மாடர்ன் லவ்: சென்னை Review | இமைகள்

By முகம்மது சல்மான்

நகர்ப்புற காதலையும் அதைச் சுற்றி நடக்கும் சிக்கல்களையும் பேசும் ‘மாடர்ன் லவ்: சென்னை’ ஆந்தாலஜி தொடர் இன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இதில் இரண்டாவது படமாக இடம்பெற்றிருப்பது பாலாஜி சக்திவேலின் ‘இமைகள்'.

கல்லூரி மாணவரான நித்யானந்தன் (அசோக் செல்வன்) அதே கல்லூரியில் படிக்கும் சக மாணவியான தேவியிடம் (டிஜே பானு) தன் காதலை சொல்கிறார். தனக்கு சிறுவயது முதலே பார்வைக் கோளாறு இருப்பதாகவும், இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் முழுமையாக பார்வை போய்விடும் என்று நாயகனிடம் கூறுகிறார் தேவி. எனினும் மறுநாள் அப்பெண்ணின் பெயரை நெஞ்சில் பச்சைக் குத்தி அவரை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார் ஹீரோ. ஒரே பாடலில் பணக்காரர் ஆவது ஒரே பாடலில் காதல், திருமணம், வேலை, கர்ப்பம் என வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது. தேவியின் பார்வைத் திறனும் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகிறது. இந்த பிரச்சினை அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? இருவரும் அதை எப்படி கையாள்கின்றனர் என்பதை ஆர்ப்பாட்டமின்றி அலசுகிறது ‘இமைகள்’.

‘காதல்’, ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ என அழுத்தமான படங்களை இயக்கி, பிறகு நடிப்பில் கவனம் செலுத்திவந்த பாலாஜி சக்திவேல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநராக களமிறங்கியிருக்கும் படம். கண் பார்வை கோளாறு என்பதை ஒரே விபத்தில் நடக்கும் பிரச்சினையாக சொல்லி சோகத்தை பிழியாமல் இயல்பான காட்சிகளின் மூலம் நகர்த்தியுள்ளார்.

படத்தின் பிரதான பாத்திரம் டி.ஜே.பானுவுடையது. பார்வைத் திறன் குறைந்து கொண்டிருப்பதை குறிக்கும் காட்சிகளில் எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல் மிகவும் நுணுக்கமாக நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார். டப்பிங்கில் மட்டும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அவர் பேசும் ஸ்லாங், அவரது கதாபாத்திரத்தோடு ஒட்டாதது போன்ற உணர்வை தடுக்கமுடியவில்லை. கல்லூரி மாணவனாகவும், குடும்பத் தலைவனாகவும் அசோக் செல்வன் வழக்கம் போல அலட்டலில்லாத நடிப்பு. குறைகள் எதுவும் இல்லை.

மற்றவர்களுக்கு சிறிய விஷயங்களாக தோன்றுபவை கூட பார்வைத் திறன் குறைபாடு இருப்பவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும். உதாரணமாக இப்படத்தில் வரும் குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பும் ஒரு காட்சி அதன் தீவிரத் தன்மையை நமக்கு உறைக்க வைக்கிறது. இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து நாயகன் நாயகி இருவருக்குமான உரையாடல், உடம்பு சரியில்லை என்று கூறி கர்ப்பமாக இருக்கும் மனைவியை வீட்டுக்கு வர சொல்லி மடியில் படுத்துக் கொண்டு பேசுவது போன்ற காட்சிகள் உணர்வுப்பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது. வெறும் 30 நிமிடங்கள் தான் படத்தின் நீளம் என்றாலும் 15 நிமிடங்களுக்குப் பிறகு படத்தின் மையக் கருவே தொடங்குகிறது. ஆரம்பத்தில் வரும் தேவைற்ற காதல் காட்சிகளை வெட்டியிருந்தால் இது ஒரு 10 நிமிட குறும்படமாக மாறியிருக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசையும், ஜீவா சங்கரின் ஒளிப்பதிவும் கச்சிதம்.

சற்று பிசகினாலும் ஒரு மெகா சீரியல் பார்க்கும் உணர்வைத் தந்துவிடக் கூடிய ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்டு நுணுக்கமான காட்சிகளின் மூலம் ஒரு உணர்வுப்பூர்வமான படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE