE