கோடைக்கு ஏற்ற கீரை சமையல்

கோடைக் காலத்தில் அதிகமாக வியர்ப்பதால் இயல்பாகவே உடலில் நீர்ச்சத்து குறையும். சிலருக்கு அடிக்கடி களைப்பு ஏற்படும். மயக்கம் வருவது போல் தோன்றும். சத்து நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிட்டால் சத்து இழப்பை ஈடு செய்யலாம். காய்கறிகளுடன் கீரை வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். “ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு சத்து, ஒவ்வொரு ருசி” என்று சொல்கிறார் சென்னை போரூரைச் சேர்ந்த ராஜகுமாரி. இது கீரைகள் அதிகமாகக் கிடைக்கிற பருவம் என்பதால் கவலையின்றி தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு உதவியாகச் சில கீரை உணவு வகைகளை ராஜகுமாரி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.



முளைக் கீரை சப்பாத்தி

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - ஒன்றரை கப்

ஆய்ந்த முளைக் கீரை - 1 கப்

காய்ந்த மிளகாய் - 3

பெருங்காயம் - எக்ஷ் சிட்டிகை

உளுந்து - 3 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



எப்படிச் செய்வது?

வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், உளுந்து, பெருங்காயம் இவற்றைச் சேர்த்து வறுத்தெடுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் மேலும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்திருக்கும் கீரை, உப்பு சேர்த்து வதக்கவும். வறுத்தப் பொருட்களை மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். வேகவைத்தக் கீரையையும் இதனுடன் சேர்த்து, தண்ணீர் விடாமல் அரைக்கவும். கோதுமை மாவில் உப்பு, சில துளி எண்ணெய், தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிசைந்த மாவைச் சப்பாத்தியாக உருட்டவும். ஒரு சப்பாத்தியின் மேல் 2 டீஸ்பூன் கீரைக் கலவையைப் பரவலாகத் தேய்த்து, அதன் மேல் இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடவும். இதைச் சூடான தோசைக்கல்லில் போட்டு, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். இந்த முளைக் கீரை சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள ஆனியன் ராய்தா உகந்தது.



ராஜகுமாரி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE