தலைவாழை: தித்திக்கும் தீபாவளி

By செய்திப்பிரிவு

தொகுப்பு : ப்ரதிமா

பட்சணங்கள் இல்லாத பண்டிகைகள் இல்லை. அதிலும் தீபாவளிப் பண்டிகையன்று வானில் வாணவேடிக்கை என்றால் வாயில் பலகார வேட்டை தடபுடலாக நடைபெறும். தீபாவளியன்று கடையில் பலகாரங்களை வாங்குவதைவிட வீட்டிலேயே பாரம்பரிய முறையில் செய்து ருசிக்கலாம் என்கிறார் கரூரைச் சேர்ந்த சரஸ்வதி அசோகன். பலகார வகைகளுடன் தீபாவளி லேகியத்தைச் செய்யவும் அவர் கற்றுத்தருகிறார்.

அதிரசம்

என்னென்ன தேவை?

பச்சரிசி – அரை கிலோ
பாகு வெல்லம் – 400 கிராம்
ஏலக்காய்த் தூள், எண்ணெய் – தேவைக்கு

எப்படிச் செய்வது?

பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவிட்டுத் தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள். பிறகு வெள்ளைத் துணியில் அரிசியைக் காயவையுங்கள். அரிசியில் லேசாக ஈரப்பதம் இருக்கும்போது மிஷினில் கொடுத்து அதிரச மாவுக்கு என்று சொல்லி அரைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைச் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டிக்கொள்ளுங்கள். பிறகு வடிகட்டிய பாகுவை மீண்டும் வேறு பாத்திரத்தில் மாற்றி, கெட்டியான பதம் வரும்வரை கொதிக்கவிடுங்கள். சிறிதளவு பாகைத் தண்ணீரில் விட்டால் கையில் உருட்டும் பதம் வர வேண்டும். இந்தப் பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். இப்போது பாகில் ஏலக்காய்த் தூளைச் சேர்த்து, அரிசி மாவைச் சிறிது சிறிதாகக் கொட்டிக் கிளறுங்கள். கிளறிய மாவை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி வெள்ளைத் துணியால் மூடி 48 மணி நேரம் வையுங்கள். பிறகு கையில் நெய் தடவிக்கொண்டு மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டி, வாழையிலையில் வைத்து லேசாகத் தட்டி நடுவில் ஒட்டை போட்டு, எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

பெண்டு பலகாரம்

என்னென்ன தேவை?

வெண்டைக்காய் வேர் – சிறிதளவு
பச்சரிசி – கால் கிலோ
பொடித்த சர்க்கரை, எண்ணெய் – தேவைக்கு
பால் – 300 மி.லி.

எப்படிச் செய்வது?

காட்டு வெண்டைக்காய் வேரை நன்றாக அலசி அதன் பட்டையை மட்டும் உரித்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். அதனுடன் பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். இதை மெல்லிய பருத்தித் துணியில் வடிகட்டினால் கொழகொழப்பான மாவு போல வரும். அதைத் தனியாக எடுத்துவையுங்கள்.

பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் வடிகட்டி வைத்துள்ள வெண்டைப் பட்டைப் பாலைச் சேர்த்து அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் அரைத்துவைத்துள்ள மாவில் ஐந்து விரல்களையும் தோய்த்தெடுத்து இடியாப்பம்போல் எண்ணெய்யில் விடுங்கள். இதுபோல் மூன்று முறை விடுங்கள். ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு அப்படியே இரண்டாக மடித்துவிட்டு வெந்ததும் எடுங்கள். சர்க்கரையைப் பொடித்து, ஆறிய பெண்டு பலகாரத்தின் மேல் தூவிப் பரிமாறுங்கள். காரம் வேண்டும் என்றால் மிளகாய்த் தூள் உப்பு, பெருங்காயம் மூன்றையும் கலந்து பலகாரத்தின் மேல் தூவிக்கொள்ளலாம்.
செய்முறையை பார்க்க: https://bit.ly/2WhqCiH

தட்டை

என்னென்ன தேவை?

புழுங்கல் அரிசி – 4 டம்ளர்
பொட்டுக்கடலை – ஒன்றரை டம்ளர்
வர மிளகாய் – 7
பெருங்காயம் – சிறிது
கடலைப் பருப்பு – 1 கைப்பிடி
வெண்ணெய் – 50 கிராம்
கறிவேப்பிலை பொடியாகக்
கிள்ளியது – சிறிது
உப்பு, எண்ணெய் – தேவைக்கு

எப்படிச் செய்வது?

புழுங்கல் அரிசியையும் கடலைப் பருப்பையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள். வரமிளகாயையும் ஊறவையுங்கள். பிறகு கிரைண்டரில் அரிசியையும் மிளகாயையும் சேர்த்து நைஸாக சற்றுக் கெட்டியாக அரையுங்கள். அரைத்த மாவுடன் கடலைப் பருப்பு, வெண்ணெய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், அரைத்த பொட்டுக்கடலை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து முறுக்கு மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளுங்கள். வாழையிலையில் எண்ணெய் தடவி மாவைத் தட்டைகளாகத் தட்டி எண்ணெய்யில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள்.


ஜிலேபி

என்னென்ன தேவை?

உளுந்து – 250 கிராம்
சர்க்கரை – 300 கிராம்
எண்ணெய் – தேவைக்கு
குங்குமப் பூ – 2 சிட்டிகை
நெய் - டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

சர்க்கரையை அகலமான பாத்திரத்தில் போட்டு 400 மி.லி. தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாகக் கொதித்ததும் தீயைக் குறைத்து 20 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். இதனுடன் நெய், குங்குமப்பூ சேர்த்து இறக்கிவிடுங்கள். உளுந்தை மூன்று மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீரை வடிகட்டி வடை மாவு பதத்துக்கு அரைத்தெடுங்கள். அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து ஜிலேபி பிழியும் துணியில் மாவைப் போட்டு எண்ணெய்யில் பிழிந்துவிடுங்கள். இரண்டு பக்கங்களும் வெந்ததும் எடுத்து, ஜீராவில் போட்டு 15 நிமிடங்கள் ஊறவிட்டுப் பரிமாறுங்கள். ஜிலேபி பிழியும்போது இரண்டு வட்டம் போட்டு, சுற்றிலும் சுழிகளாகச் சுற்றியெடுங்கள். உளுந்து சற்றே இளகிவிட்டால் சிறிது சோள மாவு சேர்க்கலாம்.

முறுக்கு

என்னென்ன தேவை?

முறுக்கு மாவுக்கு
புழுங்கல் அரிசி – 1 படி
பொட்டுக்கடலை – கால் படி
உளுந்து – 150 கிராம்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
எள்ளு – 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
பச்சை மிளகாய் – தேவைக்கு
பெருங்காயத் தூள் – சிறிதளவு

எப்படிச் செய்வது?

உளுந்தை லேசாகச் சிவக்க வறுத்து அரிசி, பொட்டுக்கடலையுடன் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளுங்கள். அரிசியைத் துணி கொண்டு துவட்டி சிறிது நேரம் வெயிலில் வைத்து அப்படியே சேர்த்து அரைக்கலாம். மாவை மிஷினில் இருந்து கொண்டு வந்து உலர்த்தி எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். இரண்டரை கப் முறுக்கு மாவை எடுத்துக்கொண்டு அதற்கேற்ற அளவில் பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்துத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் முறுக்கு மாவு, பச்சை மிளகாய், வெண்ணெய், எள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்துக்குப் பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெய்யில் பிழிந்துவிடுங்கள். நன்றாக வெந்ததும் எடுங்கள். பச்சை மிளகாய் சேர்ப்பதால் நிறம் நன்றாக இருக்கும். மிளகாய்த் தூள் வேண்டுமென்றாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

தீபாவளி லேகியம்

என்னென்ன தேவை?

சுக்கு – 100 கிராம்
சதகுப்பை – 25 கிராம்
தனியா – 50 கிராம்
வெல்லம் – அரை கிலோ
நெய், தேன் – தலா 150 மி.லி
வாய் விடாங்கம், சிறுநாகப்பூ, மிளகு, சீரகம், கருஞ்சீரகம், திப்பிலி, ஏலக்காய், லவங்கபட்டை, கோரைக்கிழங்கு – தலா 10 கிராம்

எப்படிச் செய்வது?

வெல்லத்தைப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். சுக்கைத் தோல் சீவி ஒன்றிரண்டாகத் தட்டி வையுங்கள். அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, தலா பத்து கிராம் கொடுத்துள்ள பொருட்களைத் தனித்தனியாக வாசம் வரும்வரை வறுத்து, தனியாக எடுத்துவையுங்கள். இதில் கோரைக்கிழங்கில் மட்டும் வேரை நீக்கிவிட்டு வறுக்க வேண்டும். அதேபோல் சதகுப்பையையும் தனியாவையும் வறுத்துக்கொள்ளுங்கள்.

வறுத்துவைத்துள்ள பொருட்கள் சூடு ஆறியதும் அவற்றுடன் சுக்கு சேர்த்து மிக்ஸியில் பொடித்து, சலித்துவையுங்கள். பிறகு பொடித்த வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்துக் கொதிக்கவைத்து வடிகட்டுங்கள். அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். வெல்லம் ஒரு கம்பிப் பதம் வந்ததும் சலித்துவைத்துள்ள பொடிகளைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருங்கள். பொடிகள் கொழ கொழப்பு தன்மைமாறி கெட்டிப்படும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். இப்போது நெய் ஊற்றிக் கிளறி ஆறவிட்டு, தேனைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகக் கிளறிவிடுங்கள். அனைத்தும் சேர்த்து அல்வா பதத்துக்கு வந்ததும் உலர்வான கண்ணாடி பாட்டிலில் போட்டு வையுங்கள். இந்தத் தீபவாளி லேகியம் அஜீரணம், வாயுத் தொல்லை, ஏப்பம் போன்றவற்றுக்கு அருமருந்து. ஆறு மாதம் வெளியே வைத்திருந்தாலும் இது கெடாது.

ரவா லட்டு

என்னென்ன தேவை?

ரவை – 200 கிராம்
சர்க்கரை – 150 கிராம்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் – சிறிது
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
பால் – சிறிது
முந்திரி – தேவைக்கு

எப்படிச் செய்வது?

வாணலியில் இரண்டு டீஸ்பூன் நெய்விட்டு முந்திரியை வறுத்தெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதே வாணலியில் தேங்காய்த் துருவலைச் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்துத் தனியாக எடுத்துவையுங்கள். அதிலேயே ரவையைச் சேர்த்து, குறைந்த தீயில் வறுத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு சர்க்கரைக்குக் கால் பங்கு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். சர்க்கரை கரைந்ததும் ரவையை அதில் கொட்டிக் கிளறி மீதமுள்ள நெய், முந்திரி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள். அதனுடன் லேசாகப் பால் தெளித்து அந்தச் சூட்டிலேயே 15 நிமிடங்கள் மூடிவையுங்கள். இப்போது கையில் நெய்யைத் தடவிக்கொண்டு ரவையை உருண்டைகளாகப் பிடியுங்கள்.

ராகி ரிப்பன் பகோடா

என்னென்ன தேவை?

ராகி மாவு – அரை கிலோ
பொட்டுக்கடலை மாவு – 200 கிராம்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை
உப்பு, எண்ணெய் – தேவைக்கு

எப்படிச் செய்வது?

எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்துக்குப் பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள். பிசைந்த மாவை ரிப்பன் பகோடா அச்சில் போட்டு எண்ணெய்யில் பிழிந்துவிட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

மேலும்