மாடர்ன் லவ்: சென்னை Review | நினைவோ ஒரு பறவை

By குமார் துரைக்கண்ணு

நகர்ப்புற காதலையும் அதைச் சுற்றி நடக்கும் சிக்கல்களையும் பேசும் ‘மாடர்ன் லவ்: சென்னை’ ஆந்தாலஜி தொடர் இன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இதில் ஆறாவது படமாக இடம்பெற்றிருப்பது தியாகராஜன் குமாரராஜாவின் 'நினைவோ ஒரு பறவை'.

நவநாகரிக சமூகத்தின் இளம் காதலர்கள் ஷாம் (வாமிகா காபி) கே (PB). காதலும், காமமும் இரண்டறக் கலந்து கழியும் இவர்களது படுக்கை அறையில் பிரித்தறிய முடியாமல் கலைந்து கிடக்கிறது இரவும் பகலும். இவ்வளவுதானா காதல் என்று திகட்டிப் போக ஒருகட்டத்தில் காதலர்கள் பிரேக் அப் செய்து கொள்கின்றனர். விபத்து ஒன்றில் சுயநினைவை இழந்துவிட்ட கேவுக்கு, ஷாமின் காதல் மட்டும் நினைவில் இருப்பதாகவும், அவள் நேரில் வந்து பார்த்தால் பழைய நினைவுகள் திரும்புவதற்கு வாய்ப்பு இருப்பதாக செய்தி வருகிறது. இதையடுத்து ஷாம் மருத்துவமனை சென்று கே-வை சந்தித்தாரா, கேவுக்கு பழைய நினைவுகள் திரும்ப வந்ததா என்பதை விஷுவேல் மியூசிக்கல் ட்ரீட்டாக காட்சிப்படுத்தியிருக்கிறது 'நினைவோ ஒரு பறவை'.

18 வயதுக்கு மேற்பட்டவருக்கான கதையம்சத்தை மையமாக கொண்ட இந்தப் படத்தின் பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவும் இசையும்தான். ஒளிப்பதிவாளர்கள் நீரவ் ஷா மற்றும் ஜீவா சங்கரின் கேமராவும், லைட்டிங்கும் பிரமிப்பைத் தருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவருக்கான காட்சிகள் வரும் இடங்களில் இருளையும், இருள் சூழ்ந்த அறையின் ஜன்னல் வழி விழுந்த ஒளியின் கீற்றையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அட்டகாசம். அத்துடன் காதலனும் காதலியும் கலவி கொள்ளும் அக்காட்சிகளுக்கு ஜாஸ், ராப் வகை இசையை பயன்படுத்தியிருப்பது மனதை வருடியிருக்கிறது.

இளையராஜாவின் இசையை இந்த கோணத்தில் இதுவரை ஏன் யாரும் அணுகவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. எப்போது கேட்டாலும், ஏதாவது பழைய நினைவை மீட்டுருவாக்கம் செய்துவிடும் அவரது இசையை தியாகராஜன் குமாரராஜா நுட்பமாக பயன்படுத்தியிருக்கிறார். உடல்சார்ந்த அதிர்வுகளின் அறிவியல் தியரியை இளையராஜாவின் ரெட்ரோ வகை பின்னணி இசைகொண்டு நிரப்பயிருப்பது பிரமிப்பூட்டுகிறது. இக்காட்சிகளின்போது, இறுக கண்மூடிக் கொள்பவர்களின் மூளைக்குள் தான் சொல்ல வந்ததை இசை வழி கடத்தியிருக்கிறார் இயக்குநர்.

அண்மையில் வெளிவந்த ஜூப்ளி இந்தி வெப் சீரிஸில் நிலோஃபராக வந்து ரசிகர்களின் மனதில் தங்கிவிட்ட வாமிகா காபிக்கு தமிழில் நல்ல ஒரு ரீ என்ட்ரி. கிடைத்த வாய்ப்பை அவரும் மிகச்சரியாக பயன்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்தில் வாமிகா காபி வரும் ஒவ்வொரு காட்சியும், பார்வையாளர்களின் மனச்சுவரில் மாடர்ன் ஆர்ட் போர்ட்ரைட் போல ஆனியடித்து மாட்டிக்கொள்கிறது.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கட்டமைக்கும் புனைவு உலகத்தில், ஆண் பெண் பாலியல் சாந்த புரிதல்களையும், உரையாடல்களையும் சகஜமாக நடத்திக் கொள்ளவும், கலவி முடிந்த நேரங்களில் சிகரெட்டைப் பற்றவைத்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் முடிகிறது. ஆனால், இதெல்லாம் யதார்த்தத்தில் எந்தளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறிதான். ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படங்களைத் தொடர்ந்து இந்தப்படமும் கலவி கொள்ளும் காட்சியிலிருந்துதான் தொடங்குகிறது.

இன்டென்ஸ் ஆர்கஸம் சிலசமயம் ஷார்ட் டைம் மெமரி லாஸை தரும் என்பது போன்று கலவி சார்ந்து நீளும் அதீத இன்டலெக்சுவலான உரையாடல்கள் பார்வையாளர்களை படத்தின் நெருக்கத்தில் இருந்து விலக்கி அந்நியமாகிவிடுகிறது.

தியாகராஜன் குமாரராஜாவின் இன்டலக்சுவலிஸம் ஒரு எக்ஸ்ட்ரீம் என்றால், ஜோசியம் இன்னொரு எக்ஸ்ட்ரீம், இந்த இரண்டு எக்ஸ்ட்ரீம்களுக்கு இடையே நகரும் இந்தப்படம் உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான ஒருவகை ஊசலாட்டத்தை கொடுக்கிறது.

கலவி மட்டுமே எல்லாப் பிரச்சினைகளும் தீர்வாகாது எனும் இப்படத்தின் வசனம் போலத்தான், எல்லா காதலிலும் கலவி மட்டுமே பிரச்சினையாக இருப்பது இல்லை. பார்த்தவுடன் கண்களை பார்வையாளர்களிடம் பிடிங்கிக் கொள்ளும் ஒளிப்பதிவு, கேட்ட மாத்திரத்தில் பழைய நினைவுகளைத் திரும்பத் தரும் இசை என நேர்த்தியாக சாதாரண சினிமா ரசிகர்களுக்கும் பிடித்துப்போகும் வகையில், படத்தின் டெக்னீஷியன்களிடம் இருந்து அற்புதமான உழைப்பை பெற்ற இயக்குநர் தனது எழுத்திலும் அத்தகைய ரசிகர்களை மனதில் வைத்து சிரத்தை எடுத்திருந்தால், இந்த 'நினைவோ ஒரு பறவை' பார்வையாளர்களின் மனங்களில் இருந்து நீக்கமற நிறைந்திருக்கும்.

வாசிக்க:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE