பாகற்காய் சாம்பார்

பாகற்காயின் கசப்பு நம் நாவிற்கு வேண்டுமானால் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், உடலுக்கு மிகவும் இனிமையானது. பாகற்காயில் இருக்கும் சத்துகளும், தண்ணீரும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவும். பாகற்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்கி உண்டாகும். தோல் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும். இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் ஜீரணக் கோளாறுகளையும் எளிதில் நீக்கிவிடும். நீரிழிவு நோயாளிகளுக்கு, எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு பாகற்காய் சிறந்த நண்பன். பாகற்காயை கசப்பு இல்லாமல் சுவையாக ருசித்து சாப்பிடுவதற்கு உதவி செய்கிறார் மயிலாப்பூரைச் சேர்ந்த என். உஷா.



பாகற்காய் சாம்பார்

என்னென்ன தேவை?

பாகற்காய் - 2

துவரம்பருப்பு - 2 கப்

புளி - எலுமிச்சை அளவு

வெங்காயம் - 1 (பெரிது)

தக்காளி - 1

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

தனியா - 4 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 8

துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு - கால் தேக்கரண்டி

பெருங்காய தூள் - கால் தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 2

எப்படிச் செய்வது?

புளியை வெந்நீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். பாகற்காயை விதை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். பாகற்காயை தயிரில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். இது பாகற்காயின் கசப்பை நீக்க உதவும். பிறகு நன்றாக நீரில் அலசி, வேகவைத்து எடுக்கவும். தனியா, மிளகாய் வற்றல், பருப்பு வகைகள், சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து ஆறியதும் பொடிக்கவும். பெரிய வெங்காயம், தக்காளிப் பழத்தை நறுக்கி, துவரம் பருப்புடன் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.

புளியைக் கரைத்து வடிகட்டியதை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இதில் பாகற்காயை சேர்த்த பிறகு, பொடித்த மிளகாய், பருப்பு வகைகளை சேர்த்து கொதிக்கவிடவும். தேங்காய் துருவலை (பச்சையாக) மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும். வேகவைத்த பருப்பை மசித்து, சேர்த்து நன்கு கொதி வந்தததும் இறக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டவும். கமகமவென்று சாம்பார் வாசனையாக இருக்கும். தக்காளி, தேங்காய் துருவல் சேர்ப்பதால் பாகற்காய் சாம்பார் கசப்பில்லாமல் சுவையாக இருக்கும்.

என்.உஷா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE