விதவிதமா மஞ்சள் சமையல்: மஞ்சள் ஊறுகாய்

By செய்திப்பிரிவு

தொகுப்பு: ப்ரதிமா

பசும்மஞ்சளைப் பொங்கல் பண்டிகையின்போதுதான் பலரது வீடுகளிலும் பார்க்க முடியும். அதுவும் சம்பிரதாயத்துக்கு ஒரு மஞ்சள் கொத்தை வாங்கிவைப்பார்கள்; பொங்கல் பானையில் கட்டுவார்கள். சிறந்த கிருமிநாசினியான மஞ்சளை அவ்வப்போது சமையலில் பயன்படுத்துவது நல்லது என்று சொல்வதுடன் பச்சை மஞ்சளில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையைத் தருகிறார் சென்னை போரூரைச் சேர்ந்த சுதா செல்வகுமார்.

என்னென்ன தேவை?

பச்சை மஞ்சள் (தோல் நீக்கித் துருவியது) - 1 கப், வெந்தயப் பொடி - 1 டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு, மிளகாய்த் தூள், மிளகு - தலா 1 டேபிள் ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், மஞ்சள் கடுகு (பொடித்தது) - 2 டேபிள் ஸ்பூன், சுக்குப் பொடி - 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - அரை மூடி

எப்படிச் செய்வது?

துருவிய மஞ்சளை ஈரத்தன்மை போகும்வரை காயவையுங்கள். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, மிளகு, பெருங்காயத் தூள் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். தீயைக் குறைத்து மிளகாய்த் தூளைப் போட்டுக் கிளறி அடுப்பை அணைத்துவிடுங்கள். இதை ஆறவிடுங்கள். ஈரமில்லாத அகன்ற பாத்திரத்தில் மஞ்சள் துருவல், உப்பு, சுக்குப் பொடி, மஞ்சள் கடுகுப் பொடி, வெந்தயப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறிவிடுங்கள். இதில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து நன்றாகக் கலந்துவிடுங்கள். ஆறிய நல்லெண்ணெய்யை சேர்த்துக் கிளறிவிடுங்கள். இதை நன்றாக மூடி மூன்று நாட்கள் அப்படியே வையுங்கள். இடை யிடையே ஊறுகாயைக் கிளறி விடுங்கள். கலவை நன்றாக ஊறியதும் சமையலுக்குப் பயன்படும் வினிகரைச் சிறிதளவு சேர்த்துக் கிளறினால் பச்சை மஞ்சள் ஊறுகாய் தயார். இது பத்து நாட்கள் வரை கெடாது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE