தலைவாழை: மகத்தான மதிய உணவு

By ப்ரதிமா

பெரும்பாலான பெற்றோருக்கு மட்டுமல்ல; குழந்தைகளுக்கும் காலைப்பொழுது மலர்ச்சியாக இருப்பதில்லை. கடிகார முள்ளுடன் போட்டி போட்டுக்கொண்டு பள்ளிக்குக் கிளம்பும் பதற்றத்திலேயே பாதி வேலைகள் மறந்துவிடும். இதில் ஆற அமர உட்கார்ந்து சாப்பிட நேரம் ஏது? அதனால் மதிய உணவையாவது சத்தானதாகக் கொடுத்து அனுப்பலாம் என்கிறார் சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த நித்யா பாலாஜி. பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகளுக்கு உகந்த மதிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.

பெப்பர் மினி இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு - 1 கப்

கறிவேப்பிலை - 1 கொத்து

கடுகு – அரை டீஸ்பூன்

முந்திரி – 10

நெய் - 2 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

பொடிக்க

மிளகு - 4 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

உளுந்து - 2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்து, ஆறியதும் உப்பு சேர்த்துக் கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளுங்கள். மினி இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி வேகவைத்து எடுங்கள்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் கடுகையும் கறிவேப்பிலையையும் போட்டுத் தாளித்துப் பொடியைச் சேருங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து, இட்லிகளைச் சேர்த்து நன்கு புரட்டுங்கள். நெய்யில் முந்திரியை வறுத்து இட்லியில் போட்டு ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்குங்கள்.

குடைமிளகாய் மக்ரோனி

என்னென்ன தேவை?

வேகவைத்த மக்ரோனி - ஒன்றரை கப்

நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் - தலா 1

நசுக்கிய பூண்டுப் பல் – 3

காஷ்மீரி மிளகாய்த் தூள், மிளகுத் தூள், சாட் மசாலாத் தூள், கரம் மசாலா - தலா முக்கால் டீஸ்பூன்

டொமேட்டோ கெச்சப் – ஒன்றரை டேபிள் ஸ்பூன்

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

சில்லி ஃப்ளேக்ஸ் - கால் டீஸ்பூன்

எண்ணெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன், வெங்காயத்தைப் போட்டு வதக்குங்கள். பூண்டு, குடைமிளகாயைச் சேர்த்து வதக்கி, காஷ்மீரி மிளகாய்த் தூள், மிளகுத் தூள், சாட் மசாலாத் தூள், கரம் மசாலா ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்குங்கள். சோயா சாஸ், டொமேட்டோ கெச்சப், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். மக்ரோனி போட்டு நன்றாகப் புரட்டி, மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்திருங்கள். சில்லி ஃப்ளேக்ஸ் போட்டுக் கிளறி அடுப்பை அணைத்துவிடுங்கள். கொத்தமல்லித் தழையைத் தூவி, தக்காளி சாஸுடன் பரிமாறுங்கள்.

பாலக் பராத்தா

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1 கப்

துருவிய சீஸ் - 2 டீஸ்பூன்

நெய் – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

அரைக்க

பாலக் கீரை   – ஒன்றரை கப்

காய்ந்த மிளகாய் – 2

பூண்டுப் பல் – 3

கரம் மசாலாத் தூள், மாங்காய்த் தூள் - தலா 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கீரை, மிளகாய், பூண்டு மூன்றையும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவையுங்கள். ஆறியவுடன் அவற்றுடன் கரம் மசாலாத் தூள், மாங்காய்த் தூள் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, சீஸ், உப்பு, சிறிதளவு எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். அரைத்த கீரை விழுதைப் போட்டு நன்றாகப் பிசையுங்கள். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையுங்கள். இதைக் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி 15 நிமிடம் வையுங்கள். மாவு நன்றாக ஊறியவுடன் சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாகத் தேய்த்து தோசைக்கல்லில் போடுங்கள். இரண்டு பக்கங்களிலும் வேகவிட்டு எடுத்து, நெய் தடவுங்கள். சென்னா மசாலா அல்லது ராய்த்தாவைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

சென்னா – தக்காளி புலவ்

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி, வேக வைத்த கொண்டைக்கடலை - தலா 1 கப்

பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா அரை கப்

நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் – 1

இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் - தலா 1 டீஸ்பூன்

சென்னா மசாலாத் தூள் – அரை டீஸ்பூன்

பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை - தலா 1

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். வெங்காயத்தையும் மிளகாயையும் சேர்த்து வதக்கி இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள். தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கி, கொண்டைக்கடலையைச் சேருங்கள். மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், சென்னா மசாலாத் தூள் ஆகியவற்றைப் போட்டுக் கிளறுங்கள். உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும் அரிசியைப் போடுங்கள். ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். நறுக்கிய கொத்தமல்லித் தழையைச் சேர்த்துக் கிளறி, பரிமாறுங்கள். சிப்ஸ் அல்லது ராய்த்தாவுடன் சாப்பிடலாம்.

கத்தரிக்காய் வேர்க்கடலை சாதம்

என்னென்ன தேவை?

பச்சரிசி சாதம் - 1 கப்

கத்தரிக்காய் – 4

நறுக்கிய வெங்காயம் – 1

நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு    - தலா 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

உப்பு – தேவைக்கேற்ப

வறுத்துப் பொடிக்க:

வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

வெள்ளை எள், உளுத்தம் பருப்பு – தலா ஒன்றரை டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

எப்படிச் செய்வது?

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து வறுத்து ஆறவிடுங்கள். ஆறியதும் உப்பு சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். வெங்காயம் சேர்த்து வதக்கி, மிதமான தீயில் கத்தரிக்காயைச் சேர்த்து வதக்குங்கள். கத்தரிக்காய் நன்றாக வதங்கியவுடன் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலைப் பொடியையும் தேவையான அளவு உப்பையும் போட்டுப் புரட்டுங்கள். ஆறவைத்த சாதத்தைப் போட்டுக் கிளறிவிட்டு இறக்குங்கள். ராய்தா, அப்பளம் சேர்த்துச் சாப்பிடலாம்.

பீட்ரூட் மசாலா சாதம்

என்னென்ன தேவை?

பச்சரிசி சாதம், துருவிய பீட்ரூட் - தலா 1 கப்

நறுக்கிய வெங்காயம்,

பச்சை மிளகாய் - தலா 1

எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் – தலா – முக்கால் டீஸ்பூன்

சீரகத் தூள், கொத்தமல்லித் தூள், கடுகு - தலா அரை டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித் தழை    – சிறிதளவு

எண்ணெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். மிதமான தீயில் பீட்ரூட்டைச் சேர்த்து வதக்குங்கள். பீட்ரூட் நன்றாக வதங்கியவுடன் மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், சீரகத் தூள், கொத்தமல்லித் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டுக் கிளறுங்கள். உதிரியாக வேக வைத்த சாதத்தைச் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். எலுமிச்சைச் சாறு ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவி லேசாகக் கிளறி இறக்குங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

மேலும்