தலைவாழை: நூல்கோல் உசிலி

By செய்திப்பிரிவு

மாசி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது. வெயிலில் அதிகமாக அலைந்து திரிந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதைச் சமப்படுத்த போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதுடன் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நூல்கோலில் நீர்ச்சத்துடன் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகளும் உள்ளன. இந்தக் காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். நூல்கோல் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை போரூரைச் சேர்ந்த ராஜகுமாரி.

என்னென்ன தேவை?

நூல்கோல் - 2
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கு
பாசிப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - கால் கப்
வரமிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உடைத்த உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

துவரம் பருப்பு, பாசிப் பருப்பு இரண்டையும் தண்ணீர் ஊற்றி வரமிளகாய் சேர்த்து அரை மணிநேரம் ஊறவையுங்கள். பிறகு தண்ணீரை வடித்துத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். இந்த மாவில் மஞ்சள் தூள் சேர்த்து இட்லி போல் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். சூடு ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றியெடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் நான்கு டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்துக்கொள்ளுங்கள். பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி அதனுடன் மெலிதாக அரிந்த நூல்கோலைச் சேர்த்து உப்பு போட்டு வதக்கி மூடி போட்டு வேகவிடுங்கள். இந்தக் கலவையை இடையிடையே திறந்து கிளறிவிடுங்கள். காய் நன்றாக வெந்த பிறகு உதிர்த்து வைத்துள்ள பருப்புக் கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறி, மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE