ஓடிடி திரை அலசல் | Mukundan Unni Associates - வெள்ளை ஆடை வழக்கறிஞரின் பிளாக் காமெடி மட்டுமல்ல..!

By குமார் துரைக்கண்ணு

விமல் கோபாலகிருஷ்ணனுடன் இணைந்து எழுதி, அறிமுக இயக்குநர் அபிநவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் வெளிவந்துள்ள மலையாளத் திரைப்படம் 'முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்' ( Mukundan Unni Associates). பார்வையாளர்களை படம் முழுக்க மகிழ்ச்சியாக சிரிக்கவைத்து ஏமாற்றும் ஒரு முழுநீள பிளாக் காமெடி வகை திரைப்படம். அறமற்ற தீய எண்ணங்களைக் கொண்ட படத்தின் மையக் கதாப்பாத்திரம் தன்னைப் பற்றிய உண்மைகளை படம் முழுக்க தானே விவரிக்கும் வகையில் படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

இந்த ஜானரில், இதே நெரேட்டிவ் ஸ்டைலில் பல திரைப்படங்கள் வந்திருந்தாலும், இப்படத்தின் மையக்கரு என்பது சாலை விபத்து வழக்குகள் - இன்ஷூரன்ஸ் - க்ளைம் தொடர்பான காவல் துறை, மருத்துவம் மற்றும் நீதி துறைகளின் மற்றொரு பக்கத்தை பகடியாக பேசியிருக்கிறது இத்திரைப்படம். இது வெறுமனே சிரிப்போடு நில்லாமல் பார்வையாளர்களுக்கு நிச்சயம் விழிப்புணர்வைத் தரும். படம் முழுக்கவே இயக்குநரின் படைப்பாற்றல் திறன் வெளிப்பட்டாலும், டிஸ்க்ளைமர் கார்டின் அளவைக் குறைத்து மொபைல் ப்ஃரண்ட்லி தலைமுறையினரை ஈர்த்திருக்கும் விதத்தில் இருந்தே பார்வையாளர்களை கவர்ந்திழுக்கத் தொடங்கிவிடுகிறார்.

மேலும், காலங்காலமாக நடந்துவரும் ஒரு பிரதான பிரச்சினை, இதுதொடர்பாக நீதிமன்றங்களும் அவ்வப்போது தனது கண்டனங்களை பதிவு செய்திருக்கிறது. இத்தகைய கதைக்கருவை கையிலெடுத்து கவனமாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர். இந்தத் திரைப்படத்தில் கையாளப்பட்டிருக்கும் கதை சொல்லும் உத்தி, படம் பார்க்கும் பார்வையாளர்களை திரையில் நடப்பதைக் கூர்ந்து கவனிக்க வைக்கிறது. இதனால், படம் முடியும்வரை பார்வையாளர்களை இத்திரைப்படம் எங்கேஜிங்காக வைத்திருக்கிறது.

கேரள மாநிலம் கல்பெட்டாவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முகுந்தன் உன்னி (வினீத் ஸ்ரீநிவாசன்). தனது 30 வயதுக்குள் வாழ்க்கையில் வெற்றி பெற்று செட்டிலாகிவிட வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. ஆனால் 36 வயதான பிறகும்கூட, ஜூனியர் வழக்கறிஞராக இருந்துகொண்டு வாழ்க்கையில் போராடி வருகிறார். இதில் தன்னைப் போலவே போராடிவரும் சக வழக்கறிஞரான ஜோதியை (தன்வி ராம்) காதலிக்கவும் செய்கிறார்.

மிகவும் சிக்கலான மனநிலைக் கொண்ட முகுந்தன் உன்னி, வாழ்வதற்கான அத்தனை குறுக்கு வழிகளையும் தெரிந்தவர். குற்றங்களை நேசிக்கும் அவர், தான் வாழ்வதற்காக கொலை செய்தாலும் தவறில்லை என்ற எண்ணம் கொண்டிருக்கிறார். இத்தகைய தருணத்தில், தனது தாயின் காலில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும்போது வழக்கறிஞர் வேணுவை (சூரஜ் வெஞ்சரமூடு) சந்திக்கிறார். முகுந்தன் உன்னி தனது தாயின் அறுவை சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாத சூழலில் வேணு அவருக்கு உதவுகிறார். இந்த நேரத்தில் மருத்துவமனை ஊழியரான மீனாட்சியை (ஆர்ஷா சந்தினி பைஜு) சந்திக்கும் முகுந்தன் உன்னிக்கு அவள் மீது காதல் வருகிறது.

வழக்கறிஞர் வேணு எப்படி இவ்வளவு பெரிய பண உதவியை செய்கிறார்? இந்த உதவிக்கு அடிப்படை எது? இதை முகுந்தன் உன்னி கண்டுபிடித்தாரா? இதனால் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன? உதவிக்கான வழியை கண்டுபிடித்ததால் வேணுவுக்கும் முகுந்தன் உன்னிக்கும் இடையே ஏற்படும் பாதிப்புகள் என்ன? முகுந்தன் உன்னி ஜோதிக்கு பதிலாக மீனாட்சியை மணமுடிக்கும் காரணம் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில்கள்தான் படத்தின் திரைக்கதை.

வினீத் ஸ்ரீநிவாசன் படத்தின் முதல் காட்சியில் தொடங்கி இறுதிக்காட்சி வரை தனது கதாப்பாத்திரத்துக்கான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். சுரஜ் வெஞ்சரமூடு வழக்கறிஞர் வேணு கதாப்பாத்திரத்துக்கு கனகச்சிதமானப் பொருந்தியிருக்கிறார். இவர்கள் இருவரும் திரையில் வரும் காட்சிகள் அனைத்துமே சிறப்பாக உள்ளது. நாயகி ஸ்கோப் உள்ள இரு பெண் கேரக்டர்களுமே சமகால சமூகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிலும் இந்த இரண்டு கேரக்டர்களும் பேசிக்கொள்ளும்படி வரும் காட்சியில் ஆர்ஷா சந்தினி பைஜு ஆடியன்ஸ் அப்ளாஸ்களை அள்ளுகிறார்.

இவர்கள் தவிர வினீத் ஸ்ரீநிவாசனின் நண்பராக வருபவர், சூரஜ் வெஞ்சரமூடுக்காக மருத்துவமனை தொடர்பான தகிடுதத்தங்களை செய்யும் நபராக வருபவர் என அனைவருமே நிறைவாக தங்களது பணிகளைச் செய்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப உதவிகளுமே படத்திற்கு உறுதுணையாக உள்ளன.

படத்தின் நாயகனே தன்னுடைய கதையை படம் முழுக்க விவரிக்கும் முறை சில நேரங்களில் சலிப்பூட்டுகிறது. அதேபோல் உண்மைக்குப் புறம்பான வழிகளில் வெற்றிபெறும் ஒரு குற்றவாளியின் கண்ணோடத்தில் ஒரு இரண்டு மணி நேரம் எப்படி பயணிக்க முடியும் என்ற நியாயமான கேள்விகள் எழுவதை தவிர்த்துவிட்டு பார்த்தால் படத்தை ரசிக்கலாம். 2022 நவம்பர் 11-ம் தேதி திரையரங்களில் வெளியான இத்திரைப்படம், ஜனவரி 13-ம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

13 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

27 days ago

ஓடிடி களம்

29 days ago

ஓடிடி களம்

30 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்