புத்தாண்டு புது விருந்து: அன்னாசி ரசம்

வெயிலுக்கு உகந்த சித்திரை மாதம், தமிழ் மாதங்களில் முதல் மாதமாகக் கொண்டாடப் படுகிறது. சித்திரை மாதத்தில் மரங்கள் எல்லாம் மஞ்சளும் சிவப்புமாகப் பூத்துக் குலுங்கும். தமிழகத்தில் புத்தாண்டு பிறக்கிற நேரத்தில் கேரளத்திலும் விஷு புத்தாண்டு கொண்டாட்டம் நடக்கும். “வருடப் பிறப்பின் முதல் நாள் இரவே புதிதாக விளைந்த காய், கனிகள், பூக்கள், தங்க நகைகள் ஆகியவற்றை பூஜையறையில் வைத்து மறுநாள் காலையில் அதில் கண் விழித்தால் அந்த வருடம் முழுவதும் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. இதைக் கனி காணுதல் என்று சொல்வார்கள்.

நம் வாழ்வில் கசப்பும் இனிப்பும் கலந்திருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக அன்று அறுசுவையில் உணவு சமைப்பது வழக்கம்” என்று சொல்கிறார் சென்னை காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த விசாலா ராஜன். “ஒவ்வொரு வருடமும் தமிழ்ப் புத்தாண்டுக்கு வடை, பாயசம் செய்கிறோம். இந்த ஆண்டு சில கேரள பதார்த்தங்களை ருசிக்கலாமே” என்று சொல்லும் இவர், அவற்றுக்கான செய்முறையையும் தருகிறார்.

அன்னாசி ரசம்

என்னென்ன தேவை?

அன்னாசித் துண்டுகள் - அரை கப்

துவரம் பருப்பு - கால் கப்

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

கடுகு, பெருங்காயம் – தலா அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

வறுத்துப் பொடிக்க:

காய்ந்த மிளகாய் - 2

மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து, ஆறியதும் பொடித்துக்கொள்ளுங்கள். அன்னாசித் துண்டுகளை அரைத்துச் சாறெடுங்கள். துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவையுங்கள். தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளியுங்கள். பொடியாக அரிந்த தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். நன்றாக வதங்கியதும் வேகவைத்த பருப்புடன் தேவையான நீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். அதனுடன் வறுத்த பொடி, தேவையான உப்பு சேருங்கள். ரசம் நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்து, அன்னாசிச் சாறு சேருங்கள். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கிவையுங்கள். இந்த ரசத்தை சூப்பாகவும் குடிக்கலாம்.




விசாலா ராஜன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE