புதுச்சுவை புத்தாண்டு: பட்டர் சிக்கன் கிரேவி

கிறிஸ்துமஸ்ஸைத் தொடர்ந்து புத்தாண்டு வந்துவிடும். கடந்த ஆண்டில் எதையெல்லாம் செய்ய நினைத்தோமோ அதைச் செய்துமுடித்தோமா இல்லையா என்பதைப் பற்றிய சிந்தனை ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் புத்தாண்டுக்குப் புதிதாக என்ன சமைக்கலாம் என்ற சிந்தனை இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும்.

அந்தச் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகப் புதுப்புது உணவு வகைகளுடன் வந்திருக்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. புத்தாண்டு அன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.

பட்டர் சிக்கன் கிரேவி

என்னென்ன தேவை?

நாட்டுக் கோழி – அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 4 (வேக வைத்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்)
இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள், கரம்மசாலா தூள் - தலா கால் டீஸ்பூன்
பிரஷ் கிரீம், வெண்ணெய் - தலா 2 டீஸ்பூன்
பாதாம் பருப்பு – 10
தேங்காய் - கால் மூடி
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு
தாளிக்க:
பட்டை, கிராம்பு,
ஏலக்காய், சீரகம் - சிறிதளவு
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு
பொரிப்பதற்கு:
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
கடலை மாவு – அரை டீஸ்பூன்
தயிர் - 1 கரண்டி
மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - சிறிதளவு

எப்படிச் செய்வது?

கோழிக் கறியைக் கழுவி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கிவையுங்கள். ஆறியதும் பொரிப்பதற்குக் கொடுத்துள்ள மசாலாப் பொருட்களைச் சேர்த்துக் கிளறி அரை மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுத்துக் கொள்ளுங்கள். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளியுங்கள்.

பிறகு வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது இரண்டையும் சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்கி, தக்காளி, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். அரைத்த பாதாம்-தேங்காய் விழுதைச் சேர்த்துத் தேவையான அளவு உப்பையும் தண்ணீரையும் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். கெட்டியாகக் கொதித்ததும் பொரித்து வைத்துள்ள கறித் துண்டுகளைச் சேர்த்து வெண்ணெய், பிரஷ் கிரீம், மல்லித் தழை ஆகியவற்றைச் சேர்த்து இறக்குங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE